ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம்



* தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா

ஆன்மிக உலகில் புரட்சிகரமான அற்புதங்கள் பல நிகழ்த்தி புதுச்சேரியை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் ஓங்கார ஆசிரமத்தின் மகாதிபதி தவத்திரு சுவாமி ஓங்காரநந்தாவின் 87வது ஞான நூலாக  ராதே ஒரு கடவுள் காவியம் என்ற புத்தகம் வெளிவந்து பக்தர்களுக்கு பேறுவகையை அளித்து வருகிறது.ஈஸ்வர பிரேமை அதாவது கடவுள் பக்தி என்பது உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தில் கரைந்து புரையோடி இருக்க வேண்டும். அது போன்ற உறுதியான பக்தியே முக்திக்கு வித்திடுகிறது.

கண்ணன் மீதான ராதையின் பக்தி பாவனையை காதல் ரசனையுடன் புதுப்புது விளக்கங்களுடன் நூலாசிரியர் தவத்திரு ஓங்காரநந்தா விவரித்துள்ள அழகு ஆன்மிக அன்பர்களுக்கு கரும்புச்சாறு பருகும் சுவையை அளிக்கிறது.பிரம்மத்துக்கு பிரம்மம் என்று பெயரிட்டது மனிதன் தான். பிரம்மம் தனக்கு எந்தப்பெயரும் வைத்துக்கொள்ளவில்லை என்று ஆழ்ந்த சிந்தனையை தனது முன்னுரையில் பதிவு செய்துள்ள தவத்திரு ஓங்காரநந்தா ராதாவே தனது சற்குரு என்று சரணாகதி தத்துவத்தை விளக்கியுள்ளார்.

கண்ணன் மீது பேரன்பும், பெருங்காதலும் கொண்ட ராதா அதையும் கிருஷ்ணனுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டார். எல்லோரின் வணக்கத்தையும் ஏற்றுக்கொள்ளும் ராதாவை ராதாஷ்டமி நாளில் வணங்குதல் சிறப்பு என்று கோபியரில் மிக உன்னத நிலையை அடைந்த ராதாவின் புகழுக்கு மணிமுடி சூட்டியுள்ளார். மேலும் ராதாவின் புகழ்பாடும் நூல்களான பாகவத புராணம், கீதகோவிந்தம் ஆகியவற்றை குறிப்பிட்டு ராதாவுக்குரிய சிறப்பு பெயர்களை ராதிகா, காந்தாவரி, கோவிந்த நந்தினி என்று குறிப்பிட்டு அடுக்கிக்கொண்டே சென்றுள்ளார்.

மகாலட்சுமியின் அவதாரமே ராதை என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ள தவத்திரு ஓங்காரநந்தா கண்ணன்-ராதா பிரேமை மானிடர்களின் காதல் ேபான்று அல்ல. காதல் என்பது காதலிக்கக்கூடாததை காதலிக்காமல், காதலிக்க வேண்டியதை காதலிக்கப்படுவதை காதலிப்பது நியாயமாகும். ராதா என்றாலே காதல் என்பது பொருள் என்று கூறி கண்ணனை பக்தி பிரேமையால் கட்டி இழுத்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னுள் அவனை கரைத்து இறுதியில் ஆத்மபரிமாற்றம் நடத்தி கண்ணன்-ராதா ஈருயிரல்ல, ஓருயிர் என்று உணரவைத்து கண்ணனே ராதா, ராதாவே கண்ணன் என்ற நிலை எய்திய ராதா நிச்சயம் ஒரு கடவுள். கண்ணனுடன் இரண்டற கலந்துவிட்ட ராதா காவியத்தை தனக்கே உரிய பாணியில் ஓங்காரநந்தா மிக தெளிவாக புராணங்களின் மேற்கோள்களை காட்டியும், ஜெயதேவரின் கீத கோவிந்தத்தை துணை கொண்டும் பிரேமையே பக்தி, பக்தியே பிரேமை என்ற பாவத்தை கடைபிடித்து கண்ணனை அடையும் வழியை நூல் மூலம் நமக்கு காட்டியுள்ளார்.

ராதாவின் 28 புனித திருநாமங்களை கூறியுள்ள நூலாசிரியர், பரம்பொருளின் ப்ரக்குருதி பெண்ணாக மாறியது. அந்த மூலப்ரக்ருதியின் பிராண சக்தி தான் ராதாவின் அவதாரம். ராதா என்று உச்சரித்தால் சாதகனுக்கு பக்தியும், முக்தியும் கிடைக்கும். ராதா என்றாள் மோட்சமளிப்பவள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கண்ணனும், ராதாவும் அஷ்டமி திதியில் பிறந்தவர்கள் என்பதால் இருவரும் வேறல்ல ஒருவரே என்கிறார். உலகில் பிறக்கும் ஆத்மாக்கள் விதி வசத்தால் எங்கேயோ சுற்றித்திரிந்தாலும் தனக்கு பிரியமான ஆத்மாவை கண்டுகொண்டுவிட்டால் அதை அடைய கடும் சிரத்தை மேற்கொள்ளும். அது காதல் என்றாலும் சரிதான். பக்தி என்றாலும் சரி தான். அப்படித்தான் கண்ணன் மீதான ராதாவின் காதல். அவளுக்கென தனி உலகம் இல்லை. தனி சுகம் இல்லை. பணிகள் இல்லை. அனைத்தும் ஏகம். தானே கண்ணன். கண்ணனே ராதா. இப்படி ராதையின் பக்தியை உச்சி முகர்ந்து பல்சுவை கனிகளை தேனில் ஊறவைத்து தெள்ளுத்தமிழில் நமக்கு வாரி அருள்புரிந்திருக்கிறார் தவத்திரு ஓங்காரநந்தா சுவாமிகள்.

ஜெயதேவரின் சிறப்பை விவரித்து, அவரது கீத கோவிந்தத்தில் உள்ள பாடல்களை எடுத்துக்காட்டியுள்ள ஓங்காரநந்தா, கீத கோவிந்தம் காமத்தை தூண்டும் நூல் என்ற விமர்சனம் தவறானது என்பதை சுட்டிக்காட்டி இரு ஆத்மாக்களின் அதீத காதல் போராட்டம் பக்தியில் கலந்து ஓராத்மாவாக உருப்பெற்றதன் வடிவத்தையே கீதகோவிந்தம் சுட்டிக்காட்டியுள்ளது. கண்ணன் மீதான ராதாவின் பக்தி, பிரேமையை கீதகோவிந்தத்தில் ஜெயதேவர் விவரித்துள்ளது போன்று விவரிக்க இனியாராலும் சாத்தியமில்லை என்பது நிதர்சனமான உண்மை.

ஸ்ரீராதா ஒரு கடவுள் காவியம் என்ற நூல் ஆன்மிக கடலை கடைந்து அமுதம் எடுத்து தந்தது போன்று கண்ணன் பக்தர்களுக்கு ராதையின் பக்தியின் மகிமையை கூறியுள்ளார் ஞானகுரு தவத்திரு ஓங்காரநந்தா. இப்புத்தகத்தை படிக்கும் அன்பர்கள் கண்ணன்-ராதா மற்றும் தவத்திரு ஓங்காரநந்தாவின் முழு ஆசியையும் பெற்று வாழ்வார்கள்.

நூல் கிடைக்குமிடம்: ஓங்காரம், 50, காமாட்சி அம்மன் கோயில் தெரு, புதுச்சேரி - 605001. கைப்பேசி:9444229535.