தொழுநோய் ஒழிப்பில் தொடர்ந்து வெல்வோம்!



ஹெல்த் காலண்டர்

ஒவ்வோர் ஆண்டும் மகாத்மா காந்தியடிகள் நினைவு தினமான ஜனவரி 30-ம் நாள் இந்தியாவில் தேசிய தொழுநோய்  ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது, இந்த பாதிப்புகளுக்கு உள்ளாகி அவதிப்படுவோர் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவது, பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்துவது மற்றும் நாட்டிலிருந்து தொழுநோயை முழுவதும் ஒழிப்பது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. 
தொழுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் 1955-ம் ஆண்டு இந்திய அரசால் தொடங்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பரிந்துரைப்படி, 1982-ல் பன் மருந்து சிகிச்சை (Multi-Drug Therapy) அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் 1983-ல் இத்திட்டம் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டமாக (NLEP) மாற்றப்பட்டது. 2005-ல் தேசிய அளவில் தொழுநோய் ஒழிப்பு நிறைவேற்றப்பட்டது என்றாலும் உலகத் தொழுநோயாளிகளில் 57 சதவிகிதம் பேர் இந்தியாவிலேயே இருக்கின்றனர்.

சரியான சிகிச்சை மற்றும் விழிப்புணர்வின் விளைவாக, மார்ச் 2017-ல் 682 மாவட்டங்களில் 554 மாவட்டங்கள் தொழுநோய் ஒழிப்பை வெற்றிகரமாக எய்திவிட்டது. மேலும் பல்வேறு நாடுகளில் இந்நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்ப கட்ட நோய் கண்டறிதலும் சரியான சிகிச்சையுமே நோயொழிப்பிற்கு உதவியாக இருக்கும்.

ஹேன்சன் நோய்

மைகோபாக்டீரியம் லெப்ரே (Mycobacterium leprae) என்ற பாக்டீரியாவால் தொழுநோய் ஏற்படுகிறது. இதனால் கை மற்றும் கால்களை உருக்குலைக்கும் புண்களும் நரம்புச் சிதைவும் உண்டாகின்றன. இந்தத் தொற்று நோய் உடலில் தோல் பகுதியைப் பாதித்து நரம்புகளை அழிக்கிறது. இதன் மூலம் கண்ணுக்கும் மூக்குக்கும் கூட பிரச்னைகள் உண்டாகலாம். Dr.Armauer Hansen என்பவர் இந்த நோய்க்குக் காரணமான பாக்டீரியாவைக் கண்டுபிடித்ததால், ஹேன்சன் நோய் என்றும் இதை அழைக்கின்றனர்.

நோய் பரவும் விதம்

*  உரிய சிகிச்சை பெறாதத் தொழுநோயாளிகளே நோய் பரவலுக்கான முக்கிய காரணமாக இருக்கின்றனர்.

*  தொழுநோயாளியின் உடலிலிருந்து நோய்க்கிருமிகள் பரவும் முக்கிய வழி சுவாச மண்டலமே. அதிலும் குறிப்பாக, மூக்குதான் முக்கிய காரணமாக இருக்கிறது.

* சிகிச்சை பெறாதவர்களோடு தொடர்ந்து தொடர்பு வைக்கும்போது நோய்க் கிருமிகள் வாய் அல்லது மூக்கு வாயிலாக சுவாச மண்டலத்துக்குள் நுழைகிறது.

*  உடலுக்குள் நுழைந்த நுண்ணுயிரிகள் நரம்புகள் மற்றும் தோலை அடைகின்றன.

* ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் நரம்புகளுக்கு மேலும் சிதைவு ஏற்பட்டு நிரந்தர ஊனம் உண்டாகலாம்.

நோய் அறிகுறிகள்

* இளஞ்சிவப்பு மற்றும் இயல்பான தோலை விட அடர் அல்லது வெளிர் நிற புள்ளிகள் தோலில் ஏற்படுதல்.
*  இந்த புள்ளிகளால் பாதிக்கப்பட்ட தோல் உணர்வற்றும் முடியை இழந்தும் காணப்படலாம்.
* கை அல்லது கால் விரல்கள் உணர்விழந்து தசை வாதத்தை உண்டாக்கும்.
* கை அல்லது காலில் உணர்வின்மை அல்லது கூச்சம் ஏற்படுதல்.
* கை, கால் அல்லது கண் இமையில் பலவீனம் உண்டாதல்.
* நரம்புகளில் வலி மற்றும் முகம் அல்லது காது மடலில் வீக்கம் உண்டாதல்.
* கால் அல்லது கையில் வலியற்ற காயம் அல்லது தீப்புண் உண்டாதல்.
* கண் இமைத்தல் நின்று அதில் உலர்தல், புண் ஏற்படுவதோடு பார்வை இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.
* நோய் தீவிரமாகி இறுதி நிலையில் ஊனமோ, முடமோ ஏற்படலாம்.

தொழுநோயால் ஏற்படும் பிரச்னைகள்

* வியர்வை மற்றும் எண்ணெய்ச் சுரப்பி செயலிழப்பால் கை, கால்களில் உலர்ந்த மற்றும் வெடித்த தோல் உண்டாகிறது.
* தொடுதல் மற்றும் வலி உணர்வு இழப்புகள் கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கிறது.
* இமை பலவீனம் மற்றும் கண்ணின் ஒளி குறைவு பார்வையிழப்பு ஏற்பட வழிவகுக்கிறது.
* கை, கால்களில் வலுவிழப்பு ஏற்படுகிறது. இதனால் சிறு தசைகளில் வாதம் ஏற்பட்டு கை அல்லது கால் விரல்கள் மடங்கி விடுகிறது.

தொழுநோய் மரபுவழி நோயல்ல. இது பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கோ, மற்றொருவரைத் தொடுவதன் மூலமோ பரவாது. மோசமான சுகாதார நிலையில் வாழ்பவர்களுக்கு இந்நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக இருமல் மற்றும் தும்மல் மூலம் மைக்கோபாக்டீரியம் லெப்ரே பரவுகிறது. மேலும் பாலியல் தொடர்பு, கர்ப்பம் மூலமாகவும் பரவுகிறது. பெரும்பாலும் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தொழுநோய் பாதிப்புள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு இயல்பான குழந்தைப்பேறும் ஆரோக்கியமான குழந்தைகளும் பிறக்கின்றன. இந்நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஊனம் ஏற்படுவதில்லை. இதற்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் சில தோல் படைகளைத் தவிர வேறு எந்த வெளிப்படையான  அறிகுறிகளும் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

தொழுநோயை எந்த ஒரு தனி மருந்தாலும் குணப்படுத்த முடியாது. இதற்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள Multi-Drug Therapy (MDT) மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய் பாதித்த ஆரம்ப நிலையில் இந்த சிகிச்சையை மேற்கொள்வதால் பாக்டீரியாக்கள் விரைவில் கொல்லப்பட்டு நோய் கட்டுப்படுத்துவதோடு கை, கால்கள் ஊனம் அடைவதைத் தடுக்கலாம்.

தொழுநோய் உலகளவில் பழங்காலம் முதலே இருந்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்ணியத்தோடு  வாழ உரிமை உண்டு. பெரும்பாலும் இந்நோயாளிகள் சிறப்பு உடைகளை அணிவதுடன் சமூகத்திலிருந்து புறந்தள்ளப்பட்டு ஒதுக்கி வைக்கப்படும் சூழல் அதிகம் உள்ளது. பாதிக்கப்பட்ட தொழு நோயாளிகளால் தொடர்ந்து பணிபுரிந்து சமூகத்துக்குச் சேவை செய்ய முடியும் என்பதால் அவர்களை பணியிடங்களில் ஒதுக்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 அவர்களுக்கு சரியான சிகிச்சையும், சமூக ஆதரவும் இருந்தால் இந்நோயை எதிர்கொண்டு சந்தோஷமாக வாழலாம். இந்நோய் அறிகுறி இருப்பவர்கள் தானாக முன்வந்து அல்லது குடும்பத்தினரின் ஆதரவுடன் முழுமையான சிகிச்சை பெற வேண்டும். அப்படி செய்தால் கண்டிப்பாக இன்னும் சில ஆண்டுகளில் தொழுநோய் இல்லாத உலகை உருவாக்க முடியும்.

- கௌதம்