அகத்தியர்



வணக்கம் நலந்தானே!

கயிலாய மலையில் ஈசனுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றது. முப்பத்து முக்கோடி தேவர்களும், நந்தி தேவர், விநாயகர், முருகன், பிரம்மா, விஷ்ணு என்று எல்லோரும் கயிலைக்கு சென்றனர். தேவலோக, பூலோகவாசிகள் அங்கு குழுமியிருந்தனர். இத்தனை பெருங்கூட்டத்தை தாங்காமல் வடதிசை தாழ்ந்தது. தென் திசை உயர்ந்தது.

பூமியின் பாரத்தை தாங்காது பூமாதேவி தவித்தாள். ஈசனும் நிலைமையை உணர்ந்தார். இவ்வளவு பேரின் பலத்தையும் ஒருங்கே பெற்றவர் அகத்திய முனிவர்தான். எனவே, அவர்தான் வடதிசையையும், தென் திசையை யும் சமமாக்குவார் என்று அகத்தியரை மகேசன் அருகே அழைத்தார்.

‘‘அகத்தியரே நீங்கள் எங்கு நின்றாலும் அங்கு என் திருமண காட்சியை தரிசிக்கலாம்’’ என்று அருள்மொழி கூறினார். அப்படித்தான் அகத்தியர் பயணப்பட்டார்.

அகத்தியர் பயணப்பட்டது வெறும் பூமி சார்ந்த தளத்தை சரியாக்குவதற்காக அல்ல. புராணங்கள் மிக மிக சூட்சுமமானவை. இங்கு சிவன், பார்வதி திருமணம் அதாவது தெய்வ திருமணம் என்பதே ஆத்ம சாட்சாத்காரம்தான். அதாவது ஞானம் அடைதல் என்கிற உயர்ந்த நிலையை குறிப்பதேயாகும். ஒரு ஆன்மிக சாதகன் அப்படிப்பட்ட தெய்வீக நிலையை அடையும்போது அங்கு யார் யார் இருப்பார்கள். அதாவது சிவபார்வதி திருமணத்தில் நந்தி தேவர், விஷ்ணு, முப்பத்து முக்கோடி தேவர்களும் அங்கு இருப்பார்கள். ஞானமடையும்போது ஒருவரின் அனுபவமும் இப்படியே.

அப்படிப்பட்டவருக்கு இந்த பூலோகத்தினுடைய தொடர்பு சட்டென்று அறுபடும். இந்த உடல் அந்த மாபெரும் சக்தியை தாங்காது ஒன்று காணாமல் போகும். அல்லது இந்த உடலின் மீது பற்றற்று இந்த உடலை உகுத்து வெளியேறுவார். ஏனெனில் ஞானம் அடைபவர்களுக்கு இந்த உடல்தான் நான் எனும் எண்ணம், அகந்தை அறுந்துவிடும். அப்போது இந்த உலகத்தில் உழலுகின்ற மக்களை கடைத்தேற்றுவதற்கு யார்தான் இருப்பார்கள்.

அப்போது அந்த வடதிசை எனும் ஞானபாகத்திற்கு சென்றவரை மீண்டும் தென்திசை எனும் அஞ்ஞான பாகத்திற்கு கொண்டு வருதல் வேண்டும். அதாவது இந்த பூலோகத்திற்கு கொண்டு வந்தால்தான் மக்களை கடைத்தேற செய்ய முடியும். அதற்காகவே அகத்தியர் தென்திசைக்கு வந்தார். இது எப்படியெனில் ஒரு ஞானி தான் உடலல்ல ஆத்மாதான் என்று தெரிந்த பின்னும், மக்களுக்காக தான் உடலோடு இருப்பதாக ஒரு சாயலை காட்டுதல். அதற்குப் பிறகு அந்த ஞானி உபதேசங்களாலும், தமது அருளாலும் ஞானத்தை அளித்தல் எனும் காரியம் சாதாரணமாக நிகழும்.

அப்படிப்பட்ட ஞானபரம்பொருளோடு ஒன்றிவிட்ட ஞானியை உபதேச குருவாக மாற்றக்கூடிய சக்தியை பெற்றவர்தான் அகத்தியர். ஆன்மிக ஞான சாதனையில் மாபெரும் சக்தியின் பாய்ச்சல் தாளாமல் இருக்கும் நிலை வரும்போது அங்கு அகத்தியர் வருவார். ஞான மயமான ஞானியை உலகத்தாருக்கும் உதவச் செய்யும் மாபெரும் சக்தியாக விளங்குபவரே,அகத்தியர்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்

கிருஷ்ணா

(பொறுப்பாசிரியர்)