தன்ஷிகாவிடம் கேளுங்கள் : ஹீரோக்களிடம் பிடித்த விஷயம்...




குல்பி ஐஸ்க்ரீமே! உங்கள் அழகின் ரகசியம் என்ன?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு.

நீங்கள் வர்ணித்ததைப் போல், தினமும் நான் குல்பி ஐஸ் சாப்பிடுகிறேன். ஒருவேளை, அதுவும் என் அழகுக்குக் காரணமாக இருக்குமோ என்னவோ!

பணத்தை வைத்து புகழ் சேர்ப்பது, புகழை வைத்து பணம் சேர்ப்பது. என்ன வித்தியாசம்?
- ஜி.நிரஞ்சனா, சென்னை - 44.

உண்மையான புகழ் எதில் இருக்கிறது தெரியுமா? கடுமையாக உழைத்து, நேர்மையான வழியில் உயர்வுக்கு வந்து, நம்மைப் பார்த்து மற்றவர்கள் பாராட்டுகிறார்களே, அதுதான் உண்மையான புகழ். என்னதான் பணம் இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் நாம் புகழ்பெற அது உதவாது.
 
தமிழில் தெளிவாகத்தானே பேசுகிறீர்கள். பிறகு ஏன் உங்களுக்கு டப்பிங் வாய்ஸ்?
- சி.குமார், விழுப்புரம்.

சில கேரக்டர்களுக்கு என் குரல் பொருத்தமாக இருக்காது. ஏனெனில், என் குரல் ரொம்ப போல்டாக இருக்கும். திரைக்கு வந்த ‘பேராண்மை’, ‘அரவான்’, ‘பரதேசி’ ஆகிய படங்களுக்கு நான் பேசினேன். ‘நில் கவனி செல்லாதே’, ‘மாஞ்சா வேலு’, ‘யா யா’ படங்களில் எனக்கு வேறொருவர் டப்பிங் பேசினார். இப்போது நடிக்கும் ‘விழித்திரு’, ‘சங்குதேவன்’ படங்களில் நான்தான் பேசப் போகிறேன்.
 
உங்கள் ரோல் மாடல் யார்?
- ஜி.மகேஷ், வேலூர் - 6.

அப்படி கண்மூடித்தனமாக யாரையும் நான் ஃபாலோ செய்வது இல்லை. உங்கள் கேள்விக்கு கண்டிப்பாக நான் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றால், வடிகட்டிய ஒரு பொய்யைத்தான் சொல்ல வேண்டியிருக்கும்.

நீங்கள் சினிமாவில் நடிப்பதற்கு உங்கள் குடும்பம் ஆதரவாக இருக்கிறதா?
- ஆர்.ஜோசப், நெல்லை.

பொதுவாக தமிழ்க் குடும்பங்களில் இருந்து நடிக்க வரும் பெண்களுக்கு பலத்த எதிர்ப்பு இருக்கும். குடும்பம் மற்றும் உறவினர்கள் மத்தியில் ஏற்படும் அந்த எதிர்ப்பு, பலருடைய எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடும். என்னைப் பொறுத்தவரையில், என் குடும்பத்திலுள்ள அனைவரும் நான் சினிமாவில் நடிக்க அதிக சப்போர்ட் செய்கிறார்கள்.



இதுவரை நடித்ததில், மிகவும் சிரமப்பட்டு நடித்த காட்சி எது?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘பரதேசி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்ததுதான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த காட்சி. உயிரைக் கொடுத்து நடித்தேன் என்று சொல்வார்களே, அதை அன்றுதான் நான் கண்கூடாக உணர்ந்தேன். மறையூர் கிராமத்தில் செட் போட்டு அந்தக் காட்சியைப் படமாக்கினார்கள். நடித்து, நடித்து சோர்ந்து போன என் கண்கள் பயங்கரமாக வீங்கி விட்டது. நடிப்புக்காக நிஜமாகவே என்னைப் பெரிதும் வருத்திக்கொண்ட சம்பவம் அது. என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சியும் கூட.

இப்போதுள்ள தமிழ் ஹீரோக்களிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது? பிடிக்காத விஷயம் எது?
- ஆர்.கார்த்திகேயன், சென்னை.

உண்மையிலேயே தமிழர்களுக்கு அதிகமாக சப்போர்ட் செய்வது, பிடித்த விஷயம். அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்றால், அடிக்கடி நம்மை நாமே மட்டம் தட்டிக்கொள்வதை மட்டும்தான் சொல்ல முடியும்.

நீங்கள் அப்பா செல்லமா? அம்மா செல்லமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

என் அப்பா, குழந்தைசாமி. அவருக்கு நான் குழந்தை, சாமி.
உண்மையைச் சொல்லுங்கள், உங்கள் வயசு என்ன?
- இஸ்மாயில், அரக்கோணம்.
20-11-1989 அன்று பிறந்தேன். என் வயதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

பெரும்பாலும் நடிகைகளின் காதலும், திருமணமும் தோல்வியில் முடிவடைவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
- கோதண்டராமன், காஞ்சிபுரம்.

இதற்கு அவரவர் மட்டுமே காரணம். எதுவும் நம் கையில் இருக்கிறது. அடுத்தவர் வந்து மூளைச்சலவை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்பது போல், காதலை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அவரவர் வசம்தான் இருக்கிறது.
(இன்னும் சொல்வேன்)
தொகுப்பு: தேவராஜ்