பாகவதம் கூறும் சூரிய வழிபாடு



திருமாலின் திருப்பெருமைகளை கூறும் பெருமை மிக்க புராணங்கள் பலப்பல. அவற்றுள் பக்தியின் மேன்மையையும், பரந்தாமன் மகிமைகளையும், எழிலுற எடுத்துச் சொல்வதில் ஸ்ரீமத் பாகவத புராணத்திற்கு ஈடு இணையே இல்லை என்றால் அது மிகையாகாது. புராணங்களில் பரந்தாமனே விரும்பும் புராணம் அல்லவா ஸ்ரீமத் பாகவதம்? அதனால் தானே பகவானுக்கு ‘‘பாகவதப் பிரியன்” (பாகவதத்தை விரும்புபவன்) என்ற திருநாமம் வழங்கப்பட்டு வருகின்றது. கண்ணன் கழலை நண்ணும் மணமுடைய பாகவதம், ஒரு இடத்தில் கண்ணனை, சூரியனில் விளங்கும் மூல பரம்பொருளான சூரிய நாராயணனாக அனுபவிக்கிறது.

அந்த சுவைமிகு சரிதத்தின் சில தேன் துளிகளை இப்போது நாம் சுவைக்கலாம் வாருங்கள்.வேதத்தை தொகுத்து வழங்கிய வியாச பகவானுக்கு, பல சீடர்கள் உண்டு. அவர்களுள் அதர்வண வேதத்தை வியாசரிடம் இருந்து கற்ற வைசம்பாயனர் முக்கியமானவர் ஆவார். இராமாயணத்தை ஸ்ரீஇராமனின் அரசவையில் அரங்கேற்றிய பெருமை, குச லவர்களை சாரும் என்றால் மகாபாரதத்தை ஜனமேஜயனுக்கு எடுத்துரைத்த பெருமை வைசம்பாயனரை சேரும்.

இந்த வைசம்பாயனர் ஒருமுறை, ஒரு முனிவரை (அந்தணர் என்றும் சொல்வதுண்டு) கொன்ற பாவம் நீங்க, தவம் செய்ய வேண்டும் என்ற நிலை வந்தது. ஆனால், வைசம்பாயனர் தவம் செய்யச் சென்று விட்டால், அரிய வேத மந்திரங்களை அறிவது எங்கனம்? என்று யோசித்தார்கள், அவரது சீடர்கள். ஆகவே, அவருக்குப் பதிலாக, சீடர்கள் சிலர் தவம் செய்யச் சென்றால், வைசம்பாயனர் தங்கு தடையின்றி வேதத்தை போதிக்கலாம் என்று
தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சில சீடர்கள் குருவின் பாவத்தை ஏற்று அவருக்காக தவம் செய்ய முன்வந்தார்கள். அப்படி முன்வந்த அனைவரும் வயதால் வெகு சிறியவர்களாக இருந்தார்கள்.

இதைக் கண்ட வைசம்பாயனரது சீடருள் ஒருவரான யாக்ஞவல்கியருக்கு, சிறுவர்களை சிரமத்திற்கு உள்ளாக்குவது சரி என்று தோன்றவில்லை. உடனே, குருவின் முன்னே பணிவாக வந்து அவர்களுக்குப் பதிலாக, தான் ஒருவனே சென்று தவம் செய்ய அனுமதி தருமாறு வேண்டினார்.

இதைக் கேட்ட குருவிற்கு, யாக்ஞவல்கியர் நிரம்ப ஆணவம் பிடித்தவராக தெரிந்தார். வேதம் கற்கும் உத்தமர்களிடத்தில் ஆணவம் கூடாது என்பதால் அவருக்கு கோபம் வந்தது. மாணவனை கடிவதற்காக ‘‘ஆணவம் கொண்ட சீடன் எனக்கு அறவே வேண்டாம். ஆகவே, நொடிகூட தாமதிக்காமல், நான் கற்றுத் தந்த வேதங்களை எல்லாம் கக்கி விட்டு இங்கிருந்து நீங்கி விடு” என்று கோபத்தோடு மாணவனை கடிந்தார் வைசம்பாயானர்.

யாக்ஞவல்கியர், உடனே குருவின் சொல்லை மீறாமல் தான் கற்ற வேதமந்திரங்களை எல்லாம் கக்கிவிட்டு உடனே அங்கிருந்து நீங்கினார். மனதில் குருவை நீங்கி விட்டோமே என்ற கவலை. கூடவே, இனி கல்வி கற்க வழியே இருக்காதோ? என்ற அச்சம். இவை இரண்டும் சேர்ந்து யாக்ஞவல்கியரின் மனதை படாதபாடுபடுத்தியது.

என்ன செய்வதென்று விளங்காமல், ஆகாயத்தைப் பார்த்தபோது சூரியன் அங்கே ஜொலித்துக்
கொண்டிருந்தார். மூன்று வேளையும் தவறாமல் சூரியனை சந்தியாவந்தனம் செய்து வணங்கும் உத்தமரான அவரது மனதில், பின்வரும் சந்தியாவந்தன மந்திரம் நினைவுக்கு வந்தது.

‘‘த்யேயஸ்ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ நாராயண ஸரஸிஜாஸன
ஸந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவான் கிரீடீ ஹாரி ஹிரண்யவபு: த்ருத சங்கசக்ர:”

அதாவது, சூரிய மண்டலத்தின் மத்தியில் கிரீடம் தோள்வளை தங்கமயமான ஹாரங்கள் பூண்டு, சுவர்ணம் போன்று ஒளிவீசும் திருமேனியோடு, சங்கு சக்கரம் தாங்கும் நாராயணனை நான் தியானிக்கிறேன்! என்று அந்த மந்திரத்திற்குப் பொருள். உடனே, யாக்ஞவல்கியருக்கு சூரிய மண்டலத்தின் நடுவிலிருக்கும் அந்த நாராயணனை சரணடைந்தால் என்ன? என்று தோன்றியது. அன்று பாஞ்சாலியை கீசகனிடம் இருந்து ரட்சித்ததுபோல, நம்மையும் நிச்சயம் அவர் காப்பார் என்று யாக்ஞவல்கியர் ஆணித்தரமாக நம்பினார். ஆகவே, ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் சூரியனில் விளங்கும் நாராயணனை துதிக்க ஆரம்பித்தார். அந்தத் துதியின் சில துளிகளை இப்போது பார்ப்போம் வாருங்கள்.

“சூரிய நாராயணனுக்கு நமஸ்காரம். தாங்கள் பிரம்மதேவன் முதல் சிறு புழு வரையில் உள்ள நான்கு விதமான ஜீவன்களுக்கும் உள்ளே கடந்து விளங்கும் கடவுள் ஆவீர். இரவையும் பகலையும் தோற்றுவிக்கும் கால வடிவினரும் தாங்களே! மேகங்களால் மறைக்கப்பட முடியாத ஆகாசம் போல என்றும் இருப்பவராக மாசற்றவராக இருக்கிறீர்கள்.

மேலும், தாங்கள் க்ஷனம், நிமிஷம், லவம் முதலிய உறுப்புகளை உடைய சம்வத்சரமாக இருக்கிறீர்கள். அதாவது ஒரு வருடத்தின் வடிவாக உள்ளீர்கள். மேலும் கடலில் இருந்து அதிகப்படியான நீரை உறிஞ்சி, நீர் வேண்டித் தவிக்கும் எங்களுக்கு மழையாகப் பொழிகிறீர்கள்.”

அறிவியல் water cycle என்று கூறுவதைத்தான் முனிவர் அழகாக மேலிருப்பதுபோலச் சொல்கிறார். இப்படி நீங்கள் செய்யும் செயலை எதிர்ப்பவர் யாரும் இல்லை. ஓ... தேவர்களுக்கு எல்லாம் தேவரே! ஜீவன்களை படைத்தவரே! ஒவ்வொரு நாளும் மூன்று வேளையும் வேளை தவறாமல் முனிவர்கள் செய்யும் சந்தியாவந்தனத்தால் மகிழ்ந்து, அவர்களது பாவத்தை வேரோடு சாய்க்கிறீர்கள்.

நிற்பன, நடப்பன, ஊர்வன, பறப்பன என அனைத்து வகை ஜீவன்களும் தாங்களாலேயே வாழ்கின்றன. காரணம், நீங்கள் அவற்றுள் இருந்து அவற்றின் உயிர், மூச்சு, மனம், புலன்கள் என்று அனைத்தையும் காரியம் செய்யும்படி ஏவுகின்றீர்கள். உண்மைதானே! சூரியன் உதித்தால்தானே உயிர்கள் சுறுசுறுப்போடு இயங்குகிறது? சூரியன் மறைந்தபின் தன்னை மறந்து அனைத்தும் தூங்க அல்லவா செய்கின்றது? அது மட்டுமில்லை. கொலை, கொள்ளை போன்ற பாதகச் செயல்களும் பெரும்பாலும் சூரியன் இருக்கும்போது நடப்பதில்லை. ஆகவே, உயிர்களை தர்ம வழி நடத்துபவர் சூரியன் என்று முனிவர் சொல்வது மிகை அல்ல.

ஒவ்வொரு முறையும் இருட்டு என்னும் மலைப் பாம்பினால் வையகம் விழுங்கப்படும் போது தங்களின் அருள்பார்வையால் அல்லவா நாங்கள் ஒவ்வொரு நாளும் மீண்டு வருகிறோம்! இப்படி நல்லவர்களுக்கு நன்மையையும் துஷ்டர்களுக்கு இடைஞ்சலும் தந்து இந்த உலகத்தை அழகாக ரட்சிக்கிறீர்கள்.

இந்திரன் முதலிய எட்டு திசையின் காவலர்கள் தினம் தினம் தங்களை தாமரையால் அஞ்சலி செய்கிறார்கள். அதாவது கதிரவன் வரவால் கமலங்கள் மலரும் அல்லவா. அப்படி மலர்ந்த மலர்கள் அனைத்தும் சூரியனுக்கு எட்டு திசை நாயகர்கள் செய்யும் அஞ்சலிபோல இருக்கிறதாம் முனிவருக்கு.

மூன்று உலகங்களுக்கும் குருவாக விளங்கும் பிரம்மாகூட தங்களை வணங்குகிறார். இப்படி மகிமைகள் அநேகமுடைய தங்களை நான் வணங்குகின்றேன். தாங்கள் எனக்கு இந்த உலகம் அறியாத யஜூர் வேதத்தை உபதேசிக்க வேண்டும் என்று பாடி யாக்ஞவல்கியர் தனது துதியை
முடித்தார். குற்றமில்லாத முனிவரின் துதியைக் கேட்ட பின் சூரிய நாராயணன் இறங்காமல் இருப்பாரா? உடனே, அவருக்கு ஒரு வெள்ளைக் குதிரையின் வடிவில் காட்சி தந்து அவர் விரும்பியபடி உலகம் அறியாத வேத மந்திரங்களை உபதேசித்தார்.

இதில் குதிரையின் வடிவில் வந்து இறைவன் உபதேசித்தாக வருகிறது இல்லையா? அவ்வாறு வந்து உபதேசம் செய்தது சாட்சாத் ஞானமே வடிவாகிய ஹயக்ரீவமூர்த்திதான். அதாவது பரிமுகத்து எம்பெருமான்தான் என்று கொண்டால், அது தவறாகாது என்று தோன்றுகிறது.

 திருமாலின் பெருமைகளை கூறும் பாகவதத்தில் சூரிய நாராயணர் துதியாக மேல் சொன்ன துதி வருவதாலும், அந்த திருமாலின் அவதாரங்களில் ஞானத்தை உபதேசிக்க மட்டுமே எடுத்த அவதாரம் ஹயக்ரீவ அவதாரம் என்பதாலும், குதிரையாக வந்தது ஹயக்ரீவரே என்று கருதுவதே உத்தமம் என்று தோன்றுகிறது. வேதாந்த தேசிகர் வாழ்விலும் வாதிராஜர் வாழ்விலும் வெள்ளை குதிரையாக வந்து ஹயக்ரீவர் செய்த பல லீலைகளை இதற்கு ஒரு மேற்கோளாக கட்டலாம்.

மேலே நாம் கண்டவாறு குதிரையின் வடிவில் காட்சி தந்து சூரிய நாராயணர் உபதேசித்த வேதம் ‘‘வாஜ சனேயி சம்ஹிதை” என்று சொல்லப்படுகிறது. அதாவது ஒரு குதிரையால் உபதேசிக்க பட்ட சம்ஹிதை என்று பொருள். இந்த வேதத்தை யாக்ஞவல்கியரிடம் இருந்து கன்வ முனிவர், மத்யந்தின முனிவர் போன்றோர் பயின்று உலகில் வழங்கச் செய்தனர். மேலே நாம் கண்ட கதையும் சூரியனின் துதியும் ஸ்ரீமத் பாகவத புராணத்தில், பன்னிரண்டாவது ஸ்காந்தத்தில், ஆறாவது அத்தியாயத்தில் இருக்கிறது.

இந்தத் துதியை தினமும் சொல்லி ஸ்ரீசூரிய நாராயணரை வணங்குவது ஆச்சரியமான பலன்களைத் தரும். மேலும் இதை ஜெபிப்பதால் ஆரோக்கியம்,
ஐஸ்வர்யம் முதலியவைகள் உண்டாகும். ஜாதகத்தில் சூரியன் நீசமாகவோ அல்லது தோஷம் உள்ளவராக இருந்தாலோ அல்லது மயக்கம், நரம்புத் தளர்ச்சி, உஷ்ண நோய்கள் முதலியன இருந்தாலோ, இந்தத் துதியை சொல்லி சூரிய நாராயணனை வேண்டினால் வெகு விரைவில் நலம் உண்டாகும்.

ஜி.மகேஷ்