மேற்குலகின் மையம்



 அமெரிக்கப் பயணக் கட்டுரை

சரஸ்வதி சீனிவாசன்

மினி தொடர்


பல இடங்களுக்குச் சுற்றி வந்தாலும், அமெரிக்காவில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் சம உரிமை. இங்கே யாரும் அந்தஸ்தைப்  பார்ப்பதில்லை. பெரிய முதலாளியாக இருந்தாலும், கடை ஊழியராக இருந்தாலும் சரிசமம்தான். கடைகளுக்குச் சென்று பொருட்கள்  வாங்கினாலும் அவர்கள் பைகளில்  பேக் பண்ணித் தரும்பொழுது ‘தாங்க் யூ’  சொல்லாமல் யாரும் வாங்கி வருவதில்லை. கூட்டமான  இடங்களுக்குச் சென்றாலும், வரிசையில் நிற்பது அவரவர் கடமையாகக் கருதுகிறார்கள். யாராக இருந்தாலும் சரி, வரிசையில்தான்  வரவேண்டும். மற்றவர் அதை சொல்லும்படி யாரும் நடந்துகொள்வதில்லை.

மினியோ பாலிஸ் என்ற  இடத்தில் ஐஸ்கிரீம் மிகவும் பிரபலமாம். அவ்வளவு ருசியாய் இருக்குமாம். நம் ஆவின் பூத் மாதிரி ஓர்  இடம்  என்றுகூட சொல்லலாம். நாங்களும் அடிக்கடி குறிப்பிட்ட இடத்தைத் தாண்டிச் செல்வதுண்டு. ஆனால் ஒரு தடவைகூட அங்கு ஐஸ்கிரீம்  வாங்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கூட்டம் என்றால் ஒரு தெரு கடைசி வரை நின்றிருந்தார்கள். அப்படி ஒரு வரிசையை நாங்கள்  பார்த்ததேயில்லை. காலையில் வந்து காரை ‘பார்க்கிங்’-ல் விட்டு, நேரே கடை திறக்கும் சரியான சமயத்தில் வந்து நின்றுவிடுவார்கள்.  எவ்வளவோ பெரிய மனிதர்கள் வருகிறார்கள். வரிசையில் நிற்பதை தரக்குறைவாக யாரும் நினைப்பதில்லை. வரிசையில் நின்றுதான்,  வாங்க வேண்டு மென்பதுதான் அவர்களின் முறையாகக் கருதுகிறார்கள். அனைத்திலும் சட்டமும், ஒழுங்கு முறையும் நமக்கு ஆச்சரியம்.  ஆனால் அவர்களுக்கு அது சாதாரணம்.

போக்குவரத்திலும் அப்படித்தான். தெருக்கள் அகலமாகவும் சுத்தமாகவும் இருந்தாலும், நிறைய இடங்களில் ‘சிக்னல்’ பாயின்ட் உண்டு.  ஒருவரையொருவர் முந்திச் செல்ல நினைப்பது மிகவும் அரிது. ‘ஹைவே’யில் வேண்டுமானால் வேகம் அதிகரித்து முன்னேறுவர்.  நகரத்திற்குள், போக்குவரத்து விதிகளை மீறுவதே கிடையாது. நடைபாதைகள் தனித்து இருப்பதால், பெரும்பாலும் நான்கு சக்கர  வாகனங்கள்தான் அதிகம். அவசரமாகப் போனாலும் ‘சிக்னல்’படிதான் செல்வர். போவதற்கும், வருவதற்கும் தனித்தனி பாதைகள்  பெரும்பாலும் காணப்படுவதால் ‘சர் சர்’ என்று ஒரே வேகத்துடன் போய்க்கொண்டிருக்கும். சட்டத்தை மீறி செயல்பட யாரும்  விரும்புவதில்லை. அனைத்து இடங்களிலும் ‘கேமரா’ பொருத்தியிருப்பதால், தவறு செய்தால் எளிதாக கண்டுபிடிப்பர். நாங்கள் நடைபயிற்சி  மேற்கொள்ளும் சமயங்களில், இதுபோன்ற போக்குவரத்து விதிகள் மேற்கொள்வதை மிகவும் ரசித்துப்பார்த்து வந்தோம்.நடப்பதற்கு என்று நடைபாதை தனியாக இருக்கும். அருகில் சைக்கிள் ஓட்டிச் செல்பவர்களுக்கு சிறிது இடைவெளியில் அங்கங்கே  நடைபாதை, சைக்கிள் என குறிப்பிடப்பட்டிருக்கும். கோடுகள் வரைந்திருக்கும். நம் ஊர் போன்று எல்லா தெருக்களிலும் நடந்து செல்ல  முடியாது.

ஒவ்வோர் இடத்திற்குச் செல்லும் பொழுதும் நான் ஒவ்வொன்றையும் குறிப்பாக ஆராய்வேன். விடுமுறையைக் கழிப்பதில் அதிக ஆர்வம்  கொண்டவர்கள் அமெரிக்கர்கள். குறிப்பாக, அங்கு பெண்கள் பணிக்குச் செல்லாத குடும்பங்களே இல்லை எனலாம். அனைத்துத்  துறைகளிலும் பெண்கள் உண்டு. எனவேதான் வார இறுதி நாட்களை குடும்பத்துடன் வெளியில் சென்று உற்சாகத்துடன் கழிக்கிறார்கள்.  அதற்கான நிறைய இடங்களும் உள்ளன. அப்படியாக மற்றொரு கலையம்சம் கொண்ட சிற்பக்கலைத் தோட்டத்திற்குச் சென்றோம்.  ஆங்காங்கே குடும்பம் குடும்பமாக குழுமியிருந்தார்கள். அது இயற்கை அருங்காட்சியகம். எப்பொழுதும் விருந்தினர் கூட்டம் அலைமோதும்  இடம். குழந்தைகள் கொண்டாட்டம் ஒருபுறம், சிட்டுக் குருவிகளின் அணிவகுப்பு மறுபுறம். விதவிதமான வண்ணங்களில் அழகழகான  குருவிகளை நான் எங்கும் கண்டதில்லை. புல்தரையில், நம் பக்கத்தில் வந்து அமர்ந்து கூட்டம் கூட்டமாகக் கத்தும்.

இந்த அருங்காட்சியகத்தின் விசேஷம் கலைப்பொருட்களும், ஸ்பூன் பிரிட்ஜ் மற்றும் செர்ரியும் தான். அதாவது ஸ்பூன் வடிவத்திலான  பிரிட்ஜ் இருக்கும். அதன் மேற்புறம் ஆப்பிள் அளவுக்கு ‘செர்ரி’ போன்று வடிவமைத்திருப்பார்கள். மிகவும் பிரபலமான இந்த கலையம்சம்  கொண்ட காட்சியுடன், புகைப்படம் எடுக்காதவர் கிடையாது. வருடத்தின் 365 நாட்களும், காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை  திறந்திருக்கும் என்கிறார்கள். மிக அற்புதமான இயற்கை ஆபரணங்கள். நாற்பது விதமான கலைப் பொருட்கள், பிற இடங்களில்  இல்லாதவை இங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். ஸ்கல்டான்ஸ், ஜம்போரி, மணலில் படகு ஓட்டம் போன்ற வினோதமான குழந்தை  விளையாட்டுகள் நடைபெறுகின்றன. அதேபோல், பெரியவர்களுக்கு ஏற்ற விளையாட்டுகளும் உண்டு. பள்ளிப்பிள்ளைகள், நண்பர்கள் குழு  என ‘குரூப்’பாக முன்கூட்டியே திட்டம் போட்டு சந்தித்து மகிழ்வதுண்டு.

எந்த கேட்டில் நுழைந்துபோய், எப்படித் திரும்பி வருவது என்பதே ஒரு விளையாட்டு போன்றுதான். அம்பர்சாண்ட் (Ampersand) கோபுரம் கார்டனில் உட்கார்ந்து பேச சரியான இடம், படிக்கும் வசதி, அமர்ந்து யோசிக்க என அனைத்திற்கும்  வசதிகள் உண்டு. சீட்லெக் டேபிள், ஆக்டோபஸ் பட விளையாட்டு போன்றவை வித்தியாசமானவை. இங்கே நம் விளையாட்டுத் திடலில்  வெற்றியாளர் நிற்க என ஒரு ஸ்டாண்ட்  அமைப்பு இருக்குமே... அதேபோன்று, ஒரு பக்கம் நுழைந்து, பல நாற்காலிகள் போன்ற  அமைப்புகளில் நுழைந்து வெளிவர வேண்டும். கணித வடிவ கோணங்கள் போன்ற கலைப் பொருட்கள், தாயும் சேயும் ஒன்றாக இருப்பது  போன்ற கலைத்திறன் கொண்ட பொருட்கள் எனக்கு மிகவும் பிடித்தன.

இரண்டு ரெக்னைனர்களில் மனிதன் உட்கார்ந்திருப்பது போன்ற ஓவியம், தத்ரூபமான மனிதச் சிலைகள், செப்புப் பெண்மணி, கூண்டுக்கிளி  போன்றவையும் நிஜம் போன்றே பளபளப்புடன் காணப் பட்டன. ஆறுவிதமான ‘கிரிஸ்டல்’களால் அமைக்கப்பட்ட மேடை, ராட்டினம்  ஆகியவையும் குறிப்பிடப்பட வேண்டி யவை. லவ் சின்னத்தை வடிவமாக அமைத்திருப்பதைக்காண கண் கோடி வேண்டும்.எல்லாவற்றையும் ஏதோ ஒரு கற்சிலை என்று நினைத்தால், அதன் கலை நுணுக்கம் நமக்குத் தெரியாமலே போகும். அனைத்தும்  கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஒவ்வொன்றும் புகழ் பெற்ற நிபுணர்களால், பல்வேறு   இடங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட கலை வல்லுனர்களால் செதுக்கப்பட்டதாக அங்குள்ள குறிப்புகள் சொல்கின்றன. நம் நாட்டு சேர,  சோழ, பாண்டியர்களின் பெருமை எவ்வளவு பேசப்படுகிறதோ, அந்த அளவு அவர்கள் பாரம்பரியத்தை இதுபோன்ற கலைகளில்  காட்டியுள்ளார்கள்.

இங்குள்ள சேல்ஸ் (விற்பனை) சிற்பம் அனைவரையும் கவர்ந்துள்ளது. கம்பீர வடிவத்தில் உயர்ந்து நிற்கும் சேவலுடன் வருபவர் போன்று  அமைக்கப்பட்டுள்ள சிற்பத்தின் அருகில் அனைவரும் புகைப்படம் எடுக்கத் தவறுவதில்லை.வருடம்  முழுவதும்  கொண்டாட்டம்தான்.   குளிர்காலமானால், தோட்டம்   நடுவில்  ஐஸ் விளையாட்டுகள்தான். அழகாக அலங்கரிக்கப்பட்ட மெட்டல் வேலிகள், தடுப்புகள்  ஆங்காங்கே கலைத்திறனை காட்டி ரசிக்க வைக்கின்றன. ஆறு நுழைவாயில்கள் பொதுமக்களுக்கு வந்து போக வசதியாக உள்புறமும்  வெளிப்புறமும் அமைக்கப்பட்டுள்ளன. நடைபாதையை ஒட்டிய வழித்தடங்களில் வயிற்றுப் பசிக்கு நல்ல உணவைத் தரும் கடைகளுண்டு.  பீட்சா, சாண்ட்விச், சாலட், டெஸர்ட்ஸ் மற்றும் காபி போன்ற பலவகை அயிட்டங்கள் கிடைக்கும். ஆக கண்களுக்கு விருந்து, மனதிற்கு  சந்தோஷம், வயிற்றுக்கும் ஆகாரம் என அனைத்தும் இருப்பதால் கவலையை மறந்து நாளை நன்றாக களிக்கலாம்.

ஒருசில கட்டுப்பாடுகள் மட்டும் எழுதப்பட்டிருக்கும். அவையும் நியாயமானவை. நாம் புரிந்துகொண்டு செயல்படுத்த வேண்டியவை. கலைப்  பொருட்களை தொட்டுவிடாமல் பார்த்து ரசிக்க வேண்டும். சைக்கிளை உள்ளே ஓட்டிக்கொண்டு வரக்கூடாது. சறுக்கல் விளையாடிக்கொண்டு  நடக்கக் கூடாது. சைக்கிளை தள்ளிக்கொண்டு வேண்டுமானால் நடக்கலாம் கொண்டு செல்லும் பொருட்களை பாதுகாப்பாளரிடம்  கொடுத்துவிட்டு, வரும்பொழுது திரும்பப் பெறலாம். நமக்கு உதவும் பிராணிகள் மட்டும் உடன் வரலாம். அதாவது, இடத்தை  பாழாக்காதவாறு உதவும் பிராணிகளுக்கு மட்டும் அனுமதி. ஆல்கஹால் சம்பந்தப்பட்ட பொருட்களுக்குத் தடை. வெளியிலிருந்து உணவு  எடுத்துவர அனுமதி கிடையாது. உள்ளே கிடைக்கும் உணவுப்பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். இதுபோன்ற சிறிய  விஷயங்கள்தான், சுலபமான நிபந்தனைகள்தான்.கலை வல்லுநர்களால், அவ்வப்பொழுது கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. ஃபிலிம் ஷோ போன்று தனித்தனி குழுக்கள் நேரிடையாக பேட்டியும் தருவதுண்டு. சிலவிதமான போட்டிகள் நடத்தி, அதற்குப் பரிசுகளும்  வழங்கப்படுகின்றன. ஆனால் அனைத்தும் ஏதாவது ஒரு கருத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். இதுபோன்று, நம் அறிவுப்  பசிக்கும், சில பொழுதுபோக்குகள் உள்ளன.

சிற்பக்கலைத் தோட்டத்தை நாங்கள் கண்டுகளிக்கும்பொழுது, நிறைய இந்தியர்களைக் கண்டோம். அப்பொழுது பல்கலைக்கழகங்களில்  பட்டமளிப்பு விழா நடந்துகொண்டிருந்த நேரம். தன் மகனையோ, மகளையோ பார்க்க வந்திருந்த பெற்றோர் ஒருபுறம், ஐ.டி.யில் தனியாக  வேலை புரிபவர்களின் குடும்பத்தினர் மறுபுறம் என ஒரே கும்மாளம்தான். பொதுவாகவே மினியோ பாலிஸில் ஆறுமாதங்கள்தான்  வெயிலைப் பார்க்க முடியும். மற்ற மாதங்கள் பனி எப்பொழுது வேண்டுமானாலும் கொட்டலாம். எனவே வெயில் ஆரம்பித்தால், அவர்கள்  சந்தோஷமாக வெளியில் வந்துவிடுவார்கள். அப்பொழுது அனைத்து பூங்காக்களிலும் அருவிகளிலும் கூட்டம் அலை மோதும். இந்த ஸ்பூன்  பிரிட்ஜ், செர்ரி அருகிலும், சேல்ஸ் சிலை அருகிலும் புகைப்படம் எடுப்பதில் போட்டா போட்டிதான். சிறிது நேரம் எங்களுக்கு இந்தியாவில்  இருப்பது போன்ற உணர்வு மேலிட்டது. கூட்டம் குறைந்த பின்பு தான் அமெரிக்காவில்தான் இன்னும் இருக்கிறோம் என்று உணர்வு வந்தது.  இதுபோன்ற இடங்களைத் தவிர, நாங்கள் நிறைய இந்தியர்களை எங்கும் அவ்வளவாகப் பார்க்கவில்லை. நியூ ஜெர்சி, கலிபோர்னியா,  சியாடல் போன்ற இடங்களில் நிறைய இந்தியர்கள் உண்டு. இந்தியர்களுக்கான பகுதியும் உண்டு.


(பயணம் தொடரும்!)
எழுத்து வடிவம்: ஸ்ரீதேவி மோகன்