ப்ரியங்களுடன்...



மார்கழிக்கு முன் தீப ஒளியேற்றி வைத்து வரவேற்கும் மாதம் கார்த்திகை ஆகும். கார்த்திகை மாத சிறப்புகள் பற்றி வந்த செய்திகள் தோழிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் ஆன்மிக நிறைவைத் தந்தது.
தீபாவளிப் படங்கள் பிகிலும், கைதியும் பாராட்டப்படும் வேளையில் நடிப்பு ராட்சசியும் நடன ராட்சசியும் மனதில் நிற்கிறார்கள் என்று ஊக்கப்படுத்தி, உறுதிப்படுத்தியிருந்தீர்கள்.
- புலவர் தியாகசாந்தன், திருச்சி.

வெந்தயத்தால் கிடைக்கும் நன்மைகள் அளவற்றவை என்பதை அறிந்தோம். உணவு வரலாறு வழியாக ‘எள்’ளின் சிறப்புகள் உணர்த்தப்பட்டன. தொழில் முனைவோர் ஆக என்னென்ன செய்ய வேண்டும் என்பது நல்ல ஆலோசனைகள்... வரவேற்கப்பட வேண்டியவை.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

பழைய துணிகளை வாங்கி பிளாஸ்டிக் பாத்திரங்கள் கொடுப்பது ஆண்கள் செய்து இருந்தார்கள். ஆனால் இன்று பெண்களும் இந்த வேலையில் ஈடுபடுவது வித்தியாசமாக இருந்தது. தமிழ்ச்செல்வியை நினைக்கும்போது உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்ற பாடல்தான் நினைவிற்கு வந்தது.
- பொன்னியம்மன் மேடு வண்ணை கணேசன், சென்னை.

காஞ்சனா சாதித்து வந்த திரைப்படங்கள், அவரது ஆற்றல், இயல்பு வாழ்க்கை, எண்பது வயதிலும் துறவி போன்ற மாறுபட்ட வாழ்க்கை இவற்றை எல்லாம் ஜீவசுந்தரி அழுத்தமாகவே பதிவு செய்து வாசகர்களையும், அவரது ரசிகர்களையும் உருக வைத்துவிட்டார்.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.

பீட்ரூட் சாதாரண காய்கறிதான் என்று நினைத்திருந்தேன். அதில் ஆண்மையைப் பெருகச் செய்யும் மருத்துவ குணம் இருக்கிறது என்ற உண்மையை அறிந்து வியந்தேன். பீட்ரூட் மற்ற காய்கறிகளை பீட் (Beat) செய்துவிடும் போலிருக்கிறது.
- அயன்புரம் த.சத்தியநாராயணன், பட்டாபிராம்.

கலைநயமோடு கண்கவர் சித்திரங்களாக பொம்மைகளாக மெழுகில் கைத்தொழிலை ஏற்றமிகு படைப்புகளாக உருவாக்கும் சுதாவுக்கு ஹாட்ஸ் ஆப்.
- கவிதா சரவணன், ரங்கம்.

கடினமான வாழ்க்கைப் பாதையில் கடமையை கண்ணாக பாவித்து, குடும்பத்தை காப்பாற்றி வரும் ஆந்திரா சாரதா, ரவிக்குமார் தம்பதிகள் பாராட்டக்கூடியவர்கள். உலகின் அரிய படைப்பான குழந்தைகளை நாடகம் மற்றும் பொம்மலாட்டம் மூலமாக உயிரோட்டமாக வைத்திருக்கும் மதுரை செல்வத்தின் பணி மகத்தானது. ‘வீடு தேடி வரும் பைக் சர்வீஸ்’ இருசக்கர வாகனங்கள் வைத்திருப்போருக்கு உற்சாகத்தை ஊட்டியது. சன் டி.வி. புகழ் பவித்ராவின் தன்னம்பிகை வளரும் இளம் பெண்கள் தலைமுறையினருக்கு அருமையான தன்னம்பிக்கை டானிக்.
- த. நரசிம்மராஜ், மதுரை.

மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூபா டைவிங் பற்றி படித்து வியந்தோம். அவர்களின் மனநிறைவிற்கும், தன்னம்பிக்கைக்கும் வழி ஏற்படுத்தி கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.
- மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

அட்டைப்படம்:  ஒலிவியா

படம்: அசோக் அர்ஷ்