திருப்பங்களை தரும் திருநள்ளாறுவர வேண்டியதும் வருவதும் திருநள்ளாறு என்றதும் அனைவர் நினைவிலும் முதலில் வருவது-சனி பகவான். ஆனால் முதலில் நினைவில் வர வேண்டியது, அங்கு எழுந்தருளி இருக்கும் - தர்பாரண்யேசுவரர் எனும் சிவபெருமான்.

நளனும் திருநள்ளாறும்

நளன் சனிபகவானால் பட்ட கஷ்டங்களும்; அவற்றில் இருந்து நளன் விலகி விடுபட்டு, மறுபடியும் நல்லமுறையில் அரசாளத் தொடங்கியதும் ஓரளவாவது தெரியும். நளன் நாடாளத் தொடங்கினாலும் சனி பகவானின் வேகம் தணியாததால், அல்லல் பட்ட நளன் நாரதர் உபதேசப்படி தீர்த்த யாத்திரை மேற்கொண்டார்.

வரும்வழியில் திருமுதுகுன்றம் எனும் விருத்தாசலத்தில் பரத்வாஜ முனிவரைத் தரிசித்த நளன், அவரிடம் தன் துயரங்களைச்சொல்லி, வழிகாட்ட வேண்டினார். ‘‘திருநள்ளாறு போய் அங்கு எழுந்தருளி இருக்கும் சிவ பெருமானை வழிபடு! உன் துயரம் எல்லாம் நீங்கும்’’ என்று சொல்லி, வழி முறைகளையும் உபதேசித்தார் பரத்வாஜர். அதை ஏற்ற நளனும் திருநள்ளாறு வந்து, முறைப்படி வழிபட்டுத் துயர் நீங்கப்பெற்றார்.

தீர்த்தமும் தீர்ந்ததும்

பரத்வாஜ முனிவரின் வழிகாட்டுதல்படி, நளன் திருநள்ளாறு வந்தார்; தன் பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி-அதில் நீராடி-சிவபெருமானை வழிபட ஆலயத்திற்குள் நுழைந்தார். அதே விநாடியில், நளனைப் பிடித்திருந்த ‘சனி’ உள்ளே நுழைய முடியாமல் பயந்து விலகி,வெளியில் அங்கேயே நின்று விட்டார். இதனால் இத்தலத்தில், சனி பகவான் சந்நதி விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

 7-ல் ஒன்று

சப்த விடங்கத் திருத்தலங்கள் எனும் ஏழு திருத்தலங்களில், திருநள்ளாறு எனும் இத்திருத்தலமும் ஒன்று. இங்குள்ள ‘தியாகராஜர்’ - ‘நக விடங்கத் தியாகராஜர்’ எனப்படுகிறார். இவர் செய்யும் நடனம்-உன்மத்த நடனம்.

தீயால் தீண்டப்படாதது

மதுரைக்குத் திருஞான சம்பந்தர் எழுந்தருளியபோது, அவருக்கும் அமணர்களுக்கும் அனல்வாதம் நடந்தது. ‘அவரவர் தம் தெய்வக் கொள்கைகளை எழுதித் தீயில் இட வேண்டும். எது எரியாமல் இருக்கிறதோ, அதுவே உயர்ந்தது’ எனத் தீர்மானித்தார்கள். அப்போது திருஞான சம்பந்தர், தம் திருமுறைகளில் கயிறு சார்த்திப் பார்க்க, ‘போகமார்த்த’எனும் திருநள்ளாறு பதிகம் வந்தது. அதைத்தீயில் இட்டார்கள். அப்பதிகம் எழுதப்பட்ட ஏடு, எரியாமல் அப்படியே பச்சையாக இருந்தது. அனைவரும் வியந்தார்கள். தீயால் கூடத் தீண்ட முடியாத ‘திரு நள்ளாறு’ பதிகம் அது. அந்தப் பதிகத்தைப் பாராயணம் செய்தால், எந்தத் தீவினைகளும் நம்மை எரிக்காது! தீண்டாது!

விலகி இருப்பது

திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோவிலில், பலி பீடம் சற்று விலகி உள்ளது. அபூர்வமான அமைப்பு இது. தடைகளை விலக்கி, திருநள்ளாறு ஈசர் காப்பார் என்பதை அழுத்தமாக விளக்கும் அமைப்பு இது.

விலகியது ஏன்?

இக்கோவிலில் பலிபீடம் சற்று விலகியே உள்ளது. காரணம்? இடையர் ஒருவர், மன்னர் உத்தரவுப்படி நாள் தோறும் நள்ளாறு கோயிலுக்குப் பால் அளந்து கொடுத்து வந்தார்.
கணக்கப்பிள்ளையோ, அந்தப்பாலைத் தன் வீட்டிற்கு அனுப்பிவிட்டுப் பொய்க்கணக்கு எழுதி வந்தார்; விவரம் அறிந்த இடையரையும் மிரட்டிப் பயமுறுத்தி வந்தார்.அல்லல் தாங்காத இடையர், தர்பாரண்யேசுவரரிடம் முறையிட்டார். ஈசர் தன் சூலாயுதத்தை ஏவ, பலி பீடம் விலகி வழிவிட்டது. (இன்றும் அப்படியே உள்ளது) கணக்கப்பிள்ளை தண்டிக்கப் பட்டார். இடையருக்கு நேரே காட்சி தந்து அருள் புரிந்தார் ஈசர். உயரதிகாரிகளால் விளையும் தொல்லைகளை நீக்கும் திருத்தலம் இது.

உள்ளது ஐந்து

இத்திருத்தலத்தில் உள்ள தீர்த்தங்களைத் தல புராணம் விரிவாகவே பட்டியல் இட்டு இருந்தாலும்; இப்போது உள்ளவை நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அம்ச தீர்த்தம் எனும் ஐந்து தீர்த்தங்கள் மட்டுமே.

பிரம்ம தீர்த்தம்

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக பிரம்மா தன்னுடைய தண்டாயுதத்தால் உருவாக்கிய தீர்த்தம் இது. கோவிலுக்கு நேரே கிழக்குப் பக்கத்தில் உள்ளது. இதில் நீராடுபவர்கள் பிரம்ம பதத்தை அடைவார்கள்.

சரஸ்வதி தீர்த்தம்

கோவிலுக்குத் தெற்காக, அம்மன் சந்நதிக்கு எதிரில், மதிள் சுவரை ஒட்டி அமைந்துள்ளது. இதில் நீராடுவோர் கலை ஞானங்களை அடைவார்கள்.

நள தீர்த்தமும் நள கூபமும்

கோவிலுக்கு வடமேற்கே உள்ளது இது. இந்த நள தீர்த்தத்தில் எல்லாவிதமான தோஷங்களும் பீடைகளும் நீங்கும். நள தீர்த்தத்தின் அருகில் ‘நள கூபம்’ எனும் தீர்த்தம் உள்ளது.
நளனுக்காகச் சிவபெருமான் தன் சூலாயுதத்தால் கங்கையை, இந்த இடத்தில் வரவழைத்தார். இதை அனைவரும் வணங்குவார்களே தவிர, இதில் நீராடுவதில்லை.

பௌர்ணமி அன்னதானம்

அவந்தி நாட்டு மன்னர் ருசிராஜன் என்பவர், பரத்வாஜ முனிவரிடம், ‘‘தானங்களுள் சிறந்தது எது?’’ எனக்கேட்டார். ‘‘அன்னதானம் தான் உயர்ந்தது. அதைத் திரு நள்ளாறு சிவன்கோவிலில் செய்வது மேலும் விசேஷம்’’ என்றார் முனிவர். அதன்படி மன்னர் இங்கு வந்து, மார்கழிப் பௌர்ணமி அன்று அன்னதானம் செய்து இறைவனைத் துதித்தார்; ஈசரை நேருக்குநேராகத் தரிசித்து வரங்கள் பல பெற்றார்.

- பி.என்.பரசுராமன்