வித்தியாச வழிபாடுகள்



ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான நிகழ்வுகள் உண்டு. அதில் சில ஆலயங்களில் நடைபெறும் வித்தியாசமான வழிபாடுகளைப் பற்றி அறிவோம்.

அரசமர வடிவில் ஆனைமுகன். இன்று, சென்னை வடபழநி பரணி ஸ்டூடியோ வளாகத்தையொட்டியுள்ள பரணி காலனியில் பால விநாயகர் திருவருட்பாலிக்கின்றார். பால விநாயகரோடு, அரச மரத்தில் தோன்றிய இருபத்தொரு விநாயகர்கள், துர்க்கை, தென்முகக் கடவுள், லட்சுமி நாராயணன், அனுமன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர் இங்கே. இருபுறமும் கண்ணாடிகள் பதித்த வித்தியாசமான அமைப்புள்ள சக்கர வியூக சந்நதி யில் தேவியர் இருவருடன் சுப்ரமண்யரை தரிசிக்கலாம்.

தரிசிக்க நெருங்கினால் கண்ணாடிகளின் பிரதிபலிப்பில் ஆறுமுகன், நூறு முகங்கள் காட்டி சிலிர்க்கச் செய்கிறான். இந்த பாலவிநாயகரிடம் பிரார்த்தனை செய்து நிறைவேறியவர்கள் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி தங்கள்நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். பொதுவாக அரசமரத்தினை  அதிகாலையில் மட்டுமே வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் இங்கே அரசமரமே ஆனைமுகனாக இருப்பதால் சூழ்வினைகள் விலக வேண்டி எப்போதும் சுற்றிவருகிறார்கள்.

மனநலம் காக்கும் மகாசக்தி

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ளது புகழ் பெற்ற சோட்டானிக்கரை பகவதி ஆலயம். இங்கு பகவதி காலை வெண்ணிற ஆடையில் சரஸ்வதியாகவும், உச்சிவேளையில் சிவப்பு ஆடையில் லட்சுமியாகவும், மாலையில் நீலநிற ஆடையில் துர்க்கையாகவும் திருவருள்பாலிப்பது சிறப்பு. 12 ஆயிரம் புஷ்பாஞ்சலி நடத்துவதும், சிவப்புப் பட்டு கொடுப்பதும் இங்கு முக்கிய வழிபாடாகும். மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த சிலை ருத்திராட்சத்தால் செய்யப்பட்டதாக கூறப்படுதிறது.

இங்கு அதிகாலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும் தங்க அங்கி அணிவிக்கப்படும். மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக இங்கு ஒரு பலாமரம் உள்ளது. ஐந்து இலைகளுடன் கூடிய இலை உள்ள இந்த மரத்தில் மனச்சாந்தி இல்லாதவர்கள் ஆணி அடிப்பது வழக்கமாக உள்ளது. இவ்வாறு ஆணி அடிப்பதால் அவரை பிடித்துள்ள பீடைகள் விலகுவதாக நம்பப்படுகிறது.

இடுக்கண்கள் களையும் இருக்கன்குடி மாரியம்மன்

விருதுநகரில் உள்ளது இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில். கண் சம்பந்தப்பட்ட நோய், வயிற்றில் தீராத வலி, அம்மை, கை, கால் வலி உள்ளவர்கள் இந்த அம்மனை வணங்கினால் நோய் தீரும். குழந்தை இல்லாதவர்கள் அம்பாளுக்கு கரும்புத்தொட்டில் நேர்ச்சை (நேர்த்திக்கடன்) செய்வதாக வேண்டுகின்றனர். கரும்பில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து சந்நதியை வலம் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அக்னிச் சட்டி, அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்து கின்றனர்.

வயிற்று வலி தீர மாவிளக்கு தீபமேற்றுகின்றனர். இதற்காக தனி மண்டபம் உள்ளது. மேலும் ஆலய நுழைவாயிலின்முன்பிருந்து மண்ணை எடுத்துச் சென்று வீட்டில் ரட்சை போல் வைத்துக் கொள்வதும் வித்தியாசமான பிரார்த்தனையாகும். பக்தர்களின் குறை தீர்க்கும் பிரதான பிரார்த்தனை தலம் இது. கண் நோய் உள்ளவர்கள், ‘வயனம் இருத்தல்’ என்ற விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். ஒரு சிலர் நோய் தீரும் வரை இங்கேயே இருந்து விடுகின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து தங்கிவிட்டு மறுநாள் செல்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு கோயிலில் மண்டபம் உள்ளது. இவர்கள் அம்பாளின் அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் விட்டுக்கொள்ள, நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. விவசாயிகள் இந்த தீர்த்தத்தை நிலத்தில் தெளிக்கின்றனர். அறுவடையானதும் அம்பிகைக்கு நவதானியம், நெல், காய்கறி காணிக்கை கொடுக்கின்றனர்.

கால்நடைகள் நோயின்றி இருக்கவும் இத்தீர்த்தம் கொடுப்பதுண்டு. அம்மை நோய் உள்ளவர்கள், அம்பிகைக்கு ஆமணக்கு விதையைக் காணிக்கையாக்கி வழிபடுகின்றனர். அம்பாளுக்கு உருவ காணிக்கை, கண்மலர் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.மதுரையில் இருந்து 73 கி.மீ. தூரமுள்ள சாத்தூர் சென்று, அங்கிருந்து 8 கி.மீ. சென்றால் இருக்கன்குடியை அடையலாம். சாத்தூரில் இருந்து பஸ், ஆட்டோ உண்டு.

இந்திரன் இடி வடிவில் வழிபடும் ஈசன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது திருக்கழுக்குன்றம். மலைக்கோயிலில் வேதகிரீஸ்வரராகவும், தாழக்கோயிலில் பக்தவத்சலராகவும் ஈசன் திரிபுரசுந்தரியோடு அருளும் திருத்தலம். பௌர்ணமி கிரிவலம் இத்தலத்தில் மிகவும் சிறப்பு. திருவண்ணாமலைக்கு முன்பே இங்கு கிரிவலம் சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்கிறது. இப்போதும் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின்போது லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றனர். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவத்தலங்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கில்லாமல் இருப்பது மாறு
பட்டதாகும். 565 படிக்கட்டுகளுடன் மலை மீது அமைந்த அமைதி தவழும் அழகிய தலம்.

12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா நடைபெறும். புஷ்கர மேளா எனப் புகழ் பெற்ற இவ்விழா வடஇந்தியாவில் நடக்கும் கும்பமேளா போன்ற மிகப் பெரிய புகழ் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம். இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது  மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மனமுருக வேண்டினால் முழுமையாக குணமடைகின்றனர் என்பது இப்போதும் நடக்கும் அதிசயம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 261 வது தேவாரத்தலம் ஆகும்.

இத்தலத்தில் இந்திரன் பூஜித்தான்.தொடர்ந்து இன்றும் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடி விழுந்து சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுகிறது. தாங்கவே முடியாத வெப்பத்தை மறுநாள் கருவறை திறக்கும்போது காணலாம். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடக்கிறது. இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும்.

தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுவோரும் வழிபட்டு பலனடைகின்றனர்.
இத்தலத்தில் பக்தர்களின் எல்லாவித வேண்டுதல்களும் திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். ஆஸ்துமா ரத்தக்கொதிப்பு இருதய நோய் உள்ளவர்கள் காலையும் மாலையும் சஞ்சீவிக் காற்று வீசும் இம்மலை ஏறி வந்து ஈசனை வழிபட்டால் அத்தகைய நோய்களிலிருந்து குணமடைகின்றனர் என்பது கண் கண்ட உண்மை.

வறுத்தப் பயறை முளைக்க வைக்கும் தேவி

சென்னையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 80 கி.மீ. தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் 13 கி.மீ. தூரத்திலும் உள்ள பாலுரெட்டி சத்திரத்தின் அருகில் உள்ளது திருப்புட்குழி. இத்தல மூலவர் விஜயராகவப்பெருமாள் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால்  தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு. ஜடாயுவிற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 58வது திவ்ய தேசம்.

இங்குள்ள தாயார் வறுத்தப்பயறை முளைக்க வைக்கும் மரகதவல்லித்தாயார் என அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி மடப்பள்ளியில் வறுத்து, நனைத்த பயறை பெண்கள் தங்களது மடியில் கட்டிக்கொண்டு இரவில் உறங்க வேண்டும். விடிந்தவுடன் அந்த பயறு முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ராமானுஜரின் குருவான யாதவப்பிரகாசர் இங்கு தான் வசித்தார். இத்தலத்தில் அசையும் உறுப்புகளைக் கொண்ட கல்குதிரை வாகனம் இருக்கிறது.

சிற்பக்கலையில் இது ஒரு அதிசயமாகும். உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது இந்த கல்குதிரை. இதை செய்த சிற்பி இதுமாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம். இவரது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டு தெரிவித்து பெருமாள், திருவிழாவின் 8ம் நாளன்று அவனது பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளுகிறார். ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

யோகங்கள் அருளும் யோனி பீட தரிசனம் சக்தி பீடங்கள் 51 என நூல்கள் சொல்கின்றன. அதில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி யில் உள்ள காமாக்யா தலமும் ஒன்றாகும். இந்த பீடம் யோனி பீடமாகக் கருதப்படுகிறது. இதை காமரூப் என்றும் சொல்வார்கள். அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகிரி பீடம். அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நீலாசல் என்ற மலை அமைந்திருக்கிறது. கடல் மட்டத்தி லிருந்து 700 அடி உயரத்தில் இந்த மலை மீது காமாக்யாதேவியின் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. புராணங்களில் இந்த இடம் நரகாசுரனால் ஆளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த மலை அடிவாரத்தில் நான்கு பக்கங்களிலும் சொர்க்கபுரி வாயில், அனுமன் வாயில், புலி வாயில், சிங்க வாயில் என்ற நான்கு நுழைவு வாயில்களை நரகாசுரன் அமைத்திருந்தான்.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். பத்தாம் நூற்றாண்டில் இக்கோயில் அஸ்ஸாம் மன்னர்களால் சீர்திருத்தப்பட்டது. 1665ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. வெளிப்பிராகாரத்தைப் பார்த் தால் மட்டுமே கோயில் என்று இதை சொல்ல முடியும். உள்ளே சென்றால் ஒரு குகை மட்டுமே இருக்கிறது. அதற்குள் பத்து படிக்கட்டுகள் கீழே இறங்க வேண்டும். உள்ளே இருளாக இருக்கும். மின் விளக்குகள் கிடையாது. மிகவும் பொறுமையுடன் குகையின் சுவரை பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி  கீழே இறங்க வேண்டும்.

 பாதாளத்தில் கருவறை அமைந்துள்ளது. அங்கே ஒரே ஒரு எண்ணெய் விளக்கு மட்டும் எரிகிறது. அந்த வெளிச்சத்தில்தான் காமாக்யாவுக்கு பூஜை நடத்தப்படுகிறது. கருவறை அமைப்பு: கருவறையில் சிறிய மலைப்பாறை போன்று ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதை ‘மேரு வடிவம்’ என்கிறார்கள். மேடையைச் சுற்றிலும் தண்ணீர் வலமாக போய்க்கொண்டிருக்கிறது. தண்ணீருக்கு அடியில் யோனி பீடம் அமைந்துள்ளது. அங்குள்ள பூசாரி பக்தர்களின் கையைப் பிடித்து பீடத்தின் மீது வைத்து தேவியை வணங்கச் சொல்கிறார்.

தலை மேடைமீது படும்படி பக்தர்கள் வணங்குகின்றனர். இத்தேவியை வணங்க யோகங்கள் பெருகும் என்பது ஐதீகம். கருவறையிலேயே உயிர்ப்பலி கொடுக்கின்றனர். பலி கொடுத்த ஆடு, கோழி போன்றவற்றின் தலைகள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. இந்த யோனி பீடத்தை தொட்டு தரிசனம் செய்ய வேண்டுமானால் பண்டாக்களை(துணை பூசாரிகள்) அணுக வேண்டும். மேடையின்கீழ் ஓடும் தண்ணீரை ‘சவுபாக்யகுண்ட்’ என்று அழைக்கிறார்கள்.

குகையிலிருந்து வெளியேறும்போது உலோகத்தால் செய்யப்பட்ட காமேஸ்வர காமேஸ்வரி சிலைகள் எட்டுவித அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதைக் காணலாம். பிராகாரத்தில் காமாக்யாதேவி ‘தசமகா வித்யா’ என்ற பெயரில் பத்துவித தோற்றங்களுடன் காட்சி தருகிறாள். பிராகாரச் சுவர்களில் மங்கள சண்டி, அன்னபூரணி, நீலகண்ட மகாதேவ், மானஸாதேவி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இத்தலத்தின் மறுகரையில் ‘மயில்மலை’ அல்லது ‘பஸ்மாசலமலை’ எனப்படும் சிறிய குன்று இருக்கிறது. இங்கு தான் சிவனின் தவத்தைக் கலைத்த மன்மதனை எரித்த ‘காமதகனம்’ நடந்ததாக சொல்லப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் ‘உமானந்த சிவா’ கோயில் ஒன்றும் இருக்கிறது. இவரை தரிசித்து விட்டு, அருகிலுள்ள அனுமன் கோயிலுக்கு செல்ல வேண்டும். இதன்பிறகே காமாக்யாவின் குகைக்கோயிலுக்கு செல்வார்கள். சென்று திரும்பும்போது, காளிதேவி தன் பரிவாரங்களுடன் சுடலையில் (சுடுகாடு) காட்சி தருவதை தரிசிக்கலாம். இவ்வாலயத்தில் சுயம்புவாக அமைந்த யோனி வடிவப் பாறையே தேவியாக வழிபடப்படுகிறது.

அதன் அருகிலிருந்து இயற்கையாக ஊறி வரும் நீரே பக்தர்களுக்கு அபிஷேக தீர்த்தமாக வழங்கப்படுகிறது. பில்லி, சூன்யம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர், வசதிகள் பல இருந்தும் நிம்மதியற்றுத் தவிப்போர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இதுபோன்ற பல பிரச்னைகளில் சிக்கித் தவிப்போர் இங்கு வந்து வழிபட்டு நலம் பெறுகின்றனர். வசந்த காலத்தின்போது ஆண்டுக்கு மூன்று நாட்கள் இவ்வாலயம் மூடப்படுகிறது. காரணம், அந்த நாட்கள் தேவி விலக்காகி இருக்கும் நாட்களாம்.

இந்த நாட்களில் தேவி பீடத்திலிருந்து இயற்கையாக வரும் நீரூற்று செந்நிறத்தில் வருவது அதிசயம்! இந்த மூன்று நாட்களில் பக்தர்களுக்கு ஆலயம் செல்ல அனுமதி இல்லையென்றாலும், ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் யோகிகள் ஒன்றுகூடி வழிபாடு செய்கிறார்கள். இதனால் அவர்களின் சக்தி அதிகரிக்கிறதாம். இவ்வாலயத்தில் பைரவர், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள்களின் சந்நதிகளும் உள்ளன.மழலை வரமருளும் படிப்பாயசம் திருநெல்வெலி மாவட்டத்தில் உள்ளது ஆய்க்குடி. இத்தல மூலவர் பாலசுப்பிரமணியர், இடப்புறம் திரும்பிய  மயில் வாகனத்தின் மீது குழந்தை வடிவில் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.

 இங்கு சிவன், சக்தி, சூரியன், விஷ்ணு, கணபதி ஆகிய பஞ்ச தேவதையர்கள் குடியிருக்கும் அரசு, வேம்பு, மாவிளக்கு, மாதுளை, கறிவேப்பிலை எனும் பஞ்ச விருட்சங்கள் இக்கோயிலில் உள்ளன. இங்கு ராமர் வந்து சென்றதாக கூறப்படுவதின் அடிப்படையில், மூலவருக்கு வைதீக ஆகம முறையிலும், உற்சவருக்கு சிவாகம முறையிலும் பூஜைகள்நடத்தப்படுகிறது. இங்கு பாலசுப்பிரமணியப் பெருமானிடம் வேண்டிக் கொண்ட செயல்கள் நிறைவேறிட விசேஷ அர்ச்சனை மற்றும் அபிஷேகங்கள் செய்து படிப்பாயசம் வைத்து, காவடி, பால் குடம் எடுத்தும், முடிக்காணிக்கை செலுத்தியும், லட்சார்ச்சனை செய்தும் நேர்த்திக்கடன்கள் செலுத்தலாம்.

அன்னதானம் மற்றும் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும், வெள்ளியிலான சுவாமியின் உறுப்பு வடிவங்களை காணிக்கையாக செலுத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். சைவ, வைணவ ஒற்றுமை கருதி ராமபக்தர்களும் இத்தலத்து முருகனை  வணங்க ஆரம்பித்தனர். எனவே இங்குள்ள பாலசுப்பிரமணியர் ‘ஹரிராமசுப்பிரமணியர்’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள நதிக்கு அனுமன் நதி என பெயரிடப்பட்டது. இங்குள்ள அனுமன் நதி கடுங்கோடையிலும் வற்றாத ஜீவநதியாக உள்ளது.

இங்கு வந்து பாலசுப்பிரமணியரை வணங்கி வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறப் பெற்றவர்கள் பாயசத்தை நைவேத்தியமாகப் படைத்து அதனை அனுமன் நதிக்கரையில் உள்ள படியில் ஊற்றி (படிப்பாயசம்) சிறுவர்களுக்கு கொடுக்கின்றனர். சிறுவர்களின் வடிவில் சுவாமியே நேரே வந்து பாயசத்தை பருகுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.தென்காசியில் இருந்து 5, 14 ஆகிய வழித்தட பஸ்கள் ஆய்க்குடிக்கு செல்கின்றன. தென்காசி பழைய பஸ் ஸ்டாண்ட் தெப்பக்குளத்தில் இருந்து மினி பஸ்கள், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வேன்கள் செல்கின்றன. முக்கிய ஊர்களில் இருந்து தூரம் திருநெல்வேலியில் இருந்து 53 கி.மீ. தென்காசி, சுரண்டையில் இருந்து 12 கி.மீ. ஆய்க்குடி பஸ் ஸ்டாப்பில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் கோயில் அமைந்துள்ளது.

மகோன்னத வாழ்வருளும் மண்டைக்காட்டாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது மண்டைக்காடு. இத்தலத்தில் உள்ளது பகவதியம்மன் ஆலயம். 15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக் கொண்டிருக்கும் புற்று தான் பகவதி அம்மன் என்பது சிறப்பு. பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் கொண்டு மண்டையப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்தால் தலைவலி நோய் குணமாகும் அதிசயம் நடக்கிறது. மகான் ஒருவர் கேரள சீடர்களோடு வந்து ஸ்ரீ சக்கரம் வைத்து இந்த இடத்தில் பூஜை செய்தார்.

தினமும் தான் தங்கியிருந்த குடிலில் இருந்து ஸ்ரீ சக்கரம் இருந்த இடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் ஸ்ரீ சக்கரம் திரும்ப வரவே இல்லை. எடுத்துப் பார்த்தும் திரும்ப வரவில்லை. இந்த இடத்திலேயே இருந்து சித்து விளையாட்டுகள் நடத்தி மண்ணுக்குள் சமாதி ஆகிவிட்டார். அந்த ஸ்ரீ சக்கரம் இருந்த இடத்தின் மேல் புற்று வளர்ந்து வந்தது. அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாடும்போது தடுக்கி ரத்தம் வந்தது. இந்த விஷயம் அப்பகுதியில் இருக்கும் கேரள மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கு தெரிவிக்கப்பட்டது.

அவரும் அந்த இடத்தில் சிறு குடில் கட்டி வழிபாடு நடத்தினார். பின்பு காலப்போக்கில் அம்மனின் மகிமை பரவப் பரவ பக்தர்கள் பெரும் அளவில் வந்து வழிபடும் பெரிய கோயிலாக புகழடைந்ததாக கூறப்படுகிறது. திருமண வரம், குழந்தை வரம், உடல் உறுப்புகள் குறைபாடு, திருஷ்டி, தோஷம், தலைவலி நீங்குதல் முதலிய பிரார்த்தனைகள். பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மிகப்பிரபலமான கோயில் இருமுடி கட்டி பெண்கள் பரவசமாக வந்து அம்மனை தரிசிக்கிறார்கள். கல்யாண காரியங்களுக்கு பட்டு, தாலி காணிக்கை செலுத்தலாம்.

உடல் நலம் குணமாக வெள்ளியில் கை, கால் வடிவம் செய்து வைத்து வழிபட்டால் நோய் குணமாகிறது. மண் சோறு சாப்பிடலும் நடக்கிறது. திருஷ்டி தோஷம் கழிய வெடி வழிபாடு செய்யப்
படுகிறது. நாகர்கோவிலிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. இந்திரன் செய்யும் இராக்கால பூஜை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரத்தில் ஹரி அயன் ஹரன் அரி ஆகிய முப்பெருங் கடவுளரும் தாணுமாலயனாக வழிபடப் படுகின்றனர். அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் விமோசனம் பெற்ற இடம். இங்கு தேவேந்திரன் உடல் சுத்தி(தூய்மை) பெற்றதால் சுசீந்திரம் என பெயர் வழங்கலாயிற்று. இன்றும் தேவேந்திரன் இரவில் ஈசனை பூஜிப்பதாக ஐதீகம்.

எனவே அர்ச்சகர்கள் கருவறையில் ஏற்படும் மாற்றத்தை வெளியில் சொல்லமாட்டோம் என்று சத்தியம் செய்தே ஈசனை பூஜிப்பது அதிசய நிகழ்வாகும்.  அத்ரி மகரிஷியின் பத்தினி அனுசூயாதேவி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்தியை குழந்தைகளாக உருவாக்கி கற்பின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டி, மூவரும் ஓருருவாக காட்சி தந்த புண்ணிய தலம். தம்பதி சகிதமாக வணங்க வேண்டும்.

18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் உள்ளார். நான்கு இன்னிசைத் தூண்களும் பிறஇடங்களில் காண முடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார் சிற்பம் போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.திருநெல்வேலி யிலிருந்து (70 கி.மீ.)தூரத்தில் சுசீந்திரம் உள்ளது இத்தலத்திற்கு திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி செல்லும்
பஸ்களில் செல்லலாம். நாகர்கோவிலிலிருந்து7 கி.மீ. தூரத்திலும், கன்னியாகுமரியிலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் சுசீந்திரம் உள்ளது.

குறைகள் தீர்க்கும் திரிசூல சீட்டு திருச்சி உறையூரில் உள்ளது வெக்காளியம்மன் ஆலயம். ஆவணி மாதத்தில் மகா சர்வசண்டி ஹோமம் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இத்தலத்தில் நடந்து வருகிறது. சித்திரை மாதம் ஐந்து நாட்கள் விழா, பங்குனியில் பூச்சொரிதல் விழா, வைகாசி கடைசி வெள்ளியில் மாம்பழ அபிஷேகம், புரட்டாசியில் நவராத்திரி, தை வெள்ளி, ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள்.மேற்கூறை இல்லாத அம்மன் கோயில்களில், பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை அசுரன் மீது பதியுமாறு அமர்ந்திருப்பாள்.

ஆனால், வெக்காளி அம்மன் வலதுகாலை மடித்து இடதுகால் பாதத்தை அசுரன் மீது பதியவைத்திருப்பது அபூர்வ காட்சியாகும். மக்கள் தங்கள் மனதில் உள்ள குறைகளையும் கோரிக்கைகளையும் சீட்டில் எழுதி அன்னை முன்புள்ள திரிசூலத்தில் கட்டி விடுகின்றனர். இதன்மூலம் தங்கள் குறைகள் நிவர்த்தியாகும் என நம்புகின்றனர். அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பெண்களுக்கு திருமண தடையும் புத்திர தோஷமும் நீங்கும்.

பக்தர்களை பாதுகாக்கும் பாடைகட்டி பிரார்த்தனை  கும்பகோணத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் எளிய தோற்றமுடன் அமைந்துள்ளது வலங்கைமான் மாரியம்மன் ஆலயம். நோய்வாய்ப்பட்டோர் மாரியம்மாவிடம் சென்று வழிபடுகிறார்கள். என் உடல் நலமடைந்தால் உற்சவ காலத்தில் பாடை மீது படுத்து ஆலயத்தை வலம் வருவதாக வேண்டிக் கொள்வர்.
பங்குனி மாதம் நடைபெறும் உற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான பாடை வழிபாடுகள் நடை பெறும்.

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் பாடை மீது படுக்க, கயிறால் கட்டுவர். பிறகு சுமந்து வருவர். கொள்ளிச் சட்டி எடுக்க வேண்டிய முறை உள்ளவர் அதனை எடுத்துக்கொண்டு முன்னால் வருவார். இவர்கள் ஆலயத்தை வலம் வந்ததும் பாடை பிரிக்கப்படும். பிரித்ததும் மஞ்சள் நீரைத் தெளிக்க, படுக்கும் போது மயக்கமுற்றவர் தெளிந்தெழுவார்.

வேண்டுதல் நிறைவேற்றப்பட்டதும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள். இப்படிப்பட்ட பாடைக் காவடி வழிபாடுகளை ஏற்பதுதான் இந்த மாரியம்மனுக்குச் சிறப்பாகும். இதனால் இந்த அம்மன் பாடைகட்டி மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறாள். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இந்த பாடை கட்டும் திருவிழா நடத்தப்படுகிறது.அப்போது வலங்கைமான் நகரமே திருவிழா கோலமாக காணப்படும். அதுபோல ஆவணி மாதம் கடைசி ஞாயிறு தெப்ப உற்சவம் நடைபெறும். நவராத்திரியை முன்னிட்டு இத்தலத்தில் 10 நாட்கள் விழா நடத்தப்படும். அம்மன் தினமும் ஒரு அலங்காரத்தில் காட்சி அளிப்பாள். அங்குள்ள மண்டபத்தில் அம்பாள் எழுந்தருளினாள்.

அம்பாளுடன் பொம்மைக் கொலுவும் இடம் பெறும். அவற்றுக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். 9வது நாள் அம்பு போடும் நிகழ்ச்சி நடை பெறும். 10வது நாள் ஊஞ்சல் உற்சவம் கோலா
கலமாக நடத்தப்படும். நவராத்திரி நாட்களில் வழிபாடு செய்தால் மாரியம்மன் மனதில் இடம் பிடிக்கலாம். குழந்தைகளை ரட்சிக்கும் செடல் பிரார்த்தனை நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கில் சுமார் அரை கி.மீ. பயணித்தால், மாரியம்மன் கோயிலை அடையலாம்.

நெல்லுக்கடைகள் இருந்த இடத்தில் கோயில்கொண்ட அம்மன் என்பதால், நெல்லுக்கடை மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறாள். நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து 15 நிமிட நடைப்பயண தூரத்தில் அமைந்துள்ளது நெல்லுக்கடை மாரியம்மன் கோயில். கிழக்கு நோக்கிய அற்புதமான ஆலயம். கருவறையில், கருணை பொங்கும் ஸ்ரீமகா மாரியம்மன் கிழக்குப் பார்த்தபடி அழகுறக் காட்சி தருகிறாள்.

வீராசனத்தில் அமர்ந்தபடி, நான்கு திருக்கரங்களிலும் டமருகம், பாசம், கத்தி, கபாலம் ஆகியவற்றை ஏந்தியபடி காட்சி தரும் தேவியைத் தரிசித்தால் நம் மொத்தக் கவலைகளும் காணாமல் போய்விடும் என்பது ஐதீகம்! இவளுக்கு எதிரில் சிறிய உருவிலான அம்மன் விக்கிரகமும் உள்ளது. வருடத்துக்கு ஒருமுறை, பெரிய அம்மனுக்கு தைலக்காப்பு சார்த்தப்படுகிறது. சின்ன அம்மனின் விக்கிரகத் திருமேனிக்கு தினந்தோறும் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.

எல்லையம்மனும் மாரியம்மனைப் போலவே தனி விமானத்துடன் கூடிய கருவறையில், நான்கு திருக் கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி, ஐந்து தலை நாகம் படம் எடுத்துக் குடை பிடிக்க, வீராசனத்தில் அமர்ந்த படி திருக் காட்சி தருகிறாள். இவளுக்கு எதிரில், மகுடம் தரித்த நிலையில், அம்மனின் சிரசு காட்சி தருகிறது. ‘நெல்லுக் கடை மாரியம்மனுக்கு நேர்ந்து கொண்டால், விரைவில் நினைத்தது நடக்கும்; கேட்டது கிடைக்கும்; நித்தமும் நம் வாழ்வில் துணைக்கு வருவாள்’ என்கிறார்கள் பக்தர்கள்.

சித்திரைப் பெருந்திருவிழாவில் செடல் உத்ஸவம், காவடி, தேரோட்டம் என அமர்க்களப்படுமாம் ஆலயம். அந்த நாளில், காத்தவராய சுவாமியையும் மாரியம்மனையும் மனதாரப் பிரார்த்தித்து, குழந்தை களை செடல் சுற்ற அனுப்பி வைப்பார்கள். செடல் சுற்றி வந்த குழந்தைகளை எந்தக் காத்துக் கருப்பும் அண்டாது; நோய்கள் தாக்காது என்பது நம்பிக்கை! மாவிளக்கு ஏற்றுதல், வேப்பிலைக் காவடி, சிலைகள் வாங்கி வைத்தல், இளநீர்க் காவடி எடுத்தல், பால்குடம் ஏந்தி வந்து தரிசித்தல் என, ஆடி மாதம் வந்தாலே பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்த எங்கிருந்தெல்லாமோ வருகின்றனர்.

நெல்லுக்கடை மாரியம்மனிடம் நெல்மணிகளையும் விதை நெல்லையும் வைத்துப் பிரார்த்திக்கின்றனர் விவசாயிகள். இதனால் விளைச்சல் செழிக்கும்; லாபம் கொழிக்கும் என்பது நாகைப் பகுதி
விவசாயிகளின் நம்பிக்கை! தீராத நோய் தீர்த்தருளும் நல்லெண்ணெய் பிரசாதம் திருந்துதேவன்குடி கற்கடகேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. நண்டு பூசித்த தலமென்பது ஐதீகம். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 42வது தலம் ஆகும்.
இக்கோயில் பற்றிய பதிகத்தில் கொல்லிப் பண்ணில் அமைந்த 11 பாடல்கள் உள்ளன.

இத்தலம் சுற்றிலும் வீடுகள் ஒன்றுமின்றி வயல் மத்தியில் தனிக் கோயிலாக உள்ளது என்னும் குறிப்பு ஒன்று உள்ளது. இறைவனின் திருப்பெயர் கர்க்கடகேஸ்வரர் (கர்க்கடகம்  நண்டு) இறைவியின் திருப்பெயர்கள், அருமருந்தம்மை, அபூர்வநாயகி. இத்தலம் நண்டு பூசித்த தலமாதலின் ‘நண்டாங்கோயில்’ என்று வழங்குகிறது. இறைவன் கர்க்கடகேசுவரர் (கர்க்கடகம்  நண்டு) என்று திருநாமங் கொண்டுள்ளார்.

காறாம்பசுவின் பாலால் பத்து கலங்களில் இத்தல லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் லிங்கத்தின் முடிமீது ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் போன்ற தரிசனம் இன்றும் காணலாம். இத்தலம் திருவிசலூருக்கு வடக்கே சிறிது தூரம் சென்றால் வயல்களுக்கு இடையில் கோயில் மட்டுமே அமைந்துள்ளது. இத்தல இறைவன் அரசன் ஒருவனுக்கு இருந்த கொடிய வியாதியை, கிழவர்போல வந்து தீர்த்தருளிய தலம். வழிபட்டு நோய் நீங்கப்பெற்ற மன்னன் செய்த பிரதிஷ்டை ‘அருமருந்தம்மை’ யாகும்.

அருமருந்தம்மை நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அந்த எண்ணெயை உண்டால் தீராத நோய்கள் தீரும் என்பது அனுபவ நம்பிக்கை.  பின்னர் பழமையாக இருந்த அம்பாளும் கண்டெடுக்கப்பட்டு அதுவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவே ‘அபூர்வநாயகி’ திருமேனியாகும். மயிலாடுதுறையிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் பேருந்தில் இத்தலத்திற்கு செல்லலாம்.

வாழ்வருளும் வாழைமர பரிகாரம் திருப்பைஞ்லி லிவனேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும். மூலவர்
ஞீலிவனேஸ்வரர் என்றும், தாயார் விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி என்றும் அழைக்கப்பெறுகிறார். இத்தலத்தில் 7 தீர்த்தங்கள் மற்றும் கல்வாழை தலவிருட்சமாக உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 61வது தலம் ஆகும்.

ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. இதுவே இத்தல மரமாக அமைந்ததால், இது ஞீலிவனம் எனப் பெயர் பெற்றது. நீலகண்ட னார் சிதம்பரத்தில் தாம் கொண்டிருந்த ஆடலரசன் கோலத்தை வசிட்ட மாமுனிக்கு இத்தலத்திலேயே காட்டியமையால், இது மேலச் சிதம்பரம் எனலானது. ஏழு கன்னிமார்களான பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி இவ்விடத்தில் தவம் இயற்றுகையில், பார்வதி அன்னை அவர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு வரம் அளித்ததுடன்,

வாழை மர வடிவில் அத்தலத்தி லேயே குடி கொண்டு என்றென்றும் தனது காட்சியினைக் கண்டு களித்தேயிருக்கலாம் எனப் பெரும் பேறளித்தாள். பின்னர், அவ்வாழை வனத்தின் மத்தியில் சிவனாரும் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளினார். திருமணத்தடை உள்ள ஆண்களும் பெண்களும் இத்தலத்தில் வாழைமர பரிகாரபூஜை செய்து தடை நீங்கப் பெறுகின்றனர். திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் மாண்ட யமதர்மராசனுக்கு இறைவன் மீண்டும் குழந்தையாக உயிர் கொடுத்த தலம்.

குடைவரைக் கோயிலாக அமைந்துள்ள ஒரு சந்நதி இங்கு எமனுக்காக உள்ளது. எமனுக்கான சிறப்புச் சந்நதி உள்ளமையால், இங்கு நவகிரகங்கள் கிடையாது. அப்பர் பெருமான் இத்தலமேக விரும்பி நடக்கை யில் வழி தவறி நிற்கையில், எம்பெருமானே அந்தணர் வடிவில் அவரது பசியாற்றி இத்தலத்திற்கு வழிகாட்டுவித்தார். “சோற்றுடைய ஈஸ்வரன்’’ என்னும் பெயர் கொண்டு அவருக்கு இத்தலத்தில் ஒரு தனிச்சந்நதியும் அமைந்துள்ளது.

திரு ஆனைக்காவினைப் போன்று ஐந்து பிராகாரங்கள் கொண்ட இத்தலத்தில், ஏழு தீர்த்தங்கள் உள்ளன. அவை விசாலாட்சி, எமன், கல்யாணி, அக்னி, தேவ, அப்பர் மற்றும் மணியங்கருணை என்பனவாகும்.வினைகள் தீர்க்கும் வெற்றிலை மாலை வழிபாடு சிங்கப்பெருமாள் கோயிலுக்கு அருகே உள்ளது அனுமந்தபுரம். இத்தலத்தில் தன்னிகரில்லா கருணையோடு அருள்கிறார் வீரபத்திரர். தமிழ்நாடு செவ்வாய்தோஷம் உள்ளவர்கள், உடல் நிலையில் கோளாறு உடையவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பவுர்ணமி வந்து எதிரில் உள்ள குளத்தில் நீராடி, சுவாமி தரிசனம் செய்து வேண்டி கொள்கிறார்கள்.

பிரார்த்தனை நிறைவேறியதும் வெற்றிலை மாலை சார்த்தி, முடிகாணிக்கை செலுத்தி வழிபாடு செய்கிறார்கள். சந்திரன் தன் மனைவியரைக் கவனிக்காத காரணத்தால் பெற்ற சாபத்தினால் தனது தொழிலை சரிவர செய்ய இயலாமல் போனது. இதையறிந்த தேவர்கள் சிவனிடம் வேண்டி மீண்டும் சந்திரனின் இயக்கம் நடைபெற அருள்பெற்றார்கள். இதனால் கோபம் கொண்ட சந்திரனின் மாமனார் தட்சன் சிவனை அவமதித்தான்.

புலஹ முனிவர் தட்சனை சாந்தம் செய்தார். இருந்தும் தட்சன் திருந்தவில்லை. எனவே முனிவர் தட்சனின் யாகம் அழியட்டும் என சாபம் கொடுத்து சென்றார். தட்சன் விஷ்ணுவை முன் நிறுத்தி யாகத்தை தொடங்கினான். இதனால் பல துர் சகுனங்கள் தோன்றின. வருத்தமடைந்த நாரதர் கைலாயம் சென்று சிவனிடம் நடந்தவைகளைக் கூறினார். சிவனும் தட்சனிடம் அவிர்பாகம் பெற்று வர நந்தியை அனுப்பினார். தட்சன் நந்தியை அவமானப்படுத்த, அவரும் தட்சனுக்கு சாபம் கொடுத்து கைலாயம் திரும்பினார்.

இப்படியே அனைவரும் சாபம் கொடுத்தால் தன் தந்தையின் நிலைமை என்னாவது? என்று தவித்த பார்வதி தன் கணவன் பரமேஸ்வரனிடம், தட்சனிடம் தான் சென்று அவிர்பாகம் பெற்று வர சம்மதம் கேட்டாள். சிவன் தடுத் தும் கேளாமல் தான் மட்டும் வந்து அவிர்பாகம் கேட்டு அவமானப்பட்டாள். தந்தையென்றும் பாராமல் தட்சனுக்கு சாபம் கொடுத்து விட்டாள். கயிலை திரும்பிய மனைவியிடம் கோபம் கொண்ட சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார்.

பார்வதியும் ருத்ர தாண்டவம் ஆடினாள். சிவனிடம் இருந்து வெளிப்பட்ட வியர்வை நீர் கொதித்து அதிலிருந்து ‘அகோர வீரபத்திரர்’ தோன்றினார். பார்வதி யின் தாண்டவத்தில் கால் சிலம்பு உடைந்து ரத்தினங்கள் சிதறி பத்ரகாளி 9 வடிவில் தோன்றினாள். அகோர வீரபத்திரரும், பத்ரகாளியும் சிவபார்வதியை வணங்கினார்கள். சிவபெருமான் இவர்களிடம், “நீங்கள் இருவரும் தட்சனிடம் அவிர்ப் பாகம் கேளுங்கள். தராவிட்டால் அவனை அழித்துவிடுங்கள்,’’ என உத்தரவிட்டார்.

சிவனின் உத்தரவின்படி வீரபத்திரர் தட்சனிடம் அவிர்பாகம் கேட்டார். தட்சன் வீரபத்திரரை அவமானப் படுத்தி விட்டான். பிரம்மனிடமும், விஷ்ணுவிடமும் வீரபத்திரர் நியாயம் கேட்க, அவர்கள் தட்சனுக்கு பயந்து அமைதியாக இருந்தனர். கோபம் கொண்ட வீரபத்திரர் அங்கிருந்த ஆண்கள் அனைவரையும் தாக்க,பத்ரகாளி பெண்களை தாக்கினாள். தட்சனோ சாகாவரம் பெற்றவன். வீரபத்திரர் அவனது தலையை வெட்டவும், தலை தனியாக யாகத் தில் போய் விழுந்தது. தட்சனின் தந்தையாகிய பிரம்மனின் வேண்டுதலால் அருகிலிருந்த ஆட்டின் தலையை வைத்து தட்சனை உயிர்ப்பித்தார். அப்படியிருந்தும் வீரபத்திரரின் கோபம் தணியவில்லை.

சிவனிடம் இனி தன் கோபம் தீர வழி கேட்க, “தெற்கேயுள்ள அனுமந்தபுரத் தில் வெற்றிலை தோட்டம் உள்ளது. அங்கு அமர்ந்தால் உன் கோபம் தணிந்து விடும்,’’ என்று கூறினார். தட்சனும் வீரபத்திரருடன் செல்வதாக சிவனிடம் கூறினான். வீரபத்திரரும் இங்கு வந்து சாந்த சொரூபியாக அமர்ந்ததாக தலபுராணம் கூறுகிறது.

சுகப்பிரசவமருளும் அம்பிகையின் எண்ணெய் மதுரையில் இருந்து ராமநாதபுரம் ரோட்டில் 60 கி.மீ. தூரத்தில் பரமக்குடி. அங்கிருந்து 15 கி.மீ. தூரத்தில் நயினார்கோவில் உள்ளது. முகத்தில் பரு இருந்தால், அம்பாளுக்கு அடுப்புக்கரியை வைக்கோலில் சுற்றி காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சேவல் காணிக்கை செலுத்தியும், வெள்ளியாலான பொருட்களை காணிக்கையாக செலுத்தியும் நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

இந்தக் கோயிலில் ராகு, கேது நாகதோஷம் உள்ளவர்கள் வணங்கினால் திருமணத்தடை, தொழில் தடை நீங்கும் என்பது ஐதீகம். இங்குள்ள புற்றடியில் நாகம் வசிப்பதாக சொல்கின்றனர். நாகத்திற்கு முட்டை, பால் கொடுக்கின்றனர். இந்த புற்றுமண்ணைப் பூசிக்கொண்டால் தீராத நோயும் தீரும் என்பர்.முஸ்லிம் சாம்ராஜ்ய காலத்தில், முல்லாசாகிப் என்பவர் வடக்கே இருந்தார். அவரது மகளுக்கு பேச்சு வரவில்லை.

தெற்கிலுள்ள ராமேஸ்வரம் சென்று ராமநாதரை வணங்கினால், இப்பிரச்னை தீரும் என சிலர் சொல்லவே அங்கு வந்தார். ஆனால், அங்கும் பிரச்னை தீரவில்லை. அங்கிருந்து மருதமரங்கள் அடங்கிய வனத்தின் வழியே வந்து, இங்குள்ள வாசுகி தீர்த்தத்தில் அவர்கள் நீராடினர். அப்போது, அந்தப் பெண் நயினார் என கத்தினாள். நயினார் என்றால் தலைவர். அவளுக்கு பேச்சு வந்து விட்டது.

அவ்வூர் நாகநாதர் அருளாலேயே அவளுக்கு பேச்சு வந்ததாக முல்லாசாகிப் கருதினார். அன்று முதல் அவ்வூரின் பெயரும் நயினார்கோயில் என்றாயிற்று. முஸ்லிம்கள் இங்குள்ள சவுந்தர்யநாயகி அம்மன் சந்நதியில் எண்ணெய் பெற்றுச் செல்கின்றனர். சுகப்பிரசவம் ஆக கர்ப்பிணிகளின் வயிற்றில் இதைத் தடவுவதாகக் கூறுகின்றனர்.இங்குள்ள நாகநாதர் துலாக்கோல் போன்று நீதி வழங்குபவர் என்பதால், இவர் முன்னால் பொய் பேச மக்கள் பயப்படுகின்றனர்.

பெண்களை ஏமாற்று தல், கடன் வாங்கித் திருப்பித்தராமல் இருத்தல், குடும்ப பிரச்னைகளை நாகநாதர் முன்னிலையில் பேசித் தீர்க்கின்றனர். இவர் முன் பொய் சொன்னால் நாகம் வந்து மிரட்டும் என்பதால், சரியான தகவலைக் கொடுக்கின்றனர்.  விவசாயிகள் விளை பொருட்களை முதலில் இங்கு காணிக்கையாகக் கொடுத்த பிறகே பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர். ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட கோயில் இது. பரணியன்று கார்த்திகை தீபம்.

நாமக்கல்லில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் மோகனூர் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு. அசலதீபேஸ்வரர் என்ற குமரீஸ்வரர். அம்பிகை மதுகரவேணி எனும் குமராயி. கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் விசேஷம். அதேபோல் கார்த்திகைக்கு முதல் நாளில் வரும் பரணி நட்சத்திரத்தன்று இங்கு ஏற்றப்படும் தீபம் மிகவும் விசேஷம். அப்போது சுவாமிக்கு விசேஷ அபிஷேக, பூஜை செய்யப்படுகிறது.

சிவபக்தரான பீஜாவாபா மகரிஷி இத்தல இறைவன் மீது பக்தி கொண்டு இங்கேயே சிவனுக்கு சேவை செய்து வந்தார். இவர் ஒவ்வொரு கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தன்றும் இங்கு சுவாமி சந்நதி எதிரேயுள்ள தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றி வழிபட்டார். இதன் அடிப்படையில் தற்போதும் இங்கு பரணி தீப வழிபாடு விசேஷமாக இருக்கிறது. இந்த மகரிஷியின் சிற்பம் கோயில் மண்டபத்திலுள்ள ஒரு தூணில் புடைப்புச் சிற்பமாக இருக்கிறது.

சிவன், சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தீப வழிபாட்டுடன் தொடர்புடைய தலம் என்பதால், இவரது சந்நதியில் எப்போதும் அணையாதீபம் எரிந்து கொண்டிருக்கிறது. இத்தீபம் அசையாமல் எரிவதால் சுவாமி, ‘அசலதீபேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். ‘அசலம்’ என்றால் ‘அசையாதது’ என்று பொருள். சுவாமி, இத்தலத்தில் தியான கோலத்தில் இருப்பதால், தீபம் அசைவதில்லை என்கிறார்கள். குழந்தை பாக்கியம் தரும் அம்பிகை: தாயார் மதுகரவேணி கிழக்கு நோக்கி தனிச்சந்நதியில் இருக்கிறாள்.

இவளது சிலை திருவாட்சியுடன் சேர்த்து ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது விசேஷம். முருகனை கைலாயத்திற்கு அழைப்பதற்காக அவரை பின்தொடர்ந்தபோது, முருகனை நேரில் பார்த்தவுடனேயே பாசத்தில் இந்த அம்பிகை பால் சொரிந்தாளாம். எனவே இவள் ‘மதுகரவேணி’ என்று அழைக்கப்படுகிறாள். மது என்றால் பால் என்ற பொருள் உள்ளதாக சொல்கிறார்கள். பவுர்ணமிதோறும் இவளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அந்நேரத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வழிபட்டால், புத்திரப்பேறு உண்டாவதாக நம்பிக்கை.

ஆரம்பத்தில் இத்தலத்தில் சிவன் சந்நதி மட்டும் இருந்தது. இத்தல சிவனின் பக்தையான குமராயி என்ற பெண், தயிர் விற்று பிழைப்பு நடத்தி வந்தாள். குழந்தை பாக்கியம் இல்லாத அவள், இங்கு சிவனுக்கு சேவை செய்து வந்தாள். தினமும் தயிர் விற்றது போக, பாத்திரத்தில் மீதமிருப்பதை சுவாமிக்கு நைவேத்யமாக படைத்து வழிபடுவாள். ஒருசமயம் இவள் கருத்தரித்து, அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். ஊரார் அவளை தவறாக பேசினர். தான் பத்தினி என்பதற்கு சிவன் ஒருவரே சாட்சி என்ற அவள், இங்குள்ள காவிரி நதியில் இறங்கி நதிக்குள் ஐக்கியமானாள். அவ்விடத்தில் இருந்து அம்பிகை எழுந்தருளி மக்களுக்கு காட்சி தந்தாள்.

தானே தயிர் விற்கும் பெண்ணாக வந்ததை உணர்த்தினாள். அதன்பின், இத்தலத்தில் அம்பாளுக்கு தனிச்சந்நதி எழுப்பப்பட்டது. அம்பிகை குமராயி என்னும் பெயரில் இங்கு வாழ்ந்ததால் இத்தலத்து அம்பிகைக்கு குமராயி என்றும், சிவனுக்கு குமரீஸ்வரர் என்றும் பெயர் உண்டு.இத்தலத்தில் சிவன் மேற்கு நோக்கியும், அம்பாள் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். சிவன் அம்பிகை இருவரும் ஒருவருக்கொருவர் வலப்புறமாக காட்சி தரும்படி இத்தலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். மூலவருக்கு அருகில் சிறிய பாணலிங்கம் ஒன்று இருக்கிறது. இந்த லிங்கம், தயிர் விற்கும் பெண்ணாக வந்த அம்பிகையால் வழிபடப்பட்டது என்கிறார்கள்.

மூலவருக்கும், பாண லிங்கத்திற்கும் ஒரே நேரத்திலேயே பூஜை நடக்கிறது. இத்தலத்திற்கு அருகில் காவிரி நதி, காசி போன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது. காவிரியை பார்த்தபடி சுவாமி காட்சி தருகிறார். ஆடிப்பெருக்கின்போது சுவாமி, அம்பாளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. சிவன், அம்பாள் சந்நதிக்கு
நடுவே முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.

ஆடு வாகன துர்க்கை: பிராகாரத்தில் விநாயகர், நாகத்தின் மத்தியில் காட்சி தருகிறார். அருகில் முருகன் இருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். கோயிலுக்கு வெளியே வேம்பு மரத்தின் அடியில் மற்றொரு விநாயகர் இருக்கிறார். திருமணத்தடை உள்ள பெண்கள், இவருக்கு தாலி கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். அம்பாள் சந்நதி முன்மண்டபத்திலுள்ள ஒரு கல்லில், சிவதுர்க்கை புடைப்புச் சிற்பமாக இருக்கிறாள். மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கையம்மன், காலுக்கு கீழே
மகிஷாசுரனுடன் மட்டும்தான், சிவன் சந்நதி கோஷ்டத்தில்தான் காட்சி தருவாள். ஆனால், இவள் எட்டு கரங்களுடன், பின்புறத்தில் ஆடு வாகனத்துடன் காட்சி தருகிறாள். துர்க்கையை இத்தகைய கோலத்தில் காண்பது அபூர்வம்.444 தல தரிசனம் ஓரிடத்தில்திருச்சியில் உள்ளது ஐயப்பன் ஆலயம்.

இத்தலம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் நீதிமன்றத்திற்கு அருகே உள்ளது.  இந்தியாவின் புண்ணியத் தலங்களிலிருந்து பக்தர்களால் கொண்டுவரப்பட்ட 444 புனிதக் கற்கள், ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்தப் புனிதக் கற்களை அனைவரும் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர்.

சிவனின் பஞ்சபூத தலங்கள், இமயமலை, கைலாஷ், காசி, ராமேஸ்வரம், ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் நாமக்கல், சுசீந்திரம், ஆனந்தமங்கலம், முருகனின் அறுபடைவீடுகள், காவிரி, தாமிரபரணி, கிருஷ்ணா, கங்கை, பம்பை, சரஸ்வதி, கோதாவரி, யமுனா, நர்மா போன்ற புண்ணிய நதிகள், நவகிரக தலங்கள், திருப்பதி, குருவாயூர், மதுரை, திருக்கடையூர், சோட்டானிக்கரை, கொல்லூர், சபரிமலை சந்நிதானத்துக்கு செல்லும் பாதையில் உள்ள முக்கிய இடங்கள் என இவ்வூர்களில் உள்ள கற்களெல்லாம் பக்தர்களின் பார்வைக்கு மேடை மேல் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றை வணங்கினால் நாம் அனைத்து இடங்களுக்கும் ஒரே நேரத்தில் சென்று வந்த பலன் கிடைக்கிறது. கோயிலுள், ஒவ்வொரு நட்சத்திரத்துக்கான ஆலயங்கள், அந்த நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த மரங்கள் என அறிவிப்புப் பலகைகள். அதுமட்டுமின்றி, அந்தந்த மரங்களையும் அங்கே நட்டு, வளர்த்து வருகின்றனர். மரங்களை வளர்ப்போம் எனும் வாசகங்களும் அங்கே இடம்பெறத் தவறவில்லை. ஆலயத்துக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும், மரம் வளர்க்க வேண்டும் எனும் உயரிய கருத்தைச் சொல்லாமல் சொல்கின்றனர்.

மனசுக்குள் விதைக்காமல் விதைக்கின்றனர். ரத்த தானம். கண் தானம், உடலுறுப்பு தானம், கல்விச் சேவை, மருத்துவ உதவி, யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள். தேவார  திருவாசக வகுப்புகள் என... ஆன்மிகம், உடல்நலம், பொதுநலம் ஆகிய மூன்றையும் போதிக்கின்றனர்அபயமருளும் இரட்டை ஆஞ்சநேயர்கள்ராமநாதபுரத்திலுள்ள ராமேஸ்வரத்தில் அபய ஆஞ்சநேயர், வாலறுந்த ஆஞ்சநேயர் என இரண்டு ஆஞ்சநேயர்களை  தரிசிக்கலாம்.  இக்கோயிலில் ஆஞ்சநேயர் சந்நதி, எட்டு பட்டைகளுடன் கூடிய விமானத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

அபய ஆஞ்சநேயர் பீடத்திற்கு கீழே ஒரு கோடி ராமரக்ஷா மந்திர எழுத்துகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது சிறப்பு. ஆஞ்சநேயருக்கு முன்புறம் ராமர் பாதம் இருக்கிறது. இத்தல ஆஞ்சநேயர் பக்தர்களின் பயத்தை போக்கி காத்தருள்பவர் என்பதால், ‘அபய ஆஞ்சநேயர்’ என்றழைக்கப்படுகிறார்.

வெள்ளிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. அன்று தேங்காய், வெல்லம், அவல் சேர்ந்த இனிப்பை விசேஷ நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். புத்திர பாக்கியம் கிடைக்க, பயம், மனக்குழப்பம் நீங்க, பாதுகாப்பு உண்டாக இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஆஞ்சநேயரை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் வடை, வெற்றிலை மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தொகுப்பு: ந.பரணிகுமார்