நியூஸ் பிட்ஸ்மிதக்கும் திரையரங்கு

கொரோனாவின் காலகட்டத்தில் திறந்தவெளியில் அமைந்துள்ள ட்ரைவ்-இன் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில், பாரிஸில் செய்ன் ஆற்றைத் திரையரங்காகவே மாற்றியிருக்கின்றனர். அங்கு மக்கள் படகில் அமர்ந்து பாப்கார்ன் சாப்பிட்டபடியே திரைப்படம் பார்க்கலாம். திறந்த வெளியில் அமைந்திருக்கும் இந்த திரையரங்குகள் மூலம் சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்படுகிறது.

ஜன்னல் பராக்

இன்னும் சில மாதங்களுக்கு வெளியூர் எங்கும் செல்ல முடியாது என்கிற சூழ்நிலையில், இப்போது வீட்டிலிருந்தபடியே ஸ்வீடன் நாட்டில் கடற்கரையையும், ஜெர்மனியின் மலைகளையும் இந்தோனேஷிய தீவுகளையும் ரசிக்கலாம். window-swap.com என்ற இணையதளம் மூலம் உலகின் எந்த பகுதியிலும் வசிக்கும் ஒருவரின் ஜன்னல் வழியே இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். இந்தியத் தம்பதிகள் சோனாலியும் வைஷ்னவ்வும் இணைந்து கொரோனா காலத்தில் இந்த புது முயற்சியை முன்னெடுத்துள்ளனர். இந்த இணையதளத்தில் நம் வீட்டு ஜன்னல் வழி காட்சிகளையும் பதிவு செய்து அனுப்பலாம்.

பிஸ்கெட் டீ கப்

கோன் ஐஸ்கிரீமை சாப்பிட்டுவிட்டு எவ்வாறு அந்த கோனை சாப்பிடுகிறோமோ அதே போல் டீ குடிக்கும் கப்புகளை சாப்பிடலாம். மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள தேநீர் கடை ஒன்றில், டீ குடித்து முடித்தவுடன் அந்த கப்பினை தூக்கி எறியாமல், அப்படியே கடித்து சாப்பிடலாம். பிஸ்கெட் போன்ற சுவையில் இருக்கும் இந்த கப்புகள் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வரை தேநீரின் வெப்பத்தினை தாங்கும் என்பதால் கப்புகள் எளிதில் கரையாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் நெகிழி அல்லது மெழுகு தடவிய தேநீர் கோப்பைகளுக்கு பதில் இந்த புது முயற்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் - பாதிக்கப்பட்ட பெண்ணுக்குச் சிறை

பீகாரில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட பெண், நீதிமன்றத்தில் தன் தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது உணர்ச்சிவசப்பட்டுக் கத்தியதால் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட, அப்பெண், நீதிபதி வருகைக்காக மூன்று மணி நேரம் காத்திருந்த போது, தன் பாதிப்புக்கு காரணமானவனும் அதே இடத்தில் இருந்தது அப்பெண்ணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.  மேலும், வாக்குமூலம் பதிவு செய்ய அவரை தனியே அழைத்து சென்ற போது, அதிகாரிகள் கூறியது அவருக்குப் புரியவில்லை.

இதனால் தனக்குத் துணையாக வந்திருக்கும் பெண்ணையும் உள்ளே அனுமதிக்குமாறு கூறி சண்டை போட்டுள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து தகாத வார்த்தைகள் பயன்படுத்தி பேசியதற்காக கைது செய்யப்பட்டார். பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு பெண், அச்சம்பவத்தை விவரிக்கும் போது உணர்ச்சிவசப்பட்டால், அதிகாரிகள் அதை பொறுமையுடன் அணுக வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தாயைக் காண சுவர் ஏறிய மகன்

பாலஸ்தீனத்தில் வாலிபர் ஒருவர், மருத்துவமனை சுவரைத் தாண்டி குதித்து, குழாய் வழியே மேலே ஏறி,  கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் தாயை தினமும் கவனித்து வந்துள்ளார். நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட தாயை தனியே விட மனமில்லாமல், இரவு பகலாக ஜன்னலருகே அமர்ந்து தாய்க்குத் துணையாய் இருந்து, அவர் தூங்கிய பின்னரே கீழே இறங்குவார். ஆனால் கடைசியில் கொரோனா போராட்டத்தில் அவரது தாய் இறந்துவிட்டார்.

ஸ்வேதா கண்ணன்