மருத்துவர்களின் நியாயங்களை புரிந்து கொள்ளுங்கள்!



மருத்துவத்துறையில் தவறுகள் நடக்க என்ன காரணம்? அவற்றை இனிமேலாவது தவிர்க்க என்ன திட்டங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள்? உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதே?
- சமீபகால சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் டாக்டர் வசந்தா மணியிடம் இந்தக் கேள்விகளை முன் வைத்தோம்...

‘‘இந்த கேள்விகளுக்கு விரிவாகவே  பதில் சொல்லிவிடுகிறேன். ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் மேலோட்டமாக மருத்துவரை கைநீட்டிவிடுவது வழக்கமாக உள்ளது. இதன் அடிப்படையை புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவத்துறை தவறுகளுக்குப் பல காரணங்கள் உள்ளன. ஒரு மருந்து, அறுவை சிகிச்சை, கவனிக்கும் முறை, மருத்துவ உபகரணங்களால் நோயாளியின் உடலுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்துவது அல்லது நோயின் தன்மை குறையாமல் இருப்பது போன்றவைதான் மருத்துவத்தவறுகள் என்கிறோம்.

மருத்துவத்துறையில் சில சமயம் ஒரு சில நிகழ்வுகள், தவறுகள் தற்செயலாகவும், சரியான நேரத்தில் நோயாளிகளுக்கு தேவைப்பட்ட மருந்தை அல்லது மருத்துவத்தை செய்யாததாலும் அப்படி செய்தும் நோயாளியின் நோய், உடலின் தன்மை, ஏற்றுக்கொள்ளாததாலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்தத் தவறுகள் பல வகைகளில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவை மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமை, பாதகம், மருத்துவத் தவறுகள், செவிலியர் துறையில் நிகழும் தவறுகள், ஆய்வகத்தில் நிகழும் தவறுகள், அறுவை சிகிச்சை போன்றவற்றால் நிகழும் தவறுகள், நோயாளியின் தவறுகள், மருத்துவ உபகரணங்களால் ஏற்படும் தவறுகள், நோய்த்தொற்றுகள் போன்றவை.

நோயாளியின் தவறுகள் நோயாளி நோய் தன்மையை மறைப்பது, சரியான தகவல்களைத் தராமல் மறைப்பது, சரியான நேரத்தில் மருத்துவம் செய்யாமல் இருப்பது, தவறான மருத்துவரிடம் மருத்துவம் செய்து இறுதியில் சரியான மருத்துவரிடம் செல்வது, சரியான பரிசோதனைகளைச் செய்யாமல் இருப்பது போன்றவை. தற்செயலாக ஏற்படும் மருத்துவத் தவறுகள், மருத்துவரின் சரியான மருத்துவத்திலும் நிகழ வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு நோயாளிக்கும் வெவ்வேறு முறையில் வெளிப்படும். ஒரே நோய்க்கு பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. உதாரணத்துக்கு, பெண்களுக்கு வரும் கர்ப்பப்பை கட்டியை அதனுடைய அளவுக்கேற்றவாறும் நோயாளிகளின் உடல் நிலைக்கேற்றவாறும் உடனடியாகவோ அல்லது சிறிது காலம் கழித்தோ அறுவை சிகிச்சை செய்யலாம்; மருந்துகளும் கொடுக்கலாம்; அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் மட்டும் செய்யலாம். அறுவை சிகிச்சையின் முறை Laparotomy அறுவை சிகிச்சையோ அல்லது உள்துளை அறுவை சிகிச்சையோ (Laparoscopy) நோயாளியின் உடல் தன்மைக்கேற்ப தேர்வு செய்யப்படுகிறது.

அதேபோல் சாதாரணமாக வரும் அப்பென்டிஸ்சைட்டிஸ் நோய் Acute, Chronic என இரு வகைப்படும். அதில் Acute எனும் வகைக்கு உடனேயே மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும். Chronic வகை மருந்துகளால்கூட சரி செய்யப்பட வாய்ப்பு உள்ளது.  அரசு மருத்துவமனைகளில் தினமும் வரும் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அனைத்துத் துறையிலும் சிறந்த மருத்துவர்கள் செவிலியர்கள், ஆய்வு நுட்புநர்கள் மற்றும் உதவியாளர்கள்
அனைவருமே சிறப்பாக தம்முடைய பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

எல்லாவிதமான நோயாளிகளுக்கும் தரமான தனிப்பட்ட, மருத்துவ கவனிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிறிய குறைபாடு என வரும்போது அது பெரிதாக்கப்படுகிறது. அப்படி வரும்போது பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் மேல் உள்ள நம்பிக்கை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய ஒரு சூழல் செயற்கையாக உருவாகிறது.

ஒவ்வொரு நோயாளிகளுக்கும் தனிப்பட்ட முறையில் கவனிப்பதற்கும், சிகிச்சை தருவதற்கும் உள்ள அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பினும் தனிப்பட்ட கவனம் இல்லை என எந்த நோயாளியும் நினைக்காத அளவிற்கு அனைத்து மருத்துவத் துறையினரும் தரமான சிகிச்சையை அளிக்கிறோம்.

மருத்துவ சிகிச்சையின் தரத்தை உயர்த்துவதற்கு NABL மற்றும் NABH அளவிற்கு தரம் உயர்த்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. ரத்தப் பரிசோதனையின் மாதிரிகள் மற்றும் ரத்தப்பைகள் CMC, Vellore மருத்துவமனைக்கு தரப் பரிசோதனைக்காக (External Quality Assurance Scheme) உட்படுத்தப்படுகிறது. மருந்துகளின் தரம் மற்றும் முடிவு தேதிகள் அனைத்தும் தகுந்த பதிவேடுகள் மூலம் பராமரிக்கப்படுகிறது.

மருத்துவ உள்நோயாளிகளின் பதிவேடுகள் அனைத்தும் மருத்துவக் குழுக்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுந்த அளவு சரி பார்க்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. மேலும் புற்றுநோய் மற்றும் பிற நோய்களைக் கண்டறிவதற்கு நவீன கருவிகள் அனைத்தும் அரசு மருத்துவமனைகளில் உள்ளது.

இந்த கருவிகள் அனைத்தையும் பராமரிப்பதற்கும், பழுது பார்ப்பதற்கும் மருத்துவ உபகரண பொறியாளர்கள் உள்ளனர். அனைத்துத்துறை மருத்துவர்களும் தற்போதைய நிகழ்வுகளை தெரிந்துகொள்வதற்காகவும், தங்களுடைய அறிவுத்திறனை வளர்ப்பதற்கும் அவ்வப்போது பயிற்சிகள் மற்றும் மருத்துவ மாநாடுகளில் பங்கு கொண்டு தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்கின்றனர்.

மக்களிடம் தன்மையாகப் பேசி எழுத்துப்பூர்வமாக விளக்கிக் கூறி எந்தவொரு செயல்முறைக்கும் நோயாளியின் சம்மதத்தை பெற்றே தொடங்கப்படுகிறது. நோயாளிக்கு சந்தேகம் ஏற்பட்டால் ஒருமுறைக்கு இருமுறை சரி பார்க்கப்பட்டு கழுகின் பார்வையோடும், தெளிவான சிந்தனையோடு நோயாளியைத் தொடர்ந்து பரிசோதிக்கும் திறனோடும் எதிர்கொள்ளப்படுகிறது.

அரசு அனைத்து மருத்துவமனைகளையும் வேண்டிய உபகரணங்களுடனும் பணியாளர்களுடனும் தரம் உயர்த்தி, இன்று இந்தியாவிலேயே தமிழகம் ஏனைய மாநிலங்களுக்கு ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. இதனை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இத்தகைய தரமும் வசதிகளும் பெற்ற அரசு மருத்துவமனைகளை தகுந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு சிறிய குறைகளையும் பெரிதுபடுத்தாமல் தங்களுடைய நோய்களுக்கு தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இத்தனை சிரத்தையோடுதான் நாங்களும் எங்களுடைய பணியைச் செய்துவருகிறோம். அதனை உணராமல் குற்றம் சாட்டுகிறார்கள்’’ என்கிறார்.

உங்கள் மீது வழக்கு நடந்து வருகிறதே என்ற கேள்வியை நினைவுபடுத்தினோம்... ‘‘திருமதி.அஜிதா மகேஷ் பிரசவத்திற்காக 23-02-2012 அன்று தனியார் மருத்துவமனையில் வேறு மருத்துவரால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு பிரசவம் சிக்கலாக இருக்கும் என்று முடிவு செய்ததால் 24-02-2012 அன்று அறுவை சிகிச்சை (சிசேரியன்) மூலம் பிரசவிக்கச் செய்தோம். நலமாக மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 7 மாதங்களுக்குப் பிறகு அஜிதாவின் கணவர் 20 வழக்கறிஞர்களுடன் வந்தார். ‘அஜிதாவிற்கு செய்த அறுவை சிகிச்சையில் சானிடரி நாப்கின் வைக்கப்பட்டுள்ளது. இதை வெளியில் சொல்லாமல் இருக்க நீங்கள் 1 கோடி தர வேண்டும். அதில் 25 லட்சம் முன் பணமாக தர வேண்டும்’ என்றார்.

மேற்படி தகவல் முற்றிலும் பொய்யான அற்பமான பொய் என்பதாலும், முற்றிலும் சானிடரி நாப்கினை வயிற்றில் வைக்கவில்லை என்பதாலும் சட்டப்படி சூழ்நிலையை எதிர்கொள்கிறேன் என்று கூறினேன். அவர்கள் கோபத்தில் பல பத்திரிகைகளிலும், பல தொலைக்காட்சிகளிலும், போஸ்டர்களிலும் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டார்கள். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். உயர்நீதிமன்றத்திலும், நுகர்வோர் நீதிமன்றத்திலும்
(1 கோடி ரூபாய் கேட்டு) வழக்கு  தொடுத்துள்ளார்கள்.

இன்று வரை வழக்கை நேர்மையான முறையில் ஒத்துழைத்து எதிர்கொண்டுள்ளேன். நோயாளி இதுவரை 20 முறை வாய்தா(Hearing) வாங்கிச் சென்றுள்ளார். இதுவரை எந்த ஆவணங்களும் ஒப்படைக்கவில்லை.  பாதிக்கப்படும் நோயாளிக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதைப் போலவே, தேவையற்ற சர்ச்சையால் பாதிக்கப்படும் மருத்துவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். என்னைப்போல் நோயாளியின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதித்துறை நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’’ என்கிறார்.