ப்ரியங்களுடன்...



பெண் போராளி அன்னை மீனாம்பாள் அவர்களைப்பற்றி படித்ததும் வியப்பில் ஆழ்ந்து போனேன். அன்றைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டிற்கு வெளியே வருவதற்கே தடை போடப்பட்ட காலத்தில், போராட்டங்களில் பங்கேற்றும், பலவித உயரிய பதவிகளை ஏற்று நடத்தி பெருமை வாய்ந்த இத்தகைய சீரிய பெண்மணியைப்பற்றி நாங்கள் அறிய செய்தமைக்கு மிக்க நன்றி.
- சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.

‘கருப்பு துரை’ என்ற படத்தின் வாயிலாக அனைவரின் கவனத்தை ஈர்த்து ஆச்சரியப்பட வைத்த பெண் இயக்குநர் மதுமிதாவின் பேட்டி சிந்திக்கும்படி இருந்தது. மாறுபட்ட சிந்தனைகளோடு யதார்த்தமான படங்களை படைக்கும் வல்லமை படைத்த அவர் திரைத்துறையில் உயரிய விருதுகளைப் பெறுவார்.
- அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை.

‘நியூஸ் பைட்ஸ்’ல் இடம் பெற்ற தகவல்கள் அனைத்தும் மிகவும் உபயோகமாக இருந்தது. ‘கிச்சன் டைரீஸ்’ ஒவ்வொரு இதழிலும் என்னை மிகவும் ஈர்க்கும் பகுதி. நன்றி!
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

‘தென்னிந்தியாவின் அடையாளம் - சாம்பார்’ எனும் கட்டுரையில், புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜென் தடுக்கும் ஆற்றல் தருவது சாம்பாரிலுள்ளது எனும் தகவல் புதியதாய் உள்ளது. நல்ல தகவல் தந்தமைக்கு படைப்பாளர் அவர்களுக்கு நன்றிகள்.
- பூங்கோதை, வில்லிபுத்தூர்.

மார்கழியின் மகத்துவத்தையும் அந்த மாதத்தில் நடைபெறும் சிறப்பு மிகுந்த விரதமுறைகளும் மிகச்சிறப்பாக வழங்கியது. மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது. மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் கோலங்கள் பற்றிய செய்திகளும் சூப்பர்...
- கே.விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி.

டிஜிட்டல் திருட்டு பற்றிய கட்டுரை படித்ததும் நல்ல தெளிவு ஏற்பட்டுள்ளது. தகவல்களை சேகரித்து வைப்பதில் கவனம் வேண்டுமென்பதை உணர்ந்துகொண்டோம். பள்ளி மாணவிகள் தண்ணீர் அருந்த பெல் அடித்து குடிக்கச்செல்வது பாராட்டுக்குரியது. இங்கும் ஒவ்வொரு
பள்ளியிலும் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய விஷயம் என்றால் மிகையில்லை.
- மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

‘ஆரோக்கிய வாழ்விற்கு முட்டை’ சாதாரண முட்டையில் இத்தனை விசேஷமா... எத்தனை முட்டைகள் சாப்பிடலாம். யார் சாப்பிடக்கூடாது என்று தெள்ளத் தெளிவாக டாக்டர் போல கூறியது மிகவும் பயனுள்ளது.
- பொன்னியம்மன் மேடு வண்ணை கணேசன், சென்னை.

குறைகளை நிறைகளாக்கி வாழ்பவர்களுக்கு என்றும் வெற்றி பாதை உள்ளங்கையில் என்பதை மாற்றங்களின் முயற்சியினால் மெய்ப்பித்து விட்டார் லட்சுமி பிரபா.
- கவிதா சரவணன், ரங்கம்.

எளிமையான, ஆனால் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து, மின்னி மறைந்துபோன சீதாலட்சுமி பற்றிய ‘செல்லுலாய்ட் பெண்கள்’ செய்திகள், ரசிக்க வைத்தன.
- அனிதா நரசிம்மராஜ், மதுரை.