இளைய மகாமகம்



4-3-2015

மகாமகம் என்றவுடனேயே கும்பகோணம் மகாமகக் குளம்தான் நினைவுக்கு வரும். அடுத்த ஆண்டு மகாமகம் வரவிருக்கிறது. அதற்கான கொண்டாட்டங்கள் இப்போதே கும்பகோணத்தில் நிகழத் தொடங்கி விட்டன. இந்த வருடத்திய மகத்தை இளைய மகாமகம் என்று அழைப்பார்கள்.

மகாமகம் என்பது குரு பகவான் சிம்ம ராசியில் பொருந்துகையில் அவரோடு மாசி மாதத்தில் பௌர்ணமியும், மக நட்சத்திரமும் சேரும் சூழலில் கும்ப ராசியில் சூரியன் இவர்களையும், இவர்கள் சூரியனையும் பரஸ்பரம் முழுப் பார்வையுடன் நோக்கும் புனித நாளே மகாமகம் ஆகும்.

இன்று நாம் பார்க்கின்ற இந்த குளத்திற்குப் பின்னால் மாபெரும் புராணமே அடங்கியுள்ளது. அகிலத்தையே சுருட்டி ஆதி சக்திக்குள் லயமடையச் செய்யும் பிரளயம் பெருக்கெடுத்து வரும் காலம் வந்தது. ஆழிப் பேரலைகள் அண்ட சராசரத்தையும் முறுக்கி அணைத்து ஆரத் தழுவி தமக்குள் கரைத்துக் கொள்ளும் ஊழிக்காலம் உந்தி வருவதை அறிந்தார், பிரம்மா. பீஜங்கள் எனப்படும் பிரபஞ்ச படைப்பாற்றலின் விதைகளாக திகழும் பிரபஞ்ச மூல அணுக்கள் அழிந்துவிடுமோ என அஞ்சினார்.

படைப்பின் ஆதாரமாக விளங்கும் வேதங்கள் கூட பிரளயப் பேரழவில் ஆதி சக்தியில் சென்று ஒடுங்கி விடுமோ என்கிற கவலை அவரை வாட்டியது. அகிலத்தை படைத்து எண் திக்கும் பரவச் செய்து சகல ஜீவராசிகளையும் செழிக்க வைக்க வேண்டுமென்ற பேரவா அவரை நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தது. ஏனெனில் பிரளய கல்பத்தில் தானும் கரைந்து விடுவோமோ எனும் எண்ணம் அவரிடத்தில் தீவிரமாகிக் கிடந்தது.

சகலத்தில் உறைந்திருக்கும் சர்வேஸ்வரனான ஈசனிடத்தில் இவ்விஷயத்தை உரைக்கச் சென்றார், பிரம்மா. கயிலை மல்லிகை போன்ற பனித்துகள் களால் போர்த்தியிருந்தது. ஈசனின் தட்பமான அருட்பார்வை அண்ட பேரண்டத்தை அணைத்தபடி இருந்தது. வேத சொரூபனான பிரம்மா சிவத்தின் திருவடியில்  பணிந்தெழுந்தார். மெல்ல பேச ஆரம்பித்தார். ‘‘பிரளயப் பேரழவில் சிருஷ்டியின் பீஜங்கள் அழியுமோ எனும் கவலை என் நெஞ்சத்தை தணலாக எரிக்கிறது. மீண்டும் பிரபஞ்ச சிருஷ்டி தொடர காத்தருள வேண்டும்’’. ஈசனின் தாள் பணிந்து திருவடியை தம் கண்ணீரால் நனைத்தார்.

சிவனும் அந்நீரில் கரைந்தார். கருணை மயமானார். பிரளயத்தின்போது சிருஷ்டியின் மூலத்தோடு தானும் கரையாது இருக்க வேண்டுமே என உள்ளம் நெகிழ்ந்து கேட்டார் பிரம்மன். ஈசனின் பூப்பாதத்தில் தன் நாற் சிரசையும் பணிந்தேற்றும்போது ஈசன் பூலோகத்தின் பரத கண்டம் எனப்படும் பாரதத்தின் ஒரு கோணத்தின் மீது தன் திருப்பார்வையை வீசினார். சிவம் சுழன்று சூறாவளியாக அந்தப் பிரதேசத்தை சுற்றி வளைத்துக் கொண்டது. அத்தலத்தினூடே ரகசியமாக அருவமான அமுதத்தின் சாரல் அலையாக எழுந்தது.

சிவச் சக்தி கொப்பளித்துப் பெருகத் தொடங்கியது. பிரம்மா கலங்கிய கண்களினூடே மகாதேவனை பார்த்தார். பிரம்மனின் வேத சிரசுகள் மெல்ல அதிர்ந்தன. ஈசனும் அதில் மயங்கினார். பிரம்மனைப் பார்த்து ‘‘கவலை கொள்ளாதே நான்முகா.

யாம் உறையும் புண்ணிய தலங்களிலிருந்து திருமண் கொணர்ந்து, அமுதத்தையும், புனித தீர்த்தமும் கலந்து அழியாத கும்பம் எனும் குடத்தை செய். அதன் மையத்தின் சிருஷ்டியின் பீஜங்களை வைத்து மூடு. உன்னுடைய நான்முகத்தினின்றும் எதிரொலித்துத் தெறிக்கும் வேத வரிகளை அதில் அலை அலையாக அனுப்பு.

ஆகமங்களை ஆனந்தமாக கலந்து, புராண இதிகாசங்களை நாற்புறமும் வைத்து, இன்னும் நிறைய அமுதம் பெய்து மாவிலை சொருகி, தேங்காய் வைத்து தர்ப்பையை படரவிட்டு, பூணூலைச் சாத்தி, வில்வ தளங்களால் அர்ச்சித்து உறியிலேற்று.

மேருவின் மேல் பகுதியில் சாயாமல் தரித்திடு. ஆழி ஊழிக்காலம் அசைந்து வரும்போது மேருவின் மேலிருக்கும் கும்பமும் அசையும். மெல்ல நகர்ந்து பாரத வர்ஷத்தின் தென் திசையில் சென்று தங்கும். அங்கு சென்று கும்பத்தினின்று பெருகும் அமுத கலையான பீஜங்களை உமக்குள் ஏந்தி சிருஷ்டியை தொடரலாம்’’ என்றார், சிவன். அதனைக் கேட்ட பிரம்மனின் திருமுகம் சிவப் பிரகாசமாக ஜொலித்தது.

பிரம்மா யுகம்தோறும் நிலைபெறப்போகும் அரும்பெரும் விஷயமான கும்பத்தை செய்தார். பிரளயப் பேரலை ஹா... என வாய் பிளந்து விண்ணுற நிமிர்ந்து வந்தது. மேரு மெல்ல அதிர்ந்தது. அமுதக் கும்பம் சிறு நாட்டியத்தின் அசைவுபோல ஒய்யாளியாக இடதும் வலதும் அசைந்தது. பேரலை பெருவாய் பிளந்து வந்தாலும் அதன்மேல் படகுபோன்று கும்பம் மிதந்து ஈசன் திருப்பார்வை பதிந்த அவ்விடத்தில் நின்றது. அசைந்து வந்து சுழன்று நின்றது.

பம்பரமாக சுழன்ற கும்பக் கலசம் பிற்காலத்தில் திருக்கலச நல்லூர் எனும் தற்போதைய தலமான சாக்கோட்டையாக மாறியது. குடம் சில காத தூரம் சென்று தங்கியது. பிரளயங்கண்டோர் அதிசயத்தனர்.

அரைக் கணத்தில் ஊழி அடங்கி  ஒடுங்கியது கண்டு விழி விரித்தனர். காந்தத்தினால் கவரப்பட்ட இரும்புபோன்று அமுதமும், சிருஷ்டி பீஜமும் கலந்திழைந்த கும்பத்தினால் கவர்ந்திழுக்கப்பட்டார், பிரம்மா. ஒரு புறம் பிரளயத்தின் பேரிரைச்சல் அடங்க, கசிந்து வரும் அமுத வாசத்தின் இடையறாத பொழிவு அந்தப் பிரதேசத்தையே குளிர்வித்துக் கொண்டிருந்தது. கும்பத்தினுள் ஈசன் தம்மை நிறுத்திக் கொள்ள கருணையோடு தவித்தான்.  

சிவன் அத்தலத்தை அடையும் பொருட்டு ஓர் வேடரூபம் தாங்கி முன்செல்ல கணநாதர் உட்பட யாவரும் பரிவாரத்தோடு தொடர்ந்தனர். உமாதேவியோடு தென் திசை நோக்கிச் செல்லுகையில் இடைமருதூர் எனும் திருவிடைமருதூருக்குச் சென்றனர். அமுதக் குடத்தை கண்ணுற்றனர். அருகிலிருந்த சாஸ்தாவிடம், ‘கும்பத்தை ஓரம்பால் சிதைத்து அமுதத்தை நாற்புறமும் வழியச் செய்’ என்றனர். சாஸ்தா இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றும் பொருட்டு அழியா அந்த மாய குடத்தை குறிவைத்து பாணம் தொடுத்தார்.

ஆனாலும், கும்பத்தை பிளக்க முடியவில்லை. ஈசன் இப்போது முன் வந்தார். பாணம் எடுத்தார். பாணாதுறை எனும் இடத்தில் இன்றும் பாணபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.  
சிவபெருமான் வேறொரு திக்கிலிருந்து பாணம் தொடுத்தார். இந்த கும்பத்திற்கு வாய் தவிர மூக்கும் இருந்தது, கமண்டலத்திற்கு இருப்பதுபோல.

அந்த மூக்கு வழியாக அமிர்தம் வெளியேற வேண்டுமென்று பரமேஸ்வரன் நினைத்தார். பாணம் மூக்கை துளைத்தது. அந்த மூக்கு வழியாகத்தான் அமுதம் பொங்கி வெளிவந்தது. கும்பத்தின் மூக்கிற்கு கோணம் என்று பெயருண்டு. அந்த கோணம் விழுந்த தலமே கும்பகோணம் என்றாயிற்று. தேவாரத்தில் இத்தலத்தை குடமூக்கு என்றே அழைத்தனர்.

 அமுதப் பெருவூற்று புகுபுகுவென பொங்கியது. அதன் வாசச் சாரல் எண்திக்கும் பரவியது. அமுதம் இரண்டு குளங்களாகத் திரண்டது. ஒன்று மகாமக குளம் என்றும், மற்றொன்று பொற்றாமரை என்றும் அழைக்கப்பட்டன. இத்தலத்தில் அமர்ந்து ஈசன் கும்பேஸ்வரர் ஆனார். கூடவே தன்னைச் சுற்றிலும் சில தலங்கள் உருவாவதற்கும் அவர் காரணமானார். பூரண கும்பம் என்பது பூணுல், மாவிலை, தீர்த்தம் மற்றும் அதன் சிகரமாக விளங்கும் தேங்காய் என்று எல்லாமும் அடங்கிய விஷயம். பிரம்மன் அதையும் புரிந்து வைத்திருந்தான். அவை என்ன ஆகின்றன என்று இமைகொட்டாது பார்த்தான். அடுத்தடுத்த ஆச்சரியங்கள் தொடந்து நிகழ்ந்தன.

கும்பத்தின் வாய் விழுந்த தலமே குடவாயில் எனும் குடவாசல் ஆகும். அங்கு கோணேஸ்வரராக நிலை கொண்டார் சிவபெருமான். கும்பத்தினின்று நழுவிச் சென்று விழுந்த பொருட்கள் ஒவ்வொன்றும் தனித் தனி லிங்க சொரூபம் பெற்றன. தேங்காய் விழுந்த அருகிலே உள்ளதுதான் இன்றைய மகாமகக் குளம்.

இதுவே அமுதத் தடாகம். தேங்காய் லிங்க உருபெற்று சிவமானது. இன்றும் குளத்தருகே உள்ள இந்தக் கோயில் ஈசனுக்கு நாரிகேளேஸ்வரர் என்று பெயருண்டு. நாரிகேளம் என்றால் தேங்காய் என்று பொருள். அது மேற்கு பார்க்க இருப்பதால் அபிமுகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். மாவிலை விழுந்து இத்தலத்தின் விருட்சமாக வன்னிமரமாக மாறிற்று. இன்னொரு மாவிலை விழுந்த இடமும் பிரளயத்தை மீறியிருந்தது.

பிரளயத்திற்கு புறம்பாக நின்றதால் இன்றும் இத்தலத்திற்கு திருப்புறம்பியம் என்று பெயர். கும்பத்தைச் சுற்றியிருந்த பூணுல் குளத்தின் அருகே விழுந்தது. அங்கு ஸூத்ரநாதர் எனும் திருநாமத்தோடு ஈசன் எழுந்தருளியுள்ளார். ஸூத்ரம் என்றால் பூணுல் என்று பொருள். அங்கே கௌதம முனிவர் பூசித்ததால் கௌதமேஸ்வரர் ஆலயம் என்றே அதை வழங்குகின்றனர்.

 வேடரூபம் கொண்ட மகாதேவன் இத்தலத்திலேயே தன்னொளி வீசி கருணை மயமாக அமர ஆவலுற்றார். கும்பத்தை குறுக்கி அமுதத்தை அத்தல திருமண்ணையும் தனது அருள் நீரைப் பொழிந்து பிசைந்து லிங்க உருவஞ் செய்தார். ஆதிலிங்கத்தினுள் பரமசிவன் பெருஞ்சோதி வடிவாக உட்புகுந்தார்.

கும்பம் கும்பேஸ்வரரானது. பிரம்ம சிருஷ்டிக்கு முற்பட்டதால் ஆதிகும்பேஸ்வரர், அமுத கும்பேஸ்வரர் என பல்வேறு திருநாமங்களோடு அருளாட்சி செய்தார் மஹேஸ்ஸரன். மழலையொன்று மாமலையைப் பார்ப்பதுபோன்று நிகழ்ந்தவற்றை பிரமிப்போடு பார்த்தார் பிரம்மா. மனம் தழுதழுத்து கும்ப லிங்கத்தை பூசித்தார். வேதப்பாக்களால் வேதகிரீசனை தொழுதார். வானவரும், தேவர்களும் கும்பேஸ்வரத்தை அடைந்தனர். கும்பேசருக்கு பிரம்மோற்சவம் நடத்தினர்.

எத்தனையோ யுகாந்திரங்களுக்கு முன்பு அமைந்த கும்பேஸ்வரர், இன்றும் பேரருள் பொழிகின்றார். புராணங்கள் பாவங்கள் நீங்கும் தலமாக காசியைக் குறிப்பிட்டு, அதைவிட ஒரு படி மேலேற்றி காசியில் கரையாத பாவமும் கும்பகோண மகாமக தீர்த்தத்தில் கரையும் என்கின்றன அப்பேற்பட்ட மகா கும்ப மூர்த்தி உறையும் ஆலயத்தை வலம் வருவோமா?

சோழ தேசத்தின் ரத்னப் பதாகைபோல விளங்குவது குடந்தை. அமுதமும், ஈசனும், வேதமும், நான்முகனான பிரம்மனும் இத்தலத்தை உருவாக்கியதால் தனிப்பெரும் வசீகரத்தை இன்றளவும் பெற்றிருக்கிறது.

கலைகளும், செல்வ வளங்களும், ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று பின்னிக் கொண்டு படர்ந்து கிடப்பது இத்தலத்தில்தான். ஆன்றோர்களும், சான்றோர்களும், பல்வேறு ரிஷிகளும் அவதரித்தது இங்குதான். அப்பேற்பட்ட இத்தலத்தின் மையத்தே நெற்றியில் இட்ட திருநீற்றைப்போல், செஞ்சிவத்தின் தழல்போல கும்பேஸ்வரரின் ராஜகோபுரம் நெடிதுயர்ந்து நிற்கின்றது.

நான்கு கோபுரங்களும் நான்கு வேதங்களை நினைவுபடுத்துகின்றன. கோயிலின் விஸ்தீரணம் மலைக்க வைக்கிறது. கல்கல்லாக தடவித் தெரிந்து கொள்ள சில மாதங்களாவது பிடிக்கும். சோழர்களுக்கு முன்பிலிருந்து நாயக்கர் காலம்வரை எத்தனை மன்னர்கள் மனமாற நேசித்து உருகி உருகி இக்கோயிலைச் செய்திருக்கிறார்கள். கல்வெட்டுகள் அதை பாங்காக வெளிப்படுத்துகின்றன. மிகப் பெரிய கோயிலாதலால் உள்ளிருக்கும் உள்சுற்றுப் பிராகாரத்திலுள்ள சில சந்நதிகளையும், தெய்வத் திருவுருக்களையும் தரிசித்துவிட்டு ஆதி கும்பேஸ்வரரை அடையலாம்.

முதற்பிராகாரமாகிய மூலவர் சுற்றுப் பிராகாரத் தின் கீழ் வரிசையில் தென்பகுதியில் அறுபத்து மூவரின் உற்சவ மூர்த்திகளும், வட பகுதியில் கால பைரவர், சுரகரேஸ்வரர், சாஸ்தா காட்சியளிக்கின்றனர். கோவிந்த தீட்சிதரின் லிங்க உருவும், அவருடைய பத்தினி நாகம்மாளும் அருட் கூட்டி வீற்றிருக்கின்றனர்.

இதற்கு அடுத்து சந்திரன், சூரியன் ஆகியோரின் திருவுருவங்கள். தெற்கு திசையில் சைவ சமயாச்சார்யார்கள் நால்வரும், அறுபத்து மூவரும், சப்த கன்னியர்களும் உள்ளனர்.

மேற்கு திசையில் விநாயகரும், தொடர்ந்து பிட்சாடனர், சுப்ரமணியர், இவர்களையடுத்து தேஜோலிங்கம், அட்சய லிங்கம், கோடி லிங்கம் என சிவச்சக்தி சீராக பரவியிருக்கிறது. அடுத்து சுவாமி-

அம்பாளின் பள்ளியறை. கிழக்குப் பகுதியில் கிராத மூர்த்தி எனும் வேடனாக வந்த சிவன் வில், அம்பு ஏந்திய வாறு தெற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். இவரே இத்தலத்தின் மூர்த்தியாவார்.
உட்பிராகாரத்தில் நடுநாயகமாக மூலவர் கும்பேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார்.

இந்த லிங்க உருவே குடத்தின் சாயலைக் கொண்டிருக்கிறது. காலக் கணக்குகளாக அகப்படாத மூர்த்தி நாம் உய்யும் பொருட்டு அமர்ந்திருப்பது பார்க்க நெஞ்சம் விம்முகிறது. அருளமுதம் எனும் சொல்லே இத்தலத்திற்குரியதுதான். ஏனெனில் கும்பேஸ்வரரே அமுதக் குடத்தினுள் பேரருள் பெருகி பரவியிருக்கிறார். அமுதம் இருப்பதனால் மரணமிலாப் பெருவாழ்வு அளித்து தன் அருட்குடத்திற்குள் சேர்த்துக் கொள்கிறார்.

உலகத்தின் சகல வேத ஆகமத்திற்கும் ஆதார கும்பமாக இது விளங்குகிறது. எங்கு கும்பம் வைக்கப்படுகிறதோ அங்கு இந்த கும்பேஸ்வரர்தான் விரைந்தோடி வருகிறார். சந்நதியை அடைத்துக் கொண்டு எப்போதும் ஒரு அருவமாக அமுதப் பிரவாகம் பாய்ந்தபடி இருக்கிறது. சற்று நேரம் நின்றாலே வெளியுலகத்தை மறைத்து அக உலக அமுதத்தை பீறிட்டுக் கொண்டு வரும் அற்புதச் சந்நதி அது. நகர மனமில்லாமல் ஏதோ ஒரு சக்தி உந்த அத்தல சக்திபீட நாயகியான மங்களநாயகி சந்நதியை நோக்கி நகர்கிறோம்.

மங்களத்தை விருட்சம்போன்று வளர்ப்பதால் ஞானசம்பந்தப் பெருமான் அம்பாளை வளர் மங்கை என்று தேவாரப் பதிகத்தில் குறிக்கிறார். திருச்செங்கோட்டுத் தலத்தில் ஈசன் தம் பாதி
சரீரத்தை கொடுத்ததுபோல இறைவர் முப்பத்தாறாயிரம் கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு அருளினார். அதனால் மந்திரப் பீடேஸ்வரி என்றும், மந்திரபீட நலத்தள் எனவும் அழைக்கப்படுகிறாள். அம்பாளின் உடற்பாகம் திருவடி முதல் திருப்பாத நகக்கணு வரை ஐம்பத்தோரு சக்தி வடிவ பாகங்களாக காட்சியளிக்கின்றன.

மற்ற தலங்கள் ஒரு சக்தி வடிவத்தைதான் பெற்றிருக்கின்றன; இத்தலம் சகல சக்திகளையும் தன் திருவுருவத்திலேயே பெற்று தலையாய சக்தி பீடமாக விளங்குகிறது. தன்னை தரிசித்த மாத்திரத்தில் சகல பலன்களையும் அளித்து விடுவதில் முதன்மையானவள். ஸ்ரீமுத்துசாமி தீட்சிதரால் இயற்றப்பட்ட இத்தல நாயக-நாயகியைப் பற்றிய அழகான கீர்த்தனையை இறைவன் முன்பு எழுதி வைத்துள்ளார்கள்.

சித்தர்களில் முதன்மையானவரான கும்பமுனி சித்தர் மங்களாம்பிகையையும், கும்பேசரையும் தியானித்து முக்தி பெற்றது இத்தலத்தில்தான். வெளிப் பிராகாரத்தில் இவர் அமர்ந்த தனிச் சந்நதியில் ஆதி விநாயகரை பிரதிஷ்டை செய்துள்ளனர். மொத்தம் பதினான்கு தீர்த்தங்களை தன்னகத்தே கொண்ட கோயில் இது.

யுகாந்திரங்கள் கடந்த தலம், பல நூறு தெய்வத் திருவுருவங்கள் பொலிந்து விளங்கும் சந்நதிகள். மாமன்னர்களால் இழைத்து இழைத்து வார்க்கப்பட்ட சிற்பங்கள், புராணங்கள் சொல்வதை தூணுக்குத் தூண் கொண்டு வந்த சிற்பிகளின் இறை பக்தி என்று மனம் இக்கோயிலை வியந்து சிலிர்க்கிறது.

அமிர்தத் துளிகள் பல்வேறு இடங்களில் முத்துக்களாக விழுந்து ஆங்காங்கே தனித்தனி லிங்கங்களாக பொங்கின. அந்த தலங்கள் எவை?வடமேற்கே சுவாமிமலையிலும், தென்மேற்கே தாராசுரத்திலும், தென்கிழக்கே திருநாகேஸ்வரத்திலும், கிழக்கே திருவிடைமருதூரிலும், வடகிழக்கே கருப்பூரிலும் ஐந்து குரோசம் அளவிற்கு அமிர்தம் விழுந்து லிங்கங்களானது. இந்த ஐந்து தலங்களையும் முதலில் தரிசித்து விட்டு பின்னரே குடந்தைக்கு வரவேண்டுமென்பது மரபாகும்.

இந்த தலத்தைச் சுற்றிலும் இரண்டாம் ஆவரணமாக மேலும் பல தலங்கள் உருவாயின. கும்பகோணத்திற்கு அருகேயுள்ளது திருபுவனம். இங்கு ஈசன் கம்பகரேஸ்வரர் எனும் திருப்பெயரில் அருள்பாலிக்கிறார். அம்மாசத்திரம் எனும் தலத்தில் பைரவேசர் எனும் நாமத்தோடு திவ்ய தரிசனம் தருகிறார். அய்யாவாடியில் கதலீவனேஸ்வரர், சிவபுரம் எனும் தலத்தில் பிரம்மபுரீஸ்வரர், மருதாநல்லூரில் சோமேஸ்வரர்,

பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரர், பழையாறையில் சோமேசர், திருச்சத்திமுற்றத்தில் சிவக்கொழுந்தீசர், திருவலஞ்சுழியில் வெள்ளை வாரண விநாயகர், இன்னம்பூர் எனும் தலத்தில் சிவாநாதேஸ்வரர், திருப்புறம்பியம் தலத்தில் பிரளயங்காத்த விநாயகர், கொட்டையூர் எனும் தலத்தில் கோடீஸ்வரராகவும், கருப்பூர் தலத்தில் சுந்தரேஸ்வரர், வாணாதுரை எனும் தலத்தில் பாணபுரீஸ்வரர் என அருள்பாலிக்கிறார். இந்த அனைத்து தலங்களுமே அமுத கும்பத்தோடு தொடர்புடையவையாகும்.

கும்பகோணம் மகாமக குளத்தை நாயக்கர் ஆட்சி காலத்தில் ஸ்ரீகோவிந்தப்ப தீக்ஷிதர் என்பவரால் கட்டப்பட்டது. குளத்தில் கரைகளிலேயே 16 மண்டபங்களை நிறுவினார் அவர். குளத்திற்குள்ளேயே இருபது விதமான தீர்த்தங்கள் அமைந்துள்ளன. அவை முறையே, இந்திர தீர்த்தம்,

அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், கங்கை தீர்த்தம், யமுனை தீர்த்தம், கோதாவரி தீர்த்தம், நர்மதை தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், காவிரி தீர்த்தம், குமரி தீர்த்தம், சிந்து தீர்த்தம், சரயு தீர்த்தம், அறுபத்தாறு கோடி தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம் ஆகும்.

இக்குளத்திற்கு வடபுறத்தில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, தாமிரபரணி, சரயு, சிந்து ஆகிய நவநதி கன்னியரின் சிலைகளையும் தரிசிக்கலாம். மகாமக நாளில் இந்த ஒன்பது நதிகளும் இங்கு சங்கமமாகின்றன.

இக்குளத்தில் வடகரையில் பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தனச்சுரர், இடபேஸ்சுரர் ஆகியோர் மேற்கு நோக்கியவாறும், குளத்தில் வடகிழக்கு கோடியில் பாணேஸ்வரரும், கிழக்குக் கரையில் தென்மேற்கு திசையை நோக்கிய கோணேஸ்வரர் சந்நதியும், மேற்கு திசையை நோக்கி குணேஸ்வரர் சந்நதியும் உள்ளன. தென்கிழக்கில் பைரவேஸ்வரர் வடமேற்கு திசையை நோக்கியும், தெற்குக் கரையில் அகத்தீஸ்வரர், வியாசேஸ்சுரர், உபாயிகேசர் ஆகியோர் சந்நதிகளும் அமைந்துள்ளன.

இப்பேற்பட்ட அரிய தத்துவமும், அழகும், புராணமும் கொண்ட இந்தக் குளத்தையும், கோயில்களையும் தரிசிக்க நமது பிறவித் துயர் நிச்சயம் அறுபடும். நம்முடைய அகந்தை எனும் மிருக மாயாவியை அழித்து நித்தியமான பிரம்மதோடு கலக்க வைக்க கைகளில் பாணமேந்திய ஈசன் குடந்தை முழுதும் வியாபித்திருக்கிறான்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் அமுதம் எனும் திருவருள் நோக்கி நம் மனம் எனும் கும்பத்தை வைத்துக் கொண்டால் அதை அமிர்தத்தால் அநாயாசமாக நிறைத்து விடுவான். அந்த க்ஷேத்ரத்தில் நீங்கள் அன்று எங்கிருந்தாலும் சரிதான் பாணம் உங்களை தாக்கும். அவன் திருவருட்குறி என்றுமே தப்பாது.

-கிருஷ்ணா
படங்கள்: சி.ஸ்.ஆறுமுகம்