ஊரடங்கில் அதிகம் தாக்கும் Diabetic Foot Attack



இதுபற்றி,  பதினைந்து வருடங்களாக நீரிழிவு பிரிவில் நிபுணராக விளங்கும் டாக்டர் பரணிதரன் விரிவாக விவரிக்கிறார். கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள இவர், நீரிழிவு நோயாளிகள் பலரும் கடந்த இரு மாதங்களாக பாத நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவதாகக் கூறுகிறார்.

ஊரடங்கின் போது வழக்கமான சர்க்கரை அளவு பரிசோதனைகள் செய்யாமல் விட்டதால் இந்த சிக்கல் அதிகரித்திருப்பதாக கூறும் மருத்துவர், பாத நோய் வராமல் தடுக்க அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும் போதே சிகிச்சை அளிக்கப்பட்டால் விரைவில் குணமடைய முடியும் என்கிறார்.

பாத நோய் அறிகுறிகள்

*கால்களில் உணர்ச்சி மற்றும் ரத்த ஓட்டம் இழப்பு
*கால் எரிச்சல்
*கால் அரிப்பு
*தோல் நிற மாற்றம்
*கால்/கணுக்காலில் வலி அல்லது வீக்கம்
*பாதங்களில் வெடிப்பு/புண்கள்

பாத நோய் தாக்கும் போது இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் தென்படலாம். அப்போது உடனே சிகிச்சை எடுப்பதன் மூலம் கால்கள் மேலும் சேதமடையாமல் காக்க முடியும். இது சர்க்கரை நோயாளிகள் அனைவரையும் தாக்குவது இல்லை. பெரும்பாலும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்காமல் இருக்கும் போது இந்த நோய் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
 

பாத நோய் பாதிப்பு மூன்று நிலைகளில் முதலில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ரத்த நாளங்கள் தடிமனா கின்றன. இதனால் ரத்த ஓட்டம் குறைகிறது. ரத்தவோட்டம் பாதங்களில் குறையும் போது காலில் உணர்ச்சிகள் இழக்கும் நிலை உருவாகும்.

இந்த பிரச்சனையை கவனிக்காமல் விடும் போது, காலில் காயங்கள் ஏற்பட்டாலும் உணர முடியாமல் உணர்ச்சி யை இழக்க நேரிடும் இரண்டாவது, நரம்பியல் பிரச்சனைகள். காலில் எரிச்சல், அரிப்பு, கூச்ச உணர்வு போன்ற அறிகுறிகள் உண்டாகும். இதை “crying for dying” என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவருக்கு தெரியப்படுத்துவது நல்லது.

மூன்றாவதாக, பல மாதங்களாக உயர் சர்க்கரை அளவையும் நரம்பியல் அறிகுறிகளையும் கவனிக்காமல் விடும்போது, கால்கள் உணர்ச்சிகளை இழந்துவிடும். HBA1C அளவும் அதிகரித்து பாதங்களில் அல்சர் புண்கள் உருவாகும். மேலும் சிறு காயங்கள் உருவானாலும், அதை உணராமலேயே பெரிய பாதிப்பு ஏற்படுத்திவிடும். இந்த நரம்பியல் சிக்கல்களில் கால் வலி பெரிதாக இல்லாவிட்டாலும், தோல் நிறம் மாறுதலில் தொடங்கி பாத வெடிப்புகள் வரை பாதிப்புகள் உண்டாகும்.

தோலில் ஆரம்பிக்கும் பாதிப்பு, எலும்பிற்குச் சென்று ரத்தத்திலும் பாதிப்பை உண்டாக்கி செப்டிசீமியா நோயாகிறது. இது ரத்த அழுத்தத்தை குறைத்து septic shock என்ற நிலைக்கு ஒருவரைத் தள்ளி நிலைகுலையச் செய்துவிடும். இந்த நிலையில் அவசர மருத்துவச் சிகிச்சை தேவை.  செயற்கை சுவாசத்தின் உதவியும் தேவைப்படலாம்.

பாத நோய் வராமல் தடுக்க முதலில் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கால்களைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். சர்க்கரை நோய் அளவு சீராக இல்லாதவர்கள், ஆரம்பத்தில் தென்படும் அறிகுறிகளைப் பெரிதாக எடுத்துக்கொள்வது கிடையாது. முகப் பராமரிப்பு போலவே கால் பராமரிப்பிலும் கவனமாக இருக்க வேண்டும். கால்களை மருத்துவர்கள் இரண்டாவது இதயம் எனக் குறிப்பிடுகின்றனர். அதனால் தான் ஆர்ட் அட்டாக் போலவே பாத நோயை ஃபூட் அட்டாக் என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர்.

அறிகுறிகள் இல்லாவிட்டாலும், நீரிழிவு நோயாளிகள் அனைவருமே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரை அளவை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். தினமும் கால்களை பராமரித்து ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா எனக் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு முறை பரிசோதனைக்காக மருத்துவரிடம் செல்லும் போதும் கால்களையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும் க்ரீம்களை பாதங்களில் பயன்படுத்தி வரலாம்.  வெளியிலும் வீட்டிற்குள்ளும் காலணிகள் கட்டாயம் அணிய வேண்டும். நகங்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.அடுத்து அறிகுறிகள் ஆரம்பித்த நிலையில், உடனடி சிகிச்சை எடுக்க வேண்டும். சிறுநீரக கோளாறு போன்ற வேறு உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

ஊரடங்கில் இதன் பிரச்சனை அதிகரிக்கக் காரணம், நீரிழிவு நோயாளிகள் பலரும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமலே மருந்தளவை மாற்றி எடுத்துக்கொள்கின்றனர். பலரும் இந்த நேரம் பரிசோதனை செய்துகொள்ளாமல், சர்க்கரை நோய் அதிகரித்து பாத நோய் உருவாகுகிறது. மேலும் கொரோனா தொற்று பயம் காரணமாகவும் மன அழுத்தம் அதிகரித்து Cortisol என்ற ஹார்மோன் சுரக்கிறது.

இதன் மூலமாகவும் சர்க்கரை அளவு அதிகமாகும். அனைவரும் வீட்டில் இருப்பதாலும் முறையான டையட்டை பின்பற்றாமல் பாதிப்புகள் அதிகரிக்கிறது.வெள்ளை உணவுகளான அரிசி, மைதா, சர்க்கரையைத் தவிர்த்து, பல நிறங்களுடைய கலர்ஃபுல் கீரை வகைகள், காய்கள், பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். வீட்டிலேயே குளுக்கோமீட்டர் பயன்படுத்தி சர்க்கரை அளவைப் பரிசோதித்து வரலாம்.

உடற்பயிற்சியைப் பொறுத்தவரை, பாதநோய் அறிகுறிகள் இருப்பவர்கள் நடைப்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும். கால்களுக்கு ஓய்வுக் கொடுத்து மற்ற
பயிற்சிகள் செய்யலாம்.நீரிழிவு நோயின் தீவிரத்தை உணர்ந்து, இளமையிலேயே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி வந்தால், நோய் தீவிரத்தைக் குறைத்து, உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டால் காக்க முடியும் என்கிறார் மருத்துவர் பரணிதரன்.

ஸ்வேதா கண்ணன்