கார்த்திகை மாதமும் சூரியனும்



கார்த்திகை மாதத்தை ராசியின் பெயரால் விருச்சிக மாதம் என்பர். இதில் சூரியன் ஆட்சியில் இருப்பார். இந்த வீடு அனல் கிரகமான செவ்வாயின் வீடாகும். சூரியனுக்கு இம்மாதத்தில் வழிபாடு செய்வதால் பரம்பரை சொத்துக்களால் பயன் உண்டாகும். அவை நம்மை விட்டுப் போகாது. கண் சம்பந்தமான நோய்கள் அணுகாது. பார்வையின் சக்தி மேம்படும்.கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக் கிழமைகளில் சூரியனை வழிபடுவதும், ஜோதிடர் லிங்கங்களை வழிபடுவது முதலானவை மிகுந்த புண்ணியத்தை அளிக்கின்றன.

காஞ்சிபுரத்திலுள்ள ஜோதி லிங்கமான கச்ச பேசப் பெருமானை வழிபடுவது மிகுந்த பலன் தரும். கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் மூழ்கி அதன் கரையிலுள்ள இஷ்ட லிங்கப் பெருமானையும், கச்ச பேசப் பெருமானையும் வழிபட்டால் நினைத்தவை நல்லபடியே நடக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. ஏராளமான மக்கள் கார்த்திகை ஞாயிறு வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.  குறிப்பாக மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை பெருமளவு மக்கள் கூடி வழிபடுகின்றனர். இம்மாதத்து அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் கச்ச பேசப் பெருமான் வீதிகளில் பவனி வந்து அருள்பாலிக்கின்றார்.