கொழுக்கட்டை டிப்ஸ்
* கொழுக்கட்டை மாவு கிளறும்போது நீருடன் ஒரு ஸ்பூன் பால் சேர்த்துக் கொண்டால் கொழுக்கட்டை விரிந்து போகாது.
* கொழுக்கட்டை சொப்பு வெடிக்காமலும் விரியாமலும் இருக்க அரிசியுடன் உளுத்தம்பருப்பு சிறிது சேர்த்து அரைக்க வேண்டும். 
* கொழுக்கட்டைக்குள்ளும் ஒரு அச்சு வெல்லத்துண்டை சொருகி வைத்து வேகவைத்தால் குழந்தைகளுக்கு பிடிக்கும். * கொழுக்கட்டை மாவு கிளற கொதிக்க வைக்கும் நீரில் சிறிது நெய் அல்லது எண்ணெய் விட்டால் மாவு கட்டியாகாமல் இருக்கும். * கிளறிய கொழுக்கட்டை மாவு ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு சொப்பு பிடித்தால் அழகாக வரும். * கொழுக்கட்டை மேல்மாவு மிஞ்சியதா? சிறு சிறு உருண்டைகளாகச் செய்து ஆவியில் வேகவைத்து வெல்லப்பாகில் போட்டு தேங்காய்ப்பால் விட்டு இறக்கவும். சூப்பர் பாயசம் ரெடி! * பூரணம் மிஞ்சி விட்டதா? மைதாவை சிறிது பால், தண்ணீர், சிட்டிகை உப்பு சேர்த்து கரைத்து தோசையாக ஊற்றி இருபுறமும் திருப்பிப் போட்டு எடுத்து ஒரு புறத்தில் ஒரு ஸ்பூன் பூரணம் தடவிச் சுருட்டி ஸ்வீட் தோசை செய்யலாம். * எள்ளு கொழுக்கட்டைக்கு எள் வறுப்போம் அல்லவா? அதோடு கொஞ்சம் கசகசாவையும் சேர்த்து வறுத்துப் பொடித்துச் செய்யலாம். சுவை, வாசனை கூடும். * உளுத்தம் கொழுக்கட்டை செய்யும்போது தேங்காய் எண்ணெயில் தாளித்தால் கொழுக்கட்டை தேங்காய் வாசனையோடு கமகமக்கும். * கொழுக்கட்டையை சரியாக வேக வைக்காவிட்டால் வாயில் ஒட்டும். அதிகம் வேகவிட்டால் விண்டு போய்விடும். கொழுக்கட்டை சரியாக வெந்து விட்டது என்பதற்கு அடையாளம் கொழுக்கட்டை மேல் வியர்த்து விட்டது போல் நீர் இருக்கும். இதுவே சரியான பதம்!
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
|