நலம் தரும் சிறுதானிய சமையல்!
 குதிரைவாலி அடை தேவையானவை:
குதிரை வாலி - 1கப் முளைகட்டிய பயறு - கால் கப் பச்சைமிளகாய் - 4 இஞ்சி - சிறிது பெருங்காயம்- கால் தேக்கரண்டி கொத்துமல்லி நறுக்கியது - கால் கப் உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை: குதிரைவாலியை 2 மணி நேரம் ஊற வைத்து, அதனுடன் முளைப்பயறு, பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு, பெருங்காயம், கொத்துமல்லி சேர்த்து தோசைமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி சற்று கனமான தோசைகளாக ஊற்றி எண்ணெய்விட்டு இருபுறமும் சுட்டெக்கவும்.
பயன்கள்: குதிரைவாலி அரிசி பலவிதமான உடல்நலப் பயன்களைக் கொண்டுள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது, ஏனெனில் இதில் கிளைசெமிக் அளவு குறைவாக உள்ளது. மேலும், இது மலச்சிக்கல், செரிமானப் பிரச்சனை, இதய நோய் அபாயம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமைகிறது.
 பாஜ்ரா ரொட்டி
தேவையானவை:
கம்பு மாவு - 1 கப் தயிர் - கால் கப் ஓமம் - 1 தேக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி எண்ணெய் - சுடுவதற்கு உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வாயகன்ற பாத்திரத்தில் கம்பு மாவுடன், உப்பு, ஓமம், நெய், தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். (தோசைக்கல்) தவாவில் சிறிது எண்ணெய் தடவி, பிசைந்தமாவை சப்பாத்திகளாக திரட்டி, சிறிது எண்ணெய் சேர்த்து இருபுறமும் சுட்டெடுக்கவும். சூடாக பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும். பயன்கள்: கம்பு இரும்புச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ள ஒரு தானியமாகும். இது ரத்த சோகையைத் தடுக்கவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், புற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. மேலும், இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, குடலை சுத்தப்படுத்துகிறது, மற்றும் பல நோய்களைத் தடுக்கிறது.
 தினை பெசரட்டு
தேவையானவை:
தினை - 1 கப் துவரம் பருப்பு - கால் கப் பயத்தம் பருப்பு - கால் கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி - சிறிது பெருங்காயம் - கால் தேக்கரண்டி எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - 1 கொத்து.
செய்முறை: தினை, துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு மூன்றையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் தோசைகளாக சுட்டு எண்ணெய் சேர்த்து இருபுறமும் சுட்டெடுக்கவும். சுவையான தினை பெசரட்டு தயார்.
பயன்கள்: தினை, புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, நீரிழிவு நோயைத் தடுக்கிறது, உடல் எடையை பராமரிக்க உதவுகிறது, குடலில் வீக்கத்தை நிர்வகிக்கிறது. மேலும், தினை கண் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது.
சாமை புலாவ்
தேவையானவை:
சாமை அரிசி - 2 கப் வெங்காயம் - 1 பச்சைமிளகாய் - 2 ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, லவங்கம் - தலா ஒன்று நறுக்கிய கேரட், காலிப்ளவர், பட்டாணி, குடைமிளகாய், பீன்ஸ் கலவை - 2 கப் இஞ்சி, பூண்டுவிழுது - 1 தேக்கரண்டி கரம் மசாலா - 1 தேக்கரண்டி நெய், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: சாமை அரிசியை அரைமணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் கலந்த நெய் 2 மேஜைக்கரண்டி விட்டு ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, லவங்கம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நீளமாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
ஊற வைத்த சாமை அரிசியிலிருந்து தண்ணீரை வடிகட்டி, குக்கரில் சேர்க்கவும். அதனுடன் இரண்டுபங்கு தண்ணீர் சேர்த்து, வேகவைத்த காய்கறி கலவையைச் சேர்த்து உப்பும் சேர்த்து கலந்து மூடவும். 2 விசில் வந்ததும் அணைத்துவிடவும். சுவையான சாமை புலாவ் தயார். பயன்கள்: சாமை அரிசி பல நன்மைகளை கொண்டுள்ளது. இது அதிக நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் புரதம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது, எலும்புகளுக்கு பலம் தருகிறது, உடலுக்கு ஆற்றல் தருகிறது, மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
- ஸ்ரீதேவி குமரேசன்
|