நடிகையின் காட்ஃபாதர்





விக்ராந்த் ஹீரோவாக நடிக்கும் படம், ‘பிறவி’. அவரது அண்ணன் சஞ்சீவ் இயக்குகிறார். வால்ட் டிஸ்னி புரோகிராமர் ஜேக்ஸ் இசையில் விவேகா எழுதிய ‘தேடித் தேடி பார்த்தோமே...’ பாடலை ரஞ்சித்துடன் பாடியுள்ளார் விக்ராந்த். இதுதவிர, விஷால் நண்பன் வேடத்தில் ‘பாண்டிய நாடு’ படத்தில் நடிக்கிறார்.

‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ படங்களில் ஜோடி சேர்ந்த சிம்புவும், ஹன்சிகாவும் மீண்டும் ஜோடி சேர்வதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி சிம்புவிடம் கேட்டபோது சிரித்தார். ‘நானும், ஹன்சிகாவும் காதலிக்கிறோம். இருவரும் சினிமாவில் பிஸியாக இருப்பதால், திருமணத்தை எப்போது நடத்துவது என்று முடிவு செய்யவில்லை. சமீபத்தில் ஹன்சிகாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மும்பை சென்றேன். அவரை வாழ்த்திய நான், ஒரு வித்தியாசமான பரிசு கொடுத்தேன். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஹன்சிகா, அதை வாழ்நாளிலேயே மறக்க முடியாது என்று சொன்னார். இரண்டு படங்களில் ஜோடியாக நடிக்கும் நாங்கள், பாண்டிராஜ் இயக்கும் படத்தில் ஜோடி சேரவில்லை. வேறொரு ஹீரோயின் நடிக்கிறார். என் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்போது தி.நகரில் கட்டியுள்ள புது பங்களாவில் என் குடும்பத்துடன் குடியேறியுள்ளேன்’ என்றார்.

தமிழில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ள விஜய், மற்ற ஹீரோக்களைப் போல் ‘கெட்டப்’ மாற்றி நடிக்க ஆசைப்பட்டு, அதற்கான போட்டோசெஷனை ரகசியமாக நடத்தினார். அப்போது உருவான போட்டோக்களைப் பார்த்த அவர், தனக்கே அந்த கெட்டப்புகள் திருப்தி அளிக்காத நிலையில், மீடியாவிடமும், இயக்குநர்களிடமும் அதில் ஒன்றைக்கூட காட்ட வில்லை.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன், எழும்பூரிலுள்ள சைவ ஹோட்டலில் வையாபுரியும், வடபழநியிலுள்ள பிரபலமான சைவ ஹோட்டலில் அப்புக்குட்டியும், போரூரிலுள்ள மருத்துவமனை கேண்டீனில் ராமகிருஷ்ணனும் சர்வராக வேலை பார்த்துள்ளனர். தி.நகரிலுள்ள ஒரு ஜவுளிக் கடைக்கு பெயிண்ட் அடித்திருக்கும் பரோட்டா சூரி, பிஸியான காமெடி நடிகராக மாறிய பின், சொந்தக் காரில் அங்கு சென்று வந்திருக்கிறார்.



தமிழில் ‘தாண்டவக்கோனே’, ‘மேகா’, ‘சித்திரையில் நிலாச்சோறு’, ‘நாடி துடிக்குதடி’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘உன் சமையல் அறையில்’ மற்றும் தெலுங்கில் சில படங்களுக்கு இசையமைக்கும் இளையராஜா, இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் ரிலீசான ‘சீனி கம்’, ‘பா’ படங்களைத் தொடர்ந்து, பால்கி இயக்கும் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக அவருடன் இணைகிறார். இதில் அமிதாப்பச்சன், ஷாருக்கான் இணைந்து நடிக்கின்றனர். இதுவரை எந்த நடிகரும் ஏற்று நடிக்காத வேடம் என்பதால், அதற்கான ஹோம் ஒர்க்கை இப்போதே ஆரம்பித்து விட்டாராம் ஷாருக்கான். ஷங்கரின் ‘ஐ’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம், அடுத்து பால்கி இயக்கும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

அபிரூபன், பாரதி யுடன் அந்தமானில் வசிக்கும் 150 புதுமுகங்கள் நடிக்கும் படம், ‘பேசாத படம்’. லியார்னார்டோ டாவின்ஸியின் மோனலிசா ஓவியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படத்தின் இயக்குநர் ஆதவன் கூறுகையில், ‘அந்தமானில் ‘நெருப்புக்கோழி’, ‘பனித்துளிகள்’, ‘தி லிட்டில் சாப்ளின்’ குறும்படங்கள் இயக்கியுள்ள நான், இப்போது ‘பேசாத படம்’ இயக்குகிறேன். உண்மையான காதலுக்காகப் போராடும் ஹீரோயின், மருத்துவ ரீதியாக தன் தோற்றத்தை மாற்றிக்கொள்கிறார். அவரையும், தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் அவரது காதல் போராட்டத்தையும் ஹீரோ ஏற்றுக்கொண்டாரா என்பது கிளைமாக்ஸ். அந்தமானில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ‘முண்டாபாடு’ பகுதியிலுள்ள தற்கொலைப் பாறையில் ஒரு பாடலைப் படமாக்கிய அன்று, ராட்சத அலையில் சிக்கி உயிருக்குப் போராடினோம். பிறகு அந்தப் பகுதியில் வசித்த மீனவர்கள் சிலர் ஓடிவந்து எங்களைக் காப்பாற்றினார்கள்’ என்றார்.

தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, ‘ஆடு களம்’, ‘3’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஆர்.வேல்ராஜ். தமிழில் படம் இயக்க வேண்டும் என்ற தன் ஆசையை, ஒவ்வொரு ஷூட்டிங் ஸ்பாட்டிலும் உதவியாளரிடம் சொன்னதை அறிந்த தனுஷ், ‘நய்யாண்டி’ படப்பிடிப்புக்கு வேல்ராஜை வரவழைத்தார். ‘வுண்டர்பார் பிலிம்சுக்காக நான் நடிச்சு, தயாரிக்கும் படத்தை நீங்க தான் டைரக்ட் பண்றீங்க. உடனே கதையை ரெடி பண்ணுங்க’ என்று, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இப்படத்துக்கு ‘வேலையில்லா பட்டதாரி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தனுஷ் ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். அனிரூத் இசையமைக்கிறார். ஸ்கிரிப்ட், ஒளிப்பதிவு, இயக்கம் ஆகிய பொறுப்புகளை வேல்ராஜ் ஏற்றுள்ளார்.

சென்னை வந்திருந்த பூஜா, ‘விடியும்முன்’ ஆடியோ விழாவில்  பங்கேற்றார். ‘பாலாவின் ‘நான் கடவுள்’ ரிலீசுக்குப் பிறகு எந்த படத்திலும் நான் நடிக்கவில்லை. சிறந்த கதையுடன் வித்தியாசமான கேரக்டர் கிடைத்தால் மட்டுமே மீண்டும் தமிழில் நடிக்கலாம் என்று காத்திருந்தேன். ஒருநாள், ‘ஓரம் போ’ படத்தில் என்னை இயக்கிய புஷ்கர்-காயத்ரி போன் செய்து, ‘நல்ல கதை இருக்கிறது. நீ நடித்தால் பொருத்தமாக இருக்கும்’ என்றார். கதை கேட்டேன், பிடித்திருந்தது. அதுதான் ‘விடியும்முன்’. இதற்குப் பிறகு தமிழில் எனக்கு ஏற்பட்டிருந்த இடைவெளி விலகும் என்று நம்புகிறேன்’ என்றார். ஒவ்வொரு படத்துக்கும் கதை கேட்கும் முன்பு, தனது காட்ஃபாதர்களான பாலா மற்றும் சீமானிடம் அனுமதி கேட்பாராம். அவர்கள் மனதுக்கு சரியென்று படும் கதை என்றால் மட்டுமே பூஜா தேர்வு செய்வாராம்.

ஷங்கரின் ‘ஐ’ படத்தில் பல கெட்டப்புகளில் நடிக்கும் விக்ரம், அடுத்து இரண்டு படங்களில் நடிக்கிறார். ஒரு படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. தரணி இயக்குகிறார். ‘தில்’, ‘தூள்’ படங்களுக்குப் பிறகு விக்ரம், தரணி இணையும் இப்படம், ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகிறது. அடுத்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விக்ரம். இந் நிலையில், விக்ரம் நடிப்பில் உருவாகும் என்று அறிவிக்கப்பட்ட ‘கரிகாலன்’ படம், தவிர்க்க முடியாத காரணங்களால் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஜெய்யுடன் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தில் நடித்தபோது ஏற்பட்ட பழக்கம், கடைசியில் காதல் கிசுகிசுவில் வந்து முடியும் என்று எதிர்பார்க்காத நஸ்ரியா நாசிம், இப்போது தமிழ் மீடியாவைக் கண்டாலே கொதிக்கிறாராம். ‘ஆதாரம் இல்லாம நியூஸ் போடுறாங்க. இப்ப தான் தமிழ் பீல்டுல நிறைய படம் கிடைக்குது. அதைக் கெடுக்கிற விதமா, லவ் மேட்டரைப் பற்றி எழுதறாங்க. எனக்கு காதலிக்கிற வயசு கிடையாது. அதுக்கான நேரமும் இல்ல. கேரளாவில் காலேஜுக்கு போய் படிக்கிறேன். ‘நய்யாண்டி’, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ‘ராஜா ராணி’ படங்கள் பண்ணிக்கிட்டிருக்கேன். இப்ப போய் காதல் அது இதுன்னு எழுதினா, எல்லா வாய்ப்பும் கைநழுவிப் போயிடாதா? ப்ளீஸ், பாசிட்டிவ் நியூஸை மட்டும் எழுதுங்க’ என்று, எதிர்ப்படுவோரிடம் எல்லாம் கெஞ்சுகிறார்.
- தேவராஜ்