நலம் காக்கும் வெந்தயம்



 வாசகர் பகுதி

பொதுவாக எல்லாருடைய அஞ்சறை பெட்டியிலும் வெந்தயம் இல்லாமல் இருக்காது. இது மசாலா பொருள் மட்டுமல்ல, மூலிகையும்கூட. பழமையான மருத்துவச் செடியான வெந்தயம் நம் உடலுக்கு மட்டுமல்ல நம் அழகிற்கும் பல விதமான மாய வித்தைகளை செய்யக்கூடியது. அது என்ன என்று பார்க்கலாம்…

*வெந்தயத்தில் உள்ள புரதம் மற்றும் நிக்கோடினிக் முடி உதிர்வதைத் தடுப்பதும் மட்டுமில்லாமல் பொடுகு பிரச்னையில் இருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள லெசிதின் முடி வறண்டு போகாமல் இருக்கவும், பளபளப்பாகவும் மற்றும் முடியின் வேர் பகுதியை வலுவாக வைத்துக்கொள்ள உதவும்.

*வெந்தயத்தை இரவே ஊற வைக்கவும். மறுநாள் அதை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும். இதனை தலைமண்டையில் தடவி பிறகு குளித்தால் தலைமுடி உதிர்வதை கட்டுப்படுத்தி முடி வலுவாக இருக்க உதவும்.

*வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து அரைத்து தலையில் தடவினால் பொடுகு பிரச்னை இருக்காது. முடியும் பளபளப்பாக இருக்கும்.

*மருதாணியை தலையில் தடவும் முன் அதனுடன் சிறிதளவு வெந்தய பவுடரை சேர்த்து கலந்து தடவினால் முடி வறண்டு போகாமல் பாதுகாக்கும்.

*வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரைக் கொண்டு தலைமுடி அலசினாலும் முடி பளபளப்பாகும்.

*வெந்தயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால், அது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் வல்லமை கொண்டது. மேலும் இருதய பிரச்னை, மூட்டுவலி மற்றும் உடல் பருமன் போன்றவற்றுக்கு நல்ல மருந்து. இதனை தினமும் ஊற வைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே தண்ணீர் கொண்டு முழுங்கலாம்.

*நீரிழிவு பிரச்னை உள்ளவர்களின் டயட்டில் ஏதாவது ஒரு வகையில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது அவசியம். இதனை பொடித்து மோருடன் கலந்து சாப்பிடலாம். பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை உள்ள பெண்களும் இதனை சாப்பிட்டு வந்தால் பிரச்னை நீங்கும்.

*வெந்தயக்கீரையை சமைத்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது. கீரையில் போலிக் அமிலம், விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் கே, பொட்டாசியம், கால்சியம், இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

*வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கும் கெட்ட கொழுப்பு நீக்கும். மேலும் கொழுப்பு நிறைந்துள்ள உணவில் இருக்கும் டிரைகிளரசைட் என்ற கொழுப்பினை ரத்தத்தில் சேர்க்காமல் பாதுகாக்கும்.

*இதில் உள்ள அமினோ அமிலம், உடலில் இன்சுலின் சுரப்பதை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டோடு வைத்துக் கொள்ள உதவும்.

*நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும்.

*அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலிக்கு வெந்தய கஷாயம் மிகவும் நல்லது. வெந்தய பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

- கவிதா சரவணன், திருச்சி.

பொதுவாகவே இட்லி என்றால் குழந்தைகள் முகம் சுளிப்பார்கள். அதனால் அவர்கள் விரும்பும் வகையில் வித்தியாசமான இட்லிகளை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

வெந்தய இட்லி

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி - 2 கப், வெந்தயம் - 1 டீஸ்பூன், உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

செய்முறை

அரிசியையும், வெந்தயத்தையும், தனித்தனியாக முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். அரிசியைத் தனியாகவும், வெந்தயம், உளுந்தம்பருப்பு இரண்டையும் தனியாகவும் அரைத்து, உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலந்து, புளித்தவுடன் வேண்டிய வடிவில் இட்லி வார்க்கவும். நல்ல மணமுடைய, உடலுக்கு குளிர்ச்சியைத்தரும். ருசியாக அனைவரும் உண்ணலாம்.

மிக்ஸ்டு இட்லி

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம்பருப்பு - தலா ½ கப், அரிசி - ½ கப், பெருங்காயம் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், சிறிது மல்லி மற்றும் கறிவேப்பிலை  - நறுக்கியது, பச்சை மிளகாய் - 2, (பொடியாக நறுக்கியது), உப்பு -தேவைக்கு.

செய்முறை

பருப்பு வகைகள் மற்றும் அரிசியை களைந்து (2 மணி நேரம் ஊற வைத்தது). அதனுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடுகு, மல்லி, பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றைத் தாளித்து மாவில் கலந்து, இட்லித்தட்டில் ஊற்றி இட்லிகளாக வார்த்து எடுக்கவும். சத்துள்ள இட்லி தயார்.

வெஜிடபிள் இட்லி

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி  - 1 கப், உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன், வெந்தயம் - ½ டீஸ்பூன், நறுக்கிய காய்கறிக்கலவை (கேரட், உருளை, பீன்ஸ், குடைமிளகாய், தக்காளி) - 1 கப், பச்சை மிளகாய் - 2, நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டு, மல்லி, கறிவேப்பிலை சிறிது, உப்பு - தேவைக்கு.தாளிக்க: கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ½ டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை

புழுங்கலரிசி தனியாகவும், வெந்தயம் மற்றும் உளுந்தம்பருப்பை சேர்த்து, ஊற வைத்து, அரைத்து உப்புச் சேர்த்துப் புளித்தவுடன் எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன், கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, மல்லி, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அதனுடன் பொடித்த காய்கறிக் கலவையைச் சிறிது உப்பு சேர்த்து, நன்கு வதக்கி எடுத்துக்கொள்ளவும். இட்லி மாவுடன், வதக்கிய காய்கறிக் கலவையைக் கலந்து இட்லி வார்க்கவும். பின் சுவைத்தால், இட்லியின் ருசியோ தனி.

கருப்பட்டி இட்லி

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி - 4 கப், உளுந்தம்பருப்பு - 1 கப், கருப்பட்டி- 1 கப் (பொடித்தது), பாசிப்பருப்பு - 1 கப், நெய் - 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1 கப், ஏலப்பொடி - 1 டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை.

செய்முறை

அரிசி, உளுந்தைக் களைந்து ஊற வைத்து, உப்பு போட்டு, இட்லி மாவாக அரைத்துக்கொள்ளவும். பாசிப்பருப்பை சுத்தம் செய்து, சிவக்க வறுத்து, பாதியளவு வேக விடவும். தண்ணீரை வடிகட்டி, அதனுடன் பொடித்த கருப்பட்டி, தேங்காய்த் துருவல் ஒரு டீஸ்பூன் நெய், ஏலப்பொடி எல்லாம் கலந்து இறக்கி விடவும். இட்லித்தட்டில் நெய் தடவி, சிறிது மாவை விட்டு, மத்தியில் பாசிப்பருப்பு கருப்பட்டிக் கலவையை வைத்துப் பரப்பி, மேலும் சிறிது மாவை விட்டு, இட்லி வெந்ததும் எடுத்துச் சாப்பிட்டால் சத்துள்ள, சுவையான எளிமையான இட்லி தயார்.

- இல.வள்ளிமயில், மதுரை.