அழிக்கப்படும் அமேசான் சுற்றுச்சூழல் - ஒரு சர்வதேச ஆபத்து



சுற்றுச்சூழல்

அதிக ஆச்சரியங்களையும், ஆபத்துக்களையும் கொண்டவை அமேசான் காடுகள். தென் அமெரிக்காவில் 55 லட்சம் சதுர கிலோ மீட்டர் படர்ந்திருக்கும் அமேசான் மழைக்காடுகளால்தான் உலகிற்கு 20 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆக்சிஜன் கிடைக்கிறது. உலகின் நதி நீரின் மொத்த அளவில் 16 சதவிகிதம் அமேசான் டெல்டா வழியாகவே பாய்கிறது.சர்வதேச சுற்றுச்சூழலில் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அமேசான் காடுகளை தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயராலும், தொழில்துறை வளர்ச்சி என்ற பெயராலும் அழிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அமேசான் காடுகளின் தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கிரகித்துக் கொண்டு, உலகளவில் 20 சதவிகிதத்திற்கும் மேலான ஆக்சிஜனை வெளியிடுகிறது. இதனால்தான் இக்காடுகள் ‘பூமியின் நுரையீரல்’ என்று அழைக்கப்படுகிறது. அமேசான் காடுகளை உருவாக்கிய பெருமை, அதன் ஜீவாதாரமாக விளங்கும் அமேசான் நதியையே சேரும். அமேசான் நதி மேற்கிலிருந்து கிழக்குத் திசையில் பாய்கிறது. இதற்கு 17 பெரிய ஆறுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய கிளை ஆறுகளும் உள்ளன. இப்பகுதியில் 6 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரமுள்ள நதி ஓடுகிறது.

உலகிலேயே நீளமான நதிகளின் பட்டியலில் அமேசான் நதி இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தக் காடுகளுக்குள்ளே சென்று வெளியே வருவது மிகவும் கடினம். அதற்கு அங்கு வாழும் விலங்குகள், தண்ணீரின் ஓட்டம், இருளான சூழல், அடர்த்தியான மரங்கள் போன்ற இயற்கை அமைப்புகளே காரணமாக உள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும் இயற்கையின் மாபெரும் கொடையாக இருக்கும் இந்தக் காடுகளில் எண்ணற்ற ஆச்சரியங்கள் பல ஒளிந்திருக்கிறது.  

பிரேசில், பொலிவியா, கொலம்பியா உள்ளிட்ட 9 நாடுகள் வரை நீண்டிருக்கும் அமேசான் காடுகளின் மொத்த பரப்பளவு 55 லட்சம் சதுர கிலோ மீட்டர். இதை ஒரு நாடாக கருதினால், பரப்பளவில் இது 9-வது இடத்தைப் பிடிக்கும். உலகின் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இங்கு வசித்து வருகின்றன. இக்காடுகள் எண்ணற்ற செடி, கொடிகள், மரங்கள் மற்றும் பல அரிய மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இங்கு நெருக்கமாக, அடர்த்தியாக, நீண்ட தூரம் வரை மரங்கள் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. இங்கு சூரிய வெளிச்சத்தையே பார்க்காத தரைப் பகுதியும், வருடமெல்லாம் மழை பெய்யும் பகுதியும் உள்ளது. இக்காடுகளில் எண்ணற்ற அபூர்வமான விலங்குகள், பறவைகள் மட்டுமின்றி இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினரும் இங்கு வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு 14 பழங்குடி குழுக்கள் 21 மில்லியன் ஏக்கர் பரப்பளவில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
 
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்கும், 25 லட்சம் வகை பூச்சிகளுக்கும் இக்காடுகள் வாழ்விடமாக   இருக்கின்றன. உலகின் மொத்த பறவைகளில் மூன்றில் ஒரு பங்கு இங்கு வாழ்கின்றன. 40 ஆயிரம் தாவர இனங்கள், 3 ஆயிரம் மீன் இனங்கள், 400-க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், 300-க்கும் மேற்பட்ட ஊர்வன இனங்கள் மற்றும் 175 பல்லி  இனங்களும் இந்த மழைக் காட்டில் வசிக்கின்றன.

இங்கு மழை பெய்தால்கூட, அந்த மழை நீர் தரையைத் தொட 10  நிமிடங்களாகும். இதன் மூலம் நாம் அமேசான் காடுகளிலுள்ள மரங்களின் அடர்த்தியைப் புரிந்துகொள்ள முடியும். பல வகை மருத்துவ குணங்களைக் கொண்ட தாவரங்கள் இங்கு வளர்வதால் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

கடந்த 2005 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் அமேசான் காடுகளில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக  பெரும்பாலான தாவரங்கள் அழிந்தன. நகர்மயம், தொழில்மயம் போன்ற பல்வேறு மனித நடவடிக்கைகளால் புவி வெப்பமயமாதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதனால் பருவநிலைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பருவ நிலை மாற்றத்தால் உலகளவில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தால் அமேசான் காடுகளில் 75 சதவிகித பகுதி அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக சூழலியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்து வருகிறார்கள். அமேசான் காட்டிலுள்ள 57 சதவிகித மரங்கள் புவி வெப்பமயமாதலால் அழிந்துவிட்டது என்று தேசிய ஆராய்ச்சி குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கு தொழில்மயமாதலே முக்கிய காரணமாக உள்ளது. பூமியில் உள்ள மொத்த காடுகளில் 90 சதவிகிதம் வெப்பமண்டல காடுகளாக இருக்கிறது. உலகளவில் வெப்ப மண்டல காடுகள் அழிந்து வரும் சூழலில் அமேசானில் மட்டுமே தற்போது வரை வெப்ப மண்டல மரங்கள் 50 சதவிகிதம் பாதுகாப்பான நிலையில் உள்ளது. எனவே, சர்வதேச சுற்றுச்சூழல் நன்மைக்காக இதனை பாதுகாப்பது மிகவும் அவசியம் என்கிறது தேசிய இயற்கை பாதுகாப்பு மையம்.

- க.கதிரவன்