மில்லியன் டாலர் பாஸ்வேர்டு!



உலகின் தலைசிறந்த டெக் வல்லுநர்களால் கூட அந்தப் பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வளவு செக்யூரிட்டியான பாஸ்வேர்டைப் பற்றி அறிந்துகொள்ள சிலிக்கான் வேலியே ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறது.
ஒரு மாதத்துக்கு முன் இந்தியாவிற்கு வந்திருந்தார் ஜெரால்டு வில்லியம் காட்டன். நிதித்துறையில் கைதேர்ந்தவர். கனடாவைச் சேர்ந்த ‘கிரிப்டோகரன்சி’ என்ற முதலீட்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றி வரும் இவரின் வயது 30.  ஜெரால்டின் நிறுவனத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாயை வாடிக்கையாளர்கள் முதலீடு செய்திருந்தனர்.

இந்தியாவிற்கு வந்திருந்த ஜெரால்டு உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இப்போது அந்த ஆயிரம் கோடியை வெளியில் கொண்டுவர வேண்டுமென்றால் பாஸ்வேர்டு வேண்டும். ஆனால், அது ஜெரால்டுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.ஒரு பாஸ்வேர்டினால் ஆயிரம் கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ‘‘இது ஒரு மோசடி நாடகம். ஜெரால்டு இறக்கவில்லை...’’ போன்ற பதிவுகளும் இணையத்தில் சுற்றுகின்றன.