சத்யாவை பாராட்டிய ஆர்யா!



“‘புத்தகம்’ படத்தில் தொடங்கிய பயணம் சரிவை சந்தித்து இப்ப இரண்டாவது படத்தைத் தொட்டிருக்கு. என்னுடைய அடுத்த படம் ‘நச்’ன்னு இருக்கணும்னு காத்திருந்த வேளையில்  கேட்ட கதைதான் ‘அமரகாவியம்’. ஒரு ஜனரஞ்சகமான படத்துல என்ன இருக்க வேண்டுமோ அது எல்லாமே இந்தப் படத்துல இருக்கும்”  உற்சாகம் கலந்த நம்பிக்கையுடன் பேசுகிறார் ஹீரோ சத்யா. ஆர்யாவின் உடன்பிறப்பு.

‘அமரகாவியம்’ காதலின் மகத்துவம் பேசும் கதையா?

அப்படிச் சொல்லிவிட முடியாது. காதலும் படத்துல இருக்கும். ஒரு வகையில் இது நிஜ சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று சொல்லலாம். இயக்குனர் ஜீவா சங்கர் தன்னுடைய டீன் ஏஜ் பருவத்தில் சந்தித்த சம்பவங்களைத்தான் இதில் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். அந்த வகையில் முதன் முதலாக காதல் வயப்படும் ஒரு பையனைப் பற்றியும், பெண்ணைப்பற்றியும் ரசிக்க வைக்குமளவுக்கு இந்தப் படம் ரசனையாக இருக்கும். படம் பார்த்த பிறகு டீன் ஏஜ் வயதைக் கடந்த பையனும் சரி, பெண்ணும் சரி தங்கள் இளமைக் காலத்தை கொஞ்ச நாளைக்காவது மனசுக்குள் திரைப்படமாக ஓட்டிப்பார்ப்பார்கள்.

ஹீரோயின் மியா  எப்படி?

இந்தப் படத்தை என் அண்ணன் ஆர்யா தயாரித்திருந்தாலும் இந்தக் கதைக்கு புதுமுகங்கள் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று இயக்குனர் நினைத்தார். நானும் அப்படித்தான் இந்தப் படத்துக்குள் வந்தேன். அதே போல் வந்தவர்தான் மியா. கேரளப் பொண்ணு. ஆனால், தமிழ் நல்லா வரும். தமிழ் சினிமாவை சில வருடங்களுக்கு ஆட்சி செய்யும் அளவுக்கு அவரிடம் திறமை இருக்கு. மியாவுக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி செமையா ஜெல் ஆகியிருக்கு. தம்பி ராமையாவுக்கு பிரமாதமான ரோல். அவருடைய நடிப்புக்கு தீனி போடுற ரோல் என்பதால் பிரித்து மேய்ந்திருக்கிறார். ஜிப்ரானின் இசை கவனிக்கத்தக்க வகையில் அருமையாக இருக்கும்.

ஆர்யா என்ன சொன்னார்?

என் அண்ணன் ரொம்ப வெளிப்படையான ஆளு. பிடிக்கலைன்னா போல்டா சொல்லிவிடுவான். ஆர்யா முதன் முறையாகப் படம் பார்த்தபோது நெர்வஸாக இருந்தேன். ஆனால், அவனிடம் இருந்து பாராட்டு கிடைச்ச பிறகுதான் எனக்கு நிம்மதி வந்தது.

எஸ்