நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்! ஐயப்பன் ராஜேந்திரன் (STRATEGIZER FRANCHISE CONSULTING SERVICES)
முழுமையான வழிகாட்டல்
ஒவ்வொரு அத்தியாயத்திலும் தொழில்முனைவோருக்கான அடிப்படை வழிகாட்டல் மற்றும் அவர்கள் படிப்படியாக எவ்வாறு தங்கள் தொழிலில் வளர்ச்சி அடைய வேண்டும் முதல் ஊழியர்களை நடத்தும் முறைகள் என அனைத்தும் குறித்து ஆராய்ந்தோம். தொழில் ஒரு பக்கம் விருத்தி அடைந்தாலும், அதனை வெற்றிகரமாக நடத்தும் தொழில் முனைவோருக்கான ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்!
 சொந்த தொழில் தொடங்கும் நீங்கள் உங்களுக்கான ஒரு தனி தோற்றத்தை உருவாக்குவது அவசியமானது. ஒருவர் தன் உடை மூலம் தனது துறை முதல் தன் அரசியல் நிலை வரை வெளிப்படுத்தலாம். 2012ல் மகளிர் தினத்தின் நூற்றாண்டை முன்னிட்டு ஃபோர்ப்ஸ் இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டது. உலகமெங்கும் பெண்கள் மீதான அடக்குமுறையை தங்களது உடைகள் மூலமாக எதிர்ப்பை வெளிப்படுத்திய பெண்களை பற்றிய கட்டுரை அது. உடை என்பது ஒரு நவநாகரிக சூழலில் உங்கள் உளவியலை முதற்கொண்டு தீர்மானிக்கும்.
 மாற்றங்கள் உங்களுக்கானவை மட்டுமே
ஒரு விஷயத்தை நமக்கு தெளிவுப்படுத்திக்கொள்வது அவசியமானது. முன்பின் தெரியாத ஒரு நபர் உங்கள் உடையை வைத்து உங்கள் திறமையையும் குணத்தையும் முழுவதும் தீர்மானிப்பது என்பது ஒரு மூடநம்பிக்கை மட்டுமே. இருந்தும் இது தான் நடைமுறையில் நடப்பது. ஒரு பொருள் வயப்பட்ட சமூகத்தில் இத்தகைய காரணிகள் பெரிதும் விளைவுகளை மாற்றக் கூடியவை. அதனால் இன்னொருவரின் முன் முடிவுகளை நினைத்து உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. உங்கள் தொழில் சார்ந்து நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் எல்லாம் உங்களை முதலில் நிறைவு செய்கிறதா என்று யோசித்து பாருங்கள்.
உடைகள் அளிக்கும் தன்னம்பிக்கை
உங்கள் நாளை புதிதாக தொடங்குவது மிக அவசியமானது.வெளியுலகத்தைசந்திப்பதற்கு உங்களுக்கு தேவையான மனதைரியத்தை அளிப்பது உங்களை நீங்கள் முழுமையாக உணரும் தருணம்தான். தொழில் சார்ந்து புது நபர்களை சந்திக்கும் நீங்கள் முதன்மையாக உங்கள் உடையைவைத்தே மதிப்பிடப்படுவீர்கள். உடைகள் நமது உளவியலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதன் முடிவுகளை, உங்கள் உடை உங்களை பற்றி வெளிப்படுத்துவதும், உங்களைப்பற்றி உங்களுக்கே சொல்லுவதும் என இரண்டாக பிரிக்கலாம். உங்கள் தனித்துவமான தோற்றம் உங்களுக்கான சவால்களை சிறிதளவேனும் குறைக்கக் கூடியது.
உங்கள் தேர்வில் உள்ள கம்ஃபர்ட்
ஒரு நிர்வாகத்தின் கீழ் வேலை பார்ப்பவர்க்கு இருக்கும் கட்டுப்பாடுகள் எதுவும் உங்களுக்கு இருக்க போவதில்லை. ஒரு ஐ.டி ஊழியர் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஷூ அணிய வேண்டும். பெரும்பாலான செய்தி வாசிப்பவர்கள் கண்ணாடி அணிவதை தவிர்த்து காண்டாக்ட் லென்ஸ் உபயோகப்படுத்தலாம். இதேதான் விமானத்தில் ஏர் ஹோஸ்டஸ் பணியிலிருப்பவருக்கும்.
இதை போன்ற கட்டுப்பாடுகள் உங்களுக்கு யாரும் விதிக்க முடியாது. நீங்கள் அணியும் உடைகளை உங்கள் விருப்பம் மற்றும் கம்ஃபர்டிற்கு ஏற்றார் போல் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். முக்கியமான மீட்டிங் ஒன்றுக்கு செல்லும் போது எரிச்சலூட்டாத இதமான உடைகளை அணிந்து கொள்ள உங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. இந்த மாதிரியான சிறிய விஷயங்கள் உங்களை சோர்வடைய செய்யாமல், கவனம் சிதறாமல் முழுமையாக ஒரு வேலையில் ஃபோகஸ் செய்ய உதவும்.
தொழில் சார்ந்த உடைகளை அணிவது அவசியம்
உங்கள் உடை தேர்வு வெறும் ஃபேஷனாக மட்டும் இல்லாமல் அது உங்கள் வேலையை பிரதிபலிப்பதாக இருந்தால் சிறந்தது. உதாரணமாக ஈரோடு மாவட்டத்தில் சொந்தமாக நூற்பு தொழிலை தொடங்கியிருக்கும் சிவகுருநாதன் என்பவர் தனது உடை அணியும் முறைகளையும் மாற்றியுள்ளார். எப்போதும் தான் தயாரித்த உடையை மட்டும் தான் அணிகிறார் அவர்.
உங்கள் தொழிலில் போதுமான அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் உங்களுக்கான உடையை ஒரு டிசைனரைக் கொண்டு நீங்களே தயாரிக்கலாம். இதில் உங்கள் பிரத்யேக லோகோவை கூட நீங்கள் பொருத்திக் கொள்ளலாம். இத்தகைய முயற்சிகள் உங்களுக்கு தனித்த அடையாளத்தை அளிக்கும்.
எளிதாக பட்ஜெட் போடலாம்
நமது வருமானம் சிறிய அளவில் இருக்கும் பட்சத்தில் இத்தகைய காரணிகளுக்காக தனியாக செலவு செய்வது கொஞ்சம் சிக்கலானதாக தோன்றலாம். ஆனால் ஒரு சிறிய பட்ஜெட் முன்கூட்டியே தயாரித்து வைத்திருக்கும் போது இந்த நெருக்கடியை சமாளித்துவிடலாம். உடையின் தரத்திற்கு முக்கியத்துவம் வழங்குவது அவசியமானது. மாதா மாதம் ஒரு சிறிய தொகையை தனியாக ஒதுக்கி வைத்து மற்ற தேவையில்லாத செலாவணிகளை தவிர்க்கலாம்.
உங்கள் அடையாளங்களை உருவாக்குங்கள்
ஒரு வளர்ந்த நாட்டில் உடையை கொண்டு ஒருவரின் பொருளாதார நிலை, அரசியல் நிலைப்பாடு, ரசனை என பலவற்றை புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பான்மையாக மேற்கத்திய உடை அணியும் பானிதான் முதன்மையாக காணப்படுகிறது. பிற நிர்வாகங்களிடம் வேலை செய்ய விரும்பாதவர்கள், வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய விரும்பாதவர்கள் தனது சொந்த தொழிலை தொடங்குகிறார்கள். இதே மக்கள் தான் அணியும் உடையிலும் இந்த நிலையை கடைபிடித்தால் இன்னும் பாராட்டிற்குரியது. இது போன்ற சுயாதீன முயற்சிகளில் மறுபடியும் ஒரு சிறு சமூக பிரச்சனை நம்மிடம் வெளிப்பட்டால் அது பாராட்டத்தக்கது.
ஸ்டீவ் ஜாப்ஸும், ரன்வீர் சிங்கும்!
ஸ்டீவ் ஜாப்ஸ், ரன்வீர் சிங் இருவருமேயே சர்வதேச அளவில் பிரபலங்கள். இருவருமே தத்தம் தொழில் வாழ்க்கையில் வெற்றியை கண்டவர்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் தினசரி அணிந்த உடை என்னவென்று கவனித்தால்.. கருப்பு முழுக்கை டீ-ஷர்ட்டும், ஒரு ஜீன்ஸ் பேன்ட்டும்தான். இது தான் வெற்றியாளர்களின் ஆடை என்றொரு கருத்து இருக்கிறது.
அதாவது வெற்றி பெற்ற தொழில்முனைவோர் எல்லாம் ஆடை ஆபரணத்தில் நேரம் செலவழிக்க விரும்ப மாட்டார்கள். அல்லது தங்கள் ஸ்டைல் என்று ஒன்றை மக்கள் மனதில் பதிய வைத்து, அதன் வழியே தங்களை நிறுவிக் கொள்வார்கள்! ஸ்டீவ் ஜாப்ஸிடம் கேட்டால், அவர் வேறு ஒரு பதிலை சேர்ந்து சொல்லியிருப்பார்.
இந்தப் பக்கம் ரன்வீர் சிங், கண்ணை கூசும் அளவுக்கு வண்ணங்களை அணிபவர் ரன்வீர். பாவாடை அணிந்து நிகழ்ச்சிகளுக்கு செல்வது என தைரியமாக எக்ஸ்பெரிமெண்டும் செய்வார். இந்த இரண்டு ஆளுமைகளின் ஆடைத் தேர்வும், ஸ்டைலுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத் தான் செய்கிறது. எனில், இவர்கள் இருவருக்கும் பொதுவாக இருக்கும் அந்த ஒரு விஷயம் எது? தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் திறமை.
உண்மையில், தொழில்முனைவோர் கோட் சூட்டில்தான் திரிய வேண்டும் என ஒரு கட்டாயமும் இல்லை. உங்களை எளிதாக எந்த உடையில் வெளிப்படுத்திக் கொள்ள முடிகிறதோ - எந்த உடை அணிந்தால் உங்களுக்கு சவுகரியமாக இருக்கிறதோ அதை அணியுங்கள். ஒரு முழுக்கை சட்டைப் போட்டு மடித்து விடுங்கள், இன் செய்யா விட்டாலும் பரவாயில்லை!
அழகாய் ஒரு குர்தாவும், லெக்கின்ஸும் அணியுங்கள்! புடவை கட்டுங்கள்! சுடிதார் அணியுங்கள்! முழு பாவாடையும், சட்டையும் கூட போடுங்கள்! நீங்கள் யார் என்பதை அது உலகுக்கு சொல்வதாக இருந்தாலே போதும்!
|