இளம் தலைமுறை உறவுச் சிக்கல்கள்



ஒரு வழிகாட்டி!

காலங்கள் மாற மாற மனித உறவுகளின் ஊடாட்டமும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் உறவுமுறைகளுக்கு இடையிலான ஊடாட்டம் ஒவ்வொரு வகைப்பட்டதாய் இருந்திருக்கிறது. பழங்காலத்தில் கணவன் மனைவி உறவு மேல் கீழாய் அடுக்கப்பட்டிருந்தது. அதாவது கணவன்தான் அதிகார மையம். மனைவி அவனுக்கு பணி செய்யும் கையாள். அங்கு அவன் வைப்பதே அதிகாரம் என்பதாக இருந்தது.

இன்று கணவன் மனைவி உறவு என்பது நண்பர்கள் உறவு போல் சமத்துவமானதாக மாறியிருக்கிறது. யாரும் யாருக்கும் அடிமையும் இல்லை. யாரும் யாருக்கும் எஜமானரும் இல்லை. இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். இருவருமே குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறார்கள். இவருவமே சேர்ந்து முடிவுகள் எடுக்கிறார்கள். இப்படி காலத்துக்கு ஏற்ப கணவன் மனைவி உறவு என்றில்லை எல்லாவகை உறவுகளுமே மாறிக்கொண்டேதான் வருகின்றன.

காதலன் காதலி, தந்தை மகன், அம்மா மகள், நண்பர்கள், உடன் பணியாற்றுவோர், முதலாளி தொழிலாளி என எல்லா உறவுகளுமே இன்று இன்றைய நவீன காலச் சுழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகிறது. இந்த உறவுகளைக் கையாள்வதில் இன்றைய ஜென் Z தலைமுறைக்கும் ஆல்பா தலைமுறைக்கும் நிறைய தடுமாற்றங்கள் குழப்பங்கள் இருக்கின்றன. 

இதனால் பலவிதமான உறவுச்சிக்கல்கள் உருவாகின்றன. இன்று விவாகரத்து என்பது முந்தைய காலத்தைவிட பல மடங்கு அதிகரித்துவிட்டது. ஒரே ஆறுதல் உலக அளவில் விவாகரத்து குறைவாக நடக்கும் சமூகம் இந்திய சமூகம்தான். ஆனால், இங்குமே இன்று விவாகரத்துகள் முந்தைய தலைமுறைகளோடு ஒப்பிடும்போது பல மடங்கு அதிகம்.

இந்த உறவுச் சிக்கல்கள் ஏன் உருவாகின்றன. இதை இளைய சமூகத்தால் தடுக்க இயலுமா? இதை எப்படி வெற்றி கொண்டு ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை நாம் உருவாக்கப்போகிறோம் என்பது நம் முன் உள்ள மில்லியன் டாலர் கேள்விகள். இக்கேள்விகளுக்கு விடை தேடியே இக்கட்டுரை பயணிக்கிறது.

நெட்ரோவெர்டுகள் உலகம்

இன்றைய உலகம் நெட்ரோவெர்ட்டுகளால் ஆனது எனலாம். அதென்ன நெட்ரோவெர்ட். இன்றோவெர்ட், எக்ஸ்ட்ரோவெர்ட் என்று உளவியலில் இருவகை ஆளுமைகளைச் சொல்வார்கள் இன்றோவெர்ட் என்றால் தனக்குள்ளேயே சுருங்கிக்கொண்டு, புற உலகோடு ஒட்டி உறவாடாமல் தனித்து இருப்பவர்கள். ஒரு சிறிய விஷயத்தைக்கூட மற்றவர்களிடம் கேட்கத் தயங்கி தனக்குள் தானே பதுங்கிக்கொள்வார்கள். இதற்கு நேர் எதிராக எக்ஸ்ட்ரோவெர்ட்கள் எல்லோரிடமும் கலகலவென பழகுவார்கள்.

முன்பின் தெரியாதவர்களிடம்கூட இயல்பாக உரையாட இவர்களால் முடியும். இந்த இன்றோவெர்ட் மற்றும் எக்ட்ரோவெர்ட் என்பவர்கள் தன்னியல்பாக மக்களிடம் இருப்பார்கள். இன்றோ நம்முடைய தகவல் தொழில்நுட்ப உலகின் புரட்சியின் விளைவாய் நெட்ரோவெர்ட் என்றொரு புதிய வகை ஆளுமை உடையவர்கள் உருவாகிவிட்டார்கள். இவர்கள் இன்றோவெர்ட் அல்ல. ஆனால் அவர்களிடம் இருக்கும் எல்லா சிக்கலும் இவர்களுக்கு இருக்கும். செல்போன், டேப்லெட், டி.வி., லேப்டாப் என எந்த நேரமும் எலெக்ட்ரானிக் கேட்ஜெட்ஸும் கையுமாகவே இருப்பார்கள்.

மனிதர்களோடு புழங்குவதைவிட இந்த மாதிரியான இயந்திரங்களோடு புழங்குவது அவர்களுக்கு சுலபமானதாகவும் வசதியானதாகவும் இருக்கும். செல்போனில் மணிக்கணிக்கில் பேசுப்வர்களை நேரில் பார்த்தால் பேச தயங்குவார்கள். 

சொற்ப வாக்கியங்கள்தான் பேசுவார்கள். செல்போனிலேயே வாட்ஸப்பில் அரட்டை அடிப்பவர்களோடு போனில் பேச முடியாது. போனில் பேசுபவர்களோடு நேரில் பேச முடியாது. செல்போனில் தொடர்பில்லாத ஆன்லைனில் அல்லது சமூக வலைத்தளங்களில் தொடர்பில்லாத ஒரு மனிதரை நேரடியாகச் சந்திக்க நேர்தால் பேசவே தயங்குவார்கள்.

இவர்கள் எப்படிப்பட்டவர்கள் இவர்களை எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கத்தில் அவர்களோடு பேசத் தயங்குவார்கள். பேசுவதற்கே தயக்கம் என்றால் நெருங்குவது என்பதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் அர்த்தம். 

இது ஒருவகை உறவுச் சிக்கலை உருவாக்குகிறது. வீட்டுக்கு வரும் அப்பா அல்லது அம்மாவின் நண்பர்கள், உறவினர்களை வரவேற்பது அவர்களோடு அளவளாவுவது போன்ற விஷயங்களில் மிகவும் தடுமாறுவார்கள். நெட்வொர்க் வழியாக அல்லாது நேரடியாக ஒரு உறவு வரும்போது அது நண்பரோ , காதலரோ தடுமாறுவார்கள். அதனை எப்படி எதிர்கொள்வது என்பதில் தயக்கமும் குழப்பமும் இருக்கும்.

இன்றைய தகவல் தொழில்நுட்ப புரட்சி நம் மனித மனங்களில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. மனிதனை டெக்னாலஜி அடிக்ட் என்பதாக மாற்றி மனிதர்களோடு நெருங்கவே அஞ்சுபவர்களாக மாற்றியிருக்கிறது என்பது நிச்சயம் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். நம்முடைய இளம் தலைமுறை இந்த நெட்ரோவொர்ட் இயல்பால் மிகவும் தடுமாறுகிறது. இதனை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்பது நம் முன் உள்ள சவால்.

புதிய உறவுமுறைகளின் குழப்பங்கள்

முன்பொரு காலத்தில் காதலன் காதலி என்ற உறவும் உண்மையாகக் காதலித்தால் மணம் செய்துகொள்ளுங்கள் என்ற கட்டுப்பாடும் மட்டுமே இருந்தது. இன்று ஆண் பெண் உறவு நிலைகள் ஆயிரம் உறவுப் பெயர் நிலைகளில் தடுமாறுகிறது. 

க்ரஷ், பாய் பெஸ்ட்டி, கேர்ள் பெஸ்ட்டி, கமிடட், லவ்வர், வுட் பீ, ஃபியான்சே, நண்பர்கள் என்று பல நிலைகளில் இன்று ஆண் பெண் நட்பு இருக்கிறது. இதற்கான விளக்கங்கள் அவர்களுக்குப் புரிகிறதா என்பதே பெரும் கேள்வி.

ஒவ்வொரு இளம் தலைமுறையினரும் அவரவர் புரிதலுக்கு ஏற்ப இந்த உறவு முறைகளுக்குப் பேர் வைத்துக்கொள்கிறார்கள். ஆண் பெண் உறவு பாலியல் உறவை நோக்கிச் செல்வதை அடிப்படையாகக் கொண்டது.

இதில் பாலியல் உறவை ஒவ்வொரு உறவு முறையிலும் ஒவ்வொரு மாதிரி வரையறுத்திருக்கிறார்கள். உதாரணம் க்ரஷ் என்பவரோ பாலியல் உறவு பெரும்பாலும் இருக்காது. பாய் பெஸ்ட்டி அல்லது கேர்ள் பெஸ்டியோடு சிலருக்கு இருக்கும். சிலருக்கு இருக்காது.

கமிட்டடில் கண்டிப்பாக இருக்கும். இதுதான் பொதுவான இயல்பு. ஆனால், சிலர் இதைக் குழப்பிக்கொள்வார்கள். க்ரஷ் என்று சொல்வார்கள் காதலன் காதலி போல் ஆளுமை செலுத்த நினைப்பார்கள். 

நண்பர்கள் என்பார்கள். காதலர்கள் போல் உறவை எதிர்பார்ப்பார்கள். இந்தவகைக் குழப்பங்கள் எல்லாம் இன்று இளையரிடம் அதிகம். மேலும், இத்தனை உறவு நிலைகளும் இருவரையும் திருமணம் என்ற இடம் நோக்கி அழைத்துச் செல்லுமா என்றால் அதற்கு பதில் இல்லை.

திருமணம் என்ற நீண்ட கால உறவையே கேள்விக்குறியாக்கும் சமூக அமைப்புகளை இன்று நார்மலைஸ் ஆக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன. இன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் தேவையா என்பதைப் போன்ற உரையாடல்கள் பெருகிவிட்டன. இந்தியா போன்ற பாரம்பரியம் மிக்க சமுதாயங்கள் இக்கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் உறவுச் சிக்கலில் தள்ளாடுகிறது.

இன்று லிவிங் டுகெதர், ஃப்ரண்ட்ஸ் வித் பெனிஃபிட், ஓப்பன் மேரேஜ் என்ற புதிய வகை வாழ்க்கை முறைகள் பெருநகரங்களில் இயல்பாகிக்கொண்டிருக்கிறது.

இந்த வகை வாழ்க்கை முறைகள் திருமணம் என்ற நீண்ட கால பந்தத்துக்கு முட்டுக்கட்டையாய் இருக்கின்றன. பலர் இந்த வகை புதிய வாழ்க்கை நிலையின்தன்மையைப் புரியாமல் அதில் இருக்கும் கவர்சிக்கு மயங்கி அதில் சில காலம் ஈடுபட்ட பின், தொடர்ந்து அந்த உறவில் இருக்க முடியாமல் தடுமாறி வெளியேறுகின்றனர். இதில் கொடுமை என்னவெனில் இந்த வகை உறவு நிலைகளில் இருந்து வெளியேறிவர்களின் மீதான சமூகப் பார்வை என்பது அதன் பிறகு மாறிவிடுகிறது.

இதனால், அவர்களால் மீண்டும் திருமணம் என்ற மரபான வாழ்க்கை முறைக்குள் நுழைய இயலாமல் போகிறது அல்லது மிகவும் சிரமமாகிவிடுகிறது. இன்றைய தலைமுறை இந்த புதியவகை உறவு முறைக்குள் நுழைவதற்கு முன்பு அதன் சாதக பாதகங்கள் என்னென்ன என்று ஒருமுறைக்கு இருமுறை நன்றாக சிந்தித்து, பிறகு அதில் ஈடுபடுவது நல்லது.  

ஆரோக்கியமான மானுட உறவுகளுக்கான வழிமுறைகள்

1.தினசரி இரவு ஒருவேளையாவது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக உணவு உண்ண வேண்டும். இது குடும்ப உறுப்பினர்களிடையே அன்பையும் நெருக்கத்தையும் அதிகரிக்கும்.

2.தினசரி ஸ்க்ரீன் டைம் எவ்வளவு நேரம் என்பதை அவர்களின் கல்வி முதலான விஷயங்களின் அடிபடையில் வரையறுக்க வேண்டும். அடிப்படைக் கல்வி போன்ற முக்கியமான, ஆரோக்கியமான விஷயங்களுக்கு மட்டுமே இணையதளத்தை, கேட்ஜெட்ஸ்களைப் பயன்படுத்த வேண்டும்.

3.ஆன்லைனில் ஆர்டர் செய்வது என்பதைத் தவிர்த்து இயன்றவரை நேரில் சென்று எந்த ஒன்றையும் வாங்க வேண்டும். இதனால் சமூகத்தோடான மனிதர்களோடான புழக்கம் அதிகரிக்கும். மனிதர்கள் மேல் இருக்கும் காரணமற்ற அச்சம் விலகும்.

4.நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இது ஆரோக்கியமான சிந்தனைகளைக் கொண்டுவரும்.

5.உறவு நிலைகளில் எப்போதும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். எல்லா விஷயங்களிலும் நமக்கு சாதகமாகவே முடிவுகள் இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அவசியமான தருணங்களில் விட்டுத்தர வேண்டும்.

6.புதிய உறவுகளில் நுழையும் போது அந்த உறவு எப்படிப்பட்டது என்று வரையறுக்கத் தெரிய வேண்டும். ஒரு உறவை எந்த எல்லை வரை நிற்கவைக்க வேண்டும் என்ற தெளிவு, ஆண் பெண் இருவருக்குமே அவசியம்,

7.நண்பர்கள் என்பவர்கள் வேறு நம்மோடு பணியாற்றுபவர்கள், நம்மோடு படிப்பவர்கள், நம் வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் என்பவர்கள் வேறு அனைவரையுமே நண்பர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது.

8.பெஸ்ட்டி, க்ரஷ், லவ் போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நம் உறவுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் அவசியம். ஏனெனில் நாளைய நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போவது இந்த உறவுகள்தான்.

9.மனிதர்களிடம் இயல்பாகப் பழக கூச்சப்படக் கூடாது. அடிப்படையில் எல்லா மனிதர்களுமே அன்புக்கு, தொடுதலுக்கு ஏங்குபவர்கள்தான்.

10.உங்கள் உணர்வுகள் போலவே உங்கள் நண்பர்கள் உணர்வும் முக்கியமானவை. எனவே அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துப் பழகுங்கள்.

- இளங்கோ