இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-61



மாருதியே! எம் வாழ்வில் தருவாய் நிம்மதியே!

ஹனுமத் ஜெயந்தி 12-1-2021

‘ஆஞ்சநேயர்’ என்று நம் அகம் நினைக்கிற போதே ஒரு ஆனந்த அமைதி பூக்கிறது!
என்ன காரணம்?
அவர் தனக்கென வாழா தகைமையாளர் பிறர் நலம் பேணும் பெற்றியர்!
ஸ்ரீராமபிரானின் துணைபெற்று சுக்ரீவனுக்கு இழந்த அரசையும், மனைவியையும் மீட்டுத் தந்தவர். பின்னர், சுக்ரீவனின் வானரப்படை துணையோடு ராமபிரானின் மனைவியை மீட்க மூலகாரணமாய் அமைந்தவர்.

இரு இல்லங்களில் குடும்ப விளக்கு ஏற்றியவர்! ஆனால், அவர் நைஷ்டிக பிரம்மச்சாரி.
நீதியில் நின்றவர்!
வாய்மை அமைந்தவர்!
நினைவாலும் மாதர் நலம் பேணாது
வளர்ந்தவர்!
கம்பனின் காவிய வரிகள் இவை !

வாயு புத்திரன், ஆஞ்சநேயர், அமன், மாருதி, ராமபக்தர் என்றெல்லாம் அன்பர்கள் கூட்டமாகிய நாம்தான் அவரை ஆராதிக்கிறோமே தவிர, தன் பெருமையில் அவர் ஒருபோதும் தலை நிமிர்ந்து இறுமாப்பு கொண்டதில்லை.

‘பணியுமாம் என்றும் பெருமை’ என்ற
வள்ளுவரின் வாசகத்திற்கு ஒரு வரலாறு வேண்டு மெனில் அது மாருதியின் மகத்துவம் மிக்க வாழ்க்கையே!
சுற்றும் சூரியனோடு சுற்றிப் படித்தும் சற்றும் ஆணவம் இல்லாத சான்றாண்மை அவரிடம் அமைந்திருந்தது. படங்களில் பார்த்திருப்போமே! அவர் வாயருகே கை வைத்திருப்பார்! ‘வளவள’ என்று பேச மாட்டார் !

நம்மவர்களிடையே சற்றுப் படித்தவர்கள் கூட, ஏதோ சில எழுதியவர்கள்கூட இறுமாப்போடு இருக்கிறார்கள். அனைத்தும்
தெரிந்தவர்கள்போல வாயாடுகிறார்கள்.ஆஞ்சநேயரோ ‘வணங்கிய சென்னியர்! மறைத்த வாயினர், வணங்கிய கேள்வியர்!’’
‘அடக்கம்’ ஆகியவரை நாமெல்லாம் அடக்கத்தோடு இருப்பதில்லை !

மாருதி, ‘நவவ்யாகரண பண்டிதர்’ ஒன்பது இலக்கணங்கள் கற்ற அவர், பணிவிற்கு இலக்கணமாக விளங்கினார்.
அவதார புருஷனில் இன்றைய கவிஞர் வாலி அவரை எப்படி அறிமுகப்படுத்துகிறார் தெரியுமா ?

‘அனுமான்
குன்றுபோல் வலியன் -  ஆனால்
கன்று போல்
காட்சிக்கு எளியன் !
தலைசிறந்த
தத்துவ  ஞானியாய்  இருப்பினும்
தலை வீங்காமல் -
தாடைகள் மட்டுமே  வீங்கியவன் !
கால் முளைத்து  -  நெடிய
வால் முளைத்து
புவியில் நடக்கும்
புலனடக்கம் !

ஆம்! அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை, தொண்டு, புலனடக்கம், பணிவு, உடல் வன்மை, உள்ள உறுதி என அனைத்தின் கலவையாகத் திகழும் கவிக்குலத்து வேந்தரே வாயுபுத்திரர்.அவரின் ஒரு வார்த்தையைக்  கேட்ட மாத்திரத்திலேயே ராமர் புளகாங்கிதம்  அடைந்தார்.

‘இல்லாத உலகத்து எங்கும் ஈங்கிவன் இசைகள் கூர
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற் றன்றே! யார் கொல்
இச்சொல்லின் செல்வன்?

வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ விடைவல்லானோ ?
‘இலக்குவனே! இப்படி அற்புதச் சொற்பதங்களை நற்பதத்தில் நல்குகின்றானே. இவன் யார்? சிவபெருமானா! பிரம்ம தேவனா என அனுமாரைக் கண்ட மாத்திரத்தில் அதிசயப்படுகிறார் ராமர். ‘சொல்லின் செல்வன்’ என ஒரு சிறப்புப் பட்டமும் சூட்டுகிறார். அனுமார் சொல்லின் செல்வர் மட்டுமா? காற்றின் மைந்தரான அந்தப் புயலின் புதல்வர் செயலின் முதல்வர் கூட! போர்க் களத்தில் மயங்கி விழுந்தவர்களை எழுப்ப மருந்து மலையையே வினாடி நேரத்தில் விரல்களில் தூக்கி வந்தவர்தானே அந்த வீரஆஞ்சநேயர்.

அதுவரை யாரும் செல்லாத இலங்கையில் தனி ஒருவராய் அழைத்து வீரமுடன் பல செயல்களை புரிந்து ஜானகியின் துயர் களைந்த வானரவீரர்தானே மாருதி. பதினான்கு ஆண்டு முடிந்து விட்டதே என பரதர் தீயில் விழும் தருணம் அவர்முன் ஓடி வந்து நொடிப் பொழுதில் நெருப்பைக் கரியாக்கிய நேர்மையாளர்தானே அனுமார்! சுக்ரீவனோடு ராமரையும், ராமரோடு சுக்ரீவனையும் சேர்த்து வைத்தவர்தானே   அஞ்சனையின் செல்வன்!

அதனால்தான், ‘செவிக்குத் தேன் என ராகவன் கதையைத் திருத்தும் கவிக்கு நாயகன்’ என கம்பர் புகழாராம் சூட்டுகிறார். சுட்டிய எல்லா சம்பவங்களையும் சற்று உற்றுக்கவனியுங்கள்! ஆஞ்சநேயர் தன் சுயலாபத்திற்காக எச் செயலையும் செய்யவில்லை என்பது தெளிவாகும்! அடுத்தவர் துயர் துடைப்பதே அனுமாரின் தலையாய லட்சியம்!

‘‘அன்பர்பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலைதானே வந்து எய்தும் பராபரமே!’’
 - என்பதுதானே தாயுமானவரின் தமிழ். ஆய்ந்த நேயம் உடையவர். அதனால்தான் அவர் ‘ஆஞ்சநேயர்!’ என்று கூட நாம் எண்ணி இன்புறலாம்.
தலைவர் ராமபிரானையே சதாகாலமும் நினைத்து அவர் பக்தியிலேயே திளைப்பவர் மாருதி!

தொண்டர் என்பதின் தூய இலக்கணம் அனுமார் என்று நாம் அடையாளப்படுத்தலாம். மார்பைப் பிளந்து ராமர் தரிசன மாண்பைக் காட்டியவர்தானே அவர்!பொதுவாக மனிதர்களின் மனம் ஓரிடத்தில் நிற்பதில்லை! ஒன்றைப் பற்றுவதில்லை. அதனால்தான் கிளைக்கு  கிளை தாவும் வானரத்தை உவமையாக்கி மனம் ஒரு குரங்கு என்கிறோம். ‘குரங்கு கையில் பூமாலை’ என்றும் குறிப்பிடுகின்றோம். மனிதர்களாகிய நம்முடையவர்களின் மனம் குரங்காக இருக்கிறது. ஆனால், குரங்காகிய அனுமாருடைய மனம் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நிற்கிறது. அதனால்தான் அவருக்குக் கோயில்! அதிலும் ஒரு அதிசயம் பாருங்கள். ராமருக்குக்கூட தனி ஆலயம் கிடையாது. இலக்குவன், சீதை, ஆஞ்சநேயர் சூழ தரிசனம் தருகிறார், பெருமாள்.

அனுமார் தனித்து ஆலயமும் பெற்றார்! ராமர் கோயிலிலும் இருக்க இடம் உற்றார்! காரணம் என்ன? தன்னல மறுப்பாளராகிய அவருக்கு தகைமை தானாக வந்து சேர்கிறது. விநயம் கொண்ட அவருக்குப் புகழ் விமரிசையாக வந்து பொருந்துகிறது.மக்கள் மனங்களையெல்லாம் ஆளுகிறார், மாருதி! கம்பராமாயணத்தின் நான்காவது காண்டத்தின் இரண்டாவது படலத்தில்தான் அறிமுகமே ஆகிறார், ஆஞ்சநேயர். ஆனால், அனைவரின் மனங்களையும் அவர்தானே ஆளுகிறார்.

சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத பல குணங்கள், சக்திகள் மாருதியிடம் ஒன்றியுள்ளது.நல்ல புத்திசாலி தேகபலம் இல்லாமல் இருப்பான். பெரிய பலசாலி, அறிவுக்கூர்மை இல்லாமல் இருப்பான். இரண்டும் இருந்தாலும் வீரமில்லாமல் இருப்பான். எடுத்துச் சொல்கிற விழிப்புணர்வு இல்லாமல் இருப்பான். அடக்கம் இல்லாமல் தான்தோன்றியாகத் திரிவான். ஆஞ்சநேயரிடமோ எதிரெதிர் குணங்கள், சக்திகள்கூட இணைந்திருந்தன. வலிவு இருக்கிறவன் கெட்ட வழியில் போவதுண்டு. ஆனால், ஆஞ்சநேயர் தூய எண்ணங்களின் துறைமுகமாகத் துலங்குகிறார்.
இன்றைய பாரத இளைஞர்கள் எல்லாம் அனுமாரிடம் பாடம் படிக்க வேண்டும்!

அறிவு, திறமை, வீரம், சேவை, சொல்லாற்றல், பணிவு என அனைத்தையும் தன்னை வழிபடுபவர்களுக்கு வாரி  வழங்குகிறார், மாருதி.மாதங்களில் சிறந்தது மார்கழியில் அவரை வழிபடுகின்றோம். மூலநாளில் அந்த முன்னவரைத் தொழுகின்றோம்! வாசம் வீசும் துளசி மாலையும், வடை மாலையும், வெற்றிலை மாலையும், நாம் சூட்டி மகிழ்ந்தால் நமக்கு ‘வெற்றி மாலையைச் சூட்டுவதற்கு அவர் தயாராக இருக்கிறார்.

நவகிரக வினை நாடாமல் சுபக்கிரகம்தனில் நம்மை சோபிக்க வைக்க, இகபர சுகத்தை இனிதே கொடுக்க அனுக்கிரகம் செய்கிறார், ஆஞ்சநேயர். மகாபாரதப் போரில் பாண்டவர்கள் பரந்தாமன் அருளால் வெற்றி பெற்றார்கள். வெற்றி பெறும்  விஜயனுக்காக கண்ணபிரான் தேர் நடத்தினார்! அந்தத் தேர்க் கொடியில்  திகழ்ந்தவர் ஆஞ்சநேயர்! தன் மாபெரும் மந்திர சக்தியால், ராம ஜபத்தால் போரில் தேர் எரிந்து விடாமல் காத்தவர், அவரே!

பன்முகச் சிறப்பு  பெற்ற மாருதி பஞ்சமுகம் பெற்றும் விளங்குகிறார். வாராஹர், நரசிம்மர், ஹயக்ரீவர், கருடர், ஆஞ்சநேயர் என சிறக்கும் அவரின்  அடிமலர்  தொழுவோம்.ஆஞ்சநேயர் எப்படிப்பட்ட மூர்த்தி எனப் புரிந்து கொள்வோம்! அவரைப் போற்றுவதற்கு அவர் நாமம்கூட வேண்டாம்! ராம நாமம் சொன்னால் போதும்! இப்படி ஒரு இறைவர் வாய்த்ததற்கு பாரத நாட்டினர் பெருமை  கொள்வோம்! வாயு புத்திரனை நாம் வழிகாட்டியாகக் கொண்டால் வாழ்வு சிறக்கும்! நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கும்! ஆயிரமாயிரம் ஆனந்தக் கதவுகள் திறக்கும்!

மாருதியே ! என்றும் நீ கதியே ! - உன்
மனமே ராமனின் சந்நிதியே ! - அதை
வலம்வரத் தருவாய் அமைதியே ! பக்தி
வானில் நீயே முழுமதியே! - எம்
வாழ்வில் தருவாய்  நிம்மதியே ! - தினம்
வழங்குக திருவருள் வெகுமதியே !

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்