வேதம் வணங்கும் சூரிய பகவான்வேதகாலத்திலிருந்து இன்றுவரை நம் கண் முன்னால் காணும் (பிரத்யக்ஷ) தெய்வமாக சூரியன் விளங்குகிறான். ‘‘இருப்பவைகளையும், இருந்தவைகளையும், இனி இருக்கப்போகிறவைகளையும், அசைபவைகளையும் அசையாதவைகளையும், உண்டாக்குபவனும் அழிப்பவனும் சூரியன் ஒருவனே என்று சிலர் கருதுகிறார்கள்.’’ (பிருஹத் தேவதா 1.61)

சூரியன் எப்படிப் பிறந்தான் என்பதைப் பற்றி ரிக்வேதத்தில் பல குறிப்புகள் காணப்படுகின்றன. புருஷ சூக்தம், படைப்போனுடைய கண்ணிலிருந்து சூரியன் பிறந்தான் என்று சொல்கிறது. (ரி.வே. X.90.13). இந்திரன் தனியாகவோ, விஷ்ணு அல்லது சோமன் அல்லது வருணனுடன் சேர்ந்தோ சூரியனை உண்டாக்கியதாக ரிக்குகள் கூறுகின்றன.

சில இடங்களில் மித்ரா வருணர்களும், சில இடங்களில் சோமனும். சில இடங்களில் அக்னியும் சூரியனை உண்டாக்கியதாக வேதம் பேசுகிறது. இன்னுமொரு ரிக் அங்கிரஸ் மகரிஷியும் அவர் வம்சத்தாரும், வேள்விகளைப் புரிந்து, சூரியனை விண்வெளியில் உயரத்தில் பதித்தார்கள் என்று கூறுகிறது. அதர்வண வேதம் அவன் விருத்திரா சூரனிடமிருந்து பிறந்தான் என்று சொல்லுகிறது.

பிருஹத்தேவதா என்ற நூல், விருஷாகபாயி, ஸூரியா, உஷஸ் என்று சூரியனுக்கு மூன்று மனைவிகள் எனக் கூறுகிறது. ஆனால், ரிக் வேதம் பத்தாவது மண்டலத்தில் சூர்யா சூரியனுடைய மகள் என்ற குறிப்பைக் காண்கிறோம். சூரியன், தகப்பன் ஸ்தானத்தில் இருந்துகொண்டு சூரியாவைத் திருமணம் செய்து கொடுத்தார் என்றொரு ரிக் கூறுகிறது. உஷஸ் சூரியனின் மனைவி என்று ரிக்வேதம் ஓரிடத்தில் கூறுகிறது. பின்னால் வந்த இதிகாச, புராண நூல்களின்படி சூரியனுக்கு ஸம்ஜ்ஞா, சாயா, சூவர்சலா என்று மூன்று மனைவிகள் இருந்ததாகத் தெரிகிறது.

சூரியனுடைய போற்றத் தகுந்த ஒளி அக்கினி பகவானின் முகம்போல் விண்ணில் பிரகாசிக்கிறது. சூரியனின் விழியைப் பற்றிய குறிப்புகளை நாம் வேதத்தில் பார்க்கிறோம். மித்ரா - வருணர்களின் விழியாகவும், அக்கினி பகவானின் விழியாகவும் சூரியனை, வேதம் பேசுகிறது. விடியற்காலை, எல்லாத் தெய்வங்களின் விழிகளையும் கொண்டு இருப்பதாக ஒரு ரிக் கூறுகிறது.

 இறந்த மனிதனின் விழி சூரியனிடம் போவதாக ஒரு ரிக் கூறுகிறது. சூரியன் ‘‘கண்களின் நாயகன்’’ எனவும், எல்லா ஜீவராசிகளின் ஒரே கண்ணாகவும், விண்ணுக்கும் மண்ணுக்கும் நீருக்கும் அப்பால் பார்ப்பவன் என்றும் அதர்வண வேதம் பேசுகிறது. அவன் நெடுந்தூரம் பார்ப்பவன் என்றும், எல்லாவற்றையும் பார்ப்பவன் என்றும் உலகையெல்லாம், கவனித்து அறியும் உளவாளி என்றும், மக்களின் நல்லதும் கெட்டதுமான செயல்களைப் பார்ப்பவன் என்றும் வேதம் சொல்லுகிறது. இப்படியாக சூரியனுக்கும், விழிகளுக்கும் ஒரு தொடர்பு காணப்படுகிறது. சூரியனால் எழுப்பப்பட்டு மக்கள் தத்தம் அன்றாட அலுவல்களைக் கவனிக்கிறார்கள்.

மக்கள் எல்லோருக்கும் பொதுவாக அவன், அவர்களை எழுப்புவதற்காகவே உதயமாகிறான். அவன் அசையும் பொருட்களுக்கும் அசையாப் பொருட்களுக்கும் ஆன்மாவாக விளங்குகிறான். ஏழு குதிரைகளாலோஅல்லது ஒரு குதிரையாலோ இழுக்கப்பட்ட தேரில் அவன் சஞ்சரிக்கிறான்.

வருணன் ஸூரியனுக்குப் பாதை அமைத்துக் கொடுத்ததாக ஒரு ரிக்கும், மித்ரா - வருணர்கள், ஆதித்யர்கள் மற்றும் அர்யமான் எல்லோருமாக சேர்ந்து அவனுக்குப் பாதை அமைத்ததாக மற்றுமொரு ரிக்கும் கூறுகின்றன. பூஷன் அவனுடைய தூதன். உஷஸ் சூரியனையும், அக்கினியையும், வேள்வியையும் கொண்டு வந்ததாக இரண்டு ரிக்குகள் கூறுகின்றன. உஷஸின் மடியிலிருந்து ஜ்வலித்துக் கொண்டே சூரியன் ஆகாயத்தில் மேலே ஏறுகிறான் என்று ஒரு ரிக் கூறுகிறது.

ரிக்வேதத்தில் பல இடங்களில் சூரியனுக்கு ஆதித்யன் (அதிதியின் மகன்) என்ற மற்றொரு பெயர் காணப்படுகிறது. ஆனால், ஒரேயொரு இடத்தில் சூரியனை ஆதித்தியர்களிடமிருந்து பிரித்து வேறாகவும் வேதம் கூறும். தியெனஸ் அவனுடைய தகப்பன். தெய்வங்களெல்லாம் கடலில் மறைந்திருந்த அவனை எடுத்து வளர்த்தார்கள். அக்கினியின் மற்றொரு உருவமாக அவனைத் தெய்வங்கள் விண்ணில் பதித்தார்கள்.

ரிக் வேதத்தில் பல இடங்களில் சூரியனை ஒரு பறவைக்கு ஒப்பிடுகிறார்கள். ‘பறவையைப் போல’ என்ற உவமை சில ரிக்குகளில் பார்க்கிறோம். இன்னும் சில ரிக்குகள் சூரியனை ஒரு பறவையாகவே பேசுகின்றன. ‘‘ஏழு குதிரைகளால் இழுக்கப்படும் சூரியன், அவனுடைய நீண்ட பயணத்தில், விரிவாகப் பரப்பப்பட்ட இடத்தில் செல்கிறான். வேகமாகப் பறக்கும் பருந்து, கீழே ஸோமரசத்திற்குப் பாய்ந்து வருகிறது. தன்னுடைய கால் நடை
களுக்கிடையே சென்று கொண்டிருக்கும் இளம் அறிவாளி ஒளியுடன் பிரகாசிக்கிறான்’’. இந்த ரிக்கில் ‘‘பருந்து’’, ‘‘அறிவாளி’’ என்ற சொற்கள் சூரியனைக் குறிக்கின்றன. ‘‘கால்நடைகள்’’ சூரியனுடைய கிரணங்களைக் குறிக்கின்றன.

சில இடங்களில் அவனை ஒரு எருதுக்கு வேதம் ஒப்பிடுகிறது. ஒரு ரிக் அவனைக் குதிரைக்கு ஒப்பாகப் பேசுகின்றது. ‘‘தெய்வங்களுடைய விழியைத் தாங்கிக்கொண்டு, சுபமான பெண்மணி, வெண்மையானதும், பார்ப்பதற்கு அழகானதுமான குதிரையை இழுத்துச் செல்கிறாள்; தன் கிரணங்களால் தெளிவாக்கப்பட்ட உஷஸ், ஒளிவீசிக்கொண்டு, வியக்கத் தகுந்த பொக்கிஷத்தை உலகுக்கெல்லாம் கொண்டு வருகிறாள்’’. இங்கு தெய்வங்களின் விழியும், வெண்குதிரையும் பொக்கிஷமும் சூரியனைக் குறிக்கும். சுபமான பெண்மணி உஷஸைக் குறிக்கும்.

சில ரிக்குகள் சூரியனை விண்ணில் பதிக்கப்பட்ட பொன்னாலான மணியாகப் பேசுகின்றன. இன்னும் சில இடங்களில் அவனை ஒளிவீசும், ஆகாயத்தில் பதிக்கப்பட்டிருக்கும் கல்லாக ரிக்குகள் குறிப்பிடுகின்றன. ஓரிடத்தில் அவனைத் தேரின் சக்ரமாகவும், மற்றுமோரிடத்தில் அவனை மித்ரா - வருணர்களால் விண்ணில் வைக்கப்பட்ட பளபளப்பான தேராகவுமே பார்க்கிறார்கள்.

சூரியன் எல்லா உலகுக்கும் தெய்வங்களுக்கும் ஒளியைக் கொடுக்கிறான். அவன் வெளிச்சத்தால் இருளைப் போக்குகிறான். அவன் இருளை ஒரு தோலைப்போல சுருட்டு கிறான். ‘‘கிழக்கே உதித்து, எல்லோராலும் பார்க்கப்பட்டு, மேலெழும்பும் சூரியன் பார்க்க முடியாதவைகளையும், இருளின் பிசாசுகளையும் அழிக்கிறான்’’. சூரியனின் கடும் வெப்பமும் கொளுத்தும் வெயிலும் ரிக் வேதத்தில் அதிகமாக காணப்படவில்லை. இது அதர்வண வேதத்திலும், பிராம்மண நூல்களிலும் தென்படுகிறது.

சூரியன் நாட்கள் அளக்கிறான்; அவன் வாழ்க்கையின் நாட்களை அதிகரிக்கிறான். அவன் இருளையும், நோய்களையும், கெட்ட கனவுகளையும் அகற்றுகிறான். எல்லா உயிர்களும் சூரியனை நம்பி வாழ்கின்றன. சூரியன் ஆகாயத்தைத் தாங்குகிறான். அவனுடைய மகிமையால் அவன் மற்ற எல்லாத் தெய்வங்களுக்கும் புரோகிதனாக விளங்குகிறான்.

சூரியனை இந்திரன் வென்றதாக ஒரு வரலாறு இருக்கிறது: ‘‘ஒரு சூதாட்டத்தில் எப்படி ஒரு ஆட்டக்காரர் தான் வென்றதையெல்லாம் சேர்த்துக் குவிப்பாரோ, அதே மாதிரி, இந்திரன், மற்றவர்களையெல்லாம் ஜயித்து சூரியனையும் வென்றான். முற்காலத்திலும், தற்காலத்திலும், உன்னுடைய இந்த
மாபெரும் காரியத்தை வேறு எவரும் சாதிக்க முடியாது.’’ மற்றும் சில இடங்களில், இந்திரன் சூரியனுடைய தேரின் சக்கரத்தைத் திருடியதாக ரிக்குகள் பேசுகின்றன. இவற்றினுடைய உள்ளுறைப் பொருளை இரண்டு விதமாகக் கூறலாம். ஒன்று, இது சூரியக் கிரகணத்தைக் குறிப்பதாக இருக்கலாம். மற்றும், அடர்ந்த கரு மேகங்கள், சூரியனை மறைத்து, பூமியின் நீரிலிருந்து அவன் கிரகித்த நீராவியை மழையாகப் பொழிவதைக் குறிக்கலாம்.

அந்தணர்களுக்கு விதிக்கப்பட்ட நித்தியகர்மாவான மாந்யாஹ்னிகத்தின் உபஸ்தானத்தில் பின் வரும் மந்திரங்கள் சூரியனைத் துதிக்கின்றன.

1. உத்வயம் தமஸப்பரி  பஸ்யந்தோ ஜ்யோதிருத்தரம்
தேவம் தேவத்ரா ஸூர்ய - அகன்ய ஜ்யோ
திருத்தமம் - (ரி.வே 1.50.10)
2. உதுத்யம்  ஜாத  வேதஸம் தேவம் வஹந்தி கேதவ:
த்ருசே விச்வாய ஸூர்யம்  (ரி.வே. 1.50.01)
3. சித்ரம் தேவானாம் உதகாத நீகம் சக்ஷூர்  மித்ரஸ்ய
வருணஸ்யாக்ளே:
4. தச்சக்ஷூர் - தேவஹிதம் புரஸ்தாத்  சுக்கிர  முச்சாத்
பச்யேம சரத: சதம், ஜீவே சரத சதம்;

(ரி.வே. VII.66.16) நந்தாம சரதசதம்.
மோதாம  சரதச்சதம், பவாப சரதச் சதம்,
ச்ருணவாம  சரத: சதம்,
ப்ரப்ரவாம  சாத: சதம், அஜீதாஸ்ம சரத: சதம்.
 பொருள்:

1. தெய்வமான சூரியன் இருளை விழுங்கிக் கொண்டு உதயமாகிறான்; அவன் உயர்ந்த ஜோதி வடிவாக உள்ளான்; அவன் மற்ற எல்லாத் தெய்வங்களையும் இரட்சிக்கிறான்; அவனைப் பார்க்கும் நாம் உத்தமமான ஆன்ம ஜோதியையே அடைந்தவர்களாவோம்.

2. எல்லாவற்றையும் அறிகின்ற தெய்வமான சூரியனைக் கிரணங்கள், உலகோரின் தரிசனத்திற்காக, உயரத் தாங்கிச் செல்கின்றன.

3. அவன் எல்லாத் தெய்வங்களுடைய வடிவமாக விசித்திரமாக உள்ளான்; மித்திரனுக்கும், வருணனுக்கும் அக்கினிக்கும் கண் போன்ற அவன் உயரச் செல்லுகிறான். அசையும் பொருள்களுக்கும் அசையாப் பொருள்களுக்கும் ஆத்மாவாகிய சூரியன் விண்ணுலகம், மண்ணுலகம் நடுவிலுள்ள காற்று
மண்டலம் அனைத்தையும் வியாபிக்கின்றான்.

4. கிழக்கில் உதித்து, தேவர்களுக்கு நன்மை செய்வதும் கண் போன்றதுமான அந்தச் சூரியமண்டலத்தை நூறாண்டு கண்டு வணங்குவோம்; அங்ஙனம் நூறாண்டு வாழ்வோம்; நூறாண்டு உற்றார் உறவினருடன் கூடிக் குலவுவோம். நூறாண்டு மகிழ்வோம்; நூறாண்டு புகழுடன் வாழ்வோம்; நூறாண்டு இனியதையே பேசிக் கேட்போம்; நூறாண்டு காலம் தீமைகள் எங்களை வெல்லாமல் வாழ்வோம்.

வேத காலத்திலும், பிற்காலத்திலும், தற்காலத்திலும், சூரியன், பிரத்யட்ச தெய்வமாகப் போற்றப்பட்டு, வணங்கப்பட்டுவருகிறான்.

A.V. சுகவனேஸ்வரன்