வாழ்வை மணக்க வைக்கும் சந்தன மரம்!



தலவிருட்சங்கள் தரும் பலன்கள் - சந்தன மரம்

நம் பூஜையறைகளில் மட்டுமன்றி இல்லங்களில் எந்த விசேஷங்கள் நடந்தாலும் நம் பண்பாட்டு, கலாசாரத்தில் இரண்டற கலந்துவிட்ட மங்கள பொருள் சந்தனம். மருத்துவப் பயனோடு புனிதமானதாகவும் கருதப்படுவது. வெப்பத்தைத் தணிக்க மார்பில் சந்தனத்தை பூசிக்கொள்வது நம் மக்களின் வழக்கம். இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் சந்தன அபிஷேகம் பிரதானமானதாகக் கருதப்படுகிறது. இந்த மகிமையை ஒட்டியே இறைவனுக்கு சந்தனக் காப்பு அலங்காரமும் செய்யப்படுகிறது.

இவ்வாறு இறைவனுக்கு காப்பிடும் சந்தனத்தை பக்தர்கள் வாயில்போட்டுக்கொள்வதையும், உடல் முழுவதும் பூசிக்கொள்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். இந்த சந்தனத்தை பக்தர்கள் நெற்றியில் விபூதி போன்று பட்டையாகவோ, திலகமாகவோ இட்டுக்கொள்வதும் உண்டு. நெற்றியில் சந்தனம் அணிபவருடைய மனம் அமைதி அடையும்; சாந்தமான குணம் உண்டாகும். அன்றாட வாழ்வில் ஏற்படக்கூடிய மன அழுத்தம் குறையும். எல்லாவற்றிற்கும் மேலாக தெய்வத்தின் அருள் கிடைக்கும். சடங்குகள், யாகங்கள், ஹோமங்கள் மற்றும் அன்றாட பூஜைகளில் சந்தனம் முக்கிய இடத்தைப்பிடித்து உள்ளது.

சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் சந்தனத்தை இறைவனுக்கு ஒப்பிடும் பல பாடல்கள் உள்ளன. சந்தனத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது லட்சுமியின் அருள் கிடைக்கப்பெற்று செல்வம் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை. அதுமட்டுமல்ல பங்குனி மாதத்தில் பன்னீர் கலந்த சந்தனத்தால் சிவனின் லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்தால் பதினாறு ஆண்டுகள் சிவ பூஜை செய்த பலனை பெற்று முக்தி பேறு கிடைக்கும் என்பது நடராஜ சதகம் தெரிவிக்கும் தகவலாகும்.

தேவலோகத்தில் உள்ள ஐந்து மரங்களில் ஒன்று சந்தனம் என்றும் இதன் பெருமை பேசப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோச மங்கை திருத்தலத்தில் உள்ள மரகத நடராஜர் சிலை ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பிட்டு காணப்படும். ஆண்டுக்கொரு முறை சந்தனக்காப்பு களையப்பட்டு அந்த சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மத்தள ஒலியால் மரகத சிலைக்கு சேதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு ஆண்டு முழுவதும் இறைவனுக்கு சந்தனக்காப்பிடுகிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் திருமேனிக்கு நெய் அபிஷேகம் செய்வ்து அனைவரும் அறிந்ததே. இதனால் சுவாமியின் திருமேனி வெப்பம் அடையும் என்றும், அதற்காக சந்தன அபிஷேகம் செய்து அவரைக் குளிர்விக்கிறார்கள் என்றும் சொல்வார்கள். பக்தர்களுக்கு பிரசாதமாக அந்த சந்தனம் வழங்கப்படுகிறது.சதுரகிரி மலை ஆயிரக்கணக்கான ரகசியங்களை இன்றும் சுமந்து கொண்டிருக்கிறது. பல்வேறு
அற்புதங்களை தனக்குள் ஒடுக்கிக்கொண்டு அருள்மலையாக திகழ்கிறது.

இன்றைக்கும் அங்கே சித்தர் பெருமக்கள் அருவுருவமாக உலவுகிறார்கள் என்ற நம்பிக்கை  உள்ளது. அதிசயங்களையும், அற்புதங்களையும் தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் சதுரகிரி மலையில் அன்னை பார்வதி பூஜித்த லிங்கம் இன்றும் பக்தர்களின் வழிபாட்டுக்குரியதாக உள்ளது. இக்கோயில் சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் உள்ளது. அன்னை பார்வதி சந்தன அபிஷேகம் செய்து வழிபட்ட சந்தன மகாலிங்கம் கோயிலும் அமைந்துள்ளது.

அன்னை பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இன்றும் இங்குள்ள சந்தன மாரியம்மன் சந்நதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு பக்தர்கள் அபிஷேகம் செய்கின்றனர்.பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தரும் வணங்கிவந்துள்ளார். மகாசிவராத்திரி அன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது மலர்களைத் தூவி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தனமயம்தான்.

மரங்களில் விலை மதிப்பற்றதாக விளங்குவது சந்தன மரம். இந்த மரம் மலைகளில்தான் அதிக அளவில் வளர்கிறது. ஆரம், சாந்தம், சந்தனம் என்ற பெயர்களும் சந்தன மரத்துக்கு உண்டு. சந்தன மரத்தின் மலர் வெள்ளையாக இருக்கும். ஆனால், மணம் கிடையாது. ஆனால், சந்தன மரத்தின் பூக்களில் இருக்கும் தேனை பருகுவதற்கு வண்டுகள் அதிகமாக மலைப்பகுதியில் சுற்றிச் சுற்றி வருமாம். பொதுவாகவே மலரில்தான் மணம் இருக்கும். ஆனால், சந்தன மலருக்கு இல்லாத மணம் அதன் மரத்துக்கு இருப்பதும் அபூர்வமான விஷயம்தானே! 

திருக்காளத்தியில் ஓடும் புனித நதியான பொன்முகிலி ஆற்றங்கரையோரத்தில் வளர்ந்திருக்கும் மரங்கள் பற்றி திருஞானசம்பந்தர் பாடும்போது, “சந்தமார் அகிலோடு சாதி தேக்கம் மரம் உந்துமா முகலியின் கரையினிலே” என்று பொன்முகிலி ஆற்றங்கரையோரத்தில் சந்தனம், ஆத்தி, அகில் சாதிக்காய், தேக்கு போன்ற மரங்கள் வளர்ந்திருப்பதை தெரிவிக்கிறார்.சந்தன மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவை.

12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தனமரம் தனியாக வளராது. மற்றொரு மரத்துக்கு அருகில்தான் வளரும்.இரண்டு வகையான சந்தன மரங்கள் உள்ளன. ஒன்று வெள்ளை, மற்றொன்று சிவப்பு. இதில் சிவப்பு சந்தன மரம் சக்தி வாய்ந்தது. ஆனால், மிகவும் அபூர்வமாக விளையக்கூடியது. இம்மரத்தில் செய்யப்படும் தெய்வச் சிற்பங்கள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றனபூராடம் நட்சத்திரம் 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கும், ரேவதி நட்சத்திரம் 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கும் சந்தன மரம் நட்சத்திர விருட்சமாக அமைந்திருக்கிறது. இந்த நட்சத்திரக்காரர்கள் சந்தன மரத்தை வணங்கி வரலாம்.

வெள்ளை சந்தன மரத்தின் மருத்துவம் குறித்து பதார்த்த குணப்பாடம் நூலில், “வெந்சந் தனமரத்தா னல்லறிவு மின்பமெழிற்பொற் செந்திருவருளும் பூமிதத்துண் மெச்சுஞ்சரும வழகுந் தனிமோ கமுமாம்மிருமுநோ யேகும் பறழ்ந்து” - என்று கூறப்பட்டுள்ளது.

வெள்ளை சந்தனம் உடலில் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தி சீராக்குகிறது. மூளை, வயிறு, குடலுக்கு சக்தி அளிக்கிறது. மரத்தில் எண்ணெய் சத்து உள்ளது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை. சருமத்திற்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து குளித்தால் கை, கால் வலி, கண் எரிச்சல் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

சந்தனம், சளி, இருமலிலிருந்து நிவாரணம் தரும். ஆஸ்துமா, காய்ச்சலை குணப்படுத்தக்கூடியது. சிறு நீர் பாதையில் உள்ள புண்ணை ஆற்றும். எரிச்சலைக் கட்டுப்படுத்தும். கல்லீரல் மற்றும் பித்தக்கோளாறுகளை குணமாக்கும். இதய நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் சந்தனத்துக்கு உண்டு. எய்ட்ஸ் நோய்க்கும் சந்தன மரத்தில் இருந்து மருந்து எடுக்கப்படுகிறது. இதய படபடப்புக்கும், இதய நோய்களுக்கும் சந்தனம் அரிய மருந்தாகும்.

இத்தகைய மருத்துவ குணமும், நறுமணமும், குளிர்ச்சியும் நிறைந்த சந்தன மரம் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் இறைவனோடு சேர்ந்து வணங்கப்படுகிறது.
தமிழகத்தில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தேரழுந்தூர் என்ற திருத்தலத்தில் சந்தனம் தல விருட்சமாகத் திகழ்கிறது. இப்பகுதி முழுவதும் ஆதி காலத்தில் சந்தன மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக இருந்துள்ளது.

இங்கே சௌந்தராம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இதே ஊரின் மேற்கு பகுதியில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஆமருவியப்பன் கோயிலும் உள்ளது.
கோயிலின் கிழக்குப் பிராகாரத்தில் சந்தன மரம் உள்ளது. இந்த சந்தன மரத்தடியில்தான் சிவபெருமான் அந்தணர்களுக்கு வேதம் பயிற்றுவித்ததாக தலபுராணம் கூறுகிறது. அதன் அடையாளமாக பக்கத்தில் ஷேத்திர லிங்கத்தையும், நந்தியையும் காணலாம்.

ஒரு முறை சிவனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராகக்கொண்டு சொக்கட்டான் விளையாடினார்கள். அப்போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்டார் சிவன். பார்வதியோ மகாவிஷ்ணுவிற்கு சாதகமாக பதில் சொல்லிவிட்டார். இதனால் பார்வதி மீது கடும் கோபம்கொண்ட சிவபெருமான், பார்வதி பசுவாக பூமியில் பிறக்க வேண்டும் என்றும், பூமியில் உழன்று, பின்னர் தன்னை அடையும்படியும் சாபமிட்டுவிட்டார். பார்வதியை பிரிந்த சிவபெருமான் அந்தணர் வேடம் பூண்டு, இத்தலத்தில் உள்ள சந்தன மரத்தின் கீழ் அமர்ந்து வேதம் ஓதி வந்தார். அதனால் அவர் வேதபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

கோயிலில் வேதபுரீஸ்வரர் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார்.  ஆலயத்தின் வடமேற்கு மூலையில் மற்றொரு சிறிய கோயிலில் ஸ்ரீமடேஸ்வரர் சந்நதி உள்ளது. அம்பாள் திருநாமம் ஸ்ரீமடேஸ்வரி. இதுதான் ஆதி கோயில் என்றும், வேதபுரீஸ்வரர் சந்நதி இதற்கு பிறகுதான் தோன்றியது என்றும் கூறப்படுகிறது. வெளிப் பிராகாரத்தில் தென்மேற்கு திசையில் ஸ்ரீமடேஸ்வரர் சந்நதிக்கு எதிரில் இறைவி சௌந்தராம்பிகை கிழக்கு நோக்கி அதாவது, சிவனை நோக்கி தனிச் சந்நதியில் கொலுவிருக்கிறாள். அகத்தியர், மார்க்கண்டேயர், காவேரி ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு மோட்சம் பெற்றிருக்கின்றனர்.

தேரழுந்தூர் என்று திருத்தலத்தின் திருப்பெயர் வருவதற்கும் ஒரு புராணக்கதை கூறப்படுகிறது. ஒரு முறை ஊர்த்துவரதன் என்ற மழவ அரசன் தவத்தை கண்டு மகிழ்ந்த பிரம்மா அவனுக்கு ஆகாயத்தில் பறந்து செல்லக் கூடிய, சந்தன மரத்தால் ஆன ஒரு தேரைப் பரிசாக அளித்தார். அந்தத் தேரில் ஆகாயத்தில் பயணித்த ஊர்த்துவரதன் ஒரு இடத்துக்குமேல் செல்ல முடியாமல் தடுமாறி நின்றது. பிறகு அந்தத் தேர் பூமியை நோக்கி கீழே இறங்கி பூமியில் அழுந்தி நின்றது.

ஊர்த்துவரதன் அங்கே அகத்திய முனிவர் இறைவனை வழிபட்டுக்கொண்டிருப்பதை பார்த்தான். அதனால்தான் அந்தத் தேர் அந்த இடத்தை தாண்டிச் செல்ல முடியாமல் கீழே இறங்கி அழுந்தி நின்றது என்பதை அவன் தெரிந்துகொண்டான். இதன் காரணமாகவே தேர் தொடர்ந்து செல்ல முடியாமல் கீழே அழுந்தி நின்றதால் இத்தலம் தேரழுந்தூர் என்ற திருப்பெயரைப் பெற்றது.

திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் இத்தலத்தை “அழுந்தை” என்றே குறிப்பிடுகிறார். அழுந்தை எனபதே மருவி பிறகு அழுந்தூர் என்று மாறியதாக கூறப்படுகிறது.
“தொழுமாறுவல் லார்துயர் தீரநினைந்து
எழுமாறுவன் லார்இசை பாடவிம்மி
அழுமாறுவல் லார்அழுந் தைமறையோர்

வழிபாடுசேய் மாமட மன்னினையே” என்று திருநாவுக்கரசர் பாடி இறைவனை வணங்கியிருக்கிறார். திருவாஞ்சியம் திருத்தலத்தில் உள்ள வாஞ்சிநாத சுவாமி திருக்கோயிலிலும் சந்தன மரம் தலவிருட்சமாக விளங்குகிறது. இக்கோயில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ளது. கும்பகோணம்-நாச்சியார்கோவில் சாலையில் உள்ள அச்சுதமங்கலத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் திருவாஞ்சியம் திருத்தலம் அமைந்திருக்கிறது.

இத்தலத்தில் இறைவன் வாஞ்சிநாதர் மற்றும் வாஞ்சி லிங்கேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இறை விக்கும் இரு பெயர்கள் - வாழவந்தநாயகியம்மை, மங்களநாயகியம்மை.
இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தின் மூலவர் சுயம்பு லிங்கத் திருமேனியாகக் காட்சியளிக்கிறார். உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும் பழமையானது என்கிறார்கள்.

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றுள் திருவாஞ்சியமும் ஒன்று. மற்றவை: திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருசாய்க்காடு,  மயிலாடுதுறை. தன்னைப் பிரிந்த திருமகளை மீண்டும் அடைய விரும்பி மகாவிஷ்ணு தவமிருந்து சிவனின் அருளை பெற்ற தலம் என்பதால் இது திருவாஞ்சியம் ஆயிற்று.
பிரளயத்தில் காசியைப் போலவே திருவாஞ்சியமும் அழியாது தப்பிப் பிழைத்தது கண்டு இத்தலத்தின் மகிமையை மேலோங்கச் செய்வதற்காக லிங்கவடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாக பார்வதி தேவியும் இத்தலத்தில் தங்கி இருந்து அருள்பாலித்து வருகிறார்கள்.

கோயில் அக்னி மூலையில் எமனுக்கும், சித்ரகுப்தனுக்கும் தெற்கு நோக்கியே தனிச் சந்நதி உள்ளது. அனைத்து உயிர்களையும், அவரவர் இறுதி நாளில்  பறிக்கும் உரிமை உள்ளவன்தான் என்றாலும், அவ்வாறு உயிர்களைப் பறித்ததால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட, அது நீங்க எமன் இத்தலத்திற்கு வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். எமனின் தவத்தைக்கண்டு உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான் உயிர்களை எடுப்பதால் ஏற்படும் பாவத்தையும், பழியையும் எமனை வந்து சேராது என்று வரம் அளித்தார்.

இங்கே தன்னை தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறப்பு இல்லை என்றும், அமைதியாக இறுதிக் காலத்தை அனுபவிப்பர் என்றும் இறைவன் அருள்பாலித்தார். இங்கே க்ஷேத்திர பாலகனாக விளங்கும் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க வேண்டும் என்பது மரபு. அதன்படி இத்தலத்தில் நாள்தோறும் எமனுக்குதான் இங்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் எல்லாம்.
இங்குள்ள குப்தகங்கை தீர்த்தத்தில் நீராடி, முதலில் எமனை வழிபட்டு பிறகே கோயிலில் மற்ற தெய்வங்களை வழிபடுவது வழக்கம். இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்குபவர்களுக்கு மரண பயம் நீங்கும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோயில் மூடப்படுவதில்லை. கங்கையும் தனது 999 கலைகளுடன் இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி தனது பாவங்களை போக்கிக்கொண்டாள். கங்கை மூழ்கி பாவம் போக்கிய தீர்த்தத்தின் பெயர்தான் குப்த கங்கை. இங்குள்ள லட்சுமி தீர்த்தம், நாக தீர்த்தம் மற்றும் சக்கர தீர்த்தம் ஆகியவையும் மிகவும் விசேஷமானவை. இந்த மூன்று தீர்த்தங்களையும் லட்சுமி, ஆதிசேஷன் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோர் உருவாக்கியதாக கூறப்படுகிறது.

லட்சுமி தீர்த்தத்தில் ஆவணி மாதத்தில் வெள்ளிக்கிழமை நீராடினால் ஒருவர் தான் பிரிந்து வந்த குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்துவிடுவார் என்பதும், நாக தீர்த்தத்தில் வைகாசி மாதம் திருவோணம் நடசத்திர நாளன்று நீராடினால் நாகதோஷம் விலகிவிடும் என்பதும், ஆவணி மாதம் ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசியில் சக்கர தீர்த்தத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பதும் இக்கோயில் தலபுராணம் தரும் தகவலாகும். இத்தலத்தில் அருள்பாலித்து வரும் இறைவனைப்பற்றி சுந்தரர் தமது திருப்பதிகத்தில்,

“பொருவ னார்புரி நூலர்
புணர்முலை உமையவ ளோடு
மருவ னார்மரு வார்பால்
வருவதும் இல்லைநம் அடிகள்
திருவ னார்பணித் தேத்தும்
திகழ்திரு வாஞ்சியத்து உறையும்
ஒருவ னார்அடி யாரை
வாழ்வினை தலியஓட் டாரே”
- என்று பாடியுள்ளார்.

உரச உரசத்தான் சந்தனம் மணக்கும். எப்படி இந்த மரத்திற்குள் சந்தனத்தின் மணம் மறைந்திருப்பதை நம் புறக்கண்ணால் காணமுடியாதோ அதேபோல்தான் நாம் புறக்கண்ணால் இறைவனைக் காணமுடியாது. அகக்கண்களால் மட்டுமே இறைவனை நாம் தரிசிக்க முடியும் என்பது சந்தன மரம் மனிதர்களுக்கு உணர்த்தும் தத்துவம்.

(விருட்சம் வளரும்)

தி.பெருமாள் மலர்மதி