மாங்கனியில் முகிழ்த்த அருள்



பக்தித் தமிழ் 43

புனிதவதியார் - காரைக்காலில் தனதத்தன் என்ற பெரிய வணிகரின் மகள். சிவபெருமான் மீது மிகுந்த அன்பும் பக்தியும் கொண்ட பெண்.
ஈசன் அவன் அல்லாது இல்லை என நினைந்து
கூசி மனத்து அகத்துக் கொண்டிருந்து பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத்து என்றும்
பிறவாமை காக்கும் பிரான்
(திரு இரட்டை மணிமாலை)

ஈசனாகிய சிவபெருமானைத்தவிர வேறு யாரும் நம்மைக் காப்பார் இல்லை என்று மனத்தில் நினைத்து, அவனையே நெஞ்சில் கொண்டிருந்து, எப்போதும் அவன் பெருமையைப் பேசி மறக்காமல் வாழ்பவர்கள் மீண்டும் பிறக்காதபடி அந்தப் பிரான் காப்பான்.புனிதவதியாருக்குத் திருமணப் பருவம் வந்தவுடன், அவருக்கு ஏற்ற ஒருவரைத் தேடும் பணிகள் தொடங்கின. அந்த நேரத்தில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நிதிபதி என்பவர் தனதத்தனைத் தொடர்பு கொண்டார்.

நிதிபதியின் மகன் பெயர் பரமதத்தன். அவருக்கும் திருமண வயதுதான். ஆகவே, பரமதத்தனுக்குப் புனிதவதியாரை மணமுடிக்க நினைத்தார் நிதிபதி. இதில் தனதத்தனுக்கும் மகிழ்ச்சிதான். இதையடுத்து, இருவீட்டாரும் திருமண ஏற்பாடுகளைத் தொடங்கினார்கள். ஒரு சிறப்பான நாளில் அவர்களுடைய திருமணம் நடைபெற்றது.

பரமதத்தனும் புனிதவதியாரும் அன்பாக இல்லறம் நடத்தினார்கள். ஒருபக்கம் பரமதத்தன் தொழிலை நன்கு நடத்தி முன்னேற, இன்னொருபக்கம் புனிதவதியார் இல்லத்தை அக்கறையோடு கவனித்துக்கொண்டார். சிவனடியார்கள் வந்தால் உணவளித்து அன்பாக உபசரித்து அவர்களுக்கு உரிய பணிவிடைகளைச் செய்து, வணங்கி ஆசி பெற்று மகிழ்ந்தார். இந்தத் தம்பதியரை ஊரே பாராட்டியது.

கீழாயின துன்ப வெள்ளக் கடல் தள்ளி
உள்ளூறப் போய்
வீழாது இருந்து இன்பம் வேண்டும் என்பீர்,
விரவார் புரங்கள்
பாழாயிடக் கண்ட கண்டன், எண்
தோளன் பைம்பொன் கழலே
தாழாது இறைஞ்சிப் பணிந்து பன்னாளும்
தலை நின்மினே
(திரு இரட்டை மணிமாலை)

இழிவான துன்ப வெள்ளக் கடலிலே தள்ளப்பட்டு, அதனுள் வீழ்ந்துவிடாமல், நிலையான இன்பம் வேண்டும் என்று விரும்புகிறவர்களே, அதற்கு ஒரு வழி உண்டு. பகைவர்களின் முப்புரங்களும் பாழாகும்படி செய்த வல்லவன், எட்டுத் தோள்களை உடைய சிவபெருமானின் பைம்பொன் பாதங்களை வணங்கி வாழுங்கள்!ஒருநாள், பரமதத்தனைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவருக்கு இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தார். பரமதத்தன் அந்த மாங்கனிகளை சாப்பாட்டு நேரத்தில் உண்ணலாம் என்று நினைத்தார். அவற்றை வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

புனிதவதியார் அந்த மாங்கனிகளைப் பெற்றுப் பத்திரப்படுத்தினார். கணவருக்காக சமையலைத் தொடர்ந்தார். அந்த நேரத்தில், சிவனடியார் ஒருவர் அவர்களுடைய வீட்டுக்கு வந்தார். அவரை வணங்கி வரவேற்றார் புனிதவதியார். ‘ஐயா, எங்கள் வீட்டில் அமுது செய்து எங்களை ஆசீர்வதிக்கவேண்டும்’ என்றார். சிவனடியார் அதனை ஏற்றுக்கொண்டார்.அப்போது, உணவு மட்டுமே தயாராகியிருந்தது.

அதோடு சாப்பிடுவதற்கான கறி எதுவும் இல்லை. சிவனடியாரோ பசியுடன் இருக்கிறார். அவரைக் காக்கச் சொல்லிவிட்டுக் கறி சமைக்க நேரமில்லை. என்ன செய்யலாம்? புனிதவதியார் யோசித்தார். அப்போது, அங்கிருந்த இரு மாங்கனிகளும் அவர் கண்ணில் பட்டன. அவற்றில் ஒன்றை அரிந்து உணவுடன் பரிமாறினார். சிவனடியாரும் அதனை மகிழ்ந்து உண்டார். அவருக்கு ஆசி வழங்கிவிட்டுக் கிளம்பினார்.

மறித்தும் மடநெஞ்சே வாயாலும் சொல்லிக்
குறித்துத் தொழு தொண்டர் பாதம், குறித்து ஒருவர்
கொள்ளாத திங்கள் குறுங்கண்ணி
கொண்டார்மாட்டு
உள்ளாதார் கூட்டம் ஒருவு.
(அற்புதத் திருவந்தாதி)
என் நெஞ்சே, இறைவனை எந்நேரமும் நினைத்து, வாயால் அவன் புகழைச் சொல்லி அவனுடைய தொண்டர்களைத் தொழுது வாழ்வாயாக, பிறை நிலவைச் சூடிய அவனை எண்ணாதவர்களின் கூட்டத்தில் சேராதே!

கழல் கொண்ட சேவடி காணலுற்றார் தம்மைப்
பேணலுற்றார்
நிழல் கண்ட போழ்தத்து நில்லா வினை,
நிகர் ஏதுமின்றித்
தழல் கொண்ட சோதிச் செம்மேனி
எம்மானைக் கைம்மா மலர் தூய்த்
தொழக்கண்டு நிற்கிற்குமோ துன்னி நம்
அடும் தொல்வினையே?
(திரு இரட்டை மணிமாலை)

வீரக் கழலணிந்த சிவபெருமானின் சேவடிகளைக் கண்ட தொண்டர்களுக்குத் தொண்டு செய்பவர்களுடைய நிழல் கண்டாலே வினைகள் நிற்காது ஓடிவிடும்! தழலேந்திய சோதியாகிய செம்மேனிப் பெருமானை மலர் தூவித் தொழுகிறவர்கள் முன்னே வினைகள் நிற்குமா?சிறிது நேரத்தில் பரமதத்தன் வீட்டுக்கு வந்தார். சாப்பிட உட்கார்ந்தார். ‘இரண்டு மாங்கனிகளை அனுப்பினேனே, வந்ததா?’

‘ஆமாம், வந்தது!’‘அதில் ஒரு பழத்தை அரிந்து போடு!’புனிதவதியார் மீதமிருந்த மாம்பழத்தை அரிந்து கணவருக்குப் பரிமாறினார். அவர் ரசித்து உண்டார். ‘மிகவும் ருசியாக இருக்கிறது’ என்றார். ‘இன்னொரு பழத்தையும் அரிந்து கொண்டு வா!’

பரமதத்தன் இப்படிக் கேட்டதும் புனிதவதியார் அதிர்ந்தார். இருந்த பழங்களில் ஒன்றைச் சிவனடியாருக்குப் பரிமாறியாகிவிட்டது. இன்னொன்றைக் கணவருக்கு வழங்கியாகிவிட்டது. இன்னொரு பழத்துக்கு எங்கே போவது? புனிதவதியார் தன்னுடைய கணவரிடம் உண்மையைச் சொல்லத் தயங்கினார். இந்நிலையில் தனக்கு உதவுமாறு இறைவனை வேண்டிக்கொண்டார்.

மறுகணம், அவருடைய கையில் ஒரு கனி வந்தது. இறைவனின் அருளால் வந்த கனி. மகிழ்ந்த புனிதவதியார் அந்தக் கனியைத் தன் கணவருக்குப் பரிமாறினார். அவர் மகிழ்ச்சியோடு உண்டார். ‘அந்தக் கனியைவிட இந்தக் கனி இன்னும் சுவையாக இருக்கிறது’ என்றார். ‘இது சாதாரணக் கனியாகத் தோன்றவில்லை. உனக்கு இது எங்கிருந்து கிடைத்தது?’ என்று கேட்டார்.புனிதவதியார் திகைத்தார். உண்மையைச் சொல்வதா?

சொன்னால் அவர் நம்புவாரா? கணவரிடம் பொய் சொல்வது நியாயமில்லையே என்று மயங்கினார். பிறகு, வேறு வழியில்லாமல் அவர் உண்மையைச் சொல்லிவிட்டார், ‘நீங்கள் தந்த கனிகளில் ஒன்றைச் சிவனடியாருக்குத் தந்துவிட்டேன், இன்னொன்றை உங்களுக்குத் தந்தேன். மறுபடியும் இன்னொரு கனி வேண்டும் என்று நீங்கள் கேட்டதும், இறைவனிடம் கேட்டுப் பெற்றேன். அந்தக் கனிதான் இப்போது நீங்கள் சாப்பிட்டது!’

‘இறைவனிடம் வேண்டிப் பெற்ற கனியா?’ திகைப்போடு கேட்டார் பரமதத்தன், ‘நிஜமாகவா சொல்கிறாய்?’‘ஆமாம்!’ என்றார் புனிதவதியார்.அப்போதும் பரமதத்தனுக்கு நம்பிக்கை வரவில்லை. ‘நிஜமாகவே நீ இறைவனிடம் கனியைக் கேட்டுப் பெற்றது உண்மையென்றால், இன்னொரு கனியை எனக்குப் பெற்றுத் தா’ என்றார். புனிதவதியார் இறைவனை இறைஞ்சினார். இன்னொரு கனி வந்தது. அதைக் கணவரிடம் வழங்கினார்.

பரமதத்தன் திகைப்போடு அந்தக் கனியைப் பெற்றுக்கொண்டார். அது அவர் கையில் வந்ததும் மறைந்துவிட்டது. சிவனருளைச் சந்தேகப்பட்டுவிட்டோமே என்று வெட்கப்பட்டார் அவர்.
இப்போது, புனிதவதியாரை அவர் மிகுந்த பக்தியோடு பார்த்தார். இவர் சாதாரணப் பெண் இல்லை என்று அவருக்குத் தோன்றியது. இவர் கேட்டதும் இறைவனே பழம் தருகிறார் என்றால், புனிதவதியார் ஒரு தெய்வப் பெண்ணாகதான் இருக்கவேண்டும் என்று அவர் புரிந்துகொண்டார்.

யானே தவமுடையேன், என் நெஞ்சே நன்னெஞ்சம்,
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன், யானே அக்
கைம்மா உரி போர்த்த கண்நுதலான் வெண்ணீற்று
அம்மானுக்கு ஆளாயினேன்
(அற்புதத் திருவந்தாதி)

சிவபெருமானை எண்ணித் தவம் செய்தேன், என் நெஞ்சம் நன்னெஞ்சம் ஆனது, பிறப்பறுக்கும் அவனை எண்ணினேன், யானைத் தோல் போர்த்தவன், நெற்றிக் கண் கொண்ட அந்த வெண்ணீற்று அம்மானுக்கு நான் ஆளாகினேன்!
எனக்கு இனிய எம்மானை, ஈசனை யான் என்றும்
மனக்கு இனிய வைப்பாக வைத்தேன், எனக்கு அவனைக்
கொண்டேன் பிரானாக, கொள்வதுமே இன்புற்றேன்,
உண்டே எனக்கு அரியது ஒன்று?
(அற்புதத் திருவந்தாதி)

எனக்கு இனியவனாகிய பெருமானை, ஈசனை மனத்துக்குள் வைத்தேன், என்னுடைய பிரானாக அவனை ஏற்றுக்கொண்டேன், அதனால் இன்பமுற்றேன், என்னால் இயலாத ஒன்று இனி உண்டா?

அதன் பிறகு, பரமதத்தன் புனிதவதியாரை வணங்கி வாழ்ந்தார், அவரைத் தன் மனைவியாக அவரால் எண்ண இயலவில்லை.ஆகவே, புனிதவதியார் சிவனை வணங்கினார், ‘என் கணவருக்காகதான் இந்த உடலைச் சுமந்திருந்தேன். இனி எனக்கு இந்த உடல் வேண்டாம், உன்னுடைய திருவடியை வந்து சேரும் வரம் அருள்வாய்’என்று வேண்டினார். அவருடைய பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான் அந்த வரத்தை அவருக்கு வழங்கினான்.இப்போது, கயிலை மலை சென்று இறைவனைத் தரிசிக்கவேண்டும் என்ற பேராவல் புனிதவதியாருக்கு உண்டானது. திருப்பயணம் புறப்பட்டார்.

அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே, அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே, விரிசுடர், பார்,
ஆகாசம்,
அப்பொருளும் தானே அவன்.
(அற்புதத் திருவந்தாதி)

அறிவைத் தருகிறவன் அவன், அறிகிறவன் அவன், அறியப்படுகிறவனும் அவனே, அதன் மெய்ப்பொருளும் அவனே, விரிகின்ற சுடர், நிலம், ஆகாயம் என்று எல்லாப் பொருட்களும் அந்தச் சிவபெருமான்தான்.புனிதவதியார் கயிலை மலையை வந்தடைந்தார். அது சிவன் வாழும் மலையல்லவா? அங்கே நம்முடைய பாதம் படலாமா? இப்படி எண்ணிய புனிதவதியார் தலையாலேயே நடந்துச் சென்றார். இதைக் கண்டவர்கள் அவரது பக்தியை எண்ணி வியந்தார்கள்.

புனிதவதியார் இறைவனின் அருகே சென்றதும், ‘அம்மையே’ என்று கருணையோடு அழைத்தார் சிவபெருமான். அவருடைய திருவடிகளைப் புனிதவதியார் வணங்கினார்.இறைவனால் ‘அம்மை’ என்று அழைக்கப்பட்ட புனிதவதியாருக்கு, ‘காரைக்கால் அம்மையார்’ என்ற சிறப்புப் பெயர் உண்டானது.தன்னை வணங்கிய காரைக்கால் அம்மையாரிடம், ‘உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார் சிவபெருமான்.‘பெருமானே, நான் உங்கள்மீது என்றென்றும் அன்போடு இருக்கவேண்டும்’ என்றார் காரைக்கால் அம்மையார், ‘நான் மீண்டும் பிறக்காத வரம் தாருங்கள், ஒருவேளை பிறந்தால், உங்களை எண்ணி வணங்கி வாழும் வரம் தாருங்கள்’ என்றார். ‘மேலும், நீங்கள் திருநடனம் செய்யும்போது அதைக் கண்டு மகிழ்ந்து பாடும் வரத்தை எனக்கு அருளுங்கள்.’

‘நல்லது அம்மையே, திருவாலங்காட்டிலே நாம் ஆடும் நடனத்தை நீ கண்டு மகிழ்ந்து பாடலாம்’ என்றார் சிவபெருமான்.
உடனே, காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டுக்குச் சென்றார். அங்கே சிவபெருமானின் நடனத்தைக் கண்டு பாடிப் போற்றினார்.

கொங்கை திரங்கி நரம்பு எழுந்து
குண்டுகண்வெண்பல் குழி வயிற்றுப்
பங்கி சிவந்து இரு பற்கள் நீண்டு பரடு உயர் நீள் கணைக்கால் ஓர் பெண் பேய்
தங்கி அலறி உலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி

அங்கம் குளிர்ந்து அனல் ஆடும் எங்கள்
அப்பன் இடம் திரு ஆலங்காடே!
(திருவாலங்காட்டுத் திருப்பதிகம்)

எங்கள் அப்பன் சிவபெருமானின் இடம் திருவாலங்காடு, அங்கே திரிகிற பெண் பேய்கள் முலைகள் வற்றிச் சரிந்து போய், நரம்புகள் எழுந்து, கண்கள் பெரிதாகி, வெண் பற்கள் வெளியே தெரிய, வயிறு ஒட்டிப்போய், தலைமுடி சிவந்து அலைகின்றன. அப்படிப்பட்ட இடத்திலே, தாழ்சடைகள் எட்டுத் திக்கும் பரவும்படி வீசி, அங்கம் குளிர நெருப்பில் ஆடுகிறான் அவன்!

முள்ளி தீந்து முளரி கருகி மூளை சொரிந்து உக்குக்
கள்ளி வற்றி வெள்ளில் பிறங்கு கடுவெங்காட்டுள்ளே
புள்ளி உழைமான் தோல் ஒன்று உடுத்துப்
புலித்தோல் பியற்கிட்டுப்
பள்ளி இடமும் அதுவே ஆகப் பரமன் ஆடுமே.
(திருவாலங்காட்டுத் திருப்பதிகம்)
அந்தக் காட்டில் பிணங்கள் எரிவதால், அங்குள்ள முள் செடிகளெல்லாம் தீய்ந்துபோய்விட்டன. அவற்றின் மூளை சொரிந்து விறகுகள் கருகிக் கிடக்கின்றன. கள்ளி வற்றிப்போய்விட்டது. விளாமரம் மட்டுமே இருக்கிறது. அப்படிப்பட்ட வெம்மை கொண்ட காடு. அங்கே மானின் தோலும் புலித்தோலும் உடுத்திக்கொண்டு பரமன் ஆடுகிறான்!சைவத் திருமுறை தந்த புலவர்களில் காரைக்கால் அம்மையார்மட்டுமே பெண். அவரது திருவாலங்காட்டுத் திருப்பதிகங்கள், திரு இரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகிய நூல்கள் பக்தர்களால் தொடர்ந்து பாடப்பட்டுவருகின்றன.

கண்ணாரக் கண்டும் என் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும்,
விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்
(அற்புதத் திருவந்தாதி)

எரியேந்தி ஆடும் எம்பெருமானைக் கண்டால், கண்களில் அந்தக் காட்சியை நிரப்பிக்கொள்வேன், கைகளைக் குவித்து வணங்குவேன், அதன்பிறகு எண்ணத்தில் என்றும் அவன் மட்டுமே நிறைந்திருக்க இன்பத்தில் திளைப்பேன்!

ஓவியங்கள்: வேத கணபதி
(தொடரும்)