கிரிவல மகிமை



“அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓர் அடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமன்று, பூமியையே பிரதட்சணம் செய்த பலனும் கிடைக்கும். இரண்டடி எடுத்து வைத்தால் ராஜசூய யாகம் செய்த பலன். அத்துடன் சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் மகத்தான தானம் செய்த பலன் கிட்டும். நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும். வலமாக வைத்த ஓரடிக்கு முழுப் பலன்களும் சித்திக்கும்.

அருணாசலத்தை வலம் வருகிறேன் என்று சொன்னாலே பாவம் தீரும். வலம் வரவேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் விலகும். அண்ணாமலையைத் தொழுது கிரிவலம் வந்தால் மது, மாது, சூது, கொலை, களவு என்ற பஞ்சமகா பாதகங்கள் தொலையும்” என்றெல்லாம் புராணங்கள் அருணாசல மலைவல மகிமை பற்றிப் பலவாறாகப் புகழ்ந்து பேசுகின்றன.

அண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலம் சிறப்பானது. காரணம் அன்றுதான், அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியான அன்னை, அண்ணலாகிய அருணாசலேஸ்வரரை வலம் வந்து இடப்பாகம் பெற்றாள். அதுமட்டுமல்ல; அன்று சந்திரன் தனது பூரண கலைகளுடன் முழுமையான பலத்துடன் காட்சி தருகிறான்.சிவபெருமான் நந்தியாகவும், லிங்கமாகவும் மாறி மாறிக் காட்சி கொடுக்கும் திருவண்ணா மலையில் இன்றும் சித்தர்கள் சூட்சும வடிவில் கிரிவலம் வருவதாக நம்பிக்கை உள்ளது. மலை வலம் வருவதால் தங்கள் பிரச்னைகளும், நோய்களும் நீங்கும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

மலையைச் சுற்றும் பாதையின் நீளம் 14 கி.மீ. கிரிவலப் பாதையின் பல இடங்களிலிருந்து அண்ணாமலையைப் பார்க்கும் போது அது பல்வேறுபட்ட வடிவங்களில் காட்சியளிக்கின்றது. கோயிலின் முகப்பிலிருந்து பார்க்கும்போது லிங்க வடிவிலும், பிற இடங்களிலிருந்து பார்க்கும்போது வேறு பல வடிவங்களிலும் காட்சி அளிக்கும் மலையாக அண்ணாமலை விளங்குகிறது.