மச்சு பிச்சு



உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று மச்சு பிச்சு.  பெரு நாட்டில் கடல் மட்டத்திலிருந்து 7970 அடி உயரத்தில் அமர்ந்திருக்கிறது இந்த அற்புத நகர். பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இன்கா பேரரசின் கட்டடக்கலைக்குச் சான்றாக வும், அவர்களுடைய அழகிய ரசனைக்கு எடுத்துக்காட்டாகவும் இன்றளவும் நிமிர்ந்து நிற்கிறது மச்சு பிச்சு.

பளபளப்பான கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்நகரம் பல்வேறு இயற்கைச் சீற்றங்களையும் தாங்கிக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது. இந்த கற் களையெல்லாம் எப்படி இவ்வளவு உயரத்துக்கு கொண்டு வந்தார்கள் என்பது இன்றும் பெரும் புதிர்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கண்டு களிக்க வேண்டிய ஓர் இடம் இது. கடந்த வாரம் வரைக்கும் உடல் ஊனமுற்றவர்கள் செல்ல முடியாத ஒரு பகுதியாகவே மச்சு பிச்சு இருந்து வந்தது. இப்போது உடல் ஊனமுற்றவர்களும் மச்சு பிச்சுவின் அழகை தரிசிக்க பிரத்யேகமான ஒரு சக்கர நாற்காலியை உருவாக்கியிருக்கிறார்கள். உலக சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்டது அந்த சக்கர நாற்காலி.