குழந்தை பேசுவதில் தாமதமா?
குழல் இனிது யாழ் இனிது என்பர்தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்.மழலைச் சொல்லின் சிறப்புப் பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் விளக்கியுள்ளார்.
பொதுவாக, ஒரு குழந்தை பிறந்து 2 முதல் 3 வயது வரை பேசவில்லை என்றாலோ சில வார்த்தைகள் தான் பேசுகிறது என்றாலோ எல்லாம் போக போக பேசிவிடுவார்கள் என்று அலட்சியமாக இருக்காமல், அதற்கான உரிய சிகிச்சையை பெற்றோர் நாட வேண்டும்.  எனவே, ஒவ்வொரு பெற்றோரும் கர்ப்ப காலத்திலேயே குழந்தையின் வளர்ச்சி பற்றியும் குழந்தையை கவனித்துக் கொள்ளும் முறையை பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும் என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் அமுதாதேவி. இது குறிந்து அவர் மேலும் நம்முடன் பகிர்ந்து கொண்டவை: பேசும் தன்மை பற்றி எடுத்துக் கொண்டால், ஒரு குழந்தை தாயின் கருவிலிருக்கும் 6 மாதம் முதலே தன்னைச் சுற்றி எழுப்பும் ஒலிகளை கேட்க தொடங்குகிறது. அதுபோன்று பிறந்தது முதலே தன்னிடம் பேசப்படும் மொழியை கற்க தொடங்குகிறது. அந்த வகையில், முதல் இரண்டு வருடங்களுக்குள் குழந்தையிடம் நாம் எவ்வளவு அதிகமாக பேச்சுக் கொடுக்கிறோமோ அந்தளவுக்கு குழந்தை வேகமாக மொழியைக் கற்றுக் கொள்கிறது.
எனவே, ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பேசும் திறன் அல்லது மொழித்திறன் மிகவும் முக்கியமானதாகும். பேசுவதினால் மட்டுமே மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. உலகை அறிந்து கொள்ள முடிகிறது. அதனால், குழந்தையின் மொழித்திறன் வயதிற்கேற்ப முதிர்ச்சி அடைகிறதா.. என்பதை பெற்றோர் கவனிப்பது மிக மிக அவசியமாகும்.
ஏனென்றால், இன்றைய காலச்சூழலில் அலைபேசியும், தொலைக்காட்சியும் நம்மையும் நம் குழந்தைகளையும் ஆக்கிரமித்து மொழித்திறன் (language delay) பாதிப்பை அதிகரித்து வருகிறது என்றும், சுமார் ஆறு சதவீத குழந்தைகள் மொழித்திறன் வளர்ச்சியில் பாதிப்படைகின்றார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மொழித்திறன் குறித்து...
மொழித்திறன் என்பது மற்றவர் சொல்வதை புரிந்து கொள்வது (receptive language). மற்றும் நாம் சொல்ல நினைப்பதை அடுத்தவருக்கு சொல்வது (Expressive language) என்று இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது. பொதுவாக, ஒரு குழந்தை பிறந்தது முதல் 3 வருடங்களில் குழந்தையின் மூளை வளர்ச்சியடைந்து முதிர்ச்சி அடையும் பருவமாகும். இதுதான், அந்தக் குழந்தை மொழித்திறன் பெறுவதற்கான முக்கியமான கால கட்டமாகும். இந்த காலகட்டத்தில் குழந்தை படிப்படியாக மொழியைக் கற்றுக் கொள்கிறது.
எனவே, பேசும் தன்மையும், அறிவுத் திறனும் பாதிக்கப்படுவதை தவிர்க்க, இந்தக் காலகட்டங்களில் நம் நேரத்தை குழந்தைகளுடன் அதிகமாக செலவிட வேண்டும். குறிப்பாக, குழந்தைக்கு தாலாட்டு பாடுவது, கதை சொல்வது, வெளியே அழைத்து சென்று நம்மை சுற்றி உள்ள உலகத்தை காண்பித்து அதைப் பற்றி பேசுவது, எந்தவொரு செயலை செய்யும்போதும் அதைப்பற்றி குழந்தைகளிடம் பேச வேண்டும்.
உதாரணமாக, குழந்தைக்கு உணவு கொடுக்கிறோம் என்றால், “கேரட் சாதம் பாப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும்தானே” என்று அந்த செயல் குறித்து நாம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த குழந்தையின் மொழித்திறன் வளர்ச்சி அடையும். குழந்தையின் மொழித்திறன் வளர்ச்சி கண்டறிதல் குழந்தை பிறந்த மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை குரல் கேட்டு திரும்பிப் பார்ப்பது. நாம் அவர்களுடன் விளையாடும் போது ஆ-ஆ- உ உ என்று சத்தமிடுவது போன்றவற்றை செய்யும்.
6-ஆவது மாதங்களில் டா, பா, மா என்று ஒலி எழுப்பும் (Monosyllables).
9-ஆவது மாதங்களில் டாடா பாபா மாமா என இரண்டு ஒரே ஒலிகளை சேர்த்து எழுப்பும் (Bisyllables) 12 ஆவது மாதத்தில் அம்மா, அப்பா, தாத்தா போன்ற எளிய அர்த்தமுள்ள வாரத்தைகளை பேசும்.
2 வயதில் இரண்டு வார்த்தைகளை இணைத்துப் பேசும்.
3 வயதில் 3 வார்த்தைகளை இணைத்துப் பேசும். இதில் ஏதாவது தாமதம் தெரிந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
மேலும், பிறந்தது முதல் சரியான மொழி வளர்ச்சிக்கான தூண்டுதல் (language stimulation) பெற்றோர் குழந்தைக்கு கொடுக்கும்பட்சத்தில் குழந்தையின் மொழித்திறன் நன்றாக இருக்கும். பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் பட்சத்தில் குழந்தையை கவனிக்கும் பொறுப்பு மற்றவரிடம் இருக்கும் போது, அவர்கள் குழந்தையிடம் உரையாடுவது குறைகிறது. எனவே, குழந்தைக்கு மொழித்திறன் தூண்டுதல் பாதிக்கப்படுகிறது.
இதனால், சில குழந்தைகளுக்கு மொழித்திறன் தாமதமாகி, பேசும் திறன் தாமதமாகிறது. எனவே, குழந்தை போக போகப் பேசிவிடும் என்று பெற்றோர் மொழித்திறன் தாமதத்தை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெறுவது அவசியமாகும். மொழி வளர்ச்சி பாதிப்பு ஏற்படுவதற்கான காரணிகள்
*குழந்தைக்கு காது கேளாமை *அதிக நேரம் அலைபேசி பார்ப்பது (Virtual Autism) * ஆட்டிசம் * ஏடிஎச்டி பிரச்னை * மூளை வளர்ச்சி குறைபாடு
இவற்றில் விர்ச்சுவல் ஆட்டிசம் என்பது அதிக நேரம் அலைபேசி பார்ப்பதனால் ஏற்படக்கூடியது. இத்தகைய குழந்தைகள் நன்றாக பேசக் கூடிய தன்மை இருந்தாலும், அவர்களுக்கு சரியான பேசும் திறனை தூண்டும் சூழ்நிலை அமையாததாலும், அலைபேசி அதிகம் பார்ப்பதாலும் ஏற்படக்கூடியது.
பெற்றோருக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால், குழந்தைக்கு இந்த பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். காது கேட்பதில் குறை இருந்தால், குழந்தையை 2 வயதுக்குள்ளாக பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தால் மொழித்திறன் பாதிப்படைவதை தவிர்க்கலாம்.
- ஸ்ரீதேவி குமரேசன்
|