கண்ணாடிக்கு குட்பை...கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா!கண்ணான கண்ணே...

‘டாக்டர்! எவ்வளவு நாள் வரை கண்ணாடி போட வேண்டியது இருக்கும்?’

- கண்ணாடி மற்றும் கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்போர் வழக்கமாகக் கேட்கும் கேள்வி இது. கண்ணாடி தேவைப்படும் குறைபாடுகள் எவையும் குறிப்பிட்ட காலத்திற்கு கண்ணாடி அணிந்தால் குணமாகக்கூடியவை அல்ல. இந்தக் கேள்வி எழுவோருக்கு அறுவை சிகிச்சை ஒரு சிறந்த வாய்ப்பு.
கண்ணாடி மற்றும் கான்டாக்ட் லென்ஸ்க்கு மாற்றாக செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் பல உள்ளன. அவை என்னென்ன? உலகில் இத்தகைய சிகிச்சைகள் முதன் முதலில் எப்படித் தோன்றின? அவற்றில் என்னென்ன புதிய முன்னேற்றங்கள்?

மருத்துவக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய வரலாறுகள் எப்பொழுதுமே சற்று சுவாரஸ்யமானவைதான். 1930-களில் ஸுடோமு ஸடோ (Tsutomu Sato) என்ற ஜப்பானிய கண் மருத்துவர், கருவிழியின் ஆர வாக்கில் சில வெட்டுக்களை (Radial cuts) செய்வதன் மூலம் ஆறு டயாப்டர் (-6.00 அல்லது +6.00) வரையிலான பார்வைக் குறைபாட்டை சரிப்படுத்த முடியும் என்று கூறினார்.
இதை ராணுவ விமானிகளின் கண்களில் பரவலாகச் செய்தும் காட்டினார். ஆனால், இதில் பல குறைபாடுகள் இருக்கவே இவ்வகை சிகிச்சை கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னும் உலகில் ஆங்காங்கே இதைப் போன்ற முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

திருப்புமுனையாக 1974-ல் ரஷ்யாவில் ஒரு சிறிய வைரக் கத்தியால் (Diamond knife) கருவிழியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அவை நல்ல பலன்களைத் தர, அதே கோணத்தில் ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. 1980-ல் ஐபிஎம் நிறுவனத்தில் பணிபுரிந்த ரங்கசாமி ஸ்ரீனிவாசன் என்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானி மைக்ரோ சிப்-களில் லேசர் கதிர்களால் சர்க்யூட்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் லேசர் கதிர்களால் மனிதத் தசைகளையும் கூட துல்லியமாக, வெப்பத்தின் பாதிப்பின்றி வெட்ட முடியும் என்று கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்புக்கு பின் கருவிழியில் செய்யப்படும் அறுவை சிகிச்சை முறைகளில் அசுர வளர்ச்சி ஏற்பட்டது.

1990-களில் நிரூபிக்கப்பட்ட ஒன்றான லேசிக் (LASIK) முறை, இன்றளவும் வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. கண்ணாடியைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளில் இதுவே முதலிடம் பிடிக்கிறது.மேலும் Photo refractive keratectomy, epi-LASIK, LASEK போன்ற சிகிச்சைகளும் பழக்கத்தில் உள்ளன.

லேசிக்கில் செயல்முறை என்ன?

சிறிய அளவிலான கத்தியை(Micro keratome) கொண்டு கருவிழியின் மேற்பரப்பில் ஒரு மெல்லிய பகுதி விலக்கப்படும்(Flap). பின் அதன் அடியில் உள்ள தசை நார்ப்பகுதியில் லேசர் கதிர் மூலம் சிற்சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஒருவருக்கு சரி செய்யப்பட வேண்டிய அளவினை முன்கூட்டியே கணக்கிட்டு, அதன் படி லேசர் கதிர்கள் செலுத்தப்படுகின்றன. இன்று செய்யப்பட்டு வரும் பெரும்பாலான சிகிச்சைகளுக்கு இந்த வழிமுறைதான் அடிப்படை.

புதிய வழிமுறைகள் என்னென்ன?

Zyoptix என்பது லேசிக்கிலேயே மேம்படுத்தப்பட்ட ஒரு சிகிச்சை முறை. ஃபெம்டோசெகன்ட் லேசர்(Femtosecond laser) என்ற புதிய கண்டுபிடிப்பின் மூலமாக கத்திக்கு பதிலாக லேசர் கதிரே வெட்டும் பணியையும் செய்கிறது. எனவே லேசிக்கில் ஏற்படும் கண் கூச்சம், கண்ணின் மேற்பரப்பு வலுவிழத்தல் போன்ற பக்க விளைவுகள் தவிர்க்கப்படுகின்றன.

ReLEx FLEx, ReLEx SMILE போன்ற வழிமுறைகளில் கருவிழியின் தசைநார்ப் பகுதியிலிருந்து ஒரு சிறிய பகுதி தேவைக்கேற்ப அகற்றப்படுகிறது (lenticular extraction). C -TEN எனும் சிகிச்சையில் கருவிழியின் மேற்பரப்பைத் தொடாமலேயே முழுக்க முழுக்க லேசர் கதிர்களால் மட்டும் சிகிச்சை
அளிக்கப்படுகிறது.

(No touch no cut)மேற்கண்ட வழிமுறைகள் அனைத்துமே ஒவ்வொரு நோயாளியின் கண்ணிற்கும் ஏற்ற வகையில், முன்கூட்டியே நுண்ணியமாக திட்டமிடப்பட்டு, பிரத்தியேகமாக செய்யக் கூடியவை என்பதால் சிறப்பான விளைவுகளைத் தருகின்றன. ஒரு ஆய்வின் படி இவ்வகையான சிகிச்சைகளுக்குப் பின் கிட்டத்தட்ட தொண்ணூற்றைந்து சதவீதத்தினர் திருப்திகரமான பார்வையைப் பெற்றிருப்பதாகக்
கூறியுள்ளனர்.

யார் யார் லேசிக் சிகிச்சை மேற்கொள்ளலாம்?

பொதுவாக லேசிக் சிகிச்சை இருபத்தோரு வயதுக்கு மேற்பட்டோருக்கு செய்யப்படுகிறது. முந்தைய மூன்று ஆண்டுகளில் கண்ணாடியின் பவர்(Refractive status) மாறாமல் நிலையாக இருந்திருப்பதும் அவசியம்.லேசிக் சிகிச்சையை நாடுபவர்களில் அழகியல் காரணங்களுக்காகக் கண்ணாடியை தவிர்க்க நினைப்பவர்கள் தான் முதலிடம் பிடிக்கின்றனர்.

அது போக, கனமான கண்ணாடியால் ஏற்படும் பார்வைத் தடுமாற்றங்கள் (aberrations), விளையாட்டு, குதிரையேற்றம், மலையேற்றம் போன்ற செய்கைகளின் போது கண்ணாடியால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள், இவையே மக்கள் லேசிக்கை நாடக் காரணம். கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதிலும் பல பக்கவிளைவுகள் மற்றும் சிக்கல்கள் இருப்பதாலும் அனேகமானோர் லேசிக்கை நாடுகின்றனர். இவர்கள் அனைவருக்குமே லேசிக் சிகிச்சை ஒரு அற்புதமான Handsfree எஃபெக்ட்டை தருகின்றது.

யாருக்கு லேசிக் பொருத்தமற்றது?

கருவிழி மற்றும் விழித்திரையில் ஏதேனும் நோய்கள் இருந்தால் அவர்களுக்கு லேசிக் சிகிச்சை செய்யப்பட மாட்டாது. கருவுற்ற பெண்கள், கண் அழுத்த நோயாளிகள், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயாளிகள், ரத்த நாளங்களில் பாதிப்பு உடையவர்கள், தன்னெதிர்ப்பு நோயாளிகள் (autoimmune diseases) இவர்களுக்கும் லேசிக் செய்வதில்லை. கெரட்டோகோனஸ் (keratoconus) என்ற கருவிழி நோய் பரவலாக காணப்படும் ஒன்று. இதில் கருவிழி படிப்படியாக மிகவும் மெல்லியதாக மாறுவதால் அத்தகைய நோயாளிகளுக்கும் லேசிக் செய்யக்கூடாது.

பக்க விளைவுகள்

மற்ற எல்லா அறுவை சிகிச்சைகளை போலவே லேசிக்கிலும் சில பக்கவிளைவுகள் உண்டு. கண்களில் பூச்சி பறப்பது போன்ற தோற்றம், ஈரப்பசை இல்லாத நிலை (dry eye), ஒளிவட்டங்கள் தெரிவது, இரட்டைப் பார்வை போன்றவை லேசிக் செய்து கொண்டோர் அவ்வப்போது கூறும் சில பிரச்னைகள் ஆகும்.

பல வருடங்கள் கழிந்த நிலையில் கண்ணில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் அப்பொழுதும் சில பாதிப்புகள் ஏற்படலாம் (இத்தகைய பாதிப்புகள் தற்போதைய புதிய முறைகளில் கொஞ்சம் குறைவு). எனவேதான் ராணுவம், காவல்துறை, ரயில்வே போன்ற துறைகளில் பணிகளுக்கான உடற்தகுதித் தேர்வில் அந்த வேலைகளின் தன்மை காரணமாக லேசிக் சிகிச்சை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

வெகு சிலருக்கு லேசிக் மேற்கொண்ட பிறகும் படிக்க, எழுத குறைந்த அளவிலான பவரில் (0.5, 0.75) கண்ணாடி தேவைப்படலாம். நாற்பது வயது முதல் கிட்டப்பார்வைக்கு அவசியம் கண்ணாடி தேவைப்படும்.

லென்ஸ் பகுதியில் செய்யப்படும் சிகிச்சைகள்

கருவிழியில் மட்டுமின்றி கண்ணின் உள்ளிருக்கும் லென்ஸ் பகுதியிலும் கண்ணாடிக்கு மாற்றாகத் திகழும் சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிக அளவிலான பார்வைக் குறைபாடு உடையோருக்கு (- 5.00 முதல் -20.00 வரை) கருவிழியில் மாற்றம் செய்வது கடினம். எனவே இவ்வகையினருக்கு, ஏற்கனவே கண்ணிற்குள் இருக்கும் லென்ஸின் அருகிலேயே செயற்கையான லென்ஸ் (ICL- Implantable Collamer lens) பொருத்தப்படுகிறது.

Refractive lens exchange எனப்படும் ஒரு வகை சிகிச்சையில் இயற்கையான லென்ஸ் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிறது. சில வேளைகளில் இயற்கை லென்ஸை அகற்றுவதால் மட்டுமே கூட தேவையான விளைவைப் பெற முடியும். ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட தேவை மற்றும் அவரது அன்றாடப் பணிகள், பார்வைக் குறைபாட்டின் நிலை இவற்றைப் பொறுத்து கண் மருத்துவ நிபுணரிடம் ஆலோசித்து, தமக்குப் பொருத்தமான refractive surgery-யினைத் தேர்ந்தெடுக்கலாம். கண்ணாடிக்கு விடை கொடுக்கலாம்.

- ஜி.ஸ்ரீவித்யா