கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா



மார்கழி மாதம் இருபத்தேழாம் தேதியைக் கூடாரவல்லி என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது. கண்ணனைக் கடிமணம் புரிய விழைந்த ஆண்டாள், மார்கழி மாதம் முப்பது நாட்களும் நோன்பு நோற்று, அவ்வாறு நோன்பு நோற்றவற்றைத் திருப்பாவை என்னும் முப்பது பாசுரங்களாகப் பாடி அருளினாள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
மார்கழி மாதம் முப்பது நாட்களுக்கும் இணையாக முப்பது பாசுரங்களை ஆண்டாள் பாடியுள்ளபடியால், மார்கழியின் ஒவ்வொரு நாளையும் அந்நாளுக்குரிய பாசுரத்தின் முதல் வார்த்தையை இட்டுக் குறிப்பிடும் வழக்கம் இன்றளவும் உள்ளது. எடுத்துக்காட்டாக, மார்கழி மாதம் முதல் நாளை ‘மார்கழித் திங்கள்’ என்றும், இரண்டாம் நாளை ‘வையத்து’ என்றும், மூன்றாம் நாளை ‘ஓங்கி’ என்றும் குறிப்பிடுவார்கள்.

அந்த வகையில், திருப்பாவையின் 27ம் பாசுரம், “கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா” என்று தொடங்குவதால், மார்கழி மாதத்தின் 27ம் நாளை ‘கூடாரை வெல்லும்’ என்று பெரியோர்கள் குறிப்பிட்டு வந்தார்கள். காலப்போக்கில் கூடாரை வெல்லும் என்பது மருவிக் ‘கூடாரவல்லி’ என்று ஆகிவிட்டது.“கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!” என்பது திருப்பாவையில் மிகவும் பொருள் பொதிந்த ஒரு சொற்றொடர் ஆகும். கோவிந்தன் என்ற திருப்பெயர் திருமாலின் பத்து அவதாரங்களையும் குறிக்கும்.

1. மத்ஸ்யாவதாரத்தில் கோ எனப்படும் வேதங்களைத் திருமால் காத்த படியால், மத்ஸ்யாவதாரத்துக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருந்துகிறது.
2. கூர்மாவதாரத்தில் கோ எனப்படும் மலையைத் தன் முதுகிலே தாங்கி நின்றதால், அவருக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருத்தமானதே.
3. வராக அவதாரத்தில் கோ எனப்படும் பூமியை மீட்டதால், அவரையும் கோவிந்தன் எனலாம்.
4. நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதனின் துதியாகிய ‘கோ’வை (கோ என்றால் நல்வார்த்தை) ஏற்று அருள்புரிந்தபடியால், நரசிம்மரும் கோவிந்தனே.
5. கோ எனப்படும் பூமியை அளந்ததால், வாமன மூர்த்தியும் கோவிந்தன் ஆவார்.
6. கோ எனப்படும் பூமியில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டியதால், பரசுராமருக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருத்தமாகவே உள்ளது.
7. கோ எனப்படும் பூமியை ஆண்டதால், ராமனும் கோவிந்தன்.
8. கோ எனப்படும் பூமியைத் தனது கலப்பையாலே உழுதபடியால், பலராமனையும் கோவிந்தன் எனலாம்.
9. கோ எனப்படும் பசுக்களை மேய்த்துக் காத்த கண்ணனும் கோவிந்தனே என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை.
10. கோ எனப்படும் பூமியில் அறத்தை நிலைநாட்ட அவதரிக்கப் போகும் கல்கியையும் கோவிந்தன் என்றே கூறலாம்.

இத்தகைய கோவிந்தனான இறைவனைக் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா என்று அழைக்கிறாள் ஆண்டாள். கூடார் என்றால் எதிரிகள், அசுரர்கள். சீர் என்றால் குணம் என்று பொருள். தனது குணத்தாலும் அழகாலும் எதிரிகளைக் கூட வென்று திருத்தி, அவர்களைத் தன் அடியார்களாக ஆக்குபவன் என்பது இதன் பொருளாகும். “கூடாரான எதிரிகளை வென்று பக்தர்களாய் மாற்றத் தக்கதான சீரை உடைய கோவிந்தனே!” என்று இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால்,  இந்தத் தொடருக்குள்ளே மற்றொரு ஆழ்பொருளையும் ஒளித்து வைத்திருக்கிறாள் ஆண்டாள். எதிரிகளை வெல்பவனே என்று இறைவனைக்
குறிப்பிடுவதில் உள்ள ஆழ்பொருள் என்னவென்றால், “இறைவா! நீ எதிரிகளைத் தான் வெல்வாய்! உன் அடியார்களான எங்களிடம் நீ தோற்று விடுவாய்!” என்று பொருள். எனவே கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா என்றால், “கூடுவோரான பக்தர்களிடம் தோற்கும் கோவிந்தா!” என்று ஆழ்பொருள். ஏனெனில், பக்தனை வெற்றி பெறச் செய்து, அந்த பக்தனிடம் தான் தோற்று மகிழ்கிறானாம், இறைவன்.

விஷ்ணு ஸ்ஹஸ்ரநாமத்தில் ‘விஜிதாத்மா’ என்று ஒரு திருப்பெயர் (626-வது திருப்பெயர்) வருகிறது. யாராலும் வெல்ல முடியாதவர் என்று அதற்குப் பொருள். அதற்கு அடுத்த திருப்பெயர் (627) ‘விதேயாத்மா’ என்று வருகிறது. அதற்குத் தோற்பவர் என்று பொருள். இவை இரண்டும் முன்னுக்குப் பின் முரணாகத் தோன்றுகிறதே என்று சிந்தித்தால், உரையாசிரியர்கள் அதற்குச் சுவையாக விளக்கம் தருகிறார்கள்.

விஜிதாத்மா - யாராலும் வெல்ல முடியாதவர் - என்றால் எதிரிகளால் வெல்ல முடியாதவர் என்று பொருள். விதேயாத்மா - தோற்பவர் - என்றால் அடியார்களிடம் தோற்பவர் என்று பொருள். தன் பக்தனுக்கு வெற்றியைத் தந்து, அவனிடம் தான் தோற்று மகிழ்கிறான் இறைவன். அதையே கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா எனும் தொடரில் உணர்த்துகிறாள், ஆண்டாள்.

இறைவனின் இத்தகைய எளிமையை விளக்கும் இந்தப் பாசுரத்தில் அக்கார அடிசில் செய்யும் முறையையும் ஆண்டாள் பாடி இருக்கிறாள். மார்கழி நோன்பு நோற்கையில், நெய் உண்ணோம், பால் உண்ணோம் எனப் போகப் பொருட்களை விலக்கி வைத்த கோபிகைகள், இப்போது நோன்பு வெற்றி அடைந்து, கிருஷ்ண அநுபவம் கிட்டி விட்டதாலே, பாலும் நெய்யும் கலந்த அக்கார அடிசிலை உண்போம் என்று,

“…பால்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்”
என்கிறார்கள்.

இங்கே உரை ஆசிரியர்கள், பால் பாய்ச்சிய வயலில் விளைந்த அரிசியை எடுத்து வந்து, அதைப் பாலிலேயே சாதமாக வடித்து, அதன்பின் 70 படி பாலுக்கு ஒரு படி அரிசி என்ற வீதத்தில் அதைப் பாலுடன் கலந்து, வெல்லம் சேர்த்து, ஒவ்வொரு பிடி அரிசிக்கும் ஒரு பாதாம், இரண்டு கற்கண்டு, இரண்டு பிஸ்தா, இரண்டு திராட்சை, இரண்டு முந்திரி வீதம் கலந்து, ஒவ்வொரு பிடி அரிசிக்கும் ஒரு பிடி நெய் சேர்த்து, ஒரு துளி உப்பு கலந்து, அதைச் சுமார் 6 முதல் 9 மணி நேரம் கலந்து தயாரிக்கும் அக்கார அடிசிலைப் போல் இனியவனான கண்ணன் என்னும் அமுதை ஆண்டாளும் அவள் தோழிகளும் உண்டு மகிழ்கிறார்கள் என்று சுவைபடத் தெரிவிக்கிறார்கள்.

இதன் நினைவாகவே, இந்த வழிமுறையை இயன்ற அளவு பின்பற்றி, கூடாரவல்லி அன்று பெருமாள் கோயில்களிலும், இல்லங்களிலும் இத்தகைய அக்கார அடிசில் தயாரித்து இறைவனுக்குச் சமர்ப்பிக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது.இந்த நன்னாளில் நாமும் வீட்டில் அக்கார அடிசில் தயாரித்து இறைவனுக்குச் சமர்ப்பிப்பதோடு, திருப்பாவை என்ற அக்கார அடிசிலையும் சுவைத்து மகிழ்வோம்.

சூரியனின் மகள் திருமணம்

சூரியனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் சாவித்திரி. சூரியனின் மகளாகையால், அவளை சூர்யா சாவித்திரி என்றே எல்லோரும் அழைத்தார்கள். ரிக் வேதத்தில், சூரியா-சாவித்திரியின் திருமணம் ஒன்றுதான் சடங்கை விவரிப்பதாக அமைந்துள்ளது. இது ரிக் வேதம் பத்தாவது மண்டலத்தில் உள்ள 85வது சூக்தமாகும். வேதம் சொல்லும் சடங்கைச் சற்று நோக்குவோம்.

இந்த சூக்தத்தை ஊன்றிக் கவனிக்கும் பொழுதும், இந்தச் சடங்கு பெண் வீட்டில் நடக்கிறது என்பது புலனாகிறது. கன்னிப் பெண்ணைக் காக்கும் கந்தர்வனான விசுவாவசுவை முதலில் வணங்குகிறார்கள். மணப் பெண்ணை விட்டுவிட்டு, வேறு சிறு கன்னிப் பெண்ணைக் காக்கப் போகும்படி அவனை வேண்டுகிறார்கள்.

அரியமான், மகன், பூஷன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒரு பெண்ணுக்கு இல்வாழ்க்கையில் முறையே நேர்மை, நல்ல அதிர்ஷ்டம், செல்வச் செழிப்பு ஆகியவைகளுக்கு அதிதேவதைகளாக விளங்குகிறார்கள். ஆகையால், இம்மூன்று தெய்வங்களுக்கும் அக்கினியில் ஆஹூதிகளை வழங்குகிறார்கள். மணமகன் தனது வலது கையால் மணமகளின் வலது கையைப் பிடித்துக் கொள்கிறான். மணப் பெண்ணைத் தன் தகப்பன் வீட்டிலிருந்து பிரித்துப் புருஷன் குடும்பத்துடன் சேர்த்து  விடுகிறார்கள்.

அப்பொழுது அவளைத் தேரில் ஏறி, புருஷன் வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் செல்லும் படிக் கூறுகிறார்கள்.
அச்சமயம் பின்வரும் ரிக்கை ஓதுகிறார்கள்
ஸுமங்கலீரியம் வதூ:
இமாம் ஸமேத பச்யத I
ஸெள பாக்யமஸ்மை தத்வாயா:
அதாஸ் தம் விபரேதந ll
இதன் பொருள் வருமாறு:

“சௌமங்கல்யமான குறிகள் இந்த மணப் பெண்ணிடத்தில் தென்படுகின்றன. நீங்கள் எல்லோரும் சேர்ந்து வந்து இவளைப் பாருங்கள். எல்லா சௌபாக்கியங்களையும் அவளுக்கு அருளி விட்டுத் தத்தம் வீடுகளுக்குச் செல்லுங்கள்.”

இந்த வேத மந்திரம் மூன்று இடங்களுக்குப் பொருந்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். மணப் பெண் தன் தகப்பன்
வீட்டை விட்டுப் புருஷன் வீட்டிற்குப் போகும் பொழுதும் இது பொருந்தும். தேரில் மணமக்கள் போகும் பொழுது, வழியில் அவர்களைப்
பார்க்கக் குழுமியிருக்கும் மக்களிடம் இதைச் சொல்வதும் ஏற்றதாக இருக்கும். புருஷன் வீட்டிற்குச் சென்றவுடன் அவர்களைப் பார்க்க
வரும் மக்களிடம் சொல்வதாகவும் இது பொருந்தும்.இன்றும் நம் நாட்டில் திருமணச் சடங்குகளில் இந்த மந்திரம் ஓதப்படுவதை நாம் கேட்கலாம்.

சவிதா

வேதகாலத்திலும், பிற்காலத்திலும் சவிதா சூரியனின் மற்றொரு பெயராகவே விளங்குகிறது. வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஆதித்திய இருதயம் என்ற துதியில் ‘‘ஆதித்ய : ஸவிதா சூரிய: கக: பூஷா கபஸ்திவான்’’ என்ற சூரியனுடைய மற்ற பெயர்களின் வரிசையில் சவிதா சேர்ந்துள்ளது. ஆனாலும், வேதகாலத்தில் சவிதாவிற்கும் சூரியனுக்கும் ஒரு நுண்மையான வேறுபாடு இருப்பதைக் காணலாம்.

யாஸ்கர் எனும் அறிஞர், இருள் நீங்கிய பிறகு விண்ணில் தென்படுவதுதான் சவிதா என்று கூறுகிறார். (நிருக்தம்  XII.12)‘‘எவனொருவன், பகலை உண்டு பண்ணும் சூரியனை இழுக்கிறானோ (பிரஸௌதி), அவனே சவிதா’’ என்று ஸெளனகர் கூறுகிறார். ( பிருஹத்தேவதா  II.62) ரிக்  வேதத்திற்கு  உரை  எழுதிய  ஸாயனர்  உதயத்திற்கு முன் உள்ள சூரியன் சவிதா எனப்படுவான் என்று கூறுகிறார்.

(ரி.வே. V.81.4. ஸாயனரின் உரை). ரிக் வேதமே, ‘‘மிகுந்த அருளுடைய தெய்வமான சவிதா எல்லா ஜீவ ராசிகளை (அதிகாலையில்) எழுப்பியும் (இரவில்) தூங்கச் செய்தும் உலகில் ஆட்சி புரிகிறான்.’’ இங்கு சவிதா உதயமாவதற்கு முன் உள்ளதும், அஸ்தமிக்கும் சமயத்தில் இருப்பதும் ஆன சூரியனைக் குறிக்கிறது என தெரிகிறது.

தூங்கச் செய்பவனும் சவிதா. எழுப்புகிறவனும் சவிதா என்ற இதே கருத்தை இன்னுமொரு ரிக்கும் கூறுகிறது. (VII.45.1)சவிதா தேவதையாக விளங்கும் ஒரு அழகான ஸூக்தத்தில் அஸ்தமிக்கும் சூரியனுக்குப் பொருந்தும் பல குறிப்புகளை காணலாம். (ரி.வே. 11.38). ‘‘வேகமாக ஓடும் குதிரைகளை சவிதா அவிழ்த்து விடுவான்; விரைந்து செல்லும் தேரை அவன் நிறுத்துவான், பாம்புகளைப்போல சறுக்கிக் கொண்டே போகும் அவைகளை அவன் கட்டுப்படுத்துவான்.

அவனுடைய ஆட்சியை நெருங்கி இரவு பின்பற்றுகிறது. வறண்ட பிரதேசங்களில் வனவிலங்குள் தங்கள் பங்குக்கான நீரைத் தேடிப் போகின்றன. காடுகள் பறவைகளுக்கு ஒதுக்கப்பட்டன. தெய்வமான சவிதாவின் இந்தக் கட்டளைகளை யாரும் மீற முடியாது. அந்திவேளையில், வருணன், ஓய்வில்லாத அவசரத்துடன், நீரில் உள்ள தன் இருப்பிடத்திற்கு விரைகிறான்; பிறகு, ஒவ்வொரு பறவையும் தன் கூட்டைத் தேடுகிறது; விலங்குகள் தங்களுடைய இருப்பிடத்திற்குச் செல்லுகின்றன; இப்படியாக சவிதா ஒவ்வொரு பிராணியையும் அதனதன் இடத்தில் இருக்கச் செய்கிறான்.

ஹரிணி வெங்கடேஷ்