நியுஸ் பைட்ஸ்ஐ.நாவில் கேரள சுகாதார அமைச்சர்

இந்தியாவே கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த கடுமையாகப் போராடிவரும் நிலையில், கேரளா ஆரம்பத்திலேயே திறம்படச் செயல்பட்டு, நோயின் தீவிரம் அதிகரிக்காமல் கட்டுக்குள் கொண்டு வந்தது. திறமையாகச் செயல்பட்ட கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜாவே இதற்கு முக்கிய காரணமாவார். ஐநா சபை, கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் வெற்றியுடன் விளங்கியவர்களை கௌரவிக்கும் விழாவை மெய் நிகர் வாயிலாக நடத்தியது. அதில் இந்தியாவிலிருந்து, அமைச்சர் ஷைலஜாவை அழைத்து, ஐ.நா பாராட்டியது.

நைஜீரியாவில் பெண் வழக்கறிஞர்கள்  

நைஜீரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகம். 30 பேர் தங்கக்கூடிய சிறை அறையில் நூற்றுக்கும் அதிகமானோர் வாழும் நிலைமை. அங்கு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 80 சதவீத கைதிகள்,  சிறிய குற்றங்களை புரிந்தவர்கள். அவர்களின் வழக்கு விசாரணைக்கு வரவே மூன்று ஆண்டுகள் கூட ஆகலாம். அது, அக்கைதிகளின் குற்றத்திற்கான தண்டனைக் காலத்தைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும்.  அதனால், இவர்களுக்கு உதவ, அனைத்து மகளிர் வழக்கறிஞர்கள் குழு ஒன்று, தற்போது களமிறங்கியுள்ளது.

விமானப்படை அதிகாரியான டீ வியாபாரியின் மகள்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது ஆஞ்சல் கங்வால், ஒரு தேநீர் வியாபாரியின் மகள். சில வருடங்களுக்கு முன், பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, இந்திய விமானப்படை வீரர்கள் மக்களைக் காப்பாற்றியுள்ளனர். இதைக் கண்ட ஆஞ்சல், தானும் ஒரு விமானப்படை அதிகாரியாக  வேண்டும் என்ற கனவு ஆழமாக விதைக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோரின் ஆதரவுடன், கடுமையாகப் போராடிப் படித்து, இந்திய போர் விமானப்படை பைலட்டாக தேர்வாகியுள்ளார்.

சாதிக்கொலை, தந்தையின் பாசமா?

தெலுங்கானாவில், பிரனாய் குமார் கொலை சம்பவத்தைப் படமாக்கியுள்ள இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ”மர்டர் ” திரைப்பட போஸ்டர் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. பிரனாய் குமாரும், அமுருதாவும் காதலித்து,  2018ல் திருமணமும் செய்துகொண்டனர். பிரனாய் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அமுருதாவின் தந்தை, திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  திருமணத்திற்குப் பின் தொடர்ந்து மிரட்டியும் வந்துள்ளார்.

இதனிடையே அமுருதா கர்ப்பமாகி மருத்துவ பரிசோதனைக்கு பிரனாயுடன் சென்ற போது, அமுருதாவின் தந்தை ஆட்களை வைத்து, பிரனாயை சரமாரியாகத் தாக்கியதில், பிரனாய் கொலை செய்யப்பட்டார். இந்த சாதியக் கொலையை, ராம் கோபால் வர்மா தந்தை மகள் மீது வைத்திருக்கும் அதீத அன்பு என்று குறிப்பிட்டு, தந்தையர் தினத்தில் வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

ஆக்ஸ்போர்டு பட்டம் பெற்ற மலாலா

எட்டு ஆண்டுகளுக்கு முன், 15 வயதில், பாகிஸ்தானில் பெண் கல்விக்காகப் போராடி, தாலிபான் அமைப்பினரால் சுடப்பட்டவர் மலாலா யோசப்சையி. இதன் மூலம் உலக மக்களால் அறியப்பட்டு, அமைதிக்கான நோபல் விருதையும் பெற்றார். பெண்கள் கல்வி கற்பதே தவறு என்ற சமூகத்தில் பிறந்து வளர்ந்து, உலகிலேயே சிறந்த கல்வி அமைப்பான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவர், அரசியல், தத்துவம் மற்றும் பொருளாதார பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்று, இந்தாண்டு படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

ஆன்லைன் வகுப்பை தட்டிப்பறிக்கும் ஹேக்கர்கள்

கொல்கத்தாவில், ஆறாம் வகுப்பு மாணவிகள் பங்கேற்ற ஆன்லைன் வகுப்புகளில் புகுந்த சில ஹேக்கர்கள், மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்டுள்ளனர். வகுப்பின் நடுவே திடீரென, தகாத வார்த்தைகளில் கமெண்டுகள் பதிவிட்டும், மாணவிகளுக்குக் கொலை மிரட்டல்களும் பாலியல் அச்சுறுத்தல்களும் கொடுத்துள்ளனர். இதைக் கண்டு திடுக்கிட்ட மாணவியர், உடனே பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க, ஹேக்கர்கள் அமைதியாகியுள்ளனர். இதையடுத்து, ஆன்லைன் வகுப்பை நிறுத்தி, ஹேக்கர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்வேதா கண்ணன்