அக்கா கடை-என் சமூகத்தினர் எதிர்காலத்திற்காகவே உணவகம் ஆரம்பித்தேன்! ஜெயச்சித்ரா



‘‘எங்களை பார்த்தாலே ஒதுங்கும் மக்கள், எங்களின் ஓட்டலில் சாப்பிடுவாங்களான்னு கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால் எங்களை போன்ற பலருக்கு நாங்க எடுக்கும் இந்த முதல் படி ஒரு வாழ்வாதாரமாக அமைய வேண்டும். அதற்காகவே எந்த தடங்கள் வந்தாலும் உணவகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு ஆரம்பிக்கப்பட்டது தான் ‘மதுரை டிரான்ஸ் கிச்சன்’’ என்கிறார் மதுரையை சேர்ந்த திருநங்கையான ஜெயச்சித்ரா.
இவர் கடந்த பத்து வருடமாக கேட்டரிங் துறையில் இருந்து வருகிறார். ‘‘எங்க சமூகத்தினரும் மதிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காகவே கேட்டரிங் தொழிலை தேர்வு செய்தேன்’’ என்று கூறும் ஜெயச்சித்ரா தான் கடந்து வந்த பாதையினைப் பற்றி விவரித்தார்.

‘‘என்னுடைய பூர்வீகம் தஞ்சாவூர். படிச்சது எல்லாம் அங்க தான். டிபார்ம் படிச்சேன். படிக்கும் போதே என்னிடம் ஏற்படும் மாற்றத்தினை உணர்ந்தேன். ஆனால் ஆரம்பத்தில் எனக்கு அது என்ன என்று புரியவில்லை. வீட்டில் சொன்னால் திட்டுவார்களோ என்ற பயம் வேறு இருந்தது. அதனால் படிப்பு முடிக்கும் வரை நான் என்னுடைய அடையாளத்தை கொஞ்சம் மறைத்து தான் வைத்திருந்தேன்.

அப்படியும் எங்க வீட்டில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் உறவினர்கள், சித்தி, அத்தை எல்லாரும் என்னிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தினை கவனிச்சு இருக்காங்க. படிப்பு முடிஞ்சதும் ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் என் அடையாளத்தினை மறைக்க முடியாது என்பதால் என்னுடைய 18 வயசில் நான் வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்.

கிட்டத்தட்ட 14 வருஷம் நான் எங்க இருக்கேன்னு எங்க வீட்டில் யாருக்குமே தெரியாது. நான் +1 மற்றும் +2 இரண்டு வருடம் மதுரையில் ஹாஸ்டலில் தான் தங்கி படிச்சேன். அதனால எனக்கு அந்த ஊர் ரொம்பவே பழக்கப்பட்டு இருந்ததால் அங்கேயே வந்துட்டேன்’’ என்றவர் அங்கு பல கஷ்டங்களை சந்தித்துள்ளார்.

‘‘ஒரு வைராக்கியத்தோடு மதுரைக்கு வந்தாலும் என்ன செய்றதுன்னு தெரியல. என்னுடைய தினசரி சாப்பாட்டுக்கு கூட ரொம்பவே கஷ்டப்பட்டேன். தங்க இடம் கிடையாது. இப்படியே இருந்திட முடியாது என்பதால், ஒரு பாட்டில் நிறுவனத்தில் பாட்டிலை கழுவும் வேலைக்கு சேர்ந்தேன். தினமும் 50 ரூபாய் சம்பளம். அப்படியும் எனக்கு வீடு தர யோசிச்சாங்க. கிடைக்கிற இடத்தில் தங்கிக் கொள்வேன். இப்படியாக ஒரு வருஷம் கழிஞ்சது. அதே சமயம் பாட்டில் நிறுவனத்திலும் எனக்கு கொடுக்கும் சம்பளம் பத்தல.

அதனால் அந்த வேலையையும் விட்டுட்டு, வீட்டு வேலைக்கு போனேன். வயசான தம்பதியினர். அவங்களுக்கு சமைச்சு தரணும். மூணு வருஷம் அவங்களுக்கு சமையல் மட்டுமில்லாமல் அனைத்து வீட்டு வேலையும் செய்து கொடுத்தேன். இதற்கிடையில் நான் என்னை முழுமையாக மாற்றிக் கொண்டது மட்டுமில்லாமல் எங்களின் சமூகம் சார்ந்த அமைப்பில் இணைந்தேன். வீடும் வாடகைக்கு எடுத்து தங்கினேன். அதன் பிறகு என்னைப் போன்ற திருநங்கைகளுக்கு அடைக்கலம் கொடுத்தேன்.

அவங்க எல்லாரும் என்னை மாதிரி வீட்டை விட்டு வந்தவர்கள். நான் வீட்டு வேலை பார்த்தது மட்டுமில்லாமல், கல்லூரிகளில் எச்.ஐ.வி மற்றும் தற்கொலை செய்யக்கூடாது குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினேன். மேலும் நடத்தை மற்றும் உயிரியல் சார்ந்த ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் இருக்கு.

அங்கு சென்று பயிற்சி பெற்றேன். இதில் குறிப்பாக தொலை தூரம் பயணம் செய்யும் லாரி டிரைவர்களுக்கு எச்.ஐ.வி கவுன்சிலிங் மற்றும் ரத்தம், சிறுநீர் பரிசோதனை எடுத்து அது குறித்த ரிப்போர்ட் தயாரிக்கணும். ஆனால் இதில் பெரிய அளவில் வருமானம் வரவில்லை. என்னை நம்பி ஆட்கள் இருப்பதால், வருமானத்திற்காக கேட்டரிங் தொழிலை ஆரம்பித்தேன்.

அதற்கு முக்கிய காரணம் முதியோர் இல்லம் நடத்தி வந்த அந்த முதியவர். அவர் தன் மனைவியின் பெயரில் முதியோர் இல்லம் நடத்தி வந்தார். அவருக்கு நான் ஸ்பான்சர்ஸ் எல்லாம் வாங்கித் தருவேன். சிலர் பணமாக கொடுப்பார்கள். சிலர் உணவாக கொடுப்பார்கள். உணவாக வழங்கும் போது அவர் என்னை சமைத்து தரச் சொல்வார். அப்படி செய்து, என்னுடைய சாப்பாடு நல்லா இருப்பதாக சொன்னவர் தான் என்னை கேட்டரிங் தொழிலை எடுத்து நடத்த சொன்னார்.

மேலும் அவரே சமையலுக்கான ஆர்டரும் வாங்கிக் கொடுத்தார். அதன் பிறகு வாய் வார்த்தையாக ஆர்டர்களும் வர ஆரம்பிச்சது. கல்யாணம், காது குத்து, பிறந்த நாள் விழா, புதுமனை புகு விழான்னு பல விசேஷங்களுக்கு சமைச்சு கொடுக்க ஆரம்பிச்சேன். இப்படியே ஒரு மாசத்திற்கு ஏழு முதல் 20 ஆர்டர்கள் வர ஆரம்பித்தது.

இதற்கிடையில் மதுரை ஜி.எச் மருத்துவமனையில் கோவிட் பணியில் ஈடுபட்டு வந்த முன்களப் பணியாளர்களுக்கு மதிய சாப்பாடு சமைச்சு பார்சல் தரச்சொல்லி கேட்டாங்க. நானும் செய்து கொடுத்தேன். நான் கேட்டரிங் தொழில் ஆரம்பிச்சதும் என் இன மக்கள் மட்டுமில்லாமல் மற்ற பெண்களும் எனக்கு உதவியா இருந்தாங்க’’ என்றவர் கடந்த மாதம் ‘மதுரை டிரான்ஸ் கிச்சன்’ என்ற உணவகத்தை
ஆரம்பித்துள்ளார்.

‘‘கேட்டரிங் ஒரு பக்கம் இருந்தாலும், அடுத்த கட்டமாக உணவகம் ஒன்றை துவங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அதற்கு என்னிடம் போதிய பணம் இல்லை. அப்போது தான் வங்கியில் கடன் வாங்கலாம்ன்னு முடிவு செய்து கடனும் பெற்றேன். எல்லாம் கைகூடி வந்த நேரத்தில் ஓட்டல் அமைக்க இடம் கிடைக்கவில்லை.

நானும் பார்க்காத ஆட்கள் இல்லை போகாத இடமில்லை. முதலில் சரி என்று சொல்வார்கள். என் நிலைமையை தெரிந்த பிறகு ஏதாவது காரணம் சொல்லி தட்டிக் கழிச்சிடுவாங்க. இரண்டு மாசம் கையில் பணத்தை வைத்துக் கொண்டு நடையாய் நடந்தேன். என் கேட்டரிங் உணவுகளை ஆட்டோவில் கொண்டு போய் தருவது வழக்கம்.

எனக்காக ஆட்டோ ஓட்டும் அந்த பையன் தான் மதுரை ஜி.எச் அருகில் ஒரு இடம் இருப்பதாகவும். அதன் ஓனரை பார்க்கலாம்ன்னு சொன்னான். என்னைப் பற்றிய முழுவிவரம் முதலில் சொல்லிடு. அதன் பிறகு அவர் சம்மதிக்கட்டும்ன்னு சொன்னேன். ஆனால் அந்த இடத்தின் உரிமையாளருக்கு என்னைப் பற்றி தெரிந்திருந்ததால், அவர் கொடுக்க சம்மதித்தது
மட்டுமில்லாமல் அந்த இடத்தினை உணவகம் அமைப்பதற்கு ஏற்பவும் வசதிப்படுத்திக் கொடுத்தார். அப்படித்தான் இந்த உணவகம் ஆரம்பிச்சேன்’’ என்றவரின் உணவகத்துக்கு முதல் நாளே
கூட்டம் அலைமோதியுள்ளது.

‘‘எல்லா ஏற்பாடும் செய்து நான் உணவகத்தினை துவங்கினேன். முதல் நாள் யாரும் வரமாட்டாங்கன்னு தான் நினைச்சேன். ஆனால் என் சமூகம் சார்ந்தவங்க மற்றும் எனக்கு தெரிந்தவர்களை தாண்டி பொதுமக்கள் தான் அதிகம் என் உணவகத்திற்கு வந்தாங்க. அதுவே எனக்கு பெரிய வெற்றி. உணவகம் மூணு வேளையும் செயல்பட்டு வருகிறது. காலை இட்லி, தோசை, பூரி, பொங்கல், வடை. மதியம் முழு சாப்பாடு, சாம்பார், கூட்டு, பொரியல். ரசம், மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி, பிரியாணி, மீன் குழம்பு அதேபோல் மாலை இட்லி தோசை, இடியாப்பம் என எளிதாக செமிக்கக் கூடிய உணவுகள் மட்டும் தருகிறோம்.

காரணம் எங்க உணவகம் மருத்துவமனைக்கு எதிரே அமைந்து இருப்பதால் நோயாளிகளுடன் தங்கி இருப்பவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் இரவு ஏழு மணிக்குள் உணவினை வாங்கி சென்றுவிடுவார்கள். அதனால் இரவு நேர உணவு மட்டும் சீக்கிரமாக முடிச்சிடுவோம். மேலும் நோயாளிகளுக்கு சுடு தண்ணீர் மற்றும் மினரல் தண்ணீர் இலவசமாக கொடுத்து வருகிறோம். காரணம் இங்கு மருத்துவமனை வாசலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை சுட வைத்துக் கொண்டு இருப்பார்கள். அதற்கு 20 முதல் 30 ரூபாய் வசூலிப்பார்கள். ஏழை எளியவர்களால் அதைக் கொடுத்து வாங்க முடியாது என்பதால், நாங்க இங்கு இலவசமாக கொடுத்து வருகிறோம்.

இந்த உணவகம் ஆரம்பிச்சு ஒரு மாசம் தான் ஆச்சு. குடும்பமாக சாப்பிட வராங்க. சாப்பிட்டவங்க எல்லாரும் உணவு நல்லா இருக்குன்னு பாராட்டுறாங்க. உணவகம் மட்டுமில்லாமல் கேட்டரிங்கும் செய்து வருகிறோம். காரணம் ஒரு பிசினசில் லாபம் கிடைக்கவில்லை என்றாலும், மற்றொன்று கைகொடுக்கும் என்பது என்னுடைய எண்ணம். அதனால் என்னிடம் இருப்பவர்களில் பாதி பேர் உணவகத்திலும் மீதி பேர் கேட்டரிங் சமையலும் பார்த்துக்கிறாங்க. மற்றவர்களுக்கும் எப்படி சமைக்கணும்ன்னு சொல்லிக் கொடுத்திருந்தாலும், ஒவ்வொரு உணவும் தயாரான பிறகு அதே சுவை மற்றும் தரத்துடன் இருக்கிறதான்னு கவனித்துக் கொள்வேன்’’ என்றவர் இனி வரும் காலத்தில் என் சமூகத்தினை சேர்ந்தவர்கள் இது போல் ஏதாவது ஒரு தொழில் செய்து கவுரவமாக வாழ வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக உள்ளார்.

‘‘நான் இது போல் பிறந்தது என் தவறில்லை. நானும் இந்த சமூகத்தில் ஒருத்தி தான். இன்றைய சமூகத்தினர் எங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும் எங்
களைப் போல் பலர் நல்ல வேலையில் உள்ளனர். கைதட்டி காசு வாங்குவதை தவிர்த்துவிட்டு எல்லாரும் ஒரு சுயதொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும், அதற்கு நான் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த உணவகத்தினை துவங்கினேன். இப்போது மதுரையில் செயல்பட்டு வருகிறோம். அடுத்தக் கட்டமாக தமிழ்நாட்டில் பல இடங்களிலும் இது போன்ற உணவகத்தினை துவங்கி எங்க மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு’’ என்றார் ஜெயச்சித்ரா.

செய்தி: ப்ரியா

படங்கள்: வெற்றி