அதிக வியர்வையைப் போக்க…
எவ்வளவு சுத்தமாக குளித்தாலும், சிலருக்கு அதிகப்படியான வியர்வை வெளியேறி துர்நாற்றத்தை வரவழைத்துவிடும். அதிலும் அக்குள்களில் ஏற்படும் துர்நாற்றம் என்பது சிலநேரங்களில் மற்றவர்கள் முன்னிலையில் கேளிக்கைக்கு உள்ளாக்கி விடும்.  இதற்கு காரணம், அக்குள்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் வியர்வையுடன் கலக்கும்போது ஒரு வித துர்நாற்றம் வீசுகிறது. இதைத் தடுக்க சில எளிய வழிகள் என்னவென்று பார்ப்போம்:
குளிக்கும் முறை: குளித்து முடித்தவுடன் உடனடியாக ஆடை அணியாமல், சில நிமிடங்கள் கழித்து அணிவது நல்லது. அப்போது உடல் நன்றாகக் குளிர்ந்திருக்கும். இது அடிவயிற்று வியர்வையை தடுக்க உதவுகிறது.
உடம்பு சூடாவதை தடுக்கிறது.உடற்பயிற்சி: அதிகப்படியான வியர்வை தோல் அழற்சியை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. எனவே, உடற்பயிற்சிகள் முடிந்த பிறகு சரும வியர்வையை நன்றாக துடைத்து உலரவிட வேண்டும். இதன்மூலம் தோல் எரிச்சல் குறையும்.
பேக்கிங் சோடா: சிலர் தங்கள் அக்குள் வியர்வையை தடுக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது தீங்கு விளைவிக்கக் கூடியது. பேக்கிங் சோடா சருமத்தில் எரிச்சல் மற்றும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
எனவே, அதனை பயன்படுத்தக் கூடாது. உணவுமுறை: வியர்வை அதிகம் சுரப்பவர்கள் காபினை தவிர்ப்பது நல்லது. அதே போல் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மதுபானங்களை தவிர்ப்பதும் நல்லது.
மேலும், பூண்டு மற்றும் வெங்காயம் போன்றவற்றையும் அதிகளவில் சேர்க்கக் கூடாது. கொழுப்பு உணவுகள், காரசாரமான உணவுகள் மற்றும் ஐஸ் கிரீம் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். கால்சியம் அதிகமான உணவுகளான பால் மற்றும் சீஸ், பாதாம் பருப்பு, வாழைப்பழம் போன்ற உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், நீர்ச்சத்து அதிகமான காய்கறிகளான தர்பூசணி, திராட்சை, முலாம் பழம், ப்ரக்கோலி, கீரைகள், காலிஃப்ளவர், மிளகு, கத்தரிக்காய், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அக்குள் முடிகளை நீக்குங்கள்: அக்குள் முடிகளை நீக்குவது அவசியம். ஏனெனில் அந்த பகுதியில் உள்ள முடிகள் வியர்வையை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இது அதிகப்படியான வியர்த்தலுக்கு வழி வகுக்கும். எனவே, முடிகளை நீக்குவது வியர்வை நாற்றத்தை குறைக்க உதவும்.
- ரிஷி
|