கணித மேதையாக வேண்டுமா?



மதுரை டி.கல்லுபட்டி அருகேயுள்ள பேரையூர் தலத்தில்தான் பூஜ்யம் பிறந்ததாக கூறப்படுகிறது. குறி தவறாத வில் வித்தை தெரிந்த அர்ஜுனனுக்கும், ஜோதிட வல்லுனரான சகாதேவனுக்கும் சதுர்வேதம், எண் ஜோதிட ஆற்றலை கொடுத்த ஸ்தலம் என்பதால் இங்குள்ள சிவனுக்கு மல்லிகார்ஜுனர் என்று பெயராகும்.

கணித பாடத்தில் மந்தமான குழந்தைகள் இங்கு வந்து வழிபட்டால் இன்னொரு ராமானுஜராகலாம். பூஜ்யத்தை அடிப்படையாகக் கொண்ட கம்ப்யூட்டர் படிப்பிலும் உயர்வடைய இத்தலத்தில் வழிபடலாம். கருச்சிதைவு, கருக்கலைப்பு, கருத்தடை மாத்திரை சாப்பிடுவது போன்றவை உயிர் கொல்லும் பாவமாகும். ஜீவ விந்துகள் பூஜ்ஜிய வடிவில் இருப்பதால், பூஜ்யத்தலமான பேரையூர் மேலப்பரங்கிரி மலைக் கோயிலில் வந்து வழிபட்டால் அந்த பாவங்கள் நீங்கும்.

- அ.யாழினி பர்வதம்

தாழ்ந்த முகம்  காட்டும் அம்பிகை


நகரத்தாரின் புகழ் பெற்ற ஒன்பது திருக்கோயில்களில் ஒன்றான மாத்தூர் ஆலயம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்குள்ள ஐந்நூற்று ஈஸ்வரர் ஆலய அம்பிகையின் திருநாமம் பெரியநாயகியம்மன் என்பதாகும். அம்பாள் தாமரைமலர் பீடத்தில் இருகரங்கள் கொண்டு அருள்பாலிக்கின்றாள். வலதுகையில் நீலோத்பல மலரும், இடதுகை லோகமுத்திரையுடனும் தேவி அருள்கிறாள்.பொதுவாக பிற ஆலய அம்மன் திருவுருவங்கள் தலைப்பகுதி நேராக நிமிர்ந்த தோற்றத்துடன்இருக்கும். ஆனால், இங்குள்ள அம்மனின் தலை சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த நிலை பக்தர்களை நோக்கி அம்பாள் நலம் விசாரிப்பது போலவும், வருக வருக என்று அழைப்பது போலவும் அமைந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

- இரா.கணேசன்

காசியில் பாரதியார்

புனிதம் நிறைந்த கங்கை கரையில் அமைந்து உள்ள ஸ்நானகட்டிடங்களில் ஒன்று அனுமான் காட் ஆகும். இங்கு தமிழ்நாட்டு முறையில் கட்டப்பட்ட கோபுரத்துடன் கூடிய ஒரு சிவன் கோயில் இருக்கிறது. சிவனது திருநாமம் காமகோடீசுவரர் என்பதாகும். இங்கு தான் மகாகவி பாரதியார் தனது காசி வாழ்வின் போது தங்கியிருந்ததுடன் முதன் முதலில் தனது சிறப்பான அடையாளமான தலைப்பாகை வைத்துக் கொண்டதுடன் மீசை வளர்க்கவும் தொடங்கினார்.

- இரா.கணேசன்

சைவக் காளி


‘‘சூரபத்மனுடன் முருகன் போர் புரிந்தபோது, சூரனின் ரத்தம் கீழே சிந்தினால், அவன் ஒவ்வொரு துளியிலும் தோன்றுவான். அவனை அழிக்க உன்துணை வேண்டும் தாயே’’ என
பார்வதியை வேண்ட, அவள் வீரமனோகரி ஆனாள். அவ்வாறே சூரனின் ரத்தம் பூமியைத் தொடாமல் பருகினாள். தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் வடக்கூரில் கோயில் கொண்டாள். இவரைக் காளியாகவே இங்கு வழிப்படுகின்றனர். இவள் கொள்ளையருக்கு கண்பார்வை போக தண்டனை வழங்கியவள். வீரலக்ஷ்மி, வீரகாளி எனவும் பெயர் பெற்ற இவளுக்கான நிவேதனம் சைவம் என்றால் விந்தை தானே?!

- சு.கௌரீதரன்