அரி - அரன் புகழ்மாலைஉள்ள(த்)தைச் சொல்கிறோம்

கருட நாக யுத்தம் என்ற விழா குறித்த தகவல் வியப்பாகவும், விந்தையாகவும் இருந்தது. கருடனுக்கு வியர்வைத்துளிகள் வருவதும் அதை துடைத்து எடுக்கும் துணியில் ஒரு பகுதியை எடுத்து விஷநாகம் தீண்டியவருக்கு கடிபட்ட இடத்தின் அருகே சுற்றினால் உடனே விஷம் இறங்கி விடும் என்ற தகவல் பிரம்மிக்க வைத்தது. இப்படி ஆன்மிகம் தொடர்பாக தெரியாத தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதில் ஆன்மிகத்துக்கு நிகராக வேறு எந்த இதழும் இல்லை. என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
- பி.செல்வமுத்துக்குமார்,இளையநயினார்குளம்.

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி எப்படி, வைகுண்ட ஏகாதசியாகச் சிறப்பு பெற்றது, என்பதனை காரண காரியங்களோடு விளக்கி பக்தர்களை வைகுண்ட வாசல் வழியாகச் சென்று திருமாலை தரிசித்து அருள் பெற்றிட வழி வகுத்து விட்டீர்கள்.
- கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

‘‘வைகுந்தம் புகுவது மன்னவர் விதியே’’ கட்டுரையில் டாக்டர் உ.வே. வெங்கடேஷ் அவர்கள் ஏகாதசி விரதம் துவாதசி பாரணை விதிகள். இவைகளை வெகு சிறப்பாக விவரித்திருந்தார்.திருவாதிரை நோன்பின் மாண்பையும் தில்லை நடராசப் பெருமானின் மகத்துவங்களையும் ‘‘ஆதிரை முதல்வனும், ஆருத்ரா தரிசனமும்’’ என்ற அழகான தலைப்பில் வெகு அற்புதமாக விளக்கி தந்தார் முனைவர். மா. சிதம்பரம் கட்டு ரையை ருசித்து மிகவும் ‘‘களி’’ப்படைந்தோம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

பரந்தாமன் அருள்பாலிக்கும் ‘‘பரமபதவாசல்’’ அட்டைப்பட அழகு ‘‘பரமதிருப்தி!’’ எனில் மார்கழி மாதத்தின் மகிமைகளை, எடுத்துரைக்கும் அனைத்துக் கட்டுரைகளுமே ‘‘பரம மகிழ்ச்சி’’ அளித்தது.
- வெ. லட்சுமிநாராயணன், வடலூர்.

காப்பியம் காட்டும் கதாபாத்திரம் தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன். ஒவ்வொரு கதா பாத்திரத்தையும் அற்புதமாக எடுத்துச் சொல்லும் விதமும், இலக்கிய நயத்தோடு காப்பிய செய்யுளை மேற்கோள் காட்டி எடுத்துச் செல்லும் கட்டுரையாளரின் எழுத்தோவியம் மிகவும் நேர்த்தி.. இந்த இதழில் கண்ணனும் துர்வாசரும் மிகவும் அருமை.
- ஆன்மிக நெறியாளர் எஸ்.எஸ்.குமார். நெல்லை.

பகல்பத்து - ராப்பத்து உற்சவம் குறித்தும் அது தொடர்பாக டாக்டர். உ.வே.வெங்கடேஷ் எழுதிய  நம்மாழ்வாரின் பாசுரங்களை கேட்டு மகிழும் நம்பெருமாள் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை அந்த உற்சவத்தை மனக்கண்முன் நிறுத்தியது. ஆன்மிகம் இதழுக்கு பல கோடி நமஸ்காரங்கள்.
- இல.நாராயணன், கும்பகோணம்.

மார்கழி திருவாதிரை குறித்து மகத்தான படைப்பை வெளியிட்ட ஆன்மிகத்திற்கு மனதார பாராட்டுக்கள். திருவாதிரை நோன்பு, அதனால் உண்டாகும் பலன்கள், ஆருத்ரா தரிசனம் கண்டால் கிடைக்கும் நன்மைகள் என பல்வேறு விதமான தகவல்களை அறிந்து கொள்ள வழிசெய்தது ‘‘ஆதிரை முதல்வனும் ஆருத்ரா தரிசனமும்’’ என்ற கட்டுரை.

- ரமா பன்னீர்செல்வம்,நாராயணபுரம்,சென்னை.