விலங்குகளுக்கும் ரெய்கி சிகிச்சை!



தகவல்

மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றான ரெய்கி சிகிச்சையைப்பற்றி அறிந்திருப்போம். மனிதர்களுக்கு செய்யப்படும் இச்சிகிச்சை முறையை விலங்குகளுக்கும் கொடுக்க முடியும் என்கிறது Animal Reiki. ரெய்கி பயிற்சியாளரான டாக்டர் லலிதாவிடம் இதுபற்றி கேட்டோம்...

‘‘‘மனிதனை சமூக விலங்கு என்று சொல்வதுண்டு. மனிதனுக்கு இருக்கும் எல்லா உறுப்புகளும் விலங்குகளுக்கு இருப்பதால்தான் மனிதனுக்காக தயாரிக்கப்படும் அலோபதி மருந்துகளை விலங்குகளிடத்தில் ஆய்வக சோதனை மேற்கொண்ட பின்னரே சந்தைக்கு கொண்டு வருகிறார்கள்.

அதனால் மனிதனைப்போலவே விலங்குகளுக்கும் ரெய்கி சிகிச்சை கொடுக்க முடியும்.முதலில், ரெய்கி சிகிச்சையைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். ‘ரெய்கி’ என்பது ஜப்பானியர்களின் மிகப்பழமையான மருத்துவக் கலை. இதைக் கண்டுபிடித்து உருவாக்கியவர் மிக்காவோ உசுஇ.

REI என்றால் பிரபஞ்சம். KI என்றால் உயிர்ச்சக்தி என்று பொருள். இந்த பிரபஞ்சம் முழுவதும் உயிர் சக்தி பரவி உள்ளது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐம்பூதங்களைக் கொண்ட பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உடல்களும் ஐம்பூதங்களால் ஆனவை. இதில் நிலம் என்பது உடல், நீர்-ரத்தம், காற்று- உயிர் (பிராணவாயு). நெருப்பு-சூடு, ஆகாயம் விந்து. நம் உடலுக்கு வெளியே உடலை ஒட்டி ‘ஆரா’ என்ற மின்காந்த அலைக்கோடு சுற்றிக் கொண்டிருக்கும். இந்த மின்காந்த அலை மற்றும் உடலினுள்ளிருக்கும் சக்கரங்களைத் தூண்டி, பிரபஞ்ச சக்தியோடு இணைத்து நோயைக் குணப்படுத்துவதே ரெய்கி சிகிச்சையாகும்.

ரெய்கி பயிற்சியாளர்கள் சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு தன் உடல், மனம் இரண்டையும் சுத்தப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி, நோயாளியையும் இதே ஒத்த நிலையில் இருக்கச் செய்வார்கள். இது தூய்மைப்படுத்துதல் என்னும் முதல் நிலை. இரண்டாவதாக உயிர்ச்சக்தியைப் பிரபஞ்சத்தில் இருந்து பெற்று, அதை மற்றவர்கள் மீது செலுத்தும் சக்தியூட்டும் பணி.

மூன்றாவதாக, பிரபஞ்சத்தில் இருந்தே சக்தியை எடுத்து நோய் எதிர்ப்பாற்றலைப் பெருக்குவது. அடுத்து நான்காவதாக, எதிர்ப்பாற்றலை உருவாக்கிய பின் நோயைக் கண்டறிந்து நோயையும் அதற்குத் தேவையான பிரபஞ்ச சக்தியையும் இணைத்தல். இறுதியாக கவசமளித்தல். நோயின் தீவிரத்தைக் குறைத்தல் அதாவது நோயைக் குணப்படுத்துதல்(Healing).

இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குறியீடுகள் உள்ளன. இந்த குறியீடுகளை உபயோகித்து, நோயின் தீவிரத்திலிருந்து படிப்படியாக அது மனிதனாக இருந்தாலும், விலங்காக இருந்தாலும் வெளியே கொண்டு வர வேண்டும்.’’

ரெய்கியை விலங்குகளுக்கு எப்படி அளிக்க முடியும்?

‘‘ரெய்கி முறையில் மனதுக்கும் சிகிச்சை அளிக்க முடியும். மனிதனைப் போன்ற உறுப்புகள் இருப்பதைப்போலவே, காதல் முதல் பிரிவு, சோகம், கோபம் என மனிதனுக்கு உள்ள எல்லா உணர்வுகளும் விலங்குகளுக்கும் இருக்கிறது.

இதனால்தான் எஜமானருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, அவர் இறந்து விட்டாலோ அல்லது அவரைவிட்டு பிரிய நேரிட்டாலோ நாய் சாப்பிடாமல் சோகமாக இருக்கிறது. சமீபத்தில் கூட இறந்த குட்டி யானையின் பக்கத்தில் யாரையும் விடாமல் தாய் யானை பாதுகாத்த செய்தியை பார்த்திருப்போம்.

நோயுற்ற மனிதன்கூட தனக்கிருக்கும் ஆறாவது அறிவின் காரணமாக மருத்துவரை முழுமையாக நம்ப மாட்டான். அதனால் ஆன்ம சக்தியை மனிதனிடத்தில் இணைப்பது எங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஆனால், விலங்குகள் அப்படியில்லை. தன் எஜமானனை முழுவதுமாக நம்பும்.

எனவே, அதன் ஆன்ம சக்தியை தூண்டி, எளிதில் குணப்படுத்திவிடலாம். உடல், மனம், ஆன்மா இந்த மூன்றையும் ஒன்றிணைத்து செய்யும் ‘ரெய்கி’ சிகிச்சை நூறு சதவீதம் பலனளிப்பது’’ என்கிறார்.

- உஷா நாராயணன்