2020 பெண்கள்



பெண் ஒபாமா

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா தேவி ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 55 வயதாகும் கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவைச் சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம், அந்நாட்டின் முதல் பெண் துணை அதிபராகவும், நாட்டின் முதல் இந்திய-அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்கத் துணைத் தலைவராகவும் பெருமை சேர்த்துள்ளார். இவரது வெற்றி இனவாதம், பாலின வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சாதிக்கத் துடிக்கும் இளம் சிறுமிகளுக்கு உதாரணமாய் அமைந்துள்ளது.

கொரோனாவை வென்ற கேரள அமைச்சர்

கேரளாவின் சுகாதார மற்றும் சமூக நல அமைச்சரான கே.கே. ஷைலஜா, கொரோனா காலத்தில் திறமையான தலைமைக்காகவும்,  செயல்திறனுக்காகவும் Financial Timesன், மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார். இதுதவிர, ப்ராஸ்பெக்ட் பத்திரிகையின் COVID-19 இன் உலகின் சிறந்த 50 சிந்தனையாளர்களின் வெற்றியாளராகவும், COVID-19 பற்றிய விவாதத்தில் பங்கேற்க ஐநா சபையாலும் அழைக்கப்பட்டார்.

விண்வெளியில் 328 நாட்கள்

2019ல் அமெரிக்காவிலிருந்து விண்வெளிக்குப் புறப்பட்ட, 41 வயதான விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், சுமார் 328 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 2020ல் பூமிக்குத் திரும்பினார். இதன்மூலம் அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய முதல் பெண் விண்வெளி வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மனிதன் நிலவிற்குச் சென்று ஐம்பது வருடங்கள் ஆகிய நிலையில். நாசா மீண்டும் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி இந்த முறை கிறிஸ்டினா கோச் நிலவிற்குச் செல்லும் முதல் பெண் என அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோபல் பெண்கள்

இந்தாண்டு பல துறைகளில் சாதித்து நோபல் பரிசை வென்ற பதினொறு வெற்றியாளர்களில், நான்கு பெண்களும் இடம் பிடித்தனர். இலக்கியத்திற்கான நோபல் பரிசை அமெரிக்கப் பெண் கவிஞர் லூயிஸ் க்ளக் வென்றார். வேதியியலில், மரபணுக்களில் குறிப்பிட்ட மாற்றங்கள் செய்யும் வழியை கண்டுபிடித்து சாதனை படைத்ததற்காக ஜெர்மனியைச் சேர்ந்த இமானுவேல் சார்பென்டியர், அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் டவுட்னா ஆகிய  இரு பெண் விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற மூன்று விஞ்ஞானிகளில் ஆண்ட்ரியா கெஸ் என்ற பெண் விஞ்ஞானி, இயற்பியலில் நோபலை வென்ற நான்காவது பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பெண் நீதி தேவதை

ரூத் பேடர் கின்ஸ்பர்க் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக 1993 முதல் 2020ல் அவர் இறக்கும் வரை பணியாற்றினார். பெண் உரிமைக்காகத் தொடர்ந்து பல முக்கிய தீர்ப்புகள் வழங்கக் காரணமாகவும், மரண தண்டனைகள் குறைக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்தவர். அந்நாட்டின் இரண்டாவது பெண் நீதிபதி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். தனது 87வது வயதில் புற்றுநோய் பாதித்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவிட் போரில் பெண் தலைவர்கள்

பல வளர்ந்த நாடுகளே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த போது, ஜெர்மனி, நியூசிலாந்து, தைவான், பின்லாந்து போன்ற நாடுகள் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் முன்னோடிகளாக விளங்கின. இந்த நாடுகளுக்கு இருக்கும் ஒரே ஒற்றுமை, அங்கே ஆட்சி செய்வது பெண் தலைவர்கள் என்பதுதான். நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் எலிமினேஷன் (நீக்குதல்) என்ற தந்திரத்தைப் பயன்படுத்தி வைரசைக் கட்டுப்படுத்தினார்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், கொரோனா பாதித்தவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி, அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களையும் கண்டறிந்து சோதனை செய்து, கொரோனா உயிரிழப்புகள் பெரிதும் ஏற்படாமல் தடுத்தார். தைவானின் ஜனாதிபதியான சாய் இங்-வென், எல்லையில் கடுமையான விதிமுறைகளை அறிவித்தார். நோய்த்தொற்று ஆரம்பிக்கும் முன்பே மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருந்தார்.

உலகிலேயே இளம் பிரதமரான சன்னா மரின், பின்லாந்தில் சமூக வலைத்தளத்தில் பிரபலங்களுடன் இணைந்து மக்களுக்கு எளிய மொழியில் இந்
நோயின் தீவிரத்தை எடுத்துரைத்து, ஒற்றுமையுடன் கோவிட் தடுப்பு வழிமுறைகளை கட்டமைத்தார்.

பார்வை சவாலை வென்ற கலெக்டர்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் மதுரையைச் சேர்ந்த பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவி, பூரண சுந்தரி குடிமைப்பணிக்குத் தேர்வாகி சாதனைப் படைத்தார். இவரை நேர்முகத்தேர்விற்காக, ஐ.பி.எஸ் அதிகாரி சைலேந்திர பாபு பயிற்சியளித்துள்ளார். மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள மணிநகரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன்- ஆவுடைதேவி தம்பதியின் மகளான பூரண சுந்தரிக்கு அவரின் பெற்றோர், கண்களாக இருந்து பாடங்களை வாசித்துள்ளனர்.

சப் கலெக்டரான கேரள பழங்குடியினப் பெண்

கேரளாவில் பழங்குடியினத்தை சேர்ந்த தன்யா சுரேஷ் முதல் பெண் துணை ஆட்சியராக பொறுப்பேற்று சாதனை படைத்தார். இவரது பெற்றோர் தினக்கூலித் தொழிலாளர்கள். வயநாட்டின் பொழுதனா பஞ்சாயத்தைச் சேர்ந்த தன்யா, குறிச்சியா என்ற பழங்குடியினத்தை சேர்ந்தவர்.

நாடோடி சமூக முதல் மருத்துவ மாணவி

பழங்குடியினராக அங்கீகரிக்கப்படாத லம்பாடி சமூகத்தைச் சார்ந்தவர் சௌமியா. அவர் சமூகத்தில் அடிப்படை கல்வி வசதியே கேள்விக்குறியான சமயத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மதுரை மருத்துவ கல்லூரியில் இணைந்துள்ளார். அரசு அறிவித்த உள் ஒதுக்கீடு மூலம்,
செளமியாவிற்கு மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

கிட் ஆஃப் தி இயர்

2020ம் ஆண்டிற்கான சிறந்த குழந்தையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதாஞ்சலி ராவ் தேர்வு செய்யப்பட்டார். 15 வயதாகும் கீதாஞ்சலி, அமெரிக்காவின் இளம் விஞ்ஞானி. இவரது ‘கைன்ட்லி’ என்ற செயலி, ஆரம்பத்திலேயே ஆன்லைன் துன்புறுத்தல்களைக் கண்டறிந்து எச்சரிக்கக் கூடியது. மேலும் இவர் உருவாக்கிய டெத்திஸ் என்ற கருவி, நீரில் இருக்கும் மாசு குறித்த தகவல்களை தெரியப்படுத்த உதவுகிறது.

தந்தையை 1200 கி.மீ சைக்கிளில் ஓட்டிச் சென்ற மகள்

ஊரடங்கு உத்தரவால் பலரின் வாழ்வாதாரம் பாதித்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு  இந்த ஊரடங்கு பெரும் அடியாக இருந்தது. வேலையை இழந்து, உணவுக்கே பஞ்சம் என்ற நிலையில், மடிந்தாலும் தங்கள் சொந்த மண்ணில் உற்றார் உறவினர் மத்தியில் உயிர்விட வேண்டும் என்று, ஆயிரக்கணக்கான மக்கள் பல ஆயிரம் கி.மீ நடந்தே தங்கள் சொந்த ஊருக்குச் சென்றார்கள். பதினைந்தே வயதான ஜோதி, தில்லியில் வேலையை இழந்து காயமடைந்த தன் தந்தையை ஆறு நாள் பயணமாக  சைக்கிளில் 1200 கிலோமீட்டர் கடந்து பீகாரில் உள்ள கிராமத்திற்கு வந்தடைந்தார்.

பல்வேறு நாட்டுப் பொங்கல்

பொங்கல் தமிழர்களின் பண்டிகை. ஆனால் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வடஅமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியஸ் எனத் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும், பொங்கல் பண்டிகை வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன.

*இலங்கையில் பொங்கலுக்கு மறுநாள் பிள்ளையார் பொங்கல் எனக் கொண்டாடப்படுகிறது.
*கனடா, அமெரிக்காவில் ‘தாங்க்ஸ் கிவ்விங்டே’ என்ற பெயரில், இயற்கை அன்ைனக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
*ஜப்பான் நாட்டில் ‘குதிரைக்குப் பொங்கல்’ வைத்து அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
*கிரேக்க நாட்டில் ‘ஸ்மோஸ் போரியா’ என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
*ஆப்பிரிக்க மக்கள் ‘கவான்ஸ்கர்’ என்ற பெயரில் பொங்கல் விழா கொண்டாடுகின்றனர்.
*மேற்கு ஆப்பிரிக்காவில் ‘ஹோமோவா திருவிழா என்றும், முதல் பழங்கள் திருவிழா என்றும் கொண்டாடப்படுகிறது.
*இஸ்ரேலியர்கள் ‘சுக்கோத்’ என்ற பெயரில் ஏழு நாட்கள் பொங்கல் திருவிழா கொண்டாடுகின்றனர்.
*‘மசா சூகெட்ஸ்’ பகுதியில் கிரான்பெரி ஹார்வெஸ்ட் பெஸ்டிவெல் என்ற பெயரில் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.
*‘கங்கா சாகர் மேளா’ என்ற பெயரில் மேற்கு வங்காளத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
*அசாம், மணிப்பூரில் ‘போகாலி மிகு’ என்ற பெயரில் அறுவடைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
*காஷ்மீரில் ‘கிச்சரி அமாவாசை’ என்ற பெயரில் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
*‘லோரித் திருநாள்’ என்ற பெயரில் பஞ்சாபியில்  யாகங்கள் நடத்தி, பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.
*வடநாட்டில் போகிப்பண்டிகைபோல், தீயில் அவல், இனிப்பு, பொரி இவைகளைப் போட்டு பொங்கல் விழாக் கொண்டாடப்படுகிறது.
*மராட்டிய  மாநிலத்தில் போகி, சங்கராந்தி, கிங்கராந்தி என மூன்று நாட்கள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
*குஜராத்தில் புனித விழாவாகக் கொண்டாடுவர். அன்று பட்டம் விட்டு மகிழ்வர்.

- இல.வள்ளிமயில், மதுரை.

அன்னம் அரசு