சுமூகமான உறவு



‘‘தமிழகத்தின் சுகாதாரத்துறைக்கு சமீபத்தில்தான் டெல்லியில் சிறந்த மருத்துவ சேவைக்கான விருது வழங்கப்பட்டது. அதுபோல இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ சேவை செய்கிற மாநிலமாக தமிழகம் இருக்கிறது. உறுப்பு தானத்தில் நாம் முதல் இடத்தில் இருக்கிறோம். இந்தியாவின் மருத்துவ தலைநகராக சென்னை மாறிவருகிறது.  வையெல்லாம் பெரிதாக பேசப்படாத, கவனிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது.

ஆனால், ஒரு சில மருத்துவமனையில் தவறுகள் நிகழ்ந்தால் அதை சில எதிர்க்கட்சிகளும், சில ஊடகங்களும் பெரிதுபடுத்தி பொதுமக்களிடம் பீதியை உண்டாக்குகின்றன. இது ஆரோக்கியமானது அல்ல’’ என்கிறார் பொது மருத்துவரும், தமிழ்நாடு நலவாழ்வு இயக்கத்தின் தலைவருமான ரெக்ஸ் சற்குணம். நோயாளி, மருத்துவர் இடையே உறவு சுமூகமாக மலர வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கிறார்.

‘‘எங்கோ நடக்கும் சில தவறுகள் அளவுக்கதிகமாக பெரிதுபடுத்தப்படும்போது, அரசு மருத்துவத்தின் மீது பொதுமக்களுக்கு அச்சத்தை வரவழைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. இதனால் பணம் செலவானாலும் பரவாயில்லை. தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிடலாம் என்ற எண்ணம் உண்டாகிவிடும். மென்மேலும் அரசு மருத்துவமனை மீது மக்களுக்கு அவநம்பிக்கையை உருவாக்கும் வேலையை தயவு செய்து யாரும் செய்ய வேண்டாம்.

இந்நிலை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க ஒருவரிடமிருந்து ரத்தம் எடுக்கும்போது முறையான ரத்த பரிசோதனைகளை செய்திட வேண்டும். தகுதியான ரத்தத்தை மட்டும்தான் நோயாளிக்கு செலுத்த வேண்டும். சேமிக்கப்பட்டிருக்கும் ரத்தத்தை ஒருவருக்கு செலுத்துவதற்கு முன்பும் அந்த ரத்தத்தை பரிசோதிக்க வேண்டும். பரிசோதனைக்கு பயன்படுகிற இயந்திரம், ரசாயனங்கள் தரமாக உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும்.

அரசு ரத்த பரிசோதனை மையங்களையும், அதன் அமைப்பு முறையையும் குறிப்பிட்ட காலத்திற்குள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மருத்துவ மனைகளில் இருக்கிற மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை, ரத்த பரிசோதனை மைய பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவற்றை அரசாங்கம் சரி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு இருக்கிற அச்சங்களை போக்கும் வகையிலும் அரசு மருத்துவமனை மீதான நம்பிக்கை வரும் வகையிலும் நடவடிக்கைகள் இனி இருக்க வேண்டும். மக்களுக்கு மருத்துவம் அளிப்பதில் வெளிப்படை தன்மை இருப்பதும் அவசியம்.

அரசு மருத்துவமனை கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டு தேவையை பொறுத்து, மருத்துவமனை செயல்பாடு குறித்து அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனையில் கட்டணம் அதிகம் வசூலிக்கும் சூழலில் பெரும்பான்மையான மக்களுக்கும், ஏழை நடுத்தர மக்களுக்கும் நம்பிக்கையாக இருப்பது அரசு மருத்துவமனைதான். அதனால் இந்த நம்பிக்கையை அரசு மேலும் வலுப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளை கண்காணிக்க கூடிய நிபுணர் குழு அரசு நியமித்து கண்காணிக்க வேண்டும்.

இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்களுக்கு பிறகு மக்கள் அச்சம் அடைய தேவையில்லை. உடனடியாக தனியார் மருத்துவமனையை நாட வேண்டியதுமில்லை, அரசு மருத்துவமனைகளில் நிகழ்கிற ஒரு சில தவறுகளை பொதுமக்களுக்கு சுட்டிகாட்டவோ, சரியான மருத்துவம் வேண்டும் என கேட்கவோ மக்களுக்கு உரிமை இருக்கிறது. தாங்கள் மருத்துவம் பெறும் அரசு மருத்துவமனைகளில் தங்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டு, சந்தேகங்களையும், பிரச்னையையும் அரசு மருத்துவரிடம் தாராளமாகக் கூறலாம்.

அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறவர்கள் தொடர்ந்து தங்களுடைய பணியை  செய்து வருகிறார்கள். அதிகப்படியான மக்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஒரு சில தவறுகள் நடப்பது இயல்பாக இருக்கும்போது அது உடனடியாக சரி செய்யக்கூடிய வேலையை அரசும், சம்பந்தப்பட்ட மருத்துவமனையும் செய்கிறது என்கிற தெளிவு மக்களுக்கு வேண்டும்.
அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை தரப்படுகிறது என்பதை மக்கள் நம்பவேண்டும். இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

எதிர்மறை செய்திகளைத் தொடர்ந்து வெளியிடுவதால் பாதிக்கப்பட்டவர் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். அரசு மருத்துவமனை என்பது நம்முடைய சொத்து என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். சாதாரண மக்கள் நம்மை நம்பி வருகிறார்கள் என்ற கூடுதல் பொறுப்புணர்வு மருத்துவமனையில் பணிபுரிகிறவர்களுக்குக் கூடுதலாக
வேண்டும். அதைத்தான் இந்த சம்பவங்கள் உணர்த்தியிருக்கிறது.’’

தொகுப்பு: குங்குமம் டாக்டர்  டீம்