கிரஹணத்தின் போது கோயில்களில் நடை சாத்துவது ஏன்?



தெளிவு பெறு ஓம்

?வீட்டில் சாயிபாபா, ராகவேந்திரர், ஆஞ்சநேயர் படங்களை பூஜை அறையில் வைக்கக் கூடாது என்று எனது உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். இதுபற்றி தாங்கள் அறிவுரை மற்றும் ஆலோசனை கூறினால் அதன்படி நடக்க சித்தமாயுள்ளேன்.
- ஆர்.கோபாலகிருஷ்ணன், கருவடிகுப்பம்.

சாயிபாபா, ராகவேந்திரர் ஆகியோர் இல்லறத்தைத் துறந்து குருமகான்களாக வாழ்க்கை நடத்தியவர்கள். ஆஞ்சநேயர் பிரம்மச்சரிய விரதம் கொண்டு ராமனின் திருவடிகளைப் பூஜிப்பதையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டவர். இவர்களை வீட்டுப் பூஜை அறையில் வைத்து வழிபடுவதால் நீங்களும் இல்லற வாழ்வில் ஈடுபாடு கொள்ளாது போய்விடுவீர்களோ என்ற எண்ணத்தில் உங்கள் உறவினர்கள் அவ்வாறு கூறியிருக்கலாம்.

ஆனால், இது முற்றிலும் தவறான கருத்து. கிருஷ்ண பரமாத்மாவிற்கு எட்டு மனைவிகள் என்பதால் அவரது படத்தை வைத்து வழிபடக்கூடாதா? அல்லது முருகனுக்கு வள்ளி, தெய்வானை என இரண்டு மனைவிகள் இருப்பதால் அவரது படத்தை பூஜையறையில் வைப்பதால் இரண்டு பெண்களை மணம் முடிக்கப் போகிறோமா? இவ்வாறு குதர்க்கமாக யோசிக்கக் கூடாது. சாயிபாபா, ராகவேந்திரர் ஆகியோர் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன் நம் கண் முன்னே வாழ்ந்தவர்கள். இறைவனின் அம்சத்தோடு தோன்றி தர்மநெறியோடு நமக்கு வாழக் கற்றுக்கொடுத்தவர்கள்.

“குருபிரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரம்பிரஹ்மா தஸ்மைஸ்ரீ குரவே நம:” என்று சொல்லி வழிபடுகிறோம். நாம் சத்குருவாக யாரை எண்ணுகிறோமோ அவரே பிரம்மா, அவரே விஷ்ணு, அவரே மகேஸ்வரன், சாட்சாத் பரப்பிரம்மமும் அவரே என்று போற்றுகிறோம். ஆகையால் நாம் குருவாக எண்ணுவோரின் திருவுருவத்தை கடவுளாக பாவித்து பூஜை அறையில் வைத்து வழிபடுவதில் எவ்வித தவறும் இல்லை.

 அதேபோல உடல் வலிமை மட்டுமல்லாது மன வலிமையையும் தரக்கூடியவர் ஆஞ்சநேயர். சாட்சாத் ஈஸ்வர ஸ்வரூபமே ஆஞ்சநேயர் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆஞ்சநேயர் படத்தை பூஜையறையில் வைத்து வழிபடுவதால் உங்கள் உடலும் உள்ளமும் உறுதி பெறும். சாயிபாபா, ராகவேந்திரர், ஆஞ்சநேயர் படங்களை பூஜையறையில் வைத்து தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். உங்கள் வீட்டில் குரு மகான்களின் ஆசியால் இறையருள் என்றென்றும் நிறைந்திருக்கும்.

?குலதெய்வம் என்பதன் பொருள் என்ன? அதை மட்டும் குறிப்பாக வழிபட வேண்டும் என்று அறிவுறுத்துவது சரிதானா?
- எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்.

குலதெய்வத்தை மட்டும் குறிப்பாக வழிபட வேண்டும் என்று யாரும் அறிவுறுத்துவதில்லை. குறைந்த பட்சம் குலதெய்வத்தை மட்டுமாவது வழிபட்டு நன்மை அடையுங்கள் என்றுதான் வலியுறுத்துகிறார்கள். இறைவன், அரூபமானவன். அதாவது, உருவமில்லாதவன். அவரவருக்கு பிடித்தமான உருவத்தில் இறைவனை வழிபடுகிறோம். நம் மூதாதையர்கள் தாங்கள் மொத்தமாக குடியிருந்த பகுதியில் தமது வம்சத்தைக் காக்கும் தெய்வமாக ஏதேனும் ஒரு உருவம் அல்லது பிம்பத்தை வைத்து வழிபட்டிருப்பர்.

அது மாரியம்மன் முதலான பெண் தெய்வமாகவும் இருக்கலாம், முனீஸ்வரன் முதலான ஆண் தெய்வமாகவும் இருக்கலாம். உருவம் ஏதுமின்றி மரத்திற்குக் கீழே வெறும் செங்கல்லை நட்டு அதனை தங்கள் குலதெய்வமாக நினைத்து வழிபட்டோரும் உண்டு. நம் குலத்தில் நமக்கு முன்னர் தோன்றிய மூதாதையர் அனைவரும் ஒன்றிணைந்து வழிபட்ட இடத்திற்கு என்று தனி சாந்நித்யம் உண்டு.

எவ்வாறு நம் உடலில் மூதாதையர்களின் மரபணுக்கள் (ஜீன்ஸ்) வழிவழியாகத் தொடர்கிறதோ, அவ்வாறே அவர்கள் வழிபட்ட குலதெய்வத்தின் அருளும் நமக்குத் தொடர்ந்து கொண்டிருக்கும். அந்த அருளை முழுமையாகப் பெறவேண்டியே குலதெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். நம் வீட்டில் எந்த ஒரு விசேஷம் என்றாலும், அது கல்யாணம் ஆனாலும் சரி, காதுகுத்தல் ஆனாலும் சரி முதலில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்கிறோம். குலதெய்வத்தின் அருளால் வம்சம் தழைக்க வேண்டுகிறோம்.

?தாய், தந்தை இல்லாதவர்கள்தான் பசுவிற்கு அகத்திக்கீரை தர வேண்டுமா?
- அ.கிருஷ்ணகுமார், பு. புளியம்பட்டி.

முற்றிலும் தவறான கருத்து. யார் வேண்டுமானாலும் பசுவிற்கு அகத்திக்கீரை தரலாம். ஒரு ஜீவனுக்கு உணவிடுவதில் என்ன பாகுபாடு? அகத்திக்கீரை என்பது முன்னோர்களுக்கு மட்டும்தான் உகந்ததா என்ன? அரிசியை சாதமாக சமைத்து முன்னோர்களின் நினைவாக காகத்திற்கு வைக்கிறோம் என்பதால் சாதம் என்பது முன்னோர்களுக்கான உணவாக மட்டும் ஆகிவிடுமா?

பசுமாடு மிகவும் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் அகத்திக்கீரையும் ஒன்று. பசுவிற்கு மிகவும் விருப்பமான அகத்திக்கீரையை யார் வேண்டுமானாலும் தரலாம். தாய், தந்தை இல்லாதவர்கள் மட்டும்தான் அகத்திக்கீரையை தர வேண்டும் என்பது முழுக்க முழுக்க மூட நம்பிக்கையால் உண்டான கருத்து.

?சந்திராஷ்டமம், ஜென்மச்சனி, அஷ்டமசனி, குருபெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி இவற்றைப் பற்றி ஒரு காலத்தில் அதிக அக்கறை காட்டாமல் இருந்ததுண்டு. தற்போது எல்லா டி.வி. ஜோசியர்களும், பத்திரிகை ஜோசியர்களும் இவைபற்றி பெரும் பீதியையும், பயத்தையும் ஏற்படுத்துகிறார்களே? விதிப்படி நடப்பது நடந்துதானே தீரும்..?
- வி.வெங்கட்ராமன், செகந்திராபாத் -9.

விதிப்படி நடப்பது நடந்துதான் தீரும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால், நீங்கள் சொல்வது போல் எல்லா டி.வி. ஜோசியர்களும், பத்திரிகைகளில் எழுதும் ஜோசியர்களும் மக்களின் மனதில் பெரும் பீதியையும், பயத்தையும் ஏற்படுத்துகிறார்கள் என்பது ஏற்புடையது அல்ல. சந்திராஷ்டமம், ஜென்மச்சனி, அஷ்டமத்துச் சனி, குருபெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி இவை பற்றி ஒரு காலத்தில் அதிக அக்கறை காட்டவில்லை என்பது உண்மைதான். காரணம் என்ன என்பதை யோசித்தீர்களா?

ஜோதிடம் அறிந்தவர்களைத் தவிர சாதாரண மனிதர்கள் யாரும் மேற்சொன்னவற்றை அறிந்திருக்கவில்லை. அதனைப் பற்றி தெரியாது என்பதால் யாரும் அதில் அதிக கவனம் செலுத்தவில்லை. ‘எய்ட்ஸ்’ (Auquired Immuno Deficiency Syndrome) என்ற நோயின் பெயரை கடந்த சில வருடங்களாக மட்டுமே கேள்விப்படுகிறோம். அதற்காக இந்த நோய் ஆனது நெடுங்காலமாக இல்லை என்று ஆகிவிடுமா? நன்றாக இருந்த மனிதன் திடீரென்று உடல் மெலிந்து போகிறான்.

தொடர்ந்து காய்ச்சல், இருமல். உணவு உள்ளே செல்ல மறுக்கிறது. திடீரென்று இறந்துபோய்விட்டான்... ஏதோ தெய்வக் குத்தம்... அல்லது யாரோ செய்வினை செய்துவிட்டார்கள் என்று பேசாமல் அமைதியாக இருந்துவிட்டோம். கடந்த சில வருடங்கள் வரை வயிற்று வலி தாங்காமல் வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை என்ற செய்தியை அடிக்கடி செய்தித்தாள்களில் படித்திருப்போம். ஸ்கேனிங் செய்து பார்க்கும் முறையை நாம் அப்போது அறிந்திருக்கவில்லை.

தற்போது ஸ்கேன் செய்து பார்த்து சிறுநீரகம் அல்லது பித்தப்பையில் கல் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கான மருந்துகளை உட்கொண்டு சரிசெய்து கொள்கிறோம். அதற்காக அந்நாட்களில் சிறுநீரகத்தில் கல் உருவாகவில்லை என்று சொல்ல முடியுமா? அல்லது இக்கால மருத்துவர்கள்தான் இவ்வாறு பீதியைக் கிளப்புகிறார்கள் என்று தவறாக சித்தரிக்கலாமா? மற்ற துறைகளைப் போன்றதுதான் ஜோதிடத்துறையும்.

 இதுவும் ஒருவகையில் அறிவியல்தான். நீங்கள் சொன்ன சந்திராஷ்டமம், ஜென்மச்சனி, அஷ்டமத்துச்சனி, குருப்பெயர்ச்சி, ராகு-கேதுபெயர்ச்சி ஆகியவற்றைப் பற்றி ஓரளவிற்கு தற்காலத்தில் சாதாரண மக்களும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஜாதகம் எழுதி வைக்கும் பழக்கமானது உருவாகிவிட்டது.

தனக்கு இந்த நேரத்தில் ஏதேனும் பிரச்னைகள் உருவாகக்கூடும் என்பதைத் தெரிந்துகொண்டு அவற்றை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதற்கு மனிதன் தன்னை தயார்படுத்திக் கொள்கிறான். அதற்கு ஏதுவாக மீடியாக்களில் ஜோதிடர்கள் சொல்லும் கருத்துகளுக்கு செவி மடுக்கிறான்.

பெரும்பாலும் டி.வி.யில் வரும் ஜோதிடர்களும், பத்திரிகைகளில் எழுதும் ஜோதிடர்களும் வாசகர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகத்தான் பலன்களைச் சொல்கிறார்கள். கஷ்டத்தைத் தரும் காலமாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் விதமாக ‘சோதனையைத் தாண்டி சாதனை புரியும் நேரமிது’ என்றுதான் சொல்வார்கள். ஜோதிடத்தையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு பாருங்கள். அது தரும் எச்சரிக்கையை கணக்கில் கொண்டு நம்மை தயார் படுத்திக்கொண்டால் நம் விதிப்பயனையும் நல்மதியோடு எதிர்கொண்டு சமாளிக்க முடியும்.

?கிரஹணத்தின் போது கோயில்களில் நடை சாத்துவது ஏன்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

நம்மில் பலரும் கிரஹண காலத்தை தோஷம் நிறைந்த காலம் என்பதாகப் புரிந்து வைத்திருக்கிறோம். உண்மையில் கிரஹண காலம் என்பது மிகவும் வீரியம் நிறைந்த காலம் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த நேரத்தில் செய்யப்படுகின்ற ஜபம் ஆனது ஆயிரம் மடங்கு பலனைத் தரவல்லது.

கிரஹண காலத்தில் அந்தணர்கள் பலரும் ஸ்நானம் செய்து மிகுந்த சிரத்தையோடு காயத்ரி ஜபம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பர். இவ்வாறு வீரியம் நிறைந்த காலத்தில் பூஜைகள் செய்வதை விடுத்து கோயில் நடை சாத்துவதன் காரணம் என்ன என்ற சந்தேகம் நம் மனதில் எழுகிறது. கிரஹண காலத்தில் உண்டாகும் கதிர்வீச்சானது சிலா பிம்பங்களைச் செயலிழக்கச் செய்யும்.

கிரஹண காலத்தில் தோன்றும் கதிர்வீச்சு இறைவனின் சக்தியை விட பெரியதா என்ன என்ற கேள்வியும் நம் மனதில் எழக்கூடும். உதாரணத்தோடு சற்று விளக்கமாகவே காண்போம். இறைசக்தியை மின்சாரம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மின்சாரத்தை நம் கண்களால் காண இயலாது. அந்த மின்சக்தியை ஒரு பல்புக்குள் செலுத்தும்போது அது ஒளிர்வதை கண்களால் காண்கிறோம். மின்சாரம் எனும் இறைசக்தியை பல்பு என்ற சிலைக்குள் செலுத்தி அந்த பிம்பத்திற்கு உயிர்கொடுத்து அதனை கடவுளாக எண்ணி வழிபட்டு வருகிறோம்.

கிரஹண காலம் என்பது மிகவும் வீரியம் நிறைந்த காலம் என்பதால் அந்த நேரத்தில் நாம் நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு இறைசக்தியின் வீரியம் கூடுகிறது. அதாவது, மிகுதியான High Voltage Current உருவாகிறது. நாம் ஆலயங்களில் பிரதிஷ்டை செய்து வைத்துள்ள சிலை என்ற பிம்பம் அதாவது, நாம் வைத்துள்ள பல்பு அந்த அளவுக்கதிகமான சக்தியை தாங்கிக்கொள்ள இயலாது செயலிழந்து போகும்.

Bulb fuse ஆகிவிடும் என்ற காரணத்தால் அந்த நேரத்தில் ஸ்விட்ச் ஆஃப் செய்யும் விதமாக ஆலயங்களில் நடை சாத்தப்படுகிறது. அதே போல கிரஹண காலத்திய கதிர்வீச்சை தாங்கிக் கொள்ளும் விதமாக நம் வீட்டிலும் தண்ணீர் உட்பட அனைத்துப் பொருட்களிலும் தர்ப்பைப் புல்லை போட்டு வைக்கிறோம். இதனால்தான் கர்ப்பிணிப் பெண்கள் கிரஹண காலத்தில் வெளியில் வரக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

சூரியன் என்பது இறைவனின் வலதுகண், சந்திரன் என்பது இடது கண், கிரஹண காலத்தில் இறைவனின் கண்கள் மறைக்கப்படுகின்றன என்பது போன்ற கதைகளை நம்பக்கூடாது. கிரஹண காலத்தில் நல்ல சக்தி, தீய சக்தி என உலகில் உள்ள அனைத்து சக்திகளும் வீரியம் பெறுகின்றன. அந்த நேரத்தில் தீய சக்திகளின் ஆதிக்கம் குறைந்து நல்ல சக்திகளின் பலம் அதிகரிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை முன்வைப்போம்.

கிரஹண காலத்தில் ஸ்நானம் செய்து அமைதியாக கண்களை மூடி தியானத்தில் ஈடுபடுவோம். நமக்குத் தெரிந்த மந்திரத்தைக் கொண்டு இறைவனை துதிப்போம். மந்திரம் ஏதும் தெரியாவிட்டாலும் ‘ஓம்நமசிவாய’ என்றோ ‘ஓம் நமோ நாராயணாய’ என்றோ ஜபம் செய்தால் போதும். கிரஹண காலத்தில் நாம் ஒரு தடவை சொல்வது ஆயிரம் தடவை சொல்வதற்கு சமம் என்பதால் அந்த அரிய காலத்தை தவற விடாதீர்கள்.

வருகின்ற 4.4.2015, சனிக்கிழமை மாலை 3.45 மணி முதல் இரவு 7.15 மணி வரை சந்திர கிரஹணம் சம்பவிக்க உள்ளது. இந்த நேரத்தில் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக ஜபம் செய்யும்போது நமக்குள் இருக்கும் இறைசக்தி வலுப்பெறும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைசக்தி கூடும்போது இந்த உலகமும் சுபிட்சம் அடையும்.

?நித்ய கர்மானுஷ்டானங்களில் ஆர்வமற்றவர்கள் கூட தங்கள் புத்ரனுக்கு பூணூல் சடங்கு செய்கிறார்கள். தகப்பனைப் போலவே பிள்ளையும் எந்த அனுஷ்டானங்களையும் கடைபிடிப்பதில்லை. உங்கள் கருத்து..?
- கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி - 17.

தான் படிக்கவில்லை என்பதற்காக பிள்ளையை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் இருக்க முடியுமா..? தனக்குத்தான் ஒழுங்காக படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. பிள்ளையாவது ஒழுங்காகப் படிக்கட்டுமே என்று எப்பாடு பட்டாவது பள்ளிக்கூடத்திற்கு பிள்ளையை அனுப்புவதில்லையா? அதுபோல்தான் இதுவும்.

தனக்குத்தான் தெரியவில்லை. பிள்ளையாவது சந்தியாவந்தனம் முதலான அனுஷ்டானங்களை சரிவரச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் உபநயன, பிரம்மோபதேசத்தை செய்விக்கிறார்கள். தந்தைக்கு அனுஷ்டானத்தைச் சரிவர செய்ய தெரியாது என்பதை சாக்காகக் கொண்டு பிள்ளைகளும் அதனை சரிவர செய்வதில்லை. இதுவே நடைமுறையில் காணப்படுகின்ற நிஜம்.

 தகுந்த உபாத்தியாயர் அல்லது சாஸ்திரிகளைக் கொண்டு பிள்ளைக்கு அனுஷ்டானங்களைக் கற்றுக்கொடுப்பதோடு நில்லாமல் முடிந்தவரை தானும் கற்றுக்கொண்டு பிள்ளைகளை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டியது தந்தையின் கடமை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

?நமக்கு ஏற்படும் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் காரணம் என்ன?
- சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

வினைப்பயன் தான் காரணம். ‘தன்வினைத் தன்னைச் சுடும்’ என்றார் பட்டினத்தார். ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்ற பழமொழியும் நமக்கு நன்றாக பரிச்சயமானதுதானே! நமக்கு ஏற்படும் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் நாம்தான், நாமேதான் காரணமே அன்றி மற்றவர்கள் அல்ல. நாம் செய்கின்ற நல்வினைகள் நமக்கு இன்பத்தைத் தருகின்றன. எதிர்வினைகள் துன்பத்தைத் தருகின்றன. நிதானமாக ஆற, அமர்ந்து யோசித்தீர்களேயானால் இந்த உண்மை புலப்படும்.

?செயற்கையாக அலங்காரத்திற்காக தொங்கவிடப்படும் மாவிலை தோரணங்களால் பயனுண்டா? மாவிலையின் நிறமோ பச்சை. அலங்காரப் பொருளாக தயாரிக்கப்படும் மாவிலையோ அநேகமாக மஞ்சள் வர்ணம் கொண்டவை. விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.- ரா.பாஸ்கரன், பெங்களூரு - 60.

நீங்களே அலங்காரத்திற்காக என்று குறிப்பிட்டுவிட்டீர்கள். இவ்வகை செயற்கை மாவிலைகள் வெறும் அலங்காரத்திற்கு மட்டுமே பயன்படுகின்றன. மஞ்சள் வர்ணம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது மஞ்சள் வர்ணம் அன்று. பொன் நிறமாக மின்ன வேண்டும் என்பதற்காக தங்க வர்ணப்பூச்சினை பூசுகிறார்கள். ஒரு சிலர் அதில் விநாயகர், லக்ஷ்மி முதலான திருவுருவங்களையும் அச்சடித்திருப்பார்கள்.

அவற்றை வாயிற்படியில் கட்டுவதில் தவறில்லை. அதே நேரத்தில் வீட்டினில் ஏதேனும் விசேஷம், பூஜை நடைபெறும் நாட்களில் உண்மையான மாவிலைகளைத் தோரணமாகக் கட்டுவதே நல்லது. வாயிற்படியில் உண்மையான மாவிலையைச் செருகி வைப்பதால் வீட்டினில் தெய்வ சாந்தித்தியம் கூடும். மங்களகரமான நிகழ்வுகள் எவ்விதத் தடையுமின்றி தெய்வத்தின் அருளால் சிறப்பாக நடந்தேறும்.

திருக்கோவிலூர்
ரி.ஙி.ஹரிபிரசாத் சர்மா