மதுரையின் மகுட விழா



மதுரையை திருவிழா தேசமென்று சொல்லலாம். அன்றாடம் ஒரு பண்டிகை. மகிழ்ச்சி ததும்பும் இம்மகத்துவ மண்ணின் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழா மகுடம் சூட்டிக் கொள்கிறது. தென்மாவட்டமே கூடி உவகை கொள்கிற உன்னத கோலாகல கொண்டாட்டம் இது.

மதுரை அழகர்மலை கள்ளழகர் கோயிலில் சித்திரையில் நடந்த பௌர்ணமித் திருநாளை, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாசியில் நடந்த திருவிழாவுடன் மன்னர் திருமலை நாயக்கர் கைகுலுக்க வைத்து, தேனூருக்குப் பதில் மதுரை நகரத்து வைகையில் அழகர் இறங்கும் மாற்றத்தைக் கொண்டுவந்தார்.

மக்கள் வசதிக்கென நடத்தப்பட்ட இம்மாற்றம், சைவத்துடன், வைணவத்தை ஐக்கியப்படுத்தும் அற்புதத்தைத் தந்துள்ளது. அன்றுமுதல் ஒரே இடத்தில் பத்து லட்சம் பேர் குவியுமாறு செய்து பத்து நாட்களும் திருவிழா கோலாகலத்தில் மதுரை குளித்தெழுகிறது.

 நூபுர கங்கையில் தீர்த்தமாடி பெருமாள் தவத்திலிருந்த சுதபஸ் முனிவருக்கு துர்வாச மகரிஷி தந்த மண்டூகோ பவ (தவளையாகப் போகக் கடவாய்) சாபம் போக்க அழகர் வைகைக்கரைக்கு வருவதே இவ்விழா என்கிறது புராணம். சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்பே இச்சித்திரைத் திருவிழா தொடங்குகிறது. முதல் இருநாட்கள் கோயிலில் கொலுவிருக்கும் அழகர், மூன்றாம் நாள் மாலையில் தன் மலையிலிருந்து தங்கப் பல்லக்கில் பயணத்தை துவக்குகிறார். மதுரை நகர் வரை வழிநெடுக 395 மண்டகப்படிகளில் எழுந்தருளி ஆசி தருகிறார்.

மதுரை நகர் எல்லை மூன்று மாவடியில் அழகரை எதிர்கொண்டழைக்கும் அதாவது எதிர்சேவை புரியும் பக்தர்களால் இப்பகுதி மூச்சு முட்டிப் போகும். நான்காம் நாள் இரவில் தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்தடைகிறார். தலைச்சுமையாய் கொண்டு வரும் நூபுரகங்கைத் தீர்த்தத்தில் அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகிறார்.

ஐந்தாம் நாள் காலையில் அங்கிருந்து வைகையாற்றில் இறங்கிட தயாராகும் அழகருக்கு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்படுகிறது. ஆற்றுக்குச் செல்லும் வழியில் அழகர், வெட்டிவேர் சப்பரத்திலும், பின்னர் மைசூர் மண்டபத்தில் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளுகிறார். அழகர் ஆற்றில் இறங்க தெற்குவாசல் வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைக்க இருவரும் மாலை மாற்றிக் கொள்கின்றனர்.

பிறகு வழிநெடுக அளிக்கப்படும் வரவேற்பை ஏற்றபடி அன்றைய இரவு வண்டியூரை அடைகிறார். ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக் களைப்பு நீங்கிட சந்தன அலங்காரம் செய்துகொள்ளும் அவர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருகிறார். சேஷ வாகனத்தில் எழுந்தருளி தேனூர் மண்டபம் அடைகிறார். இம்மண்டபத்தில் தங்கக் கருட வாகனத்தில் சுபதஸ் முனிவருக்கு மண்டூக மோட்சமளித்து, அங்கிருந்து மதுரை நோக்கி வரும் அழகர், இரவில் ராமராயர் மண்டபத்தை அடைந்து, தசாவதாரக் கோலங்கள் பூண்டு பக்தர்களை பரவசப்படுத்துகிறார்.

 ஏழாம் நாள் காலையில் மோகனாவதார காட்சி தந்து, அனந்தராயர் பல்லக்கில் (திருமலைநாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்டது, முற்றிலும் தந்தத்தால் ஆனது) புறப்பட்டு தல்லாகுளம் சேதுபதிராஜா மண்டபம் வரை வருகிறார். அன்றிரவு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் அலங்கரிப்பு நடக்கிறது. எட்டாம் நாள் அதிகாலை பூப்பல்லக்கில் மலைநோக்கி கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர்கோயிலை சென்றடைகிறார். பத்தாம் நாளில் பயணக் களைப்பு நீங்கிட உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. இத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்துநாள் கொண்டாட்டம் நிறைவடைகிறது.

அழகர் மதுரை வைகையாற்றங்கரையில் தங்கியிருக்கும் 3 நாட்களும் மக்கள் கூட்டம் மதுரையையே குலுக்கிப் போடும். இம்மூன்று நாட்களும் தென்மாவட்ட கிராம மக்கள் மாட்டு வண்டிகளில், வாகனங்களில் மதுரைக்கு குடும்பத்தோடு வந்து முகாமிட்டு கொண்டாட்டத்தில் குதூகலிப்பது அலாதியானது. இந்த அழகர் விழாவிற்கு முன்னதாகவே துவங்கி வைகையில் அழகர் இறங்கும் வரையுள்ள
12 நாட்கள் மதுரையை கொண்டாட்ட பூமியாய் ஜொலிக்கச் செய்கிறது.

மதுரை சித்திரைத் திருவிழா இன்று தமிழகத்தின் ஒரு மகுட விழாவாக மாறி இருக்கிறது. ஏப்.20ல் வாஸ்து சாந்தியுடன் மீனாட்சி கோயிலில் துவங்கும் இந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 28ல் மீனாட்சி பட்டாபிஷேகம், ஏப்.29ல் திக்விஜயம், ஏப்ரல் 30ல் திருக்கல்யாணம்,மே 1ல் தேரோட்டம், மே 2ல் அழகர் மலையிலிருந்து புறப்பாடு,

மே 3ல் அழகர் எதிர்சேவை, மே 4ல் அழகர் ஆற்றில் இறங்குதல் துவங்கி மே 7ல் பூப்பல்லக்கில் புறப்பாடாகி மே 8ல் அழகர் தனது கோயிலை சேர்வது வரை எல்லா நிகழ்ச்சிகளும் லட்சக்கணக்கான தமிழக, பிற மாநில, பிற நாட்டு மக்களையும் ஈர்த்திருக்கிறது. மதுரையில் நடக்கும் திருவிழாவைப்போன்றே அருகாமையில் உள்ள மானாமதுரை, பரமக்குடி நகரங்களிலும் சித்திரைத் திருவிழா, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்கள் நடப்பது குறிப்பிடத்தக்கது.

அழகர் வர்ராரு!

* சுந்தரராஜனின் தமிழாக்கமே அழகர். அடியவர் மனதை கள்வனாக கவர்ந்ததால் Ôகள்ளழகர்Õ ஆனார்.

* ஆற்றில் இறங்கும் அழகருக்கு அணிவிக்க தலைமைப் பட்டர் பெரிய மரப்பெட்டிக்குள் கைவிட்டு ஒரு பட்டுப்புடவையை வெளியில் எடுக்கிறார். இப்புடவை வண்ணத்திற்கு ஏற்ப, அந்த வருடம் நல்லது கெட்டது இருக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது. பச்சைப்பட்டு நாடு செழிப்பு, சிவப்பு அமைதி இன்றி அழிவு தரும். வெள்ளை, ஊதா எனில் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள் பட்டு மங்களகர நிகழ்வுகள் தரும் என நம்பப்படுகிறது.

* அழகர் ஆற்றில் இறங்கிட மதுரை தல்லாகுளம் விட்டு கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சியடிக்க துவங்கி, வண்டியூர் போய் சேரும் வரை நடக்கிறது. காலப்போக்கில் கோடையில் பக்தர்களை குளிர்விக்கும் இந்த நிகழ்ச்சி முக்கிய வைபவமாய் மாறி இருக்கிறது.

* கோயிலை விட்டு கிளம்பும் அழகர் அலங்காநல்லூர் போய் சேர்வார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால் அலங்காரநல்லூராக இருந்து அலங்காநல்லூரானது என்பர். அலங்காநல்லூரிலிருந்து தேனூர் வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர் அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பர். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு, அதுவே மண்டியூராகி பிறகு வண்டியூராகிப் போனதாம்.

 அழகர்கோயில் திருவிழாவில் பாளையப்பட்டி, தெற்குத்தெரு, வடக்குத்தெரு, மேலத்தெரு ஆகிய நான்கு தெருவினர் கூடி தேர் இழுக்க ஆயத்தம் செய்யும் ஊருக்கு ஆயத்தம்பட்டி என்று பெயர். அதுபோலவே வடம்பிடிக்கும்போது தெற்குப் பக்கத்தில் இவ்வூரார் நிற்கும் உரிமையால் மேலூரை அடுத்த ஒரு சிற்றூருக்கு தெற்குத் தெரு என்று பெயர் வந்தது. தேனூர் மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலை நாயக்கரால் கட்டித்தரப்பட்டது. ஏற்கனவே தேனூரில் நடந்த வைபவங்கள் இப்போது இம்மண்டபத்தில் நடக்கிறது.

அழகர்மலை பெருமாளின் உற்சவர் சிலை அபரஞ்சி எனும் தேவலோகத் தங்கத்தால் ஆனது. இந்த உற்சவருக்கு வேறு தீர்த்தத்தில் அபிஷேகம் செய்தால் அக்கணமே கறுத்துவிடும் என்பதால், இன்றளவும் அழகர்கோயிலில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில்தான் அபிஷேகம் நடக்கிறது. சித்திரைத் திருவிழாவில் வைகை நோக்கி நகருக்குள் வரும் கள்ளழகருக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் அபிஷேகம் நடக்கும். இன்றும் நூபுர கங்கையிலிருந்தே தலைச்சுமையாக தீர்த்த நீர் மதுரை நகருக்கு கொண்டு வரப்பட்டு இந்த அபிஷேகம் நடத்தப்படுகிறது.

அன்னை மீனாட்சியின் பிறப்பிற்கும், இந்த அற்புத தீர்த்தத்திற்கும் தொடர்பிருக்கிறது. மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டியன் குழந்தைவரம் வேண்டி இந்த நூபுர கங்கையில் தீர்த்தமாடி அழகர்மலையில் தவமிருக்க, அவர்முன் காட்சி தந்து பெருமாள் மறைந்தார். அப்போது, மூன்று ஸ்தனங்களுடன் (மார்பு) மகள் வந்து பிறப்பாள். யாரைப் பார்த்ததும் மகளின் ஒரு ஸ்தனம் மறைகிறதோ அவனே மகளுக்கு கணவராய் வருவார் என வாக்கு தந்தாராம். இதன்படி பிறந்தவளே மீனாட்சி. அன்னையின் பிறப்பிற்குக் காரணமான இத்தீர்த்தம் எப்பிணியும் போக்கும் மாமருந்து என்கின்றனர். இன்றும் மதுரை புதுமண்டபத் தூணில் மூன்று ஸ்தனங்கள் கொண்ட மீனாட்சியம்மன் சிலையைக் காண முடிகிறது.

சம்பா தோசை பிரசாதம்

மதுரை அருகிலிருக்கிற அழகர்கோயிலில் பிரசாதமாக விற்கப்படும் சம்பா தோசை, இவ்வூரின் சுவைமிக்க அடையாளமாக இருக்கிறது. பழங்காலத்தில் இத்தோசையை நாழி என்றனர். கள்ளழகர் அடை என்றொரு பெயருமுண்டு. தோல் நீக்காத உளுந்தை குருணை பதத்திற்கு அரைத்தெடுத்து, அரைமணி நேரம் ஊறவைத்த பச்சரிசியை உரலில் இட்டு உலக்கையால் இடித்தெடுத்து இரண்டும் கலக்கப்படுகிறது.

7படி அரிசிக்கு ஒரு படி உளுந்தென இக்கலவையில், தலா 150கிராம் மிளகு, சீரகம், 200கிராம் சுக்கு, 20கிராம் பெருங்காயப் பொடியுடன், கோயிலின் நூபுர கங்கைத் தீர்த்தமும் சேர்த்து பிசைந்தெடுத்து, சட்டியில் கொதிக்கும் எண்ணெயில் வட்டமாக ஊற்றி, மரக் குச்சியால் கிளற நன்கு வெந்த 200கிராம் எடையிலான 60 தோசைகள் வரை சுட்டெடுத்து விடுகின்றனர். நெய்யில் பொரித்தெடுத்த இத்தோசைகள் 3நாட்களுக்கு கெடுவதில்லை.

சுக்கு, மிளகு சேர்வதால் சளித் தொல்லைக்கு நிவாரணியாகவும், இயற்கையிலேயே மூலிகை கலந்த கோயிலின் நூபுரகங்கைத் தீர்த்தம் சேர்வதால் நோய் தீர்க்கும் அற்புத மூலிகையுணவாகவும் ஆகிறது. ஆன்மிக அன்பர்கள் மட்டுமல்லாது அழகர்கோயிலை கடந்து போகிற அத்தனை பேரும் இந்த சம்பா தோசையை வாங்கிப் போக மறப்பதில்லை.

அழகர் கோயிலை அறிந்து கொள்வோம்!

அழகர்கோயில் கர்ப்பகிரகத்தில் மூலவர் சுந்தரராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் காட்சி தருகிறார். தவிர உற்சவர், தியாகபேரர், சுந்தரபாகு, நித்திய உற்சவர் நலந்திகழ் நாராயணன், ஸ்நபனபேரர், ஏறு திருவுடையான் ஆகியோரின் சிலைகளும் கர்ப்பகிரகத்தில் இருப்பது அநேகம் பேருக்குத் தெரியாது. பெருமாளுக்கு மேலே விமானம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியன் இந்த விமானத்தில் தங்கத்தகடு பொருத்தி இருக்கிறான். பிற்காலத்தில் அது கொள்ளையர்களால் களவாடப்பட்டதால் இப்போது செப்புத்தகட்டில் தங்கமுலாம் பூசி பொருத்தியுள்ளனர். இதேபோல் கருடன் சந்நதி மண்டபத்துக்கும் தங்கமுலாம் பூசிய தகடு பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் பிராகாரத்தில் அக்னி மூலையில் வலம்புரி விநாயகர், தும்பிக்கை ஆழ்வார் என்ற பட்டப்பெயரோடு வீற்றிருக்கிறார். கன்னி மூலையில் சோலைமலை நாச்சியார், வாயுமூலையில் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூமாதேவி, யோகநரசிம்மர் ஆகியோரும் குபேரமூலையில் தேவசேனாதிபதியும் ஈசானிய மூலையில் க்ஷேத்ரபாலகனும் இருக்கிறார்கள்.  மூன்றாம் பிராகாரத்தில் கருட மண்டபமும், கருடன் சந்நதியும் இருக்கின்றன.

நான்காம் பிராகாரத்தின் அக்னி மூலையில் ஆழ்வார் மற்றும் ஆச்சார்யார்கள் சந்நதி, அதையடுத்து கல்யாண சுந்தரவல்லித் தாயார், சக்கரத்தாழ்வார் சந்நதிகள். சப்த கன்னியரால் ஆராதிக்கப்பட்ட சக்கரத்தாழ்வார் இதற்கு முன் அடிவாரத்தில் தீர்த்த தொட்டிக்குச் செல்லும் வழியில் இருந்தார். பாதுகாப்பு கருதி அவரை இப்போது கோயிலுக்குள் கொண்டு வந்து வைத்து விட்டார்கள். இப்பிராகாரத்தில் பள்ளியறை மண்டபம் உள்ளது. யானைத் தந்தத்தால் ஆன கட்டில் ஒன்றும் உள்ளது.

திருமலைநாயக்கர் செய்த கட்டில் இது. நான்காம் பிராகாரத்தின் வாயுமூலையில் ஆண்டாள் சந்நதி. இங்கு ஆண்டாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். உற்சவமூர்த்தி திருக்கல்யாண கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள். ரங்கநாதரை கணவராக அடைய வேண்டி பிரார்த்தனை செய்த ஆண்டாள் நூறு அண்டாவில் Ôஅக்கார அடிசில்Õ செய்து படையல் வைப்பதாக வேண்டிக் கொண்டாராம். இந்த வேண்டுதல் செய்து ஒரு மண்டலம் முடியும் முன்பு ரங்கநாதருடன் ஐக்கியமாகி விடுகிறாள், ஆண்டாள்.

அதனால் சொல்லியபடி அழகருக்கு அக்கார அடிசில் படையலைச் செலுத்த முடியாமல் போயிருக்கிறது. பிற்காலத்தில் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, ஆண்டாளின் நேர்த்திக்கடனை ராமானுஜர் செலுத்தியதாக புராணம் சொல்கிறது. ஆண்டாளுக்கு திருமணப்பிராப்தி கிடைத்ததால் இங்கு ஆண்டாள் திருமணக் கோலத்தில் எழுந்தருளி இருப்பதாக ஒரு நம்பிக்கை. ஆண்டாளுக்கு அருகிலேயே மண்டூக மகரிஷி, ஹயக்ரீவர், கிருஷ்ணன்-ருக்மணி-சத்தியபாமா சந்நதிகள். அடுத்து எட்டு கைகளுடன் கூடிய கிருஷ்ணன் சந்நதி. இதையொட்டி சொர்க்கவாசல் கதவும் இருக்கிறது. இதேபோல் சிறிய அளவில் இன்னும் பல சந்நதிகள் உள்ளன.

 ஐந்தாம் பிராகாரத்தில் அனுமன், கிருஷ்ணர், ராமர் சந்நதிகள் மற்றும் ஆறாவது பிராகாரத்தில் நந்தவனம். ஏழாம் பிராகாரத்தில் சப்தகன்னிகள் இருக்கிறார்கள். நாராயணவாவி தீர்த்தமும் இங்கே உள்ளது. ஆடி பிரம்மோற்சவத்தின்போது இங்கு தீர்த்தவாரி நடக்கிறது. கோயிலைச் சுற்றிலும் உள்ள பகுதியை அல்லிக்கோட்டை என்று சொல்கிறார்கள். அல்லி ராணியை அர்ச்சுனன் இங்கு காந்தர்வ மணம் செய்து கொண்டதாக ஒரு தகவலுண்டு. அழகர் கோயிலின் மிக முக்கியமான அம்சம் தீர்த்தம்தான். அடிவாரத்திலிருந்து மலை மீது சுமார்
3 கி.மீ. நடந்தால் தீர்த்தத்தொட்டி வந்துவிடும்.

மீனாட்சி அம்மன் ஆபரணங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அதிசய கலைக் கோயிலாகும். பாண்டியர், நாயக்கர் கால மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என அம்மன், சுவாமிக்கு பலரும் தங்கம், வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், புஷ்பராகத்தில் ஆபரணங்கள் செய்து காணிக்கையாக கொடுத்துள்ளனர். இந்த ஆபரணங்கள் திருவிழா காலங்களில் அம்மன்-சுவாமிக்கு அணிவிக்கப்படும்.
ஜொலிக்கும் இந்த அற்புத நகைகளின் விவரங்களைப் பார்ப்போமா?

பாண்டிமுத்து, முத்து சொருக்கு, முத்து உச்சிக் கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்துமாலைகள். முத்து கடிவாளம், பெரியமுத்து மேற்கட்டி,  தலைப்பாகை கிரீடம், திருமுடி சாந்து, பொட்டுக்கறை, பவளக் கொடி பதக்கம், உரோமானிய காசு மாலை, நாகர் ஒட்டியாணம், நீலயாக பதக்கம், திருமஞ்சன கொப்பரை (வெள்ளி), தங்க காசுமாலை, தங்க மிதியடிகள், பட்டாபிஷேக கிரீடம், ரத்தின செங்கோல்.

 தங்க கவசத்தை அம்மனுக்கு சாத்தினால் உப்பல் இல்லாமல் புடவை அணிந்திருப்பது போல் தோன்றும். 1972ல் திருப்பணி நடத்தியபோது வைர கிரீடம் உருவாக்கப்பட்டது. இதன் எடை மூன்றரை கிலோ. வெளிநாட்டில் பட்டை தீட்டப்பட்ட இந்த கிரீடத்தில்  முதல் தரமான 3,545 வைரக்கற்கள், 4,100 சிவப்பு கற்கள் உள்ளன. இது தவிர எட்டரை காரட் மரகத கல்லும், மாணிக்க கல்லும் பதிக்கப்பட்டுள்ளன. கிரீடத்தின் உயரம் நான்கரை அங்குலம். இது தவிர அம்மன், சுவாமி வீதி உலாவுக்காக உலோகத்தால் கலை அம்சத்துடன் வடிவமைக்கப்பட்ட யானை, குதிரை, கற்பக மரம், பூதம், யாழி, நந்தி தேவன் போன்ற வாகனங்கள் அனைவரையும் பிரமிப்பூட்டுகின்றன.

அழகர் பாதம்!

மதுரை கரிமேடு அழகரடி பகுதியில் இன்றும் கல்லில் வடித்த இரு பாதங்களை அழகர் பாதங்களாக வைத்து இப்பகுதியினர் வணங்கி வருகின்றனர். அழகரை வணங்குவோர் இன்றைக்கும் வடகலை, தென்கலை என்கிற வடிவங்களைக் கடந்து, கால்விரல்களைப் புள்ளிகளாக்கி அழகுற பெருமாளின் முழு பாதத்தையும் வரைந்து அதையே தங்கள் நெற்றியில் நாமமாக இட்டுக் கொள்வது தொடர்கிறது. இவ்வகையில் மதுரை அழகரடியில் அனைவராலும் வணங்கப்படும் அழகர் பாதத்திற்கு பின்னேயும் ஒரு பழங்கதை பேசப்படுகிறது.

 இப்பகுதியினர், பழங்காலத்தில் மதுரை அருகாமை தேனூரை நோக்கிச் செல்லும் அழகர் பயணத்தில் களைப்பு போக்க இவ்விடத்தில் அமர்ந்து சென்றதால், அழகரின் காலடி பட்ட இப்பகுதி அழகரடி எனப்பட்டதாம். அத்தோடு, அழகர் அமர்ந்திருந்து புறப்பட்ட இடத்தின் பெருமை காக்கும் விதமாக கற்பாதங்களைப் பதித்து தொடர்ந்து பக்தர்கள் வணங்கி வருகிறார்கள். சித்திரைத் திருவிழா நாட்களில் மதுரைக்குள் நுழையும் அழகர் மதுரையின் வடபகுதிக்குள் மட்டும் வலம் வந்து திரும்பியபோதும், தென் மதுரையிலும் அழகர் பயணித்த நிகழ்வின் நினைவாக, மக்கள் வணங்கும் இந்த அழகர் பாதம் திகழ்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு கோபுரத்தை கைகூப்பி வணங்கியபடி உள்ளே நுழைய வேண்டும். அஷ்டசக்தி, மீனாட்சி நாயக்கர் மண்டபங்கள், அம்மன் முன் கோபுர வாயிலில் உள்ள திருவாச்சி விளக்குகள், முதலிப்பிள்ளை மண்டபம் வழியே பொற்றாமரைக் குளத்தை அடையலாம். நீராடிவிட்டு அல்லது நீரைத் தலையில் தெளித்துகொண்டபின் தென்மேற்கு கரையில் உள்ள விபூதி விநாயகரை வணங்கி விபூதி தரிக்கலாம்.

தென்கிழக்குக் கரையிலிருந்தபடி அம்மன்-சுவாமி கோயில்களின் தங்க விமானங்களை தரிசிக்கலாம். கிளிக்கூண்டு மண்டபத்து சித்திவிநாயகரையும் முருகரையும் வணங்கி, அம்மன் திருச்சந்நதியின் முன் உள்ள பலி பீடத்தைச் சுற்றி வந்து மீனாட்சியம்மன் கருவறை உள்ள பிரதான வாயில் வழியாக நுழையலாம். இரண்டாம் பிராகாரத்தை வலம் வரும்போது கிழக்கில் திருமலை நாயக்கர் சிலை, மேற்கில் கொலு மண்டபம் காணலாம். வடமேற்கில் கூடல் குமாரர் சந்நதியை வணங்கலாம்.

கொடிமரத்தடி வழியே குமரகுருபரர் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழை அரங்கேற்றம் செய்திட்ட ஆறுகால் பீடம் வழியே உள்ளே நுழைந்து முதல் பிராகாரம் அடைந்து வலம் வரலாம். மூலஸ்தானத்தின் தென்பகுதியிலுள்ள இரட்டை விநாயகர்,

 தென்மேற்கில் உள்ள ஐராவத விநாயகர், வல்லப விநாயகர், நிருத்த கணபதியுடன், வடமேற்கில் முத்துக்குமார சுவாமியையும் வழிபடலாம். கருவறை வெளிச்சுற்று மாடங்களில் எழுந்தருளியுள்ள மூன்று சக்திகளையும் வழிபட்டு வலம் வந்து, மீனாட்சி அம்மையை வணங்கிய பிறகு வடபுரம் சண்டிகேஸ்வரியையும் பள்ளியறையையும் தரிசித்து அதன் அருகிலுள்ள வாயில் வழியாக இரண்டாம் பிராகாரத்தை அடையலாம்.

 முக்குறுணி விநாயகரைத் தொழுது நடுக்கட்டு கோபுர மாடத்திலிருக்கும் மடைப்பள்ளி சாம்பலை திருநீறாக அணிந்து முன்வினைகளை நீக்க வேண்டி வணங்கலாம். அடுத்து பஞ்சலிங்கங்களையும் வடமேற்கு மூலையில் 49 சங்கப் புலவர்களையும் தரிசித்து, வடபுறம் திருக்கல்யாண சுந்தரரை வணங்கி பின் நவகிரகங்களைச் சுற்றி வந்து சட்டநாதரையும் வழிபட்டு நந்தி மண்டபம் அடைந்து நந்தியம் பெருமாளை வணங்கலாம்.

பிறகு அனுக்ஞை விநாயகரை தரிசித்து, பிறகு கோயில் பிரதான வாயிலில் உள்ள அதிகார நந்தியை வணங்கலாம். தொடர்ந்து முதல் பிராகாரம் அடைந்து வந்தியம்மை சிவலிங்கம், சூரியன், கலைமகள், தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தி, நாயன்மார்கள், சோமாஸ்கந்தர், பலவகை லிங்கங்கள்,

பிட்சாடனர், சுந்தரமகாலிங்கர், காசி விசுவநாதர், எல்லாம் வல்ல சித்தர், துர்க்கை, தல விருட்சமான கடம்பமரம், கனகசபை நடராஜர், அட்சரலிங்கம் 51, மகாலட்சுமி, ரத்தினசபை நடராஜர், பொற்படியான், வன்னி-கிணறு-லிங்கம், பைரவர், சந்திரன் என வரிசைமுறைப்படி வலம் வந்து தொழுது ஆறுகால் பீடம் வழி சென்று சுந்திரசேகரரைத் தொழுது வெள்ளியம்பலத்தில் கால் மாற்றி ஆடிய நடராஜரை வழிபட்டு, பிறகு மூலவரை வணங்கிட வேண்டும்.

பின் சண்டிகேஸ்வரரை தரிசித்து, நந்தியம்பெருமாளை மீண்டும் தரிசித்து நன்றி கூறி, நந்தி மண்டபத்து கிழக்குத் தூண்களில் உள்ள அக்கினி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர், காளி மற்றும் கம்பத்தடி மண்டப சிவபெருமானின் 25 மூர்த்தங்களை வணங்கி தென்புறத்தூணில் உள்ள ஆஞ்சநேயரையும் தரிசித்தபடி கொடிக்கம்பத்தை அடைய வேண்டும். வடக்கு-தெற்காக விழுந்து வணங்கி அங்கு சிறிதுநேரம் அமர்ந்து தியானிக்க வேண்டும். பிறகு, எழுந்து கிழக்குக் கோபுர வாசல் வழி ஆயிரங்கால் மண்டபம் கடந்து வெளியே, பூரண பக்தி செலுத்திய நிறைவோடு போகலாம்.

-செ.அபுதாகிர்
படங்கள்: பொ.பாலமுத்துகிருஷ்ணன்,
எஸ்.ஜெயப்பிரகாஷ், டி.மணிகண்டன்