ஐயப்பனை அலங்கரித்த ஆபரணம்



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

* அந்த அந்த சீசனுக்கு ஏற்ற இறைவழிபாடுகளை எடுத்துச் சொல்லுவதில் ‘ஆன்மிகம் பலன்’ தனி மகத்துவம் பெற்று வருகின்றது. அந்த வகையில் ‘ஐயப்பன்’ பக்தி ஸ்பெஷலும் தனி முத்திரை பெறுகின்றது.மூலை முடிக்கிலுள்ள கேள்விப்படாத ஐய(ப்ப)ன் கோயில்களை மனக்கண்ணில் கண்டது பெரும் மகிழ்ச்சி.தச ம(கா)ஹா தேவியருக்கு சென்னைக்கு சமீபத்தில் கோயில்கள் இருப்பது பெரிய கொடுப்பினை.சோகத்தூர் நரசிம்மரை தரிசிக்க வைத்ததில் பரம மகிழ்ச்சி. வேர்களைத்தேடி நெடுந்தூரம் போனாலும் ஒவ்வொரு வேரும் சந்தனம்போல் மனம் வீசுகின்றது.சில கேள்விகள்! பல பதில்கள் ஒவ்வொன்றும் அறியப்பட வேண்டிய முத்துக்கள்! திருவிசநல்லூர் ஐயாவாள் மகிமை பலர் அறிய தெரியப்படுத்தியமைக்கு நன்றி. - சிம்ம வாஹினி,வியாசர் காலனி.

* கார்த்திகை மாத விசேஷத்தை விளக்கும் அழகிய மணிகண்டனின் அட்டைப்படம் கண்ணைக் கவர்ந்தது. ‘பிரம்மச்சர்யம்’ பற்றி தலையங்கத்தில் ஆசிரியர் சிறப்பாக விளக்கியிருந்தார். ஐயப்பனின் அழகிய ஆலயங்கள், சிறப்புகள் மனதைத் தொட்டது. மொத்தத்தில் இந்த இதழ் ஐயப்பனின் ஆபரணம். கார்த்திகை அமாவாசை சிறப்பு பற்றி திருவிச நல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடம் பற்றி தெரிய வைத்து நேரில் செல்ல அவாவினை ஏற்படுத்தி விட்டீர்கள்.
- ஆயுள் வாசகன் இரா.கல்யாண சுந்தரம், கொளப்பாக்கம்.

* சீசனுக்கேற்ற சீசனோடு சபரி ஈசன் குறித்த பக்தி ஸ்பெஷல் ‘முக்தி’ மலர்போல் மலர்ந்து மணக்கிறது. மகிழ்ச்சி! பேரின்ப நாயகனின் வழிபாட்டில் சிற்றின்ப சிந்தனை வராதிருக்க பெண்குல பொன்விளக்குகள் பாரம்பரியம் காப்பது தான் காந்த மலைக்கு சாந்தம் தரும். வழக்கு தீர்ப்புக்கு அப்பாற்பட்டதுதான் வழிபாடு. - ஆர்.ஜே.கலியாணி,மணலிவிளை-627657.

* அந்த அந்த மாதங்களில் அந்த அந்த தெய்வங்களின் தலங்கள் வரலாறு குறிப்பிட்டு எழுதுவது ஆன்மிக பலன். அதுவும் இந்த மாதம் கார்த்திகை எங்கும் ஐயப்ப மாலை சுவாமிகள் இந்த நேரத்தில் ஐயப்பன் கோயில்கள் பற்றிய வரலாறு வாசகர்களுக்கு தேவாமிர்தம். - எஸ்.ஜெகன், சாந்திநகர்.

* விரதமிருந்து சபரிமலை செல்வோருக்கும், வீட்டிலேயே பிரார்த்திப்போருக்கும், ‘ஆன்மிகம்’ வழங்கிய ‘ஐயப்பன் பக்தி ஸ்பெஷல்’ சக்தி மிக்கது. எனினும் சக்தியர்களுக்கு குளத்துப்புழையில் பாலனாக, அச்சன் கோயிலில் அரசனாக, ஆரியங்காவில் வயோதிகராக காட்சி அருளும் அந்த  எல்கைகளைத்தாண்டி ‘பிரமச்சரியம்’ காக்கும் சபரிமலை செல்ல முனைவது ‘நெறிமுறை’க்கு முனை முறிப்பதுபோலாகும்.
- ஆர்.விநாயகராமன்,செல்வமருதூர்.

* ‘குறள் காட்டும் விண்ணுலகம்’ என்ற திருப்பூராரின் தொகுப்பு திருப்தியான வகுப்பு! ஆம்! மண்ணுலகின் மன்னர் சிலர் ‘குறள்’ நாயகரை தங்கள் குரலுக்கேற்றவாறு வளைத்துப்போட்டுவிட முயற்சித்து இளைத்துக்கொண்டிருக்கும் தருணத்தில் குறள் காட்டும் விண்ணுலகம் என்ற விளக்கம் ஆளுவோரின் அக விழிகளைத் திறக்கும்! நம்புவோம்!
- ஆர்.இ.மணிமாறன், இடையன்குடி-627657.

* ‘ஐயப்பன்’ தான் தர்மசாஸ்தாவாக மலையில் காட்சியருள அதன் தொடர்ச்சி மற்றும் மீட்சியாக பல்லாயிரம் கிராமங்களில் ‘சாஸ்தா’ வழிபாட்டுக் கோயில்கள் பிரபலமாகியுள்ளன. கூத்தூர் தர்ம சாஸ்தா, திருநெல்வேலி உடையார் சாஸ்தா,  மடிப்பாக்கம் மணிகண்டன், தென்கலம் ஐயப்பன், ஆஸ்ரமம் அரிஹர புத்திரன், என பல பக்கங்களில் தர்ம சாஸ்தாவை மனதாற வழிபட வைத்த ஐயப்பன் பக்தி ஸ்பெஷலுக்கும் சரணம்! சரணம்! ஐய்யப்பா சரணம்!
- ஆர்.ஆர்.உமா, திசையன்விளை-627657.

* ஐயப்பன் பக்தி ஸ்பெஷலிற்கு முத்தாரமாக அமைந்திருந்தது, சபரிமலை சாஸ்தாவின் அழகிய அட்டைப்படம். அதேபோன்று தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் ஆலயங்கள் பற்றிய தகவல்களும் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருந்தன. - இரா.வளையாபதி, 51, தோட்டக்குறிச்சி அஞ்சல், கரூர் மாவட்டம்.