முழங்கை வலியை முழுதாய் கடப்போம்!



வலியை வெல்வோம்!

 சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்கு வந்த, நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் மணிக்கட்டு மற்றும் முன்னங்கை வலியினால் காய்கறி நறுக்குவது கூட சிரமமாக உள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்கு முன்பு மருத்துவரிடம் சென்று காண்பித்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும், ஓய்வெடுக்காமல் வீட்டு வேலைகள் செய்து கொண்டே இருந்திருக்கிறார்.
ஆரம்பத்தில் வலி கொஞ்சம் குறைந்தாலும் மீண்டும் தற்போது வலி அதிகரித்து இருப்பதாகக் கூறினார். அவருக்கு தொடர் பிசியோதெரபி சிகிச்சையின் மூலம் வலி கட்டுப்படுத்தப்பட்டு, தசைகளை வலுவாக்கும் பயிற்சியும் கொடுக்கப்பட்டு தற்போது எந்த சிகிச்சையும் இன்றி அன்றாட வேலைகளைச் செய்கிறார்.

இவருடைய வலிக்கான காரணங்கள் மற்றும் பிரச்னையை இக்கட்டுரையின் இறுதியில் நீங்களே கண்டுபிடித்து விடுவீர்கள்.தற்காலத்தில் சிகிச்சைக்கு வருபவர்களிடத்தில் எளிதாக வெறும் முழங்கை வலி, மூட்டு வலி என்று கூறி விட முடியாது ஏனெனில் இணையத்தின் பயன்பாட்டால் பலரும் பல மருத்துவச் சொற்களை அறிந்து வைத்துள்ளனர்.

ஆகவே நாம் இந்த இதழில் வெறுமனே முழங்கை வலி என்று கடந்து விடாமல் அதை டென்னிஸ் எல்போ, கோல்ஃபர்ஸ் எல்போ என்று வகை பிரித்து காண்போம்.முழங்கை வலி என்றாலே அதற்கு இதுதான் பெயரா, அதுவும் விளையாட்டு சம்பந்தப்பட்ட பெயராக உள்ளதே? ஒரு வேளை இது விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் வலி, காயங்களாக இருக்குமோ? என்ற பல சந்தேகங்கள் உங்களுக்கு தோன்றலாம்.பெயர்க் காரணம் மற்றும் உங்கள் சந்தேகங்களை நிவிர்த்தி செய்யும் முன் முழங்கை மூட்டின் உடற்கூறியலை அறிந்து கொள்வோம்.

நமது கையின்‌ மேல் பகுதியில் அமைந்துள்ள ஹுமரஸ் என்ற எலும்பின் கடைப்பகுதியும், முன்னங்கையில் அமைந்துள்ள ரேடியஸ் மற்றும் அல்னா என்ற இரு எலும்புகளின்‌ முன் பகுதியும் இணைந்து முழங்கை மூட்டை உருவாக்குகின்றது.இந்த மூட்டில் பல்வேறு தசைகள் தசை நார்கள், தசை நாண்கள் அமைந்துள்ளது. இந்த தசை நார்கள், நாண்களில் ஏற்படும் காயங்கள், வீக்கங்களினால் தான் பெரும்பாலும் முழங்கை வலி உண்டாகிறது. முழங்கையின் இருபுறமும் உள்ள தசை நார்களில் ஏற்படும் வலியைத் தான் Tennis elbow மற்றும் Golfers elbow என அழைக்கிறோம்.

டென்னிஸ் எல்போ (Tennis Elbow)

முழங்கை மூட்டின் வெளிப்பகுதி அதாவது நமது கைகளை உடலோடு ஒட்டி பக்கவாட்டில் உள்ளங்கை தெரியும் படி நீட்டினால், உடலின் பக்கத்தில் இல்லாமல், வெளிப்புறமாக பக்கவாட்டில் உள்ள மூட்டில் ஏற்படும் வலி, வீக்கத்தை டென்னிஸ் எல்போ என்போம்.இதை மருத்துவ மொழியில் ‘Lateral Epicondylitis’ என்று அழைப்போம் . ஹுமரஸ் என்ற எலும்பின் அடிப்பகுதியான எபிகாண்டைல் என்ற இடத்தில் உள்ள தசை நார்களின் காயத்தால் உண்டாவதால் Epicondylitis என்று அழைக்கிறோம்.தற்போது இதை Epicondylalgia அல்லது Tendinosis என்றும் கூறுகின்றனர்.

டென்னிஸ் போன்ற ராக்கெட்டை பயன்படுத்தி விளையாடும் விளையாட்டுகளில் முன்கை மற்றும் மணிக்கட்டின் பயன்பாடு அதிகமாக இருக்கும். திரும்பத் திரும்ப அதிகமாக முன் கை தசைகளின் அசைவுகளால் முழங்கை மூட்டு தசை நார்களில் காயம் ஏற்படும். ஆகவே இதை டென்னிஸ் எல்போ என்பர்.ஆனால் இது டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் அல்லாமல் கட்டிட வேலை, பெயின்ட் பூசும் வேலை, மர தச்சு வேலை, அதிகப்படியான வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் பளு தூக்குபவர்கள், அதிகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கும் ஏற்படும்.

அறிகுறிகள்

* முன்னங்கை, மணிக்கட்டு வலி
* முழங்கை மூட்டை தொட்டால் வலி
* வீக்கம்

அறிகுறிகளைப் படித்தவுடன் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். அதாவது மணிக்கட்டு, முன்னங்கையில் வலி என்றால், அதை மணிக்கட்டு வலி என்று தானே கூற வேண்டும். அதெப்படி முழங்கை வலி என்று சொல்லலாம்?!

 அதாவது ‘இங்க அடிச்சா அங்க வலிக்கும்’னு சொல்ற மாதிரி முன்னங்கை, மணிக்கட்டுகளில் அதிக அசைவுகள் கொடுத்தாலோ, அத்தசைகளில் அதிகப் பளு ஏற்றினாலோ முழங்கையில் வலியை உண்டாக்கும்.ஏனென்றால் முன்னங்கை மற்றும் மணிக்கட்டின் அசைவுகளை கட்டுப்படுத்தும் தசைகள், முழங்கையில் இருந்தே துவங்குகிறது. ஆகவேதான் கைகளில் அதிகப்படியான அசைவுகள் கொடுக்கும்போது முழங்கையின் தசை நார்களை பாதிக்கிறது.

கோல்ஃப்பர்ஸ் எல்போ (Golfer’s Elbow)

கிட்டத்தட்ட டென்னிஸ் எல்போவைப் போன்றே அறிகுறிகள் தோன்றும். ஆனால் இது முழங்கையின் உட்பகுதி அதாவது கையை உடலை ஒட்டி நேராக நீட்டும் போது உடலை ஒட்டிய மூட்டின் பக்கவாட்டில் ஏற்படும் வலி அல்லது காயம், வீக்கம் ‘கோல்ஃபர்ஸ் எல்போ’ எனப்படும் . இதை மருத்துவ மொழியில் ‘Medial Epicondylitis’
என்போம்.

இந்த வலியும் கோல்ஃப் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்லாமல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் போன்ற எறிதல் விளையாட்டு வீரர்களுக்கும் மற்றும் கட்டிட வேலை, ப்ளம்பிங், அதிக எடை தூக்குபவர்களுக்கும் உண்டாகும்.அதாவது, இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து கை மூட்டுகளுக்கு ஒரே மாதிரியான அசைவுகளை கொடுக்கும் வேலை செய்பவர்களுக்கு தசை நார்களில் காயம் ஏற்பட்டு வலி வீக்கத்தை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

* வலி
* வீக்கம்
* கையை மடக்க இயலாமை
* சிலநேரங்களில் வீக்கத்துடன் கூடிய காய்ச்சல்.

பரிசோதனை முறைகள்

 முழங்கையில் உட்புறம் அல்லது பக்கவாட்டில் மருத்துவர் தொட்டு பார்க்கும்‌ போது வலியை உணர்ந்தாலே அது பெரும்பாலும் கோல்ஃபர்ஸ் அல்லது டென்னிஸ் எல்போவாக தான் இருக்கும்.

 இவை தவிர்த்து கை மணிக்கட்டை மடக்கி நீட்டி சுழற்றி என சில சிறப்பு பரிசோதனைகளை செய்வதன் மூலமும் அறிந்து கொள்ளலாம்.மேலும், எலும்புகளிலோ தசை நார்களிலோ சேதம் ஏற்பட்டிருந்தால் எக்ஸ் ரே மற்றும் ஸ்கேன் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆர்த்தைரைட்டிஸ் எனில் சில ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டறியலாம்.

சிகிச்சை முறைகள்

எலும்பு மூட்டு நிபுணர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் வலி நிவாரண மருந்துகள் மற்றும் டென்னிஸ் எல்போ ஸ்பிளின்ட் /ப்ரேஸ்ஸை பரிந்துரைப்பர். எந்த சிகிச்சையும் பலனின்றி, நீண்ட காலம் வலி இருந்தால் எலும்பு மூட்டு நிபுணர்கள் மூட்டுகளில் ஊசியின் மூலம் நிவாரண மருந்தினை உட்செலுத்தி குணப்படுத்துவர்.தசைநார்கள் கிழிந்து அதிகம் காயமேற்பட்டிருந்தால் எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் அறுவைசிகிச்சையைப் பரிந்துரைப்பார்கள்.               

பிசியோதெரபி சிகிச்சை

ஐஸ் ஒத்தடம்: வீட்டிலேயே ஐஸ் ஒத்தடம் கொடுத்து ஓய்வு கொடுப்பதன் மூலம் வலி, வீக்கத்தை குறைக்கலாம். அல்ட்ரா சவுண்ட் தெரபி : இது தசை நார்களின் வீக்கத்தை கட்டுப்படுத்தி, வலியை குறைக்கும். 

மேலும் உட் காயங்களை வேகமாக குணப்படுத்த உதவும்.மறுவாழ்வு சிகிச்சை: வலி நன்கு குறைந்த பின்பு அல்லது 50% குறைந்தவுடன் அல்லது அறுவைசிகிச்சைக்குப் பின்பு தசைகளை வலுவேற்றும் பயிற்சிகளை தொடர்ந்து செய்தால் மட்டுமே மீண்டும் வராமல் தடுக்க முடியும்.

வலி குணமாகும் வரை எடை தூக்குவதை தவிர்த்து, பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஓய்வு கொடுக்கலாம்.ஓய்வெடுக்கவோ வேலை செய்வதை தவிர்க்க முடியாதவர்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஸ்பிளின்ட் (splint) அணிந்து கொண்டு அந்த தசைகளுக்கு வலு கொடுக்காமல் எவ்வாறு வேறு விதமாக அசைவுகள் கொடுத்து எடையை தூக்க கூடிய வேலைகளை செய்யலாம் என்பதை கேட்டு அறிந்து அதன்படி செயல்படவேண்டும்.

ஆனால் மீண்டும் பாதிப்பு வராமல் காத்துக் கொள்ள தொடர் தசை வலுவேற்றும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.கட்டுரையை படித்து முடித்தவுடன் இந்நேரம் கட்டுரையின், ஆரம்பத்தில் கூறியவரின் பிரச்னையையும் தீர்வையும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.உங்களுக்கும் இது போன்ற அறிகுறிகள் இருந்தால் ஐஸ் ஒத்தடத்தை தவிர்த்து வேறெந்த சுய மருத்துவமும் செய்து கொள்ளாமல் மருத்துவரிடம்‌ சென்று சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்.

இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி