கலங்கிய நீரையும் தெளிவாக்கும் தேற்றா மரக் கொட்டை



தலவிருட்சங்கள் தரும் பலன்கள் தேற்றா மரம்

தேற்றான் கொட்டை மரம் மிகவும் அரிதான மரங்களில் ஒன்று. இந்த மரத்துக்கும் நம் முன்னோர்கள் தெய்வீக முக்கியத்துவத்தை அளித்துள்ளனர். தேற்றா மரத்துக்கு பல பெயர்கள் உள்ளன. அவற்றில் இல்லம், சில்லம், கதலிகம் போன்ற பெயர்களோடு பிங்கலம் என்றும் தொல்காப்பியத்தில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூரில் இருந்து எட்டிக்குடி செல்லும் சாலையில் 19 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்குவளையில் திருக்கோளிலிநாதர் கோயில் உள்ளது. இங்கே பக்தர்கள் பல நூற்றாண்டுகளை கடந்து பிரம்மபுரீஸ்வரருக்கு இணையாக தேற்றான் கொட்டை மரத்தை, தல விருட்சமாக வணங்கி வருகிறார்கள்.

இத்தலத்திற்குப் பிரமதபோவனம், கதகாரண்யம் (தேற்றா மர வனம்.) புஷ்பவனம், தென்கைலாயம் என பல திருப்பெயர்கள் உள்ளன. நவக்கிரகங்களுக்கு உண்டான தடைகள் நீங்குவதற்கு இறைவன் அருள் புரிந்ததால் கோளிலிநாதர் என்ற ஈஸ்வரன் அழைக்கப்படுகிறார்.

திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே யார் பெரியவர் என்று போட்டி எழுந்தபோது, சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாக பிரம்மா தாழம்பூவோடு சேர்ந்து இறைவனிடம் பொய்கூறியதால் அவருக்கு சிவபெருமான் சாபமிட்டார். அதனால் பிரம்மாவுக்கு படைக்கும் தொழில் தடைபட்டது. இதனால் நவகிரகங்களும் தத்தமது வேலையை சரியாக செய்ய முடியாமல் திணறினார்கள். இதன் காரணமாக பிரம்மன் தியாகேஸ்வரருக்கு பிடித்தமான மரங்களில் ஒன்றான தேற்றா மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த வனப்பகுதிக்கு வந்தார்.

தேற்றா வனப்பகுதியில் தீர்த்தத்தை உண்டாக்கி தேற்றா மரத்தடியில் வெண் மணலால் லிங்கம் அமைத்து பிரம்மன் பூஜை செய்தார். இதனால் அவர் சாப விமோசனம் பெற்றார். நவகிரகங்களும் தங்களது தடைகள் நீங்கப்பெற்றன. இதனால் இத்தலத்தை “கோளிலி” என்றும், பிரம்மன் பூஜை செய்ததால் இறைவனை பிரம்மபுரீஸ்வரர் என்றும்  அழைக்க ஆரம்பித்தனர். இக்கோயிலில் நவகிரகங்கள் தெற்கு நோக்கி ஒரே நேர்கோட்டில் இருப்பது மிகவும் சிறப்பு.

“விண்ணு ளார்தொழு தேத்தும் விளக்கினை மண்ணு ளார்வினை தீர்க்கும் மருந்தினைப் பண்ணு ளார்பயி லுந்திருக் கோளிலி அண்ண லாரடி யேதொழு துய்ம்மினே”
- என்று திருநாவுக்கரசர் பாடியிருக்கிறார்.இத்தலத்தில் அருள்பாலிக்கும் அம்பிகையை வண்டமர் பூங்குழலம்மை, பிரம்ம குஜலாம்பிகை என்ற திருப்பெயர்களால் பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள். நவகிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு சென்று கோளிலிநாதரை வணங்கிச் செல்கிறார்கள்.

இத்தலத்தின் பெருமையாக இறைவன் சிவபெருமான் பிருங்க நடன கோலத்தில் தரிசனம் தருகிறார். கருவறையில் சிவபெருமானின் லிங்கத்திருமேனி வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அதனால் அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாத்தப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை இந்த லிங்கத்தின் மீது கவிழ்த்து வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதனாலேயே இத்தலம் “திருக்குவளை” என்றானது. சுவாமி, அம்மன் சந்நதி இரண்டும் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது.

சப்தவிடத்தலங்களில் இத்தலமும் ஒன்று. டங்கம் என்றால் சிற்பியின் சிற்றுளிஎன்று அர்த்தம். “விடங்கம்” என்றால் “சிற்பியின் உளி படாத” என்று பொருள். அதாவது, சிற்றுளி கொண்டு செதுக்கப்படாமல் தானே உருவான இயற்கை வடிவங்களை சுயம்பு அல்லது விடங்கம் என்று குறிப்பிடுவார்கள். இவ்வாறு உளியால் செதுக்கப்படாத 7 லிங்கங்கள் அமைந்திருக்கும் இடங்களை சப்தவிடத்தலங்கள் என்றழைத்தார்கள்.

 ஒரு சமயம் இந்திரன், அசுரர்களால் தாக்கப்பட்டு வருத்தம் கொண்டான். ஆனால், முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியால் அந்த அசுரர்களுடன் போர் புரிந்து அவர்களை வென்றான். தனக்கு இப்படி ஒரு வெற்றியை ஈட்டித்தந்த முசுகுந்த சக்கரவர்த்தியிடம் கைமாறாக என்ன வேண்டும் என இந்திரன் கேட்டான். ‘தாங்கள் பூஜை செய்து வரும் ‘விடங்க லிங்க‘த்தைப் பரிசாக தாருங்கள்‘ என முசுகுந்தன் கேட்டார்.

ஆனால், இந்திரனுக்கோ அந்த லிங்கத்தை தர மனசில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து தான் வைத்திருப்பதைப்போலவே ஆறு லிங்கங்களை உருவாக்கச் செய்து அவற்றுடன் தான் பூஜித்த லிங்கத்தையும் வைத்து அவற்றில் ஒன்றை எடுத்துக்கொள்ளும்படி முசுகுந்த சக்கரவர்த்தியிடம் சொன்னான் இந்திரன்.

 இதனால் ஆறில் ஒன்றை அவர் தேர்வு செய்தாரானால், தான் பூஜிக்கும் லிங்கம் தன்னிடமே தங்கிவிடும் என்று கருதினான் இந்திரன். ஆனால், முசுகுந்தனோ உண்மையான சிவலிங்கத்தை தன் ஆன்ம சக்தியால் கண்டுபிடித்துக் கோரினார். இது இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த இந்திரன் தன்னிடமிருந்த உண்மையான சிவலிங்கத்துடன் பிற லிங்கங்களையும் முசுகுந்தனுக்கு பரிசாக தந்தான். ஏழு லிங்கங்களையும் ஏழு இடங்களில் பிரதிஷ்டை செய்து முசுகுந்தன் பூஜை செய்தார். இவை சப்தவிடங்கத்தலங்கள் எனப்பட்டன.

திருவாரூரில் “வீதி விடங்கர்”, திருநள்ளாறில் “நகர விடங்கர்”, நாகப்பட்டினத்தில் “சுந்தர விடங்கர்”, திருக்குவளையில் “அவனி விடங்கர்”, திருவாய்மூரில் “நீலவிடங்கர்‘, வேதாரண்யத்தில் “புவனி விடங்கர்‘, திருக்காரவாசலில் “ஆதி விடங்கர்” என்று ஏழு திருத்தலங்களில் சப்தவிடங்கராக இருந்து இறைவன் அருள்பாலிக்கிறார்.

பிரம்மா, தாமரைக்கண்ணன், வலாரி, அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவகிரகங்கள், ஓமகாந்தன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். பஞ்ச பாண்டவர்களில் பகாசூரனை கொன்றதால் பீமனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில் நீங்கியது.
சுந்தரருக்கு திருக்குவளையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள குண்டையூர் என்ற இடத்தில் பெற்ற நெல்லை இத்தலத்து இறைவன் சுந்தரருக்கு திருவாரூரில் உள்ள பரவையர் மாளிகையில் கிடைக்கும்படிச் செய்தருளிய அற்புதம் நடந்த திருத்தலம் இது.

குண்டையூர் கிழார் என்பவர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர் சுந்தரரின் அருந் திருப்பணிகளைக் கேட்டுணர்ந்து அந்த சேவைக்கு உதவும் வகையில் மலைபோல் நெல் மூட்டைகளை அன்புடன் அளித்தார். இவற்றை எவ்வாறு திருவாரூர் எடுத்துச் சென்று தன் வீட்டில் சேர்ப்பது என்ற வழி தெரியாமல் சுந்தரர் திகைத்தார்.  பிறகு இப்பிரச்னைக்கு தீர்வுகாண கோளிலிநாதரிடம் பதிகம் பாடி நெல் மூட்டைகளை திருவாரூர் எடுத்துச் செல்ல வகை செய்யுமாறு வேண்டினார்.

சுந்தரரின் வேண்டுகோளை ஏற்று இறைவனே நெல் மூட்டைகள் திருவாரூரில் தோன்றுமாறு அருள்பாலித்தார்.சுந்தரர் மட்டுமன்றி, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் சுந்தரர் ஆகியோரும் தத்தமது தேவார திருப்பதிகங்களால் இந்த பிரம்மபுரீஸ்வரரைப் பாடித் தொழுதிருக்கிறார்கள். திருநாவுக்கரசரின் பதிகம் ஒன்றைக் காண்போம்:
“மைக்கொள்
கண்ணுமை பங்கிவன் மான்மழுத்
தொக்க கையினன் செய்யதோர் சோதியன்
கொக்க மார்பொழில் சூழ்தரு கோளிலி
தக்க னைத்தொழ நம்வினை நாசமே”

தேற்றன் கொட்டை மரம் பளபளப்பாகவும், கரும்பச்சை நிறத்தில் இலைகளையும், உருண்டையான விதைகளையும் கொண்ட மரமாகும். ஏரி, குளங்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் கலங்கலாக இருக்கும்.

அந்த நீரைத் தெளியவைக்க அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் தேற்றான் கொட்டையை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, தேற்றாங்கொட்டையை பானையின் உட்புறம் தேய்ப்பர். பிறகு அந்தப் பானைக்குள் நீரை விடுவர். சில மணித்துளிகளில் பானையில் உள்ள தண்ணீர் நன்கு தெளிந்து கிருமிகள் இல்லாத சுத்தமான குடிநீராகும்!

இதனை கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் மூலம் அறியலாம். “கலம் சிதை இல்லத்து காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் நலம் பெற்றாள்” என்பதுதான் அந்த வரி. தேற்றான் கொட்டையைக் தேய்க்க கலங்கிய நீர் தெளியும். அதேபோல்  தலைவி தலைவனின் அரவணைப்பால் தெளிவு பெற்றாள் என்கிறது பாடல்.

இது மட்டுமல்ல ஏரி, குளங்களில் உள்ள மீன்களை பிடிப்பதற்கும் தேற்றான்கொட்டை மரத்தின் சக்கையை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். தேற்றா மரத்தின் காய்களை இடித்து கொட்டையை எடுத்த பிறகு கிடைக்கும் சக்கையை மீன்கள் உள்ள குட்டைகளில் போடுவார்கள். அப்போது இச்சக்கையின் சாறு மீன்களை ஒரு வித மயக்க நிலைக்கு கொண்டு சென்று கரையில் ஒதுங்கச் செய்யும். பிறகு கரையில் இருந்தவாறே வெகு எளிதாக மீன்களை சேகரித்துவிடலாம்.

 சங்க கால இலக்கிய பெண்கள் தேற்றான் மரத்தில் பூக்கும் மலர்களோடு, கஞ்சன்குல்லை, கூதாளி குவளை, மலைமல்லி ஆகிய மலர்களையும் சேர்த்து மாலையாகத் தொடுத்து அணிந்து மகிழ்ந்தனர் என்பதை “குல்லை கலவி கூதளம் குவளை இல்லமொடு மிடைந்த எந்தன் கண்ணியன்” என்று நற்றிணை விவரிக்கிறது. 

இந்த மரத்தின் பழம் நாவல் பழத்தைப் போன்று இருக்கும். பழத்தில் உள்ள விதைதான் தேற்றான் கொட்டை எனப்படுகிறது. தேற்றான் கொட்டை மரம் நல்ல மருத்துவ குணம் வாய்ந்தது. இதன் விதை சிறந்த ரத்த சுத்திகரிப்பாக உள்ளது; சிறுநீரக செயல்பாட்டை பலப்படுத்துகிறது. ஆஸ்துமா, வெட்டை, கண் நோய், வெள்ளைப்பாடு, சிறுநீரில் ஏற்படும் எரிச்சல் போன்ற நோய்களுக்கு தேற்றான் கொட்டை சிறந்த மருந்தாகும்.

(விருட்சம் வளரும்)

தி.பெருமாள் மலர்மதி