செம்பருத்தி எண்ணெய் பலன்கள்!



செம்பருத்தி அழகை கூட்டி ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதன் காய், பட்டை, வேர், இலை அத்தனையிலும் அழகுப் பலன்கள் அபரிதமாக உள்ளன. எண்ணெய்ப் பசையின்றி வறண்டு சுருங்கிப் போகும் சருமத்தையும் பளபளவென ஆக்கக்கூடியது.  செம்பருத்தி எண்ணெய், அதைத் தயாரிக்கும் முறை இதுதான்.
500 மி.லி.  நல்லெண்ணெயை கொதிக்க வைத்து, அதில் 20 செம்பருத்தி பூக்களைப் போட்டு, மிதமான சூட்டில் வைத்து காய்ச்சவும்.  ஓசை அடங்கி, நல்ல வாசனை வந்ததும் இறக்கி, ஒருநாள் கழித்து வடிகட்டவும்.  அடியில் தங்கியிருக்கும் பூவை எடுத்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி காய்ச்சிய எண்ணெயுடன் சேர்த்து தினமும் உடலில் தடவிவர, சுருக்கம் நீங்கி தோல் மிருதுவாகும்.

சிலருக்கு புருவம் மற்றும் இமைகளில் முடி உதிர்ந்து முக அழகையே கெடுத்துவிடும். இந்த பிரச்னைக்கும் தீர்வு தருகிறது செம்பருத்தி.உலர்ந்த செம்பருத்தி பூ 25 கிராமுடன், உலர்ந்த செம்பருத்தி இலை  25 கிராம் தணலில் இட்டு எரிக்கவும்.  

அதில் கருகி வரும் கரியை   விளக்கெண்ணெயுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.  இதை பிரெஷ்ஷினால் புருவம்,  கண் இமை  பகுதியில் தடவி வர,  கருகருவென மை  வைத்தது போல்,  முடி வளரத் துவங்கும்.

முடிவளர்ச்சியைத் தூண்டி, கருகருவென வளர வைக்கும் சக்தி, செம்பருத்தி ஹேர் ஆயிலுக்கு உண்டு.அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில், 15-20 உலர்ந்த செம்பருத்தி பூக்களை போட்டுக் காய்ச்சி, உலர்ந்த ரோஜா இதழ் 5 கிராம், உலர்ந்த தாமரை, மகிழம்பூ, ஆவாரம்பூ இதழ்கள்  தலா 10 கிராம் சேர்த்து, மிதமான தீயில் காய்ச்சி ஆறவிடவும்.  ஒரு பாட்டிலில் ஊற்றி குலுக்கி, வெயிலில் வைத்து எடுக்கவும்.  இந்த எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்துவதோடு, நறுமணத்தையும் கொடுக்கும்.

உடலுக்கு, உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியைத் தரவல்லது குளியல் பவுடர், கொட்டை நீக்கிய புங்கங்காய் தோல், உலர்ந்த செம்பருத்திப் பூ, காய்ந்த செம்பருத்தி இலை, பூலான்கிழங்கு, பயத்தம்பருப்பு எல்லாம் தலா 50 கிராம் எடுத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.  இந்த பவுடரை வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்துக் குளித்துவர, கூந்தல் பட்டுப் போல் மின்னும்.

செம்பருத்தி பூக்கள் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை, தலைக்கு குளிக்கும் போதெல்லாம், ஆறியதும்  கடைசியாக  தலையில்  ஊற்றிக் குளிக்க முடி பளபளவென கண்டிஷனர்  போட்டது போல  பளபளப்பாக  இருக்கும்.

- மகாலட்சுமி சுப்ரமணியன்