கர்ப்பகால நீரிழிவு காரணமும் தீர்வும்!



கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளிடையே ஆரோக்கிய குறைபாடு என்பது பொதுவாகவே அனைத்துப் பெண்களுக்கும் உண்டாகிறது. அதில் சிலருக்கு கர்ப்பகாலத்தில் சில நோய்கள் வந்து தொல்லை தந்தாலும் கர்ப்பகால நீரிழிவு என்பது சமீப வருடங்களாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உள் மருத்துவர் மற்றும் நீரிழிவு நோய் நிபுணர் அனந்த கிருஷ்ணன் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

கர்ப்பகால நீரிழிவு என்றால் என்ன?

கர்ப்பகால நீரிழிவு நோய் என்பது கருவுற்று இருக்கும் சில பெண்களுக்கு 5 மாதத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் சில ஹார்மோன்களின் மாற்றத்தினால் சர்க்கரை அளவு அதிகரித்து கர்ப்பகால சர்க்கரை நோய் ஏற்படுகிறது. அதுபோன்று முதல் பிரசவத்தின்போது சர்க்கரை நோய் ஏற்பட்டால் அவர்களுக்கு இரண்டாவது பிரசவத்தின்போதும் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

அதுவும் முதல் பிரசவத்தின்போது 5 மாதங்களுக்கு பின்னர் சர்க்கரை நோய் தெரியவந்தால், இரண்டாவது பிரசவத்தில் இன்னும் சில மாதங்களுக்கு முன்பே வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதுபோன்று கர்ப்ப காலத்தில் ஏற்படும் இந்த சர்க்கரை நோய் பிரசவம் முடிந்த பிறகு இல்லாமல் போகலாம். அதேசமயம், கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்ட சில பெண்களுக்கு பிற்காலத்தில் விரைவாகவே, சர்க்கரை நோய் வரும் அபாயம் உண்டு.

கர்ப்பகால நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

கர்ப்பகாலத்தில் நீரிழிவு ஏற்படுவதினால், அந்த தாயிற்கு ரத்தஅழுத்தம் அதிகரிக்கலாம். சர்க்கரை அளவு அதிகரிக்கும். இரட்டை குழந்தையாக இருக்கலாம் அல்லது கரு கலைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கலாம். இதுகுறித்து தற்போது மகப்பேறு மருத்துவர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருப்பதால், சர்க்கரை நோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து சிகிச்சைக்காக சர்க்கரை நோய்க்கான சிறப்பு மருத்துவர்களிடம் அனுப்பி விடுகின்றனர்.

இப்படி ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்துவிட்டால், அந்த தாயிற்கோ அல்லது குழந்தைக்கோ எந்தவித பாதிப்பும் இருக்காது. ஒருவேளை சரியான சிகிச்சை தாய்க்கு அளிக்கப்படவில்லை என்றால், அந்த தாய், குழந்தை இருவருக்குமே பாதிப்புகள் இருக்கும்.

மேலும், சர்க்கரையின் அளவு தாய்க்கு மிக அதிகமாக இருந்தால், அது குழந்தை பிறக்கும்போதே, அதிக சர்க்கரை அளவுடன் பிறக்கலாம் அல்லது குறைந்த சர்க்கரை அளவுடன் பிறக்கலாம் அல்லது பிறந்தவுடன் குழந்தைக்கு வலிப்புநோய், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சில தாய்மார்களுக்கு மருத்துவர் அறிவித்திருந்த பிரசவ தேதிக்கு முன்பே குழந்தை பிறந்துவிட வாய்ப்புகள் அதிகம். 

இதனால், எடை குறைவான குழந்தை பிறக்கலாம். அல்லது பிரசவ தேதிக்கு பிறகு பிறக்கும் பட்சத்தில், குழந்தையின் எடை அதிகரித்து பிரசவம் மிகவும் கடினமானதாக இருக்கலாம். எனவே, கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக உரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

கர்ப்பகாலத்தில் நீரிழிவு ஏற்படுவதினால், கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுமா?

கர்ப்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் நீரிழிவினால், கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆட்டிசம், கவனக்குறைவு மற்றும் அறிவுசார் குறைபாடு போன்ற நரம்பியல் வளர்ச்சியின் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, சமீபத்தில் சீனாவின் மத்திய தெற்கு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இந்த ஆய்வு குறித்து தி லான்செட் டயபடாலஜி மற்றும் எண்டோகிரைனாலஜி இதழில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.

அதன் கூற்றுப்படி,கர்ப்ப கால நீரிழிவால், குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படும் அபாயம் 25 சதவீதமும், கவனக்குறைபாடு ஏற்படும் அபாயம் 30 சதவீதமும், அறிவுசார் குறைபாடு 32 சதவீதமும் ஏற்படும் அபாயம் உள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. 

இதனால், கர்ப்ப காலத்தில் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மிக முக்கியம் என்பதும் அவசியமானது என ஆய்வு வலியுறுத்துகிறது. இந்த ஆய்வு சுமார் 56 மில்லியன் பேரிடம் இருந்து தகவல்களை சேகரித்து நடத்தப்பட்டுள்ளதால், இந்த ஆய்விற்கு பலரும் மதிப்பளிக்கின்றனர்.

கர்ப்பகால நீரிழிவு தற்காத்துக் கொள்ளும் வழிகள் என்ன?

கர்ப்பகால நீரிழிவு இருப்பது தெரியவந்தால், உணவுக்கட்டுப்பாடு மிக மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டும்.பொதுவாக ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இனிப்பு வகைகள், சர்க்கரை கலந்த பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 

நேரத்திற்கு சாப்பிட வேண்டும். ஒரே நேரத்தில் மொத்தமாக உணவு அருந்தாமல், உணவை பிரித்து உண்ண வேண்டும். சாப்பிட்டவுடன் அமராமல், சிறிது நேரம் நடக்க வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பொரித்த உணவுகள், பாக்கெட் உணவுகள், குளிர்பானங்கள், சர்க்கரை அதிகம் கலந்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்துவிட்டு, பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

மேலும், உணவியல் நிபுணரை அணுகி ஆலோசனை பெற்று அவரது அறிவுரைப்படி நடக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் கண்டறியும் க்ளுக்கோமீட்டர் கருவியை வாங்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளலாம். மேலும், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அதற்கு தகுந்தவாறு நடந்துகொள்ள வேண்டும்.

- ஸ்ரீதேவி குமரேசன்

சர்க்கரை நோய் நிபுணர் அனந்த கிருஷ்ணன்