குழந்தைகள் தான் சிறந்த வாசகர்கள்



முத்தாரம் நேர்காணல்

போலந்தைச் சேர்ந்த ஐசக் பசாவிஸ் சிங்கர் 1978-ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவர். கதை சொல்லுதல் என்ற மரபே மறந்துவிட்ட காலத்தில் இவரின் நேர்காணல் முக்கியமானதாக மாறுகிறது. தீவிர இலக்கியத்தில் இயங்கிய ஐசக், குழந்தைகளுக்காகவும் அற்புதமான பல கதைகளை எழுதியிருக்கிறார்.

கதை எழுதுவதற்கு எது காரணமாக இருக்கிறது?

ஆர்வம்தான் கதை எழுது வதற்கு மூல காரணம். நான் கதை எழுதுவதற்காக பல தலைப்புகளைச் சேகரித்து வைத்திருந் தேன். ஆர்வம் இல்லாததால் அந்தத் தலைப்புகள் அப்படியே கிடப்பில் இருக்கிறது.
 
தீவிர இலக்கியச் செயல்பாட்டாளரான நீங்கள் குழந்தைகளுக்குக் கதை எழுத காரணம்?

குழந்தைகளின் மீதான அன்பை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகத்தான் கதைகளைப் பார்க்கிறேன். தவிர, இரண்டு உலகப் போர்களில் எண்ணற்ற குழந்தைகள் தங்களின் பெற்றோர்கள், உறவினர்கள், இருப்பிடங்களை இழந்ததோடு மட்டுமல்லாமல் குழந்தைப் பருவத்தையும் இழந்துவிட்டனர். அந்தக் குழந்தைகள் இன்று வளர்ந்து பெரியவர்களாகியிருப்பார்கள்.

அவர்கள் என் கதைகளைப் படிக்கும்போது ஒரு குழந்தையாகவே உணர்வார்கள். கதைகளின் வழியாக இழந்த குழந்தைப்பருவத்தை மீட்டுக் கொடுக்க நான் முயல்கிறேன். மட்டுமல்லாமல் என் கதைகளைப் படிக்கும் பெரியவர்கள் தங்களின் குழந்தைகளைப் போல மற்ற குழந்தைகளையும் நேசிப்பார்கள்.
 
குழந்தைகளுக்காக கதை எழுதியபோது கிடைத்த அனுபவம்...

உண்மையில் குழந்தைகள் தான் சிறந்த வாசகர்கள். பெரியவர்கள் படைப்பாளியின் வசீகரத்திலும் விளம்பரத்திலும் தங்களை இழப்பவர்கள். குழந் தைகளுக்கான கதைகளை எழுதத் தொடங்கும் முன்பு அவர்களிடம் அதிகமாக உரையாடுவேன். எழுதிய கதைகளை அவர்களிடம் படித்துக் காட்டுவேன். பெரியவர்களைப் போல நிறைய கேள்விகளைக் கேட்டு என்னை திக்குமுக்காட வைப்பார்கள்.

அவர்களின் கேள்விகள் வாழ்க்கையின் அடிப்படையைப் பற்றியதாக இருக்கும். உதாரணத்துக்கு, இந்த பூமியை யார் உருவாக்கினார்கள்? வானம் ஏன் அவ்வளவு உயரத்தில் இருக்கிறது? என்று நம்மால் பதில் சொல்ல முடியாத கேள்வி களைக் கேட்பார்கள். உண்மையிலுமே குழந்தைகள் தீவிரமாக சிந்திக்கின்றனர்.

குழந்தைகள் இலக்கியத்தில் முக்கிய இடம் பிடிப்பது எது?

நாடோடிக் கதைகள்தான். நவீன இலக்கியத்தில் நாடோ டிக் கதைகளை முற்றிலுமாக நிராகரித்துவிட்டனர். நாடோடிக் கதைகளின் வேர்கள்
எஞ்சியிருப்பது குழந்தைகளிடம் மட்டும்தான்.
 
சிறுவர் இலக்கியத்தில் இருக்கும் முக்கிய குறைபாடாக நீங்கள் கருதுவது?

கதை எழுதுகிறார்களோ இல்லையோ அறிவுரைகள் நிறைந்துகிடக்கிறது. சிறுவர் இலக்கியத்தின் முக்கிய குறைபாடே கதை, அறிவுரையாக மாறிப்போவதுதான்.