உறவு சிறக்க உதவும் சூரிய ஒளிஆராய்ச்சி

சூரிய ஒளியின் மூலம் வைட்டமின் டி நமக்குக் கிடைக்கிறது என்று தெரியும். அதே சூரிய வெளிச்சம் தாம்பத்ய உறவு சிறக்கவும் உதவுகிறது என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

தாம்பத்ய வாழ்வு இனிக்க மிகவும் அவசியமான ஒன்று டெஸ்டோஸ்டீரான் என்கிற ஹார்மோன். இந்த ஹார்மோன் உற்பத்திக்கு முக்கிய காரணியாக சூரிய ஒளி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்கிறார் ஆஸ்திரேலியாவின் பிரபல உடற்பயிற்சி நிபுணரான அலி டிக்ஸ்.

இதற்கான காரணத்தையும் தெளிவாக விளக்கியிருக்கிறார். சூரிய ஒளி உங்கள் மனநிலைக்கு நல்லது. அதன் இதமான வெப்பம் உங்களை அமைதிப்படுத்தும். மக்களுக்கு குளிர்காலத்தில் பருவகால பாதிப்புக் குறைபாடுகள் (Seasonal Affective Disorder) ஏற்படும். இந்தக் காலங்களில் நம் உடல்நலனுக்கு சூரிய ஒளி மிகவும் அவசியமானது. அது உங்கள் உடலின் வைட்டமின் டி உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகிறது.

வைட்டமின் டி சிறப்பான உடலுறவுக்கு உதவும் ஒரு பொருளாக உள்ளது. பல்வேறு ஆய்வுகளின்படி, ஒரு மணி நேரம் வரை சூரிய ஒளி படும்படி இருக்கையில், அதிலுள்ள சில கதிர்கள் முக்கியமான வைட்டமின்களை அதிகளவில் உற்பத்தி செய்வதோடு, அதன் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

வைட்டமின் டி குறைபாடுள்ள பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவுகள் குறைவாக இருக்கும். இதனால் அவர்களுடைய உடலுறவு சார்ந்த ஆசை, விருப்பம் மற்றும் யோனியின் ஆரோக்கியமும் குறைகிறது. சூரிய ஒளியானது உடலுறவுக்கு உதவுகிற ஹார்மோன்களின்
உற்பத்திக்கு அவசியமான வைட்டமின்களை பெற உதவுவதால் உடலுறவு சிறப்பாக இருக்க காரணமாகிறது. இரண்டு வார காலம் 30 நிமிடங்கள் சூரிய ஒளி படும்படி இருப்பவர்களின் படுக்கையறை செயல்திறன்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

சிலர் செந்நிற முடியை பெற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த முடியானது அவர்களுடைய வைட்டமின் டி உற்பத்திக்கு உதவுகிறது. உங்கள் முடிநிறம் எதுவாக இருந்தாலும், ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கடற்கரைக்கு செல்வது சந்தோஷமாக இருப்பதோடு வைட்டமின் டி அதிகளவில் பெறுவதற்கும் உதவியாக இருக்கும் என்கிறார்.

- க.கதிரவன்